The fruits of acts! | Shanti-Parva-Section-219 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 46)
பதிவின் சுருக்கம் : கர்ம பலன்களை ஜனதேவனுக்குச் சொன்ன பஞ்சசிகர்; அறியாமைக்கும் அறிவுக்கும் இடையிலான வேறுபாடு என்ன? மனிதர்கள் ஏன் செயலை விரும்ப வேண்டும்? உயர்ந்த கதியை அடைய அவர்கள் ஏன் முயற்சிக்க வேண்டும்? என்பவை குறித்த ஜனதேவனின் ஐயங்களுக்கு விடையளித்த பஞ்சசிகர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு பெரும் முனிவர் பஞ்சசிகரால் போதிக்கப்பட்ட ஜனக குலத்தின் ஜனதேவன், மீண்டும் அவரிடம் மரணத்திற்குப் பிறகான இருப்பு மற்றும் இல்லாமை குறித்துக் கேள்வி கேட்டான்.(1)
ஜனகன் {ஜனதேவன் பஞ்சசிகரிடம்}, "ஓ! சிறப்புமிக்கவரே, இப்போது இருக்கும் நிலையில் இருந்து எந்த மனிதனும் எந்த ஞானத்தையும் தக்க வைத்துக் கொள்ளவில்லையெனில், உண்மையில், இஃது உண்மையெனில், அறியாமைக்கும், அறிவுக்கும் இடையிலான வேறுபாடு என்ன? ஞானத்தால் நாம் ஈட்டுவதென்ன? அறியாமையால் நாம் இழப்பதென்ன?(2) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, விடுதலை {முக்தி} என்பது இத்தகையதென்றால், அறச்செயல்கள் மற்றும் நோன்புகள் அனைத்தும் முடிவில் அழிவை மட்டுமே அடையும். கவனமின்மை மற்றும் கவனமிக்கத்தன்மை ஆகியவற்றின் வேறுபாட்டால் என்ன பயன் விளைகிறது?(3) இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தின் தொடர்பறுப்பதும், அல்லது, இல்லாத பொருட்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதும்தான் விடுதலை {முக்தி} எனில், மனிதர்கள் ஏன் செயலைச் செய்ய விரும்ப வேண்டும்? அல்லது செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவர்கள், விரும்பத்தக்க கதிகளை அடையத் தேவையான வழிமுறைகளை ஏன் தொடர்ந்து வகுக்க வேண்டும்? (இக்காரியம் தொடர்பான) உண்மைதான் என்ன?" என்று கேட்டான்".(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "கல்விமானான பஞ்சசிகர், அடர்ந்த இருளில் மறைந்திருப்பவனும், பிழையால் திகைப்படைந்தவனும், ஆதரவற்றவனுமான அந்த மன்னனை {ஜனதேவனைக்} கண்டு, பின்வரும் வார்த்தைகளைப் பேசி அவனை அமைதிப்படுத்தினார்.(5)
{பஞ்சசிகர்}, "இதில் (விடுதலையில் {முக்தியில்}) உறவு என்பது அழிவல்ல. அதே வேளையில் உறவு என்பது (ஒருவன் உடனடியாகக் காணத்தக்க) எந்த வகை இருப்பும் அல்ல. உடல், புலன்கள் மற்றும் மனத்தின் கலவையையே நாம் காண்கிறோம். எந்தச் சார்பும் இல்லாமலும் {சுதந்திரமாகவும்}, ஒன்றையொன்று கட்டுப்படுத்திக் கொண்டும் இவை செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன[1].(6) நீர், வெளி {ஆகாயம்}, காற்று {வாயு}, வெப்பம் {அக்னி}, பூமி {நிலம்} ஆகிய பொருட்களே உடலை அமைக்கின்றன. இவை தங்கள் தங்கள் இயல்பின்படியே (உடலாக அமைந்து) ஒன்றாக நீடித்திருக்கின்றன. இவை மீண்டும் தங்கள் சொந்த இயல்பின்படியே பிரிகின்றன.(7) வெளி, காற்று, வெப்பம், நீர் மற்றும் பூமி ஆகிய இந்த ஐந்து பொருட்களும் கலந்த நிலையிலேயே உடல் அமைகிறது. உடலானது ஒரு பூதத்தால் ஆனதல்ல.(8) புத்தி, குடல்வெப்பம் {ஜாடராக்னி}, பிராணன் முதலியவைகளாக அழைக்கப்படும் காற்றுகள் {வாயுக்கள்} என்ற உயிர்மூச்சுகள் ஆகிய இவை மூன்றும் செயல்படும் உறுப்புகளாக {கர்ம காரணங்களெனச்} சொல்லப்படுகின்றன. புலன்கள், (ஒலி, வடிவம் முதலிய) பொருள் நுகர் பொருட்கள், எதன் மூலம் அவை உணரத்தக்கவையாக மாறுகின்றனவோ (அந்தப் பொருட்களில் வசிக்கும்) அந்தச் சக்தி, எதன்மூலம் உணர முடிகிறதோ அந்த (புலன்களில் வசிக்கும்) திறன்கள், மனம், பிராணன், அபானன் முதலியவையாக அழைக்கப்படும் உயிர்மூச்சுகள், செரிமான உறுப்புகளின் விளைவாக இருக்கும் பல்வேறு சாரங்கள் ஆகியன ஏற்கனவே சொல்லப்பட்ட மூன்று உறுப்புகளில் இருந்து பாய்கின்றன[2].(9) கேள்வி {காது}, தீண்டல் {ஊறு / தோல்}, சுவை {நாக்கு}, பார்வை {கண்கள்}, மணம் {மூக்கு} ஆகியவை ஐம்புலன்களாகும் {ஐம்புலன்களால் உணரப்படுபவை}. அவை தங்கள் குணங்களை, தங்களுக்குக் காரணமாக இருக்கும் மனத்தில் இருந்து பெறுகின்றன.(10)
[1] கும்பகோணம் பதிப்பில், "இந்த மோக்ஷ விஷயத்தில் விநாசத்தில் முடிவென்பதில்லை; விசேஷஜ்ஞானத்தில் முடிவென்பதுமில்லை. சரீரம், இந்திரியங்கள், மனம் இவைகளின் இச்சேர்க்கையானது கர்மங்களில் ஒன்றை ஒன்று அடுத்திருந்தாலும் வெவ்வேறாகவிருக்கிறது" என்றிருக்கிறது.[2] "முதல் ஐந்தும் புத்தியால் விளைவன; உயிர் மூச்சுகள் காற்றால் விளைகின்றன; சாறுகள் குடல் வெப்பத்தால் விளைகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சித் எனும் ஒரு குணமாக இருக்கும் மனத்திற்கு, இன்பம், துன்பம் மற்றும் இன்பதுன்பம் இல்லாமை ஆகிய மூன்று நிலைகள் இருக்கின்றன.(11) ஒருவன் மரணமடையும் தருணம் வரை பிரிக்கப்பட முடியாமல் உள்பொதிந்திருக்கும் ஒலி, தீண்டல் {ஊறு}, வடிவம், சுவை, மணம் மற்றும் பிற பொருட்களே, ஒருவனுக்கு ஞானம் உண்டாக்கும் காரணங்களாக இருக்கின்றன.(12) (சொர்க்கத்திற்கு வழிவகுக்கும்) செயல்கள் அனைத்தும், (பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுக்கும்) துறவும், விசாரிக்கும் அனைத்துக் காரியங்களிலும் உண்மையை உறுதி செய்வதும் புலன்களையே சார்ந்திருக்கின்றன. (உண்மையை) உறுதி செய்வதே இருப்பின் உயர்ந்த நிலை, அதுவே விடுதலையின் {முக்தியின்} விதை அல்லது வேர் என்று கல்விமான்கள் சொல்கின்றனர். புத்தியானது, விடுதலை {முக்தி} மற்றும் பிரம்மத்தை நோக்கி அவற்றை வழிநடத்துகிறது என்றும் அவர்கள் சொல்கிறார்கள்[3].(13) (உடல் என்றும், புலன்நுகர் பொருட்கள் என்று அழைக்கப்படும்) அழியத்தக்க குணங்களுடன் சேர்ந்த இந்தக் கலவையை {உடலை} ஆன்மாவாகக் கருதும் மனிதன், அத்தகைய தவறான ஞானத்தின் விளைவால் முடிவில்லாத துன்பத்தை உணர்கிறான்.(14) மறுபுறம், உலகம் சார்ந்த பொருட்கள் எதுவும் ஆன்மாவல்ல என்று கருதுபவர்களும், எந்தப் பற்றும் இல்லாமல் இருப்பவர்களுமான மனிதர்களின் வழக்கில், துன்பம் சார்ந்திருக்க ஓர் அடித்தளம் தேவை என்பதால் அவர்கள் எந்தத் துன்பத்தையும் ஒருபோதும் அனுபவிக்கமாட்டார்கள்.(15)
[3] "புத்தியானது, விடுதலைக்கு வழிவகுப்பதால் அஃது அவ்யயம் avyaya என்றழைக்கப்படுகிறது. மகத்தாக இருக்கும் பிரம்மத்திற்குத் தன் சக்தியின் மூலம் வழிவகுப்பதால் அது மகத் என்றும் அழைக்கப்படுகிறது. தத்வநிச்சயம் Tattwanischaya விடுதலைக்கு வழி வகுப்பதால் விடுதலையின் விதை என்று அஃது அழைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இது தொடர்பாகத் துறவு சம்பந்தமான ஒப்பற்ற ஒரு ஞானக்கிளையொன்று இருக்கிறது. அது சம்யாகவாதம் {மோக்ஷசாஸ்திரம்} என்றழைக்கப்படுகிறது. அது குறித்துச் சொல்லப் போகிறேன். உன் விடுதலையின் நிமித்தமாக அதைக் கேட்பாயாக.(16) மனிதர்கள் அனைவருக்கும் (விதிக்கப்பட்டிருக்கும்) செயல்களில் துறவென்பது, மெய்யுறுதியுடன் விடுதலைக்காக முனையும் மனிதர்கள் அனைவருக்குமானதாகும் {விதிக்கப்பட்டதாகும்}. எனினும், சரியாகக் கற்பிக்கப்பட்டோர் (துறவின் மூலம் அமைதியை அடைய முடியும் என நினைப்போர்), துன்பத்தின் கனத்த சுமையைச் சுமக்க வேண்டும்.(17) வேத வேள்விகளும், பிற சடங்குகளும், செல்வம் மற்றும் பிற உடைமைகளின் துறவுக்காகவே இருக்கின்றன. அனைத்து இன்பங்களையும் துறப்பதற்காகவே, பல்வேறு நோன்புகளும், உபவாசங்களும் இருக்கின்றன. இன்பத்தையும், மகிழ்ச்சியையும் துறப்பதற்காகவே தவங்களும், யோகமும் இருக்கின்றன. எனினும், அனைத்தையும் துறப்பதே உயர்ந்த வகைத் துறவாகும்.(18) இப்போது நான் உனக்குச் சொல்லப்போவது, அனைத்தையும் துறப்பதற்காகக் கல்விமான்களால் சுட்டிக்காட்டப்படும் ஒரு பாதையாகும். அந்தப் பாதையில் செல்வோர், அனைத்து துன்பங்களையும் விரட்டுவதில் வெல்கிறார்கள். எனினும், அதனிலிருந்து விலகுவோர், துன்ப துயரங்களையே அறுவடை செய்கிறார்கள்[4].(19)
[4] இந்த வழி யோக வழியாகும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஆறாவதாக மனத்தைக் கொண்ட ஐந்து அறிவுப் புலன்களையும் {ஞானேந்திரியங்களையும்}, புத்தியில் வசிக்கும் அனைத்தையும் முதலில் சொன்னேன். ஆறாவதாகப் பலத்தைக் கொண்ட ஐந்து செயற்புலன்களையும் {இப்போது} நான் உனக்குச் சொல்லப்போகிறேன்.(20) இரு கரங்களும் செயல்பாட்டின் ஈருறுப்புகளாக இருக்கின்றன. இரு கால்களும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரச் செய்யும் இரண்டு உறுப்புகளாக இருக்கின்றன. இன்பம் மற்றும் இனத் தொடர்ச்சி ஆகிய இரண்டிற்காக இருப்பது பிறப்புறுப்பாகும். வயிற்றில் இருந்து வரும் குதம், பயன்படுத்தப்பட்ட அனைத்துப் பொருட்களையும் வெளியே கழிக்கும் உறுப்பாகும்.(21) பேச்சுறுப்பு {வாய்}, ஒலி உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக இருக்கிறது. இந்த ஐந்து செயற்புலன்களும் {கர்மேந்திரிங்களும்}, மனத்திற்குச் சொந்தமானது அல்லது மனத்தின் தொடர்புடையது என அறிவாயாக. (மனத்தோடு கணக்கிடப்படும்) இவையே அறிவு மற்றும் செயலுக்குரிய பதினோரு உறுப்புகளாகும். ஒருவன் புத்தியுடன் கூடிய மனத்தை விரைவாகக் கைவிட வேண்டும்[5].(22) கேட்கும் செயலுக்கு, இரு காதுகள், ஒலி மற்றும் மனம் ஆகிய மூன்று காரணங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்; அதே போலவே ஒலி உணர்விற்கும்; வடிவத்தை உணர்வதற்கும், சுவை மற்றும் மணத்தை உணர்வதற்கும் அவை {அந்த மூன்று காரணங்கள்} வேண்டும்[6].(23) குறிப்பிடப்பட்ட பல்வேறு வகை உணர்வுகளை உணர இந்தப் பதினைந்து {ஐந்து மூன்று காரணங்கள்} சாதனங்கள், அல்லது குணங்கள் வேண்டும். இவற்றின் விளைவால் ஒவ்வொரு மனிதனும், அந்த உணர்வுகளைப் பொறுத்தவரையில் மூன்று தனிப்பட்ட நனவுநிலைகளை (அஃதாவது, ஓர் உறுப்பு, அதன் குறிப்பிட்ட செயல்பாடு மற்றும் அந்தச் செயல்கள் செயல்படும் மனம் ஆகியவற்றை) அடைகிறான்.(24) மேலும் (மனத்தின் உணர்வுகள் அனைத்தையும் பொறுத்தவரையில்) நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களுக்குரிய மூன்று வகை உணர்வுகள் {சாதனங்கள்} இருக்கின்றன. அவற்றினுள், உணர்வுகள் அனைத்தும் உள்ளிட்ட மூவகை நனவுநிலைகள் {அனுபவங்கள்} இயங்குகின்றன.(25)
[5] "மனத்தைக் கைவிடுவதால் அவன் ஐந்து செயற்புலன்களையும் கைவிடுகிறான். புத்தியைக் கைவிடுவதால், அவன் மனத்துடன் கூடிய ஐந்து அறிவுப்புலன்களையும் கைவிடுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "இந்த ஒவ்வொரு செயல்பாட்டிலும், மூன்று காரணங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உணரத்தக்க காரணம், அல்லது வெளிப்படையான எந்தக் காரணமும் இன்றி மனத்தில் எழும் பேரானந்தம், நிறைவு, மகிழ்ச்சி, இன்பம் மற்றும் அமைதி ஆகியவை நல்லியல்புக்குரியவையாகும் {சத்வ குணத்திற்கு உரியவையாகும்}.(26) காரணமில்லாமல் அல்லது உணரத்தக்க எந்தக் காரணத்தின் மூலமும் நேரும், நிறைவின்மை, வருத்தம், துன்பம், பேராசை, வன்மம் ஆகியவை ஆசை {ரஜஸ்} என்று அறியப்படும் குணத்தின் குறியீடுகளாகும்.(27) தவறான தீர்மானம், மயக்கம், கவனமின்மை, கனவுகள், உறக்கக்கலக்கம் ஆகிவை எவ்வாறு உண்டானாலும், அவை இருள் {தமஸ்} குணத்திற்குரியவையாகும்.(28) உடல் அல்லது மனத்தைப் பொறுத்தவரையில், இன்பம் அல்லது நிறைவுடன் கலந்து எந்த நனவுநிலை நீடித்தாலும், அது நல்லியல்பின் {சத்வ} குணத்தின் மூலம் உண்டானது எனக் கருதப்பட வேண்டும்.(29) நிறைவின்மை, அல்லது உற்சாகமின்மை கொண்ட எந்த உணர்வுடனும் கலந்து எந்த நனவுநிலை நீடித்தாலும், அஃது ஆசை {ரஜஸ்} குணத்தினால் மனத்தில் நேர்ந்தவை என்று கருதப்பட வேண்டும்.(30) உடல், அல்லது மனத்தைப் பொறுத்தவரையில் பிழை, அல்லது கவனமின்மையுடன் கலந்து எந்நிலை நீடித்தாலும், அது புரிந்து கொள்ள முடியாததும், விவரிக்க இயலாததுமான இருளை {தமஸ் குணத்தைக்} குறிப்பிடுவதாக அறியப்பட வேண்டும்.(31)
கேட்கும் உறுப்பு {காது} வெளியை {ஆகாயத்தைச்} சார்ந்திருக்கிறது; அஃது (எல்லைகளுக்குட்பட்ட) வெளியே {ஆகாயமே} ஆகும். ஒலியானது அந்த உறுப்பையே {காதையே} தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. ஒலியை உணர்வதால் ஒருவன் கேட்கும் உறுப்பு {காது} மற்றும் வெளியைக் குறித்த அறிவை உடனே அடைய மாட்டான். ஆனால் ஒலி உணரப்படும்போது, கேட்கும் உறுப்பும், வெளியும் வெகு நாளைக்கு அறியப்படாமல் நீடிக்கு முடியாது. (காதை அழிப்பதால், ஒலியும் வெளியும் அழிக்கப்படலாம்; இறுதியாக மனத்தை அழிப்பதால் அனைத்தையும் அழிக்கலாம்).(32) {செவி}, தோல், கண்கள், நாக்கு, ஐந்தாவதாக மூக்கு ஆகியவற்றின் வழக்கிலும் இதுவே பொருந்தும். அவை தீண்டல் {ஊறு}, வடிவம், சுவை மற்றும் மணமாக இருக்கின்றன[7].(33) செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்தும், அறிவுப்புலன்கள் {ஞானேந்திரிங்கள்} ஐந்தும் சேர்ந்த இந்தப் பத்தின் கலவையில் வசிக்கும் பதினொன்றாவதான மனமும், மனத்தில் பனிரெண்டாவது வசிக்கும் புத்தியும் என ஒவ்வொன்றும் அதனதன் குறிப்பிட்ட செயல்பாட்டில் ஈடுபடுகின்றன.(34) இந்தப் பனிரெண்டும் ஒன்றாக நீடித்தால், அதனால் விளையும் விளைவானது, கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தில் மரணத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தில் மரணம் ஏற்படாமல், இந்தப் பனிரெண்டையும் பொறுத்தவரையில் ஒன்றாக இருக்கின்றன. ஆனால் அவை ஆன்மாவில் இருந்து தனியாக இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பனிரெண்டும் ஆன்மாவுடன் இணைந்திருக்கின்றன என்று பொதுவாகப் பேசுவது, உலகின் சாதாராண நோக்கங்களுக்காகப் பேசப்படும் தாழ்ந்த வடிவிலான சாதாரணப் பேச்சு மட்டுமே ஆகும்.(35)
[7] "செயல்பாடுகள் அழிக்கப்படுவதால், உறுப்புகளும், மனமும் அழிக்கப்படுகின்றன, அல்லது மனம் அழிக்கப்படுவதால் அனைத்தும் அழிக்கப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
கடந்தகாலப் புலனின்ப உணர்வுகளின் விளைவால் கனவு காண்பவன், நுட்பமான வடிவிலிருக்கும் அவனது புலன்களை உணர்ந்து, ஏற்கனவே (நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} என்ற) மூன்று குணங்களைக் கொண்டவனாக, தன் புலன்கள் தங்கள் தங்கள் பொருட்களில் இருப்பதாகவும், எனவே, விழித்திருக்கும் போது செயல்படுவதைப் போலவே கற்பனை உடலுடன் அசைந்து செயல்படுவதாகவும் கருதுகிறான்[8].(36) விரைவில் மறைவதும், நிலையற்றதும், இருளின் {தமோ குணத்தின்} ஆதிக்கத்தில் மட்டுமே மனத்தால் உண்டாக்கப்படுவதுமான புலன்களுடன் {புலனுணர்வுகளுடன்} கூடிய புத்தி மற்றும் மனத்தில் இருந்து ஆன்மா விடுபட்டிருக்கும் நிலையானது, கல்விமான்கள் சொல்வதைப் போல, இருளின் இயல்பைக் கொண்டதும், திரள் உடலால் மட்டுமே அனுபவிக்கப்படுவதுமான இன்பநிலையாகும். (விடுதலையின் இன்பநிலை நிச்சயம் இதிலிருந்து மாறுபட்டதாகும்)[9].(37) முக்தியால் கிட்டும் இன்பநிலையிலும், வேத கல்வியில் ஈர்க்கப்பட்ட விழிப்புநிலையில் கிட்டும் இன்பத்திலும், எவ்வாறு ஒருவன் துன்பத்தைக் கிஞ்சிற்றும் காண்பதில்லையோ, அவ்வாறே விவரிக்கப்பட முடியாததும், உண்மையை மறைப்பதுமான இருள் பரவுவதாக {கிட்டச்செய்வதுபோலத் தோற்றமளிப்பதாகத்} தெரிகிறது. (ஆனால் உண்மையில் முக்தியால் கிட்டும் இன்பநிலை இருளால் களங்கப்படாததாகும்)[10].(38) கனவுகளற்ற உறக்கநிலையில் தோன்றுவதைப் போலவே, விடுதலையிலும் {முக்தி நிலையிலும்}, ஒருவனின் செயல்களைத் தங்கள் தோற்றுவாயாகக் கொண்ட அக மற்றும் புறநிலை இருப்புகள் (நனவுநிலையிலிருந்து புலன்நுகர் பொருட்கள் வரை சேர்ந்த அனைத்தும்) அனைத்தும் விலக்கப்படுகின்றன. அவித்யையில் மூழ்கிய சிலரில், அவற்றுடன் இவை நீடித்திருக்கின்றன. அவித்யையைக் கடந்து அறிவை வென்றவர்களைப் பொறுத்தவரையில், அவை எந்நேரத்தில் அவர்களுக்கு நேராது[11].(39) ஆன்மா {ஆத்மா}, ஆன்மாவற்றது {அனாத்மா} குறித்த ஊகங்களை அறிந்தவர்கள், (புலன்கள் முதலிய) இந்தத் தொகையே உடல் (க்ஷேத்திரம்) என்று சொல்கிறார்கள். மனத்தைச் சார்ந்திருக்கும் இருப்புப் பொருள் ஆன்மா (க்ஷேத்ரக்ஜன்) என்றழைக்கப்படுகிறது.(40)
[8] "நானுபர்யேதம் naanuparyyeta என்பதில் நா Na என்பது நிரி nri (மனிதன்) என்பதன் பெயர்ச்சொல்லாகும். அதற்குக் கனவு காண்பவன் என்பதே பொருள். நீலகண்டரின் அறிவாற்றல் நிச்சயம் போற்றத்தகுந்ததாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இந்திரியங்கள் விலகிச் சென்றாலும் ஜாக்ரத்தசையில் முதலில் அனுபவிக்கப்பட்ட விஷயங்களின் வாஸனை வந்திருப்பதால் அந்தவிஷயங்களைக் கண்டு சிந்தித்துக் கொண்டு மூன்று குணங்களுள்ளவனாகவே சுற்றுகிறான். (இது ஸ்வப்நம்)" என்றிருக்கிறது.[9] உபரமம் Uparaman என்பது யுகபத்பாவஸ்ய உச்சேதம் yugapradbhaavasya uchcchedam அல்லது புத்தி, மனம் மற்றும் புலன்களிடம் இருந்து ஆன்மாவின் தொடர்பறும் நிலையாகும். புத்தி முதலியவற்றில் இருந்து ஆன்மாவின் இந்தத் தொடர்பறுதலே உண்மையில் விடுதலை {முக்தி} ஆகும். எனினும், முக்தியானது நித்தியமானதென்பதால், கனவுகளற்ற உறக்கத்தின் விளைவால் புத்தி முதலியவற்றில் இருந்து ஆன்மாவின் தொடர்பறும் இந்தத் தற்காலிக நிலை தமஸ், அல்லது இருளால் {தமஸ் குணத்தால்} விளைவதாகும். இந்தத் தற்காலிகத் தொடர்பறும் நிலையும் ஒருவகை இன்பநிலைதான் என்றாலும், முக்தியால் கிட்டும் இந்த இன்பநிலையானது, நீடித்ததும், உடலால் மட்டுமே அனுபவிக்கப்படாததுமான இன்பநிலையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[10] "இந்தச் சுலோகத்தில், முதல்பார்வையில் கனவுகளற்ற உறக்க நிலையில் கிட்டும் இன்ப நிலையானது, முக்தியால் கிட்டும் இன்பநிலையைப் போலத்தெரியும், ஆனால் அது பிழையானது என வாதி {பேசுபவர்} சொல்கிறார். உண்மையில் முக்தியால் கிட்டும் இன்பநிலையானது இருளால் தீண்டப்படாதது அல்லது களங்கப்படாததாகும். ந கிருச்சிரமனுபயதி Na krichcchramanupacyati என்பது "ஒருவன் கிஞ்சிற்றும் துன்பத்தைக் காணாத நிலை" என்ற பொருளைத் தருவதாகும். இங்கே குறிப்பிடப்படும் துயரம், இருமை இயல்பு, அல்லது அறிவது, அறியப்படுவது என்ற நனவுநிலையைக் குறித்த துயரமாகும். உண்மையில், விடுதலையில் {முக்தியில்} நனவுநிலையில் எந்த இருமை நிலையும் இருக்க முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தமோ குணத்தால் அடிக்கப்பட்ட சித்தமானது விரைவாக லயத்தை அடைந்து சரீரத்தில் நிலையற்றதான எந்த ஒழிவைச் செய்கிறதோ அதைத் தமோ குணத்தாலுண்டான நித்ராஸுகமென்று சொல்லுகிறார்கள். வேதத்தாலுபதேசிக்கப்பட்டதும், துக்கத்தை அனுபவியாததுமான அந்த மோக்ஷத்திலும் பொய்யானதும் அவ்யக்தமுமான தமஸுடன் கூடிய ஸுஷுப்தியில் போலிருக்கும். இவ்விதம் விலக்கப்பட்டதும் தம் கர்மங்களைக் காரணமாகக் கொண்டதுமான இந்தப்ரபஞ்சமானது (அஞ்ஞானமுள்ள) சிலருக்கு உறுதியாயிருக்கிறது; (ஞானமுள்ள) சிலருக்கு விலகுகிறது" என்றிருக்கிறது.[11] "கனவுகளற்ற நிலை மற்றும் முக்தி ஆகியவற்றுக்கிடையில் உள்ள ஒற்றுமையையே இந்தச் சுலோகத்தில் வாதி {பேசுபவர்}சொல்கிறார். இரண்டிலும் ஸ்வகர்மபிரத்யாயக் குணம் swakarmapratyayah gunah கைவிடப்படுகிறது. இங்கே சொல்லப்படும் குணம் Gunah என்பது, நனவுநிலையிலிருந்து புறவயமான திரள் பொருட்கள் வரையிலான அக மற்றும் புற இருப்புகள் அனைத்தும் என்பதாகும் என்றும், ஸ்வகர்ம்பிரத்யாய என்பது கர்மஹேதுகாவிர்பவா karmahetukaavirbhaava, அதாவது தங்களை வெளிப்படுத்திக் கொள்ளச் செயல்களைக் காரணமாகக் கொள்வது என்பதுமாகும் என்றும், இது முற்பிறவி செயல்களின் நிமித்தமாக மறுபிறப்பை அடையும் கோட்பாட்டைக் குறிப்பிடுகிறது என்றும் பொருள் கொள்ள வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இச்சூழ்நிலையில், (ஆன்மா மற்றும் உடல் கலந்த நிலை என்ற) நன்கறியப்பட்ட காரணத்தின் விளைவாகவும், அடிப்படை இயல்பின் மூலமும் ஒருவன் நீடித்திருக்கும்போது, (இவை இரண்டில் {அதாவது ஆன்மா மற்றும் உடல் ஆகிய இரண்டில்}) நித்தியமாகச் சொல்லப்படுவது {ஆன்மா} எவ்வாறு அழிவடைய முடியும்?[12](41) சிற்றாறுகள் பெரியனவற்றுக்குள் பாய்ந்து தங்கள் வடிவங்களையும், பெயர்களையும் இழக்கின்றன. (இவ்வாறு பெரிதாகிய) பெரியனவெல்லாம் {பெரிய ஆறுகள் அனைத்தும்} பெருங்கடலுக்குள் விழுந்து தங்கள் வடிவங்களையும், பெயர்களையும் இழக்கிறன்றன. அதே வகையிலேயே விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் உயிர் இழப்பின் வடிவமும் நேர்கிறது[13].(42) இவ்வாறிருக்கையில், குணங்களின் மூலம் வகைப்படுத்தப்படும் ஜீவனானது, அண்ட ஆன்மாவுக்குள் {பரமாத்மாவுக்குள்} அடையப் பெறும்போதும், அதன் குணங்கள் அனைத்தும் மறையும்போதும், வேறுபாட்டினால் குறிப்பிடப்படக்கூடிய பொருளாக அஃது எவ்வாறு இருக்க முடியும்[14]?(43) விடுதலை {முக்தி} அடைவதை நோக்கிச் செலுத்தப்பட்ட புத்தியை அறிந்தவனும், ஆன்மாவை அறிந்து கொள்வதற்காகக் கவனமாக முனைபவனுமான ஒருவன், தண்ணீரில் நனைக்கப்பட்டாலும் ஒருபோதும் அதனால் நனையாத தாமரை இலையைப் போலவே, தன் செயல்களின் தீய கனிகளால் ஒருபோதும் களங்கப்படாதிருப்பான்.(44) ஒருவன், மிக வலுவானவையும், எண்ணிக்கையில் பலவாக இருப்பவையும், பிள்ளைகள், மனைவியரிடம் கொண்ட அன்பு, வேள்வி மற்றும் பிற சடங்குகளில் உள்ள பற்று ஆகிய பற்றுகளில் இருந்து விடுபடும்போதும், அவன் இன்ப துன்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, அனைத்துப் பற்றுகளையும் கடக்கும்போதும், உயர்ந்த கதியை அடைந்து, அண்ட ஆன்மாவுக்குள் {பரமாத்மாவுக்குள்} நுழைந்து பாகுபாடற்றவனாகிறான்.(45) (பிரம்மத்தைக் குறித்த) சரியான உள்ளுணர்வுகளுக்கு வழிவகுக்கும் ஸ்ருதிகளின் தீர்மானங்களை ஒருவன் புரிந்து கொண்டு, அறங்களும், பிற சாத்திரங்களும் கற்பிக்கும் அந்த மங்கள அறச் செயல்களைச் செய்யும்போது, அவன் முதுமை மற்றும் மரணம் குறித்த அச்சங்களைத் தவிர்த்துச் சுகமாக இருப்பான். தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் பாவங்களும், இன்ப துன்பங்களின் வடிவங்களில் இருக்கும் அவற்றின் கனிகளும் {பலன்களும்} மறைந்து அழிவடையும்போது, அனைத்திலும் பற்றற்ற மனிதர்கள் அஃதிலிருந்து எழுந்து, ஆளுமை கொண்ட பிரம்மத்தை முதலில் புகலிடமாக அடைந்து, தங்கள் புத்திகளின் மூலம் பொருள்சாரா பிரம்மத்தைக் காண்கிறார்கள்[15].(46)
[12] "காணப்படும் உயிரினங்கள் அனைத்தும் இருக்கின்றன. அந்த இருப்பும், அவித்யை, ஆசை மற்றும் செயல்களால் ஆன நன்கறியப்பட்ட காரணத்தாலேயே நீடிக்கிறது. மேலும் அவனை உடல் மற்றும் ஆன்மாவுக்கிடையிலான கலவையை வெளிப்படுத்தும் வகையிலேயே நீடித்திருக்கின்றன. வாழ்வின் சாதாரண நோக்கங்கள் அனைத்திற்கு, உண்மையில் நாம் காண்பவற்றையே உயிரினங்கள் எனக் கொள்கிறோம். அப்போது , (உடலா? ஆன்மாவா?) எது அழிவடையத்தக்கது என்ற ஒரு கேள்வி எழுகிறது. "சுவச்வதோ வா கதம் உச்சேதவான் பாவேத்" "cwacwato vaa katham uchcchedavaan bhavet" (அதாவது, நித்தியமானது எனக் கல்விமான்களால் சொல்லப்படும் ஆன்மா எவ்வாறு அழிக்கத்தக்கதாகக் கருதப்படலாம்?) நாம் விரும்பும் வகையில் நம்மால் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியாது. வர்தமானேஷு Vartamaaneshu என்பது லௌகிகவியவாரேஷு Laukikavyavaareshu என்று கொள்ளப்பட வேண்டும். உச்சேதஹ் Uchcchedah என்பது உச்சேதவான் uchcchedavaan என்பதற்கு இணையானதே"எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[13] "நுட்பத்தில் திரள் உடல் மறைந்துவிடுகிறது; நுட்பமானது காரணம் Kaarana என்ற (ஆற்றலுள்ள) இருப்பின் வடிவில் மறைந்து போகிறது; இறுதியாகப் பரமாத்மாவில் மறைந்துபோகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[14] கும்பகோணம் பதிப்பில், "எல்லாவிடத்திலும் ஜீவனானவன் வேறு வஸ்துவுடன் சேர்ந்து காணப்படுகிறான். இவ்விதமிருக்கும்பொழுது அந்த வஸ்துக்களைவிட்டு விலகியபின் திரும்பவும் விசேஷ அறிவு எவ்விதமிருக்கக்கூடும்?" என்றிருக்கிறது.[15] "தகுதியும் பாவமும், அவற்றினுடன் கூடிய இம்மை மற்றும் மறுமையின் இன்ப துன்ப வடிவங்களின் விளைவுகள் ஆகியனவும், மனிதர்கள் அனைத்திலும் பற்றற்றவர்களாகும்போது அழிவடைந்து, துறவு, அல்லது நிவிருத்தி அறத்தை அவர்கள் பயில்வதாகச் சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஜீவன், தன் கீழ்நோக்கிய இறக்கத்தில் (செயல்களால் அமைக்கப்பட்ட உயிரணுவுக்குள்) அவித்யையின் ஆதிக்கத்தின் கீழ், தான் விரித்த வலைகளுக்குள்ளேயே வசிக்கும் பட்டுப்பூச்சியைப் போலவே இம்மையில் {இவ்வுலகில்} வாழ்கிறது. அந்தப் பட்டுப்பூச்சி அதன் உயிரணுக்களைக் கைவிட்டு விடுபடுவதைப் போலவே, ஜீவனும் செயல்களால் உண்டாக்கப்பட்ட அதன் வீட்டைக் கைவிடுகிறது. அதன் இறுதி விளைவாக, மண்குவியல் பாறைத் திரளில் வேகமாக விழுந்து அழிவதைப் போலவே அதன் துன்பங்களும் அழிவை அடைகின்றன[16].(47) ருரு மான் தனது பழைய கொம்புகளைக் கைவிடுவதைப் போலவோ, பாம்பானது எந்த அறிவிப்பும் கொடுக்காமல் தன் சட்டையைக் கைவிடுவதுபோலவோ, பற்றறுத்த மனிதன் தன் துன்பங்கள் அனைத்தையும் கைவிடுகிறான்.(48) ஒரு பறவையானது, நீருக்குள் விழப்போகும் மரத்தை விட்டு அகன்று, தன்னைப் பாதுகாத்துக் கொண்டு, (புதிய) ஓய்விடத்தில் இறங்குவதைப் போலவே, பற்றுகளில் இருந்து விடுபட்ட ஒரு மனிதனும், இன்ப துன்பங்களைக் கைவிட்டுத் தனது நுட்பமான, மற்றும் நுட்பத்திலும் நுட்பமான வடிவங்களில் இருந்து தொடர்பை அறுத்துக் கொண்டு, செழிப்பைக் கொண்ட உயர்ந்த கதியை அடைகிறான்[17].(49) மிதிலையின் தலைவனான ஜனகன், தன் நகரம் எரிவதைக் கண்டு, "இந்தத் தீயில் என்னுடையது எதுவும் எரியவில்லை" என்று அறிவித்தான்" என்று {ஜனதேவனிடம் பஞ்சசிகர்} சொன்னார்[18].(50)
[16] "உர்னனாபம் Urnanaabh என்பது, தங்கள் வயிற்றில் இருந்து வலைகளைப் பின்னும் அனைத்துப் புழுக்களையும் குறிப்பதாகும். இஃது எப்போதும் சிலந்தியை மட்டுமே குறிக்காது. இங்கே அது பட்டுப்பூச்சியைக் குறிப்பிடுகிறது. அப்போதுதான் அதன் ஆய்வு முழுமையடைகிறது. இந்த உடல் அவித்யை மற்றும் செயல்களின் விளைவாக இருக்கிறது. அவித்யையும், செயல்களும் அழிக்கப்படும்போது விடுதலை {முக்தி} அடையப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[17] நிப்தத்யசக்தம் Nipatatyasaktah என்பது பர்துவான் மொழிபெயர்ப்பாளர்களால் தவறாக உரைக்கப்பட்டிருக்கிறது. கே.பி.சின்கா சரியான பொருளைத் தருகிறார், ஆனால், உத்பதத்தி Utpatati என்பதற்குப் பதில் npatati என்று பொருள் கொள்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஜலத்தில் விழுகிற மரத்தைத் தள்ளிவிட்டு அதில் பட்டுக் கொள்ளாமல் பக்ஷியானது ஓடுவது போல இந்த முக்தி பெற்றவன் லிங்க சரீரமற்று ஸுகதுக்கங்களைத் தள்ளிவிட்டு சிறந்த கதியை அடைகிறான்" என்றிருக்கிறது.[18] கும்பகோணம் பதிப்பில், "பலவிதமான எல்லா ஸங்கல்பங்களிலிருந்தும் விடுபட்டவன், "நானே எல்லா உருவமுமாயிருக்கிறேன். நான் எல்லாப் பொருளிலுமிருக்கிறேன். நானே உள்ளிலுமிருக்கிறேன். நானே ஜீவன்" என்ற இந்தக் கவியைப் பாடிக் கொண்டிருப்பான். அன்றியும், மிதிலாபதியான ஜனகனால் தன்னகரமானது தீயால் சூழப்பட்டபோது, "இதில் என்னுடைய உமியும் எரிக்கப்படவில்லை" என்று பாடப்பட்டிருக்கிறது" என்றிருக்கிறது.
இறவாமையை வழங்கவல்லவையும், பஞ்சசிகரால் சொல்லப்பட்டவையுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஜனதேவன், பஞ்சசிகர் சொன்ன அனைத்தையும் கவனமாகச் சிந்தித்துப் பார்த்து, உண்மையை அடைந்து, தன் துயரங்கள் அனைத்தையும் கைவிட்டு, பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டு வாழ்ந்துவந்தான்.(51) ஓ! மன்னா, விடுதலையை {முக்தியை} மதித்து, எவன் இந்த உரையைப் படிக்கிறானோ, எவன் அதைக் குறித்து எப்போதும் சிந்திக்கிறானோ, அவன், பஞ்சசிகரைச் சந்தித்த மிதிலையின் ஆட்சியாளனான ஜனதேவனைப் போலவே, எந்தத் துயரிலும் துன்புறாமல், கவலையில் இருந்து விடுபட்டு விடுதலையை {முக்தியை} அடைவான்" என்றார் {பீஷ்மர்}.(52)
சாந்திபர்வம் பகுதி – 219ல் உள்ள சுலோகங்கள் : 52
ஆங்கிலத்தில் | In English |