The conduct of Time! | Shanti-Parva-Section-227 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 54)
பதிவின் சுருக்கம் : பயங்கரத் துயரில் மூழ்கியவனுக்கு நன்மையெது எனப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; மனோவுறுதி குறித்த பீஷ்மரின் உரையாடல்; பலி மற்றும் இந்திரனின் உரையாடலை மீண்டும் சொன்ன பீஷ்மர், நித்தியத்தன்மை குறித்து பலியின் பெரும் உரையாடல்; பலியைப் புகழ்ந்த இந்திரன்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! ஏகாதிபதி, பயங்கரத் துயரத்தில் மூழ்கியிருக்கும் மனிதனுக்கு நண்பர்களின் இழப்போ, நாட்டின் இழப்போ ஏற்படும்போது உண்மையில் நன்மையானது எது?(1) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இவ்வுலகில் நீரே எங்கள் ஆசான்களில் முதன்மையானவராவீர். இதையே நான் கேட்கிறேன். கேட்கும் எனக்குப் பதில் அளிப்பதே உமக்குத் தகும்" என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, மகன்கள், மனைவியர், அனைத்து வகை இன்பங்கள், செல்வம் ஆகியவற்றை இழந்தவனும், பயங்கரத் துயரில் மூழ்கியவனுமான ஒருவனுக்கு மனோவுறுதியே உயர்ந்த நன்மையாகும். எப்போதும் மனோவுறுதி கொண்ட ஒருவனின் உடல் ஒருபோதும் இளைத்துப் போவதில்லை.(3) துயரற்றநிலையானது மகிழ்ச்சியையும், மேன்மையான உடைமையான உடல்நலத்தையும் {ஆரோக்கியத்தையும்} தன்னுள் கொண்டுள்ளது. உடல் நலத்தின் விளைவால் ஒருவன் மீண்டும் செழிப்பை அடைகிறான்.(4) ஓ! ஐயா, அறவொழுக்கம் ஒழுகும் ஞானியானவன், செழிப்பு, பொறுமை, தன் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை அடைவதில் வெல்கிறான்.(5) இது தொடர்பாகப் பழங்கதையில் பலிக்கும், வாசவனுக்கும் இடையில் நடந்த உரையாடல் மீண்டும் குறிப்பிடப்படுகிறது.(6)
பெரும் எண்ணிக்கையிலான தைத்தியர்களும், தானவர்களும் வீழ நேர்ந்த தேவாசுரப் போர் முடிந்தபோது, பலி மன்னனாக இருந்தான். உலகங்கள் அனைத்திலும் தன் ஆட்சியை மீண்டும் நிறுவிய விஷ்ணுவால் அவன் வஞ்சிக்கப்பட்டான். நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரனே} மீண்டும் தேவர்களின் அரசில் நிறுவப்பட்டான்.(7) தேவர்களின் அரசாட்சி இவ்வாறு மீண்டும் நிறுவப்பட்டபிறகு, நால்வகை {நான்கு வர்ணங்களைச் சேர்ந்த) மனிதர்களும் தங்கள் தங்கள் கடமைகளில் மீண்டும் நிறுவப்பட்டு, மூவுலகங்களும் மீண்டும் செழிப்பில் பெருகியதால், சுயம்புவானவன் இதயத்தில் மகிழ்ச்சியடைந்தான்.(8) அந்த நேரத்தில், ருத்ரர்கள், வசுக்கள், ஆதித்தியர்கள், அசுவினிகள், தெய்வீக முனிவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், மேலும் உயர்ந்த வகை உயிரினங்கள் ஆகியவர்களுடன் கூடிய பலமிக்கச் சக்ரன் {இந்திரன்}, நான்கு தந்தங்களையுடையதும், ஐராவதம் என்றழைக்கப்படுவதுமான யானைகளின் இளவரசனின் மேல் காந்தியுடன் அமர்ந்து கொண்டு உலகங்கள் முழுவதிலும் பவனிவந்தான்.(10)
ஒருநாள், இவ்வாறான பவனியின்போது, அந்த வஜ்ரதாரி {இந்திரன்}, கடற்கரையிலுள்ள ஒரு குறிப்பிட்ட மலைக்குகைக்குள் விரோசனன் மகனான பலியைக் கண்டான். அந்தத் தானவர்களின் இளவரசனைக் கண்டு அவனிடம் சென்றான்.(11) தேவர்களின் தலைவனான இந்திரன் இவ்வாறு ஐராவதத்தின் முதுகில் அமர்ந்திருப்பதையும், பல்வேறு வகைத் தேவர்களால் சூழப்பட்டிருப்பதையும் கண்ட அந்தத் தைத்தியர்களின் இளவரசன் {பலி}, கவலை, அல்லது கலக்கத்திற்கான எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டவில்லை.(12) இந்திரன், கலங்காமல், அஞ்சாமல் நிற்கும் பலியைக் கண்டு, தன் முதன்மையான யானையின் முதுகில் இருந்தபடியே அவனிடம் பேசினான்,(13) "ஓ! தைத்தியா, எவ்வாறு நீ கலக்கமடையாமல் இருக்கிறாய்? இதற்குக் காரணம் உன் வீரமா? பெரியோர்களுக்கு நீ செய்த பணிவிடையா {புண்ணியமா}? அல்லது தவங்களின் மூலம் தூய்மையடைந்த உன் மனம் இதற்குக் காரணமா? அஃது எக்காரணமாக இருந்தாலும், இந்த மனோநிலையை அடைவது மிகக் கடினமானதாகும்.(14) உண்மையில் உயர்ந்த நிலையில் இருந்து வீழ்த்தப்பட்ட நீ, இப்போது உடைமைகள் அனைத்தையும் இழந்தவனாவும், உன் எதிரிகளின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டவனாகவும் இருக்கிறாய். ஓ! விரோசனன் மகனே, துயர்மிக்கத் தருணத்திலும் துயரமடையாதிருக்கும் வகையில் நீ என்ன வழிவகையை அடைந்திருக்கிறாய்?(15)
முன்பு உன் வகைக்கான அரசுரிமையில் நீ நிறுவப்பட்டிருந்தபோது, ஒப்பற்ற இன்பங்கள் உனதாயிருந்தன. எனினும், இப்போதோ உன் செழிப்பு, தங்கம், அரசுரிமை ஆகியவற்றை நீ இழந்திருக்கிறாய். நீ ஏன் கலங்காமல் இருக்கிறாய் என்பதை எங்களுக்குச் சொல்வாயாக.(16) நீ இதற்கு முன்பு உன் தந்தை மற்றும் பாட்டன்களின் அரியணையில் ஒரு தேவனாக அமர்ந்திருந்தாய். இன்று உன் எதிரிகளால் வீழ்ச்சியை அடைந்திருக்கும் நீ ஏன் வருந்தாமல் இருக்கிறாய்?(17) வருணனின் பாசக்கயிறுகளால் நீ கட்டப்பட்டவனாக, என் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டவனாக இருக்கிறாய். உன் மனைவியரும், செல்வமும் அபகரிக்கப்பட்டவனாக இருக்கிறாய். நீ ஏன் துயரமடையவில்லை என்பதை எங்களுக்குச் சொல்வாயாக.(18) செழிப்பையும், செல்வாக்கையும் இழந்தும் நீ துயருறாமல் இருக்கிறாய். உண்மையில் இஃது ஏதோ தனிச்சிறப்புடைய ஒன்றாகும். ஓ பலியே, மூவுலகங்களின் அரசுரிமையை இழந்த பிறகும், இருப்பெனும் சுமையைத் தாங்கவல்லவனாக உன்னையன்றி வேறு எவனால் இருக்க முடியும்?" என்று கேட்டான்.(19)
இந்திரனின் இந்த வார்த்தைகளையும், தன் மேன்மையைப் பறைசாற்றிப் பிளப்பவையான இன்னும் பிறவற்றையும் கேட்டும், விரோசனனின் மகனான பலி தன்னைக் கேள்வி கேட்பவனிடம் {இந்திரனிடம்} பின் வரும் வார்த்தைகளில் பதிலளித்தான்.(20)
பலி {இந்திரனிடம்}, "ஓ! சக்ரா, துயரங்கள் என்னை ஒதுக்கும்போது, நீ ஏன் இத்தகைய தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய்? ஓ! புரந்தரா, என் முன்னே கையில் வஜ்ரத்தை உயர்த்திப் பிடித்தவனாக உன்னைக் காண்கிறேன்.(21) எனினும், முன்பு உன்னால் இவ்வாறு உன்னைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. இப்போதோ நீ எவ்வழிமுறைகளினாலோ அதிகாரத்தை ஈட்டிவிட்டாய். உண்மையில், இத்தகைய கொடுஞ்சொற்களை உன்னைத் தவிர வேறு எவனால் பேச முடியும்?(22) எந்த மனிதன், தண்டிக்க வல்லவனாக இருந்தும், தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டவனும், வீழ்த்தப்பட்டவனும், வீரனுமான ஓர் எதிரியிடம் கருணை காட்டுகிறானோ அவனே உண்மையில் மிக மேன்மையானவனாவான்.(22) இரு மனிதர்கள் போரிடும்போது, போர்க்கள வெற்றியானது நிச்சயம் ஐயத்திற்கிடம் கொண்டதாகும். இருவரில் ஒருவன் நிச்சயம் வெற்றியாளனாகவும், மற்றவன் வெல்லப்பட்டவனாகவும் ஆவான்.(24) ஓ! தேவர்களின் தலைவா, உன் மனநிலை இவ்வாறாக வேண்டாம். உன் வலிமை மற்றும் ஆற்றலால் அனைத்தையும் கைப்பற்றிய பிறகு, அனைத்துயிரினங்களுக்கும் அரசனாக உன்னை நீ கருதிக் கொள்ள வேண்டாம்.(25) ஓ! சக்ரா, நமது {எமது} எந்தச் செயலின் விளைவாகவும் இவ்வாறு நேர்ந்ததெனக் கருதாதே[1]. ஓ வஜ்ரதாரியே {இந்திரனே}, உனது செயல் எதனாலும் நீ இவ்வாறு ஆகிவிட்டாயெனக் கருதாதே.(26)
[1] "இங்கே நமது என்று சொல்லப்படுவது கண்ணியத்தின் சுட்டுப்பெயராகும். இது பேசுபவனை மட்டுமே குறிக்கும், பேசுபவனையும், கேட்பவனையும் சேர்த்துக் குறிக்காது. அதாவது பலி தனது செயலையே நமது செயல் எனச் சொல்கிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நான் இப்போது இருப்பது போல எதிர்காலத்தில் நீ இருப்பாய். நீ செயற்கரிய பெரிய செயலைச் செய்துவிட்டதாகக் கருதி என்னை அவமதிக்காதே.(27) ஒரு மனிதன் காலத்தின் போக்கில் இன்பத்தையும், துன்பத்தையும் மாறி மாறி அடைகிறான். ஓ! சக்ரா, காலத்தின் போக்கிலேயே நீ அண்டத்தின் அரசுரிமையை அடைந்திருக்கிறாயே அன்றி உனது குறிப்பிட்ட எந்த ஒரு தகுதியின் விளைவாலும் அல்ல.(28) காலமே என்னை இவ்வழியில் நடத்துகிறது. அந்தக் காலமே உன்னையும் வழிநடத்துகிறது. இதன் காரணமாகவே, நீ இன்று எவ்வாறிருக்கிறாயோ அவ்வாறு நானும், நாங்கள் எவ்வாறு இருக்கிறோமோ அவ்வாறு நீயும் இல்லை.(29) பெற்றோருக்குச் செய்யும் பணிவிடை, தேவ வழிபாடு, எந்த நல்ல குணத்தையும் பயில்வது ஆகியவற்றில் எதனாலும் எவன் ஒருவனுக்கும் இன்பத்தை அளிக்க முடியாது.(30)
காலத்தால் பீடிக்கப்பட்ட ஒருவனை, அறிவு, தவங்கள், கொடைகள், நண்பர்கள் மற்றும் உற்றார் என எதனாலும் காக்க முடியாது.(31) எக்கணத்திலும் நிகழவல்ல ஒரு துயரை ஆயிரம் வழிமுறைகளினாலும் மனிதர்கள் தடுக்கவல்லவர்கள் அல்லர். இத்தகைய காரியங்களில் புத்தியும், பலமும் ஒன்றுமில்லாமல் போகின்றன.(32) காலத்தின் போக்கால் பீடிக்கப்பட்ட மனிதரை எவராலும் காக்க முடியாது. ஓ! சக்ரா, செயல்படுபவன் நீயே என்று கருதுவதிலேயே அனைத்துத் துன்பங்களின் வேரும் கிடக்கிறது.(33) மேம்போக்காக ஒரு செயலைச் செய்பவனே உண்மையாகச் செயல்படுபவன் என்றால், அவன் வேறொன்றின் (பரமாத்மாவின்) படைப்பாக இருக்க மாட்டான். எனவே, மேம்போக்காகச் செயல்படுபவனே மற்றொருவனின் படைப்பாக இருப்பதால், அந்த மற்றொருவன், உயர்ந்த வேறேதும் இல்லாத பரம்பொருளாக இருக்கிறான்.(34) காலத்தின் துணையுடன் நான் உன்னை வென்றேன். காலத்தின் துணையுடனே நீயும் என்னை வென்றாய். அசையும் உயிரினங்கள் அனைத்தையும் காலமே அசைக்கிறது. அனைத்து உயிரினங்களையும் காலமே அழிக்கிறது.(35)
ஓ! இந்திரா, நீ இழிபிறவின் புத்தியைக் கொண்டதன் விளைவால், அனைத்திற்கும் காத்திருக்கும் அழிவை நீ காணாதிருக்கிறாய். உண்மையில், நீ உன் சொந்த செயல்களின் மூலம் அண்டத்தின் ஆட்சியுரிமையை அடைந்தாய் என உன்னை உயர்வாகக் கருதுவோர் சிலர் இருக்கின்றனர்.(36) இவை யாவற்றுக்காகவும் உலகின் போக்கை அறிந்த எம்மைப் போன்ற ஒருவன், காலத்தால் பீடிக்கப்பட்டதன் விளைவால் எவ்வாறு துயரில் ஈடுபடவோ, புத்தி கலக்கமடையவோ, பிழையின் ஆதிக்கத்திற்கு வசப்படும் நிலையை அடையவோ செய்வான்?(37) காலத்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும்போதும் கூட, கடலில் உடையும் கப்பலைப் போல எனது புத்தியோ, என்னைப் போன்ற ஒருவனின் புத்தியோ அழிவை அடையுமா?(38) ஓ! சக்ரா, நானும், நீயும், எதிர்காலத்தில் தேவர்களின் தலைவர்களாக வரப்போகும் அனைவரும், உனக்கு முன்பு ஏற்கனவே நூறு இந்திரர்கள் எவ்வழியில் சென்றார்களோ அவ்வழியிலேயே செல்வோம்.(39) இப்போது வெல்லப்பட முடியாதவனாக, ஒப்பற்ற காந்தியுடன் சுடர்விடுபவனாக உள்ள நீயும் கூட உனக்கான நேரம் கனியும்போது, என்னைப் போலவே நிச்சயம் அழிவை அடைவாய்.(40)
காலத்தின் போக்கில் பல்லாயிரம் இந்திரர்களும், தேவர்களும், யுகந்தோறும் அடித்துச் செல்லப்படுகிறார்கள். உண்மையில் காலம் தடுக்கப்பட முடியாததாகும்.(41) உனது தற்போதைய நிலையை அடைந்த பிறகு, உன்னை நீயே அனைத்து உயிரினங்களின் படைப்பாளனாகவும், தெய்வீகமானவனாகவும், நித்தியமான பிரம்மனாகவும் மிக உயர்வாகக் கருதிக் கொள்கிறாய்.(42) இந்த உனது நிலையை உனக்கு முன்பே பலர் அடைந்திருக்கின்றனர். எவரிடமும் அது நிலையானதாகவோ, முடிவற்றதாவோ இருந்ததில்லை. எனினும், மூடப் புத்தியின் விளைவால் நீ மட்டுமே அதை {இந்த உன் நிலையை} மாறும் இயல்பற்றதாகவும், நித்தியமானதாகவும் கருதுகிறாய்.(43) நம்பத்தகாததை நீ நம்புகிறாய். நித்திமில்லாததை நீ நித்தியமானதாக மதிக்கிறாய். ஓ தேவர்களின் தலைவா, காலத்தால் மூழ்கடிக்கப்பட்டுக் கலக்கமடைந்திருக்கும் ஒருவன், இவ்வகையிலேயே தன்னைக் கருதிக் கொள்வான்.(44) மடமையினால் வழிநடத்தப்படும் நீ தற்போதைய உன் அரச செழிப்பை உனதாகக் கருதுகிறாய். எனினும், அஃது உன்னிலோ, என்னிலோ, பிறரிடத்திலோ ஒருபோதும் நிலையானதாக இருக்காது என்பதை அறிவாயாக.(45)
அஃது உனக்கு முன்பு எண்ணற்றவர்களுக்குச் சொந்தமானதாக இருந்திருக்கிறது. அவர்களைக் கடந்து வந்த அஃது இப்போது உனதாகியிருக்கிறது. ஓ! வாசவா, அஃது உன்னிடம் சில காலம் இருந்த பிறகு தனது நிலையில்லாமையை உறுதிசெய்யும். பசுவானது, {நீரருந்த} மற்றொரு தாழியை அடைவதற்காகத் தன் தாழியைக் கைவிடுவதைப் போலவே அதுவும் வேறொருவனுக்காக உன்னை நிச்சயம் கைவிடும்.(46) உனக்கு முன்பே சென்றுவிட்ட அரசுகளின் பட்டியலை நான் சொல்லத் துணியேன். ஓ! புரந்தரா, எதிர்காலத்திலும் உனக்குப் பிறகு எண்ணற்ற அரசுகள் எழும்.(47) மரங்கள், செடிகள், ரத்தினங்கள், வாழும் உயிரினங்கள், நீர்நிலைகள், சுரங்கங்கள் ஆகியவற்றுடன் கூடிய இந்தப் பூமியை முன்பு ஆண்ட அந்த ஆட்சியாளர்களை நான் இப்போது காணவில்லை.(48) பிருது, ஐலன், மயன், பீமன், நரகன், சம்பரன், அஸ்வக்ரீவன், புலோமன், அளவற்ற உயரத்துடன் கூடிய கொடிமரத்தைக் கொண்டிருந்த ஸ்வர்ப்பானு, பிரஹ்லாதன், நமுசி, தக்ஷன், விப்ரசித்தி, விரோசனன், ஹ்ரீநிஷேவன், ஸுஹோத்ரன், பூரிஹன், புஷ்பவான், விருஷன்,(49,50) ஸத்யேஷு, விருஷபன், பாஹு, கபிலாஸ்வன், விரூபகன், பாணன், கார்த்தஸ்வரன், வஹ்நி, விஸ்வதம்ஷ்ட்ரன், நைரிதி {நைருருதி},(51) ஸங்கோசன், வரீதாக்ஷன், வராஹன், அஸ்வன், ருசிப்ரபன், விஸ்வஜித், பிரதிரூபன், விருஷாண்டன், விஷ்கரன், மது,(52) ஹிரண்யகசிபு, தானவன் கைடபன், மேலும் தைத்தியர்கள், தானவர்கள் மற்றும் ராட்சசர்களாக இருந்த பலரும்,(53) இவர்களுடன் சேர்த்து நெடுகிலும் நெடுங்காலத்திற்கு முன்பிருந்த பெயர் குறிப்பிடப்படாத இன்னும் பலரும், நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கும் பெயர்களைக் கொண்ட பெரும் தைத்தியர்களும்,(54) தானவர்களில் முதன்மையானோரும் இந்தப் பூமியைவிட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் அனைவரும் காலத்தாலேயே பீடிக்கப்பட்டனர். காலம் அவர்கள் அனைவரையும் விடத் தானே பலமிக்கது என்பதை உறுதி செய்தது.(55)
அவர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான வேள்விகளில் படைப்பாளனை வழிப்பட்டிருக்கின்றனர். நீ மட்டுமே இவ்வாறு செய்தவன் கிடையாது. அறப்பற்றுடன் கூடிய அவர்கள் அனைவரும் எப்போதும் பெரும் வேள்விகளைச் செய்பவர்களாக இருந்தனர்.(56) அவர்கள் அனைவரும் வானத்தில் உலாவ வல்லவர்களாகவும், போர்க்களத்தில் புறமுதுகிடாதவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் மிகப் பலத்த உடற்கட்டுகளைக் கொண்டவர்களாகவும், கனத்த தடிகளுக்கு ஒப்பான கரங்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(57) அவர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான மாயைகளில் திறமிக்கவர்களாகவும், தாங்கள் விரும்பிய வடிவங்களை ஏற்க வல்லவர்களாகவும் இருந்தனர். எந்தப் போரில் அவர்கள் தோல்வியுற்றதாக நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.(58) அவர்கள் அனைவரும் வாய்மை நோன்பை உறுதியாக நோற்பவர்களாகவும், தாங்கள் விரும்பியபடி விளையாடுபவர்களாகவும் இருந்தனர். வேதங்கள் மற்றும் வேதச்சடங்குகளில் பற்றுதலுடன் இருந்த அவர்கள் அனைவரும் பெரும் கல்வியைப் பெற்றவர்களாக இருந்தனர்.(59) பெரும் வலிமையைக் கொண்டிருந்த அவர்கள் அனைவரும் உயர்ந்த செழிப்பையும், செல்வாக்கையும் பெற்றிருந்தனர். ஆனால் அந்த உயர் ஆன்ம அரசர்களில் எவரும், தங்கள் அரசுரிமையின் விளைவால் சிறு அளவிலான செருக்கையும் கொண்டிருக்கவில்லை.(60)
அவர்கள் அனைவரும் ஈகையாளர்களாகவும், தகுந்தர்களுக்குத் தகுந்ததைக் கொடுப்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் அனைத்து உயிரினங்களிடத்திலும் முறையாகவும், சரியாகவும் நடந்து கொண்டனர்.(61) அவர்கள் அனைவரும் தக்ஷன் மகள்களின் வாரிசுகளாக இருந்தனர். பெரும் பலம் கொண்ட அவர்கள் அனைவரும் படைப்பின் தலைவர்களாக இருந்தனர். தங்கள் சக்தியால் அனைத்தையும் எரித்த அவர்கள் அனைவரும், சுடர்மிக்கக் காந்தியைக் கொண்டவர்களாக இருந்தனர். இருப்பினும் அவர்கள் அனைவரும் காலத்தால் அடித்துச் செல்லப்பட்டனர்.(62) ஓ! சக்ரா, உன்னைப் பொறுத்தவரையில், பூமியை அனுபவித்த பிறகு அவளை விட்டகலும்போது உன்னால் உன் துயரைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.(63) பற்று மற்றும் இன்பத்திற்குரிய பொருட்களில் நீ வளர்த்துவரும் ஆசையைக் கைவிடுவாயாக. செழிப்பில் இருந்து பிறக்கும் இந்தச் செருக்கைக் கைவிடுவாயாக. நீ இவ்வகையில் நடந்து கொண்டால், அரசிழப்பு அளிக்கும் துயரை உன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.(64) துயர்மிக்க நேரம் வரும்போது, துன்பத்திற்கு வசப்படாதே. அதேபோல இன்பமிக்க நேரம் வரும்போது திளைத்துப் போகாதே. கடந்தகாலம், எதிர்காலம் ஆகிய இரண்டையும் அலட்சியம் செய்து, நிகழ்காலத்தில் நிறைவுடன் வாழ்வாயாக.(65)
ஒருபோதும் உறங்காத காலம், கடமைகளில் எப்போதும் கவனத்துடன் இருந்த என்னிடமே வந்த அதே காலம், ஓ! இந்திரா, உன்னையும் மிகவிரைவில் அடையும் என்பதால் அமைதி வழிகளில் உன் இதயத்தைத் திருப்புவாயாக.(66) நீ உன் வார்த்தைகளால் என்னைத் துளைக்கிறாய், மேலும், என்னுள் நீ நடுக்கத்தை விதைப்பதாகவும் தெரிகிறது. உண்மையில், அடங்கி இருக்கும் என்னைக் கண்டு உன்னை நீயே உயர்வாகக் கருதிக் கொள்கிறாய்.(67) காலமே என்னை முதலில் தாக்கிற்று. அஃது இப்போது உன்னருகில்தான் இருக்கிறது. நான் முதலில் காலத்தாலேயே வெல்லப்பட்டேன். அதன்காரணமாகவே பிறகு நீ என்னை வென்றாய். அதனால் இவ்வாறு செருக்குடன் முழங்குகிறாய்.(68) முந்தைய காலத்தில், நான் கோபப்பட்டால், என்னெதிரே நின்று போரிட பூமியில் எவன் இருந்தான்? எனினும், காலம் வலிமையானது. அவனே {காலமே} என்னை மூழ்கடித்தான். ஓ! வாசவா, இதன்காரணமாகவே உன்னால் என் முன்னிலையில் நிற்க முடிகிறது. உன் ஆளுகையின் அளவான ஆயிரமும் (ஆயிரம் தெய்வீக வருடங்களும்) நிச்சயம் ஒரு முடிவுக்கு வரும்.(69) வலிமையும், சக்தியும் கொண்டவனாக இருந்தாலும், நான் இப்போது துயர்மிக்க நிலையில் இருப்பதைப் போலவே நீயும் வீழ்வாய், உன் அங்கங்களும் துயருறும். மூவுலகங்களின் ஆட்சிக்கட்டிலை ஆக்கிரமித்திருந்த உயர்ந்த இடத்தில் இருந்து நான் வீழ்ந்துவிட்டேன். நீயே இப்போது சொர்க்கத்தின் உண்மையான இந்திரனாக இருக்கிறாய்.(70)
காலப்போக்கின் விளைவால் உயிரினங்களின் இந்த இனிய உலகில் உலகளாவிய புகழுக்கான பொருளாக நீ இப்போது இருக்கிறாய். என்ன செய்ததன் மூலம் நீ இன்று இந்திரனானாய் என்பதை உன்னால் சொல்ல முடியுமா? யாம் என்ன செய்ததனால் எமது நிலையில் இருந்து வீழ்ந்தோம் என்பதையும் சொல்ல முடியுமா?(71) காலன் ஒருவனே படைப்பாளனாகவும், அழிப்பவனாகவும் இருக்கிறான். (இவ்வண்டத்தில் எந்த விளைவையும் உண்டாக்க) வேறேதும் காரணமில்லை. சரிவு, வீழ்ச்சி, அரசு, இன்பம், துன்பம், பிறப்பு இறப்பு ஆகிய இவற்றில்(72) எதனையும் எதிர்கொள்ளும் கல்விமான் திளைப்பதோ, துயரில் ஈடுபடுவதோ இல்லை. ஓ! இந்திரா, நீ எமை அறிவாய். ஓ! வாசவா, நாமும் உன்னை அறிவோம்.(73) ஓ! வெட்கங்கெட்டவனே, நீ என்னவாக இருக்கிறாயோ அதைக் காலமே தந்தது என்பதை மறந்து நீ ஏன் என் முன்னிலையில் இவ்வாறு தற்புகழ்ச்சி செய்து கொள்கிறாய்? அந்தக் காலங்களில் என் ஆற்றல் யாது என்பதை நீ கண்டிருக்கிறாய்.(74) நான் செய்த போர்கள் அனைத்திலும் நான் வெளிப்படித்திய சக்தியும் வலிமையும் போதுமான சான்றுகளை அளிப்பனவாகும். ஓ! சச்சியின் தலைவா, ஆதித்யர்கள், ருத்திரர்கள், சாத்யஸ்கள், வசுக்கள்,(75) மருத்துக்கள் ஆகியோர் அனைவரும் என்னால் வெல்லப்பட்டனர். ஓ! சக்ரா, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த பெரும்மோதலில்,(76) என் தாக்குதலின் மூர்க்கத்தால் தேவர்கள் விரைவாக முறியடிக்கப்பட்டனர் என்பதை நீயே நன்கறிவாய். காடுகள் மற்றும் அந்தக் காடுகளில் வசிப்பவர்களுடன் கூடிய மலைகள், எம்மால் மீண்டும் மீண்டும் சுழற்றி வீசப்பட்டன.(77) நான் உன் தலையில் உடைத்தவையும், செங்குத்தான முனைகளைக் கொண்டவையுமான மலைமுகடுகள் பலவாகும். எனினும், என்னால் இப்போது என்ன செய்ய முடியும்? காலம் தடுக்கப்பட முடியாததாகும்.(78)
இஃது இவ்வாறில்லையென்றால், வஜ்ரதாரியாக இருக்கும் உன்னை என் புறங்கையின் ஒரே குத்தில் வீழ்த்திக் கொல்லத் துணிந்திருக்க மாட்டேன் என்று நினைக்காதே. எனினும், தற்போது என் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான நேரம் இல்லை. இப்போது நான் அமைதியைப் பின்பற்றவும், அனைத்தையும் பொறுத்துக் கொள்வதற்குமான நேரமே வந்திருக்கிறது. ஓ! சக்ரா, இந்தக் காரணத்தினாலேயே நான் உன் அவமானம் அனைத்தையும் தாங்கிக் கொள்கிறேன். எனினும், நான் உன்னைவிடவும் ஆணவத்தைத் தாங்கிக் கொள்ள இயலாதவன் என்பதை அறிவாயாக.(79) காலத்தின் கட்டுகளால் பலமாகக் கட்டப்பட்டவனும், காலமெனும் நெருப்பால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டவனும், காலம் கனிந்தவனுமான ஒருவன் முன்பு நீ தற்புகழ்ச்சி செய்து கொள்கிறாய்.(80) உலகத்தால் தாங்கிக் கொள்ள இயலாதவனான கரியவன் அதோ நிற்கிறான். இழிந்த விலங்கைப் போல என்னைக் கயிறுகளால் கட்டி கடும் வடிவத்துடன் அங்கே நிற்கிறான்.(81) ஈட்டல், இழத்தல், இன்பம், துன்பம், காமம், கோபம், பிறப்பு, இறப்பு, சிறைபடுதல், விடுதலையடைதல் ஆகிய இவை அனைத்தையும் ஒருவன் காலத்தின் போக்கில் சந்திக்கவே வேண்டும்.(82) நான் செயல்படுபவனல்ல. நீயும் செயல்படுபவனல்ல. உண்மையில் அனைத்தையும் அறிந்தவனே செயல்படுபவனாவான். மரத்தில் தோன்றிய ஒரு கனியைப் போல இப்போது (என்னை வீழ்த்துவதற்காகக்) காலம் என்னைக் கனியச் செய்கிறது.(83)
காலத்தின் போக்கில் ஒரு மனிதன் இன்பத்தை அடைவதற்குச் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட செயல்கள் இருக்கின்றன. அதே செயல்களைக் காலப்போக்கில் மற்றொருவன் செய்வதன் மூலம் அவன் துன்பத்தையே அடைகிறான்.(84) காலத்தின் அறங்களை {காலத் தர்மங்களை} அறிந்த நான் காலத்தால் தாக்கப்படும்போது துயருறக் கூடாது. ஓ! சக்ரா, இதன்காரணமாகவே நான் வருந்தாமல் இருக்கிறேன். துயரத்தால் நமக்கு எந்த நன்மையையும் செய்ய முடியாது. துயரில் ஈடுபட்டு ஒருவன் அடையும் வருத்தத்தால் அவனைத் துன்பத்தில் இருந்து ஒருபோதும் காக்க முடியாது. மறுபுறம், துயரம் ஒருவனுடைய சக்தியை அழிக்கிறது. இதன்காரணமாகவே நான் துயரில் ஈடுபடவில்லை" என்றான் {பலி}".(85,86)
இவ்வாறு தைத்தியர்களின் தலைவனால் {பலியால்} சொல்லப்பட்டவனும், பலமிக்கவனும், ஆயிரங்கண் கொண்டவனும், பாகனைத் தண்டித்தவனுமான நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(87)
சக்ரன் {இந்திரன் பலியிடம்}, "வஜ்ரந்தரித்தபடி உயர்த்தப்பட்டிருக்கும் எனக் கரங்களையும், வருணனின் பாசக்கயிறுகளையும் கண்டு, அனைத்து உயிரினங்களுக்கும் அழிவைத் தரும் யமன் உட்பட எவனுடைய புத்தி கலக்கமடையாதிருக்கும்?(88) எனினும், மிக உறுதியானதும், உண்மைப் பார்வைகளைக் கொண்டதுமான உனது புத்தி கலக்கமடையாதிருக்கிறது. ஓ! வெல்லப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே, உன் மனோவுறுதியின் விளைவாலேயே நீ இன்று கலக்கமடையாதிருக்கிறாய்.(89) இந்த அண்டத்தில் உள்ள பொருட்கள் யாவும் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டும், உடல்படைத்த எவன்தான், தனது உடலின் மீதோ, தன் ஆசைக்குரிய அனைத்துப் பொருட்களின் மீதோ நம்பிக்கையை வைக்கத் துணிவான்?(90) பார்வையில் இருந்து மறைக்கப்பட்டிருந்தாலும், பயங்கரமானதாக இருக்கும் காலநெருப்பினுள் வீசப்பட்டதும், தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதும், உண்மையில் முடிவில்லாததுமான இந்த அண்டம் நிலையில்லாதது என்பதை உன்னைப் போலவே நானும் அறிவேன்.(91) இங்கே ஒவ்வொருவனும் காலத்தால் தாக்கப்படுகிறான். உயிரினங்களில் நுட்பமானவையோ, திரளானவையோ காலத்தின் ஆட்சியில் எந்த எதிர்ப்புணர்வையும் கொள்வதில்லை. அனைத்துப் பொருட்களும் காலத்தின் கொப்பரையில் {கொதிகலனில்} சமைக்கப்படுகின்றன.(92) காலத்திற்குத் தலைவன் எவனும் இல்லை. காலம் எப்போதும் கவனத்துடன் இருக்கிறது. காலம் எப்போதும் தன்னுள் அனைத்துப் பொருட்களையும் சமைத்துக் கொண்டிருக்கிறது. நிற்காமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் காலத்தின் ஆளுகைக்குள் நுழைந்த எவனும், அங்கிருந்து தப்பியதில்லை.(93)
உடல்படைத்த அனைத்தும் கவனமில்லாமல் இருக்கலாம், ஆனால் காலமானது எப்போதும் கவனமாகவும் விழித்தநிலையிலும் அவைகளுக்குப் பின்னால் இருக்கிறது. எவனும் தன்னில் இருந்து காலத்தை விரட்டிவிட்டதாகக் காணப்படுவில்லை.(94) பழமையானதும், நித்தியமானதும், நீதியின் உடல்வடிவமுமான காலமானது அனைத்து உயிரினங்களிலும் சீராகவே இருக்கிறது. காலம் தவிர்க்கப்பட முடியாததாகும், அதன் போக்கும் பின்னோக்கிச் செல்வதில்லை.(95) ஈட்டிக்காரன் {வட்டிக்குக் கடன் கொடுப்பவன்} தன் வட்டியைக் கூட்டிக் கொள்வதைப் போலவே காலமும், கலைகள், லவங்கள், காஷ்டைகள், க்ஷணங்கள், மாதங்கள், பகல்கள் மற்றும் இரவுகள் எனத் தன் நுண்ணியப் பகுதிகளைச் சேர்த்துக் கொள்கிறது.(96) மரங்களின் வேர்களை அடையும் ஓர் ஆற்றின் நீரோட்டம் அம்மரத்தையே அடித்துச் செல்வதைப் போலவே, காலமானது, "இன்று இதைச் செய்வேன், இந்த மற்றொரு செயலை நாளை செய்வேன்" என்று சொல்லிக் கொள்ளும் ஒருவனை அடித்துச் செல்கிறது.(97) "சற்றுமுன்தான் அவனைப் பார்த்தேன். அதற்குள் எவ்வாறு அவன் இறந்தான்?" என்று கேட்பவர்களையும் காலம் அடித்துச் செல்கிறது.(98)
செல்வம், வசதிகள் {போகங்கள்}, பதவி, செழிப்பு ஆகிய அனைத்தும் காலத்திற்கு இரையாகின்றன. ஒவ்வொரு உயிரினத்தையும் அணுகும் காலம் அதன் உயிரைப் பறித்துச் செல்கிறது. செருக்குடன் தங்கள் தலைகளை உயர்த்தும் அனைத்தும் வீழவே விதிக்கப்பட்டிருக்கின்றன.(99) எது இருப்பில் இருக்கிறதோ, அஃது இல்லாமையின் மற்றொரு வடிவம் மட்டுமே ஆகும். அனைத்தும் நிலையற்றவையாகவும், உறுதியற்றவையாகவுமே இருக்கின்றன. எனினும் அத்தகைய தீர்மானத்தை அடைவது மிக அரிதான காரியமாகும்.(100) இவ்வளவு உறுதியுடனும், உண்மைப் பார்வையுடனும் கூடிய உனது புத்தி கலக்கமடையாமல் இருக்கிறது. சிலகாலத்திற்கு முன்பு நீ எவ்வாறு இருந்தாய் என்பதை நீ மனத்தால் உணரவில்லை.(101) பலமிக்கக் காலமானது, அண்டத்தைத் தாக்கி, அதைத் தன்னுள்ளேயே சமைத்து வயதின் முதுமையையோ, இளமையையோ கருதிப்பாராமல் அனைத்தையும் அடித்துச் செல்கிறது. இவ்வளவுக்கும், காலத்தால் இழுத்துச் செல்லப்படும் ஒருவன், தன் கழுத்தில் வீசப்பட்டிருக்கும் சுருக்கை {பாசக்கயிற்றை} அறியாதவனாகவே இருக்கிறான்.(102) பொறாமை, பகட்டு, பேராசை, காமம், கோபம், அச்சம், ஆசை, கவனமின்மை, செருக்கு ஆகியவற்றில் பற்றுடன் இருக்கும் மக்களே கலக்கமடைகிறார்கள்.(103)
எனினும், நீ இருப்பின் உண்மையை அறிந்தவனாக இருக்கிறாய். கல்வியைப் பெற்றிருக்கும் நீ, ஞானமும், தவமும் கொண்டவனாக இருக்கிறாய். உள்ளங்கையில் இருக்கும் ஒரு நெல்லிக்கனியைக் காண்பதைப் போலக் காலத்தை நீ தெளிவாகக் காண்கிறாய்.(104) ஓ! விரோசனன் மகனே {பலியே}, நீ காலவொழுக்கம் குறித்து முழுமையாக அறிந்தவனாக இருக்கிறாய். அனைத்து வகை ஞானங்களையும் நன்கறிந்திருக்கிறாய். தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட நீ, உன் ஆசைகளுக்கு முற்றான தலைவனாகவும் இருக்கிறாய். இதன் காரணமாக நீ ஞானியர் அனைவரின் பற்றுக்குரியவனாகவும் இருக்கிறாய்.(105) நீ உன் புத்தியைக் கொண்டு மொத்த அண்டத்தையும் முழுமையாக உணர்ந்திருக்கிறாய். அனைத்து வகை இன்பங்களை அனுபவித்தவனாக இருப்பினும், எதிலும் பற்று கொள்ளாதவனாக இருப்பதால் நீ எதனாலும் கறைபடிந்தவனாக இல்லை.(106) நீ உன் புலன்களை வென்றிருப்பதால், ஆசை மற்றும் இருள் {ரஜஸ் மற்றும் தமஸ்} குணங்கள் உன்னைக் களங்கப்படுத்தவில்லை. இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டும் அற்ற உன் ஆன்மாவுக்கு மட்டுமே நீ பணிவிடை செய்கிறாய்.(107) பகையில்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாக இருந்து, அமைதியில் உன் இதயத்தை நிலைக்கச் செய்திருக்கும் உன்னை இவ்வாறாகக் காண்பதன் மூலம் என் இதயம் உன்னிடம் கருணை கொள்கிறது.(108)
ஞானமடைந்த உன்னைப் போன்ற ஒருவனைச் சங்கிலியால் பிணைத்துச் சிறையில் அடைத்துத் துன்புறுத்த நான் விரும்பவில்லை. தீங்கிழையாமை {அஹிம்சையே} உயர்ந்த அறமாகும். நான் உன்னிடம் இரக்கம் கொள்கிறேன்.(109) உன்னைக் கட்டியிருக்கும் இந்த வருண பாசங்கள், காலப்போக்கில் ஏற்படும் மனிதர்களின் ஒழுக்கக்கேட்டின் விளைவால் தளர்வடையும். ஓ! பேரசுரா, நீ அருளப்பட்டிருப்பாயாக.(110) எப்போது ஒரு மருமகள், முதிர்ந்த மாமியாரை வேலைவாங்குவாளோ, எப்போது ஒரு மகன் எண்ண மயக்கத்தால் தனது தந்தையை வேலை வாங்குவானோ,(111) எப்போது சூத்திரர்கள் தங்கள் கால்களைப் பிராமணர்களைக் கொண்டு கழுவிக் கொள்கிறார்களோ, எப்போது அவர்கள் {சூத்திரர்கள்} மறுபிறப்பாள வகைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுடன் அச்சமில்லாமல் கலவியில் ஈடுபடுவார்களோ,(112) எப்போது மனிதர்கள் தவிர்க்கப்பட வேண்டிய கருவறைகளில் தங்கள் உயிர் நீரை வெளியிடுவார்களோ, எப்போது வீட்டின் கழிவுகள் வெங்கலப் பாத்திரங்கள் மற்றும் தட்டுகளில் தாங்கப்படுமோ, எப்போது தேவர்களுக்காகப் படைக்கப்பட்ட வேள்விக் காணிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டிய பாத்திரங்களில் ஏந்தப்படுமோ,(113) எப்போது நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நால்வகையினரும் மீறுவார்களோ, அப்போது உன்னைக் கட்டியிருக்கும் பாசங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தளர்வடையும்.(114) எம்மிடம் உனக்கு அச்சமேதும் வேண்டியதில்லை. அமைதியாகக் காத்திருப்பாயாக. மகிழ்ச்சியாயிருப்பாயாக. கவலைகள் அனைத்தையும் விடுவாயாக. உன் இதயம் உற்சாகம் நிறைந்ததாக இருக்கட்டும். உடல்நலக் குறைவேதும் உனதாகாதிருக்கட்டும்" என்றான் {இந்திரன்}.(115)
யானைகளின் இளவரசனை {ஐராவதத்தைத்} தன் வாகனமாகக் கொண்ட அந்தத் தெய்வீக இந்திரன், இந்த வார்த்தைகளை அவனிடம் {பலியிடம்} சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றான். அசுரர்கள் அனைவரையும் வென்று மகிழ்ச்சியில் திளைத்த தேவர்களின் தலைவன், உலகங்கள் அனைத்தின் ஒரே தலைவனானான்.(116) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களின் தலைவனான அவனைத் துதித்துப் பெரும் முனிவர்கள் பாடினார்கள். நெருப்பின் தேவன் {அக்னி}, காணத்தக்க தன் வடிவத்தில் (அனைவராலும்) ஊற்றப்படும் தெளிந்த நெய்யை மீண்டும் சுமக்கத்தொடங்கினான். மேலும் அந்தப் பெருந்தேவன் {இந்திரன்} தன் கவனிப்பில் விடப்பட்டிருந்த அமுதத்தைக் காக்கும் பொறுப்பையும் எடுத்துக் கொண்டான்.(117) வேள்விகளில் ஈடுபடும் முதன்மையான பிராமணர்களால் புகழ்ந்து பாடப்பட்ட தலைவன் இந்திரன், சுடர்மிக்கக் காந்தியுடன் தன் கோபம் தணிக்கப்பட்டு, தன் இதயம் அமைதியடைந்து, சொர்க்கத்திலுள்ள தன் வசிப்பிடத்திற்கு மகிழ்ச்சியுடன் சென்று பேரின்பத்துடன் தன் நாட்களைக் கடத்தத் தொடங்கினான்" என்றார் {பீஷ்மர்}.(118)
சாந்திபர்வம் பகுதி – 227ல் உள்ள சுலோகங்கள் : 118
ஆங்கிலத்தில் | In English |