Penance and Fasts! | Shanti-Parva-Section-221 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 48)
பதிவின் சுருக்கம் : தவம் மற்றும் உண்ணாநோன்பின் முறைகளையும், அவற்றின் பயன்களையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "வேள்விகள் மற்றும் பிற சடங்குகளுக்கு அடிமைகளாக உள்ள மூன்று மறுபிறப்பாள வகையினரும், வேள்விகளில் தேவர்களுக்கான படையலாக வைக்கப்பட்டு எஞ்சும் இறைச்சி மற்றும் மது ஆகியவற்றை, பிள்ளைகள் மற்றும் சொர்க்கத்தை அடையும் நோக்கத்துடன் உண்கிறார்கள். ஓ! பாட்டா, இந்தச் செயலின் பண்பியல்பு யாது?" எனக் கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "வேதங்களில் விதிக்கப்பட்ட வேள்விகளையும், நோன்புகளையும் நோற்காமல், தடைசெய்யப்பட்ட உணவை உண்பவர்கள் வேண்டுமென்றே அவ்வாறு செய்யும் மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள். (அவர்கள் இம்மையிலேயே வீழ்ந்துவிட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்). மறுபுறம், வேத வேள்விகள், நோன்புகளை நோற்கவும், சொர்க்கத்தின் வடிவிலான கனிகளில் உள்ள விருப்பத்தாலும், பிள்ளைகளைப் பெறுவதில் உள்ள விருப்பத்தாலும் உந்தப்பட்டு அத்தகைய உணவை உண்பவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வார்கள், ஆனால் அவர்களின் தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்ததும் கீழே வீழ்வார்கள்" என்றார்.(2)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "உண்ணாநோன்பும் {உபவாசமும்} தபமே {தவமே} என்று சாதாரண மக்கள் சொல்கிறார்கள். எனினும், உண்ணாநோன்பு அவ்வாறானதா? அல்லது தவம் வேறேதும் ஒன்றா?" என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "மாதங்கள், பிறைநாட்கள் {பக்ஷங்கள்}, நாட்கள் ஆகியவற்றால் அளக்கப்படும் உண்ணாநோன்பை மக்கள் தவமாகக் கருதுகிறார்கள். எனினும், நல்லோரின் கருத்தின் படி அது தவமாகாது. மறுபுறம், உண்ணாநோன்பென்பது {உபவாசம் என்பது}, ஆன்மா ஞானம் அடைவதற்கான ஒரு தடையாகும்[1].(4) (அனைத்திலும் கடினமான ஒன்றான) செயல்களைத் துறப்பது, (அனைத்துயிரினங்களையும் சமமாகக் கருதி அவை அனைத்தையும் வழிபடுவதை உள்ளடக்கிய) பணிவு ஆகியவையே உயர்ந்த தவங்களாகும். இது தவங்கள் அனைத்திலும் மேன்மையான தனிச்சிறப்புக் கொண்டதாகும். அத்தகைய தவத்தைச் செய்பவன் எப்போதும் உபவாசம் இருப்பவனாகவும், எப்போதும் பிரம்மச்சரிய வாழ்வை நோற்பவனாகவும் கருதப்படுகிறான்.(5) எப்போதும் உறக்கமற்றவனும், எப்போதும் அறத்தைச் செய்வதில் மட்டுமே ஈடுபடுபவனுமான ஒரு பிராமணன், குடும்பத்தின் மையத்தில் வாழ்ந்து வந்தாலும் அவன் எப்போதும் ஒரு முனியாகவும், தேவனாகவும், அதற்கு மேலானவனாகவும் ஆகிறான்.(6) அவன் எப்போதும் அமுதத்தை உண்பவனாகவும், எப்போதும் தேவர்கள் மற்றும் விருந்தினர்களைத் துதிப்பவனாகவும் ஆகிறான்.(7) உண்மையில் அவன், எப்போதும் வேள்வியில் எஞ்சியவற்றை மட்டுமே உண்டு வாழ்பவனாகவும், விருந்தோம்பல் கடமையில் எப்போதும் ஈடுபடுபவனாகவும், நம்பிக்கை நிறைந்தவனாகவும், தேவர்கள் மற்றும் விருந்தினர்களை எப்போதும் வழிபடுபவனாகவும் கருதப்படுகிறான்" என்றார் {பீஷ்மர்}.(8)
[1] "பீஷ்மர் அளிக்கும் இரு பதில்களின் நோக்கம், பிறருக்கு (வேள்வி விலங்குகளுக்கு) வலியைக் கொடுக்கும் எதுவும் கண்டிக்கத்தக்கது, அதற்கு இணையாகத் தனக்கே வலியைக் கொடுப்பதும் கண்டிக்கத்தக்கதே என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
யுதிஷ்டிரன், "அத்தகைய தவத்தைப் பயில்பவன், எப்போதும் உண்ணா நோன்பிருப்பவனாகவோ, எப்போதும் பிரம்மச்சரிய நோன்பில் அர்ப்பணிப்பு கொண்டவனாகவோ, வேள்வியில் எஞ்சுபவற்றை எப்போதும் உண்டு வாழ்பவனாகவோ, விருந்தினர்களை எப்போதும் மதிப்பவனாகவும் எவ்வாறு கருதப்படலாம்?" என்று கேட்டான்.(9)
பீஷ்மர், "ஒருவன் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் பகலில் ஒருமுறையும், இரவில் ஒருமுறையும் உண்டு, இடைவேளையில் எதையும் உண்ணாதிருந்தால், அவன் எப்போதும் உண்ணாநோன்பு {உபவாசம்} இருப்பவனாகக் கருதப்படுவான்.(10) அத்தகைய பிராமணன், எப்போதும் வாய்மை பேசுவதன் மூலமும், எப்போதும் ஞானத்தை ஒட்டி ஒழுகுவது, வேறுகாலங்களில் அல்லாமல் பருவகாலத்தில் மட்டும் தன் மனைவியிடம் செல்வது ஆகியவற்றின் மூலமும் பிரம்மச்சாரி ஆகிறான்.(11) வேள்வியில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருபோதும் உண்ணாமல் இருப்பதன் மூலம், அவன் புலால் உண்ணாதவனாகிறான்[2]. ஈகையாளனாக இருப்பதன் மூலம் அவன் எப்போதும் தூய்மையானவனாகவும், பகலில் உறக்கத்தைத் தவிர்ப்பதன் மூலம் அவன் எப்போதும் விழிப்புடைபவனாகவும் ஆகிறான்.(12) ஓ! யுதிஷ்டிரா, தன் பணியாட்கள் மற்றும் விருந்தினர்கள் உண்ட பிறகு மட்டுமே உண்ணும் மனிதன், எப்போதும் அமுதத்தை உண்பவனாகிறான்.(13) தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் உணவு அளிக்கும் வரை உண்ணாதிருக்கும் பிராமணன், அத்தகைய நோன்பின் மூலம் சொர்க்கத்தையே வெல்கிறான்.(14) தேவர்கள், பித்ருக்கள், பணியாட்கள், விருந்தினர்கள் ஆகியோருக்கு உணவளித்த பிறகு எஞ்சியவற்றை மட்டுமே உண்பவன் வேள்வி எச்சங்களில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறான்.(15)
[2] கும்பகோணம் பதிப்பில் "வீணான மாம்ஸத்தைப் புஜியாமலிருப்பவன் எப்பொழுதும் மாம்ஸத்தைப் புஜியாதவனாகிறான்" என்றிருக்கிறது. இதுவே http://sacred-texts.com/hin/mbs/mbs12214.htm என்ற லிங்கில் உள்ள மூல ஸ்ம்ஸ்க்ருத ஸ்லோகத்திற்குப் பொருத்தமாக உள்ளதாகத் தெரிகிறது.
அத்தகைய மனிதர்கள், மறுமையில் எண்ணற்ற இன்ப உலகங்களை வெல்கிறார்கள். அவர்களுடைய இல்லங்களுக்குப் பிரம்மனுடன் கூடிய தேவர்களும், அப்சரஸ்களும் வருகிறார்கள்.(16) தேவர்கள் மற்றும் பித்ருக்களுடன் தங்கள் உணவைப் பகிர்ந்து கொள்பவர்கள், தங்கள் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் நிலையான மகிழ்ச்சியுடன் தங்கள் நாட்களைக் கடத்தி, இறுதியாக இவ்வுடலை விட்ட மிக உயர்ந்த கதியை அடைகிறார்கள்" என்றார் {பீஷ்மர்}.(17)
சாந்திபர்வம் பகுதி – 221ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |