The wisdom of Namuchi! | Shanti-Parva-Section-226 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 53)
பதிவின் சுருக்கம் : இந்திரனுக்கும், நமுசிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; சோகத்தை விலக்க வேண்டிய காரணத்தை இந்திரனுக்குச் சொன்ன நமுசி...
[1]பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பழங்கதையில் நூறு வேள்விகளைச் செய்தவனுக்கும் {இந்திரனுக்கும்}, அசுரன் நமுசிக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(1) அனைத்து உயிரினங்களின் பிறப்பு மற்றும் மரணம் குறித்து அறிந்தவனான அசுரன் நமுதி, செழிப்பை இழந்தவனாக இருந்தும், முற்றிலும் அசைவற்றதாக இருக்கும் பரந்த பெருங்கடலைப் போலக் கலங்காத இதயத்துடன் இருந்த போது, புரந்தரன் {இந்திரன்} இந்த வார்த்தைகளை அவனிடம் {நமுசியிடம்} சொன்னான்:(2) "ஓ! நமுசியே, உன் நிலையில் இருந்து வீழ்ந்து, கயிறுகளால் கட்டப்பட்டு, உன் எதிரிகளின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டு, செழிப்பை இழந்தவனாக இருக்கும் நீ, துயரத்தில் ஈடுபட்டு வருகிறாயா? அல்லது உன் நாட்களை உற்சாகமாகக் கழித்து வருகிறாயா?" என்று கேட்டான்.(3)
[1] கும்பகோணம் பதிப்பில் இதற்கு முன்னர் யுதிஷ்டிரன் கேட்கும் கேள்வி ஒன்று இருக்கிறது. அது பின்வருமாறு: "யுதிஷ்டிரர், "துயரங்களில் மூழ்கியிருப்பவனுக்கும் எது நன்மையைத் தருவதாகும்? அஃதை எனக்குச் சொல்ல வேண்டும். ஓ! புஜபலமுள்ளவரே! உறுதியாய்யிருக்க வேண்டித் திரும்பவும் அதனை எனக்குச் சொல்ல வேண்டும்" என்று கேட்க, பீஷ்மர் சொல்லத்தொடங்கினார்" என்று இருக்கிறது.
நமுசி {இந்திரனிடம்}, "விலக்கப்பட முடியாத இத்தகைய துயரத்தில் ஈடுபடுவதன் மூலம் ஒருவன் தன் உடலை வீணாக்கிக் கொண்டு, தன் பகைவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறான். மேலும், அடுத்தவனின் துயரத்தில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு எவனாலும் அதைக் குறைக்க முடியாது. ஓ! சக்ரா, இந்தக் காரணங்களினால் நான் துயரில் ஈடுபடுவதில்லை. நீ காணும் இவை யாவற்றுக்கும் ஓர் எல்லை இருக்கிறது[2].(4) ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, துயரில் ஈடுபடுவதால், அது மேனி அழகு, செழிப்பு, வாழ்வு {உயிர்}, அறம் ஆகியவற்றை அழிக்கிறது.(5) உண்மை ஞானம் கொண்ட ஒருவன், சரியில்லாத மனநிலையில் பிறக்கும் துயரத்தை நிச்சயம் அடக்கி, உயர்ந்த நன்மையைத் தரவல்லதும், இதயத்தில் வசிப்பதுமான ஒன்றை அவனது மனத்தில் நன்றாகச் சிந்திக்க வேண்டும்.(6) ஒருவன் தன் மனத்தை உயர்ந்த நன்மையில் நிலைபெறச் செய்யும்போது, அவனது நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை[3].(7) ஆணை விதிப்பவன் ஒருவனே, இரண்டாமவன் எவனும் கிடையாது. கருவறைக்குள் கிடக்கும் உயிர் வரை அவனது கட்டுப்பாடு பரந்து விரிந்திருக்கிறது. அந்தப் பேரியக்குனரால் கட்டுப்படுத்தப்படும் நான், அவன் என்னை நிறுவியிருப்பதைப் போலவே கீழ் நோக்கி ஓடும் ஓடை நீரைப் போல ஓடிக் கொண்டிருக்கிறேன்.(8)
[2] "அனைத்துப் பொருட்களும் அழியத்தக்கனவே, ஒன்றும் நித்தியமானதல்ல என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "முந்தைய சுலோகங்களில் விளக்கப்பட்டது போல, விடுதலையை {முக்தியை} அடைய முயலும் ஒருவன் தன்னை யோகத்தில் நிலைபெறச் செய்ய வேண்டும். யோகத்தின் விளைவால் அவன், (தான் விரும்பாமலே) பல ஆச்சரியகரமான சக்திகளை அடைவான். அதைத் தொடர்ந்து அவனது நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன" எனக்கங்குலி இங்கே விளக்குகிறார்.
இருப்பு என்றால் என்ன? விடுதலை {முக்தி} என்றால் என்ன? என்னவற்றை அறிந்து, முன்னதை {இருப்பை} விடப் பின்னதே {விடுதலையே} மேன்மையானது என்பதையும் புரிந்து கொண்டாலும், இன்னும் நான் அஃதை அடைய முனையவில்லை. அறத் திசையை நோக்கிச் செய்யப்படும் செயல்களையும், அதற்கு எதிர்மறையானவற்றையும் செயல்களையும் செய்ய முனையும் நான், அவன் என்னை நிறுவியபடியே ஓடிக் கொண்டிருக்கிறேன்.(9) ஒருவன் தனக்கு விதிக்கப்பட்ட பொருட்களையே அடைகிறான். எது நடைபெற வேண்டுமோ, அதுவே நடைபெறுகிறது.(10) விதிப்பவன் நிறுத்தும் கருவறைகளிலே அவன் மீண்டும் மீண்டும் வசிக்க வேண்டியிருக்கிறது. இக்காரியத்தில் அவனுக்கு வேறு வாய்ப்பேதும் இல்லை.(11) எந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில் நிறுத்தப்பட்டாலும், தனக்கு விதிக்கப்பட்ட நிலையை அப்படியே ஏற்றுக் கொள்பவன் அதனால் திகைப்படைவதில்லை.(12) காலத்தின் போக்கில் மீண்டும் மீண்டும் வரும் இன்பம் மற்றும் துன்பத்தால் மனிதர்கள் பாதிப்பை அடைகின்றனர். இதில் (யார் ஒருவருக்கும் ஏற்படும் இன்ப துன்பங்களில்) தனிப்பட்ட யாதொன்றும் இல்லை. துன்பத்தை விரும்பாதவன் செயல்படுபவனாகத் தன்னைக் கருதிக் கொள்வதிலேயே இந்தத் துயரம் இருக்கிறது[4].(13)
[4] "ஞானியான ஒருவன் தன்னையே செயல்படுபவனாக ஒருபோதும் கருதுவதில்லை; எனவே அவன் ஒருபோதும் துயரடைவதில்லை. தனக்கு நேரும் துயரைக் கலக்கமடையாமல் சந்திக்கும் அவன், அவ்விளைவானது ஏற்கனவே விதிக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறான். மூடன் அவ்வாறு ஏற்பதில்லை. அவன், தன்னையே செயல்படுபவனாகக் கருதிக் கொண்டு, தன் செயல்களின் விளைவுகளாகவே துயரத்தைப் பார்க்கிறான். எனவே, கலக்கமில்லாமல் துன்பத்தைச் சந்திக்க முடியாது. எனவே, பேரியக்குனர் ஒருவரின் கைகளில் கருவியாக மட்டுமே இருக்கிறோம், ஒருபோதும் நாம் செயல்படுபவனாக இருப்பதில்லை என்பதே உண்மை கருத்தாக இருக்கையில், ஒருவன் தன்னைத் தானே செயல்படுபவனாகக் கருதுவதிலேயே துன்பம் இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
முனிவர்கள், தேவர்கள், பேரசுரர்கள் ஆகியோருக்கு மத்தியில் மூன்று வேதங்களையும் முழுமையாக அறிந்தவர்களும், காட்டில் உள்ள தவசிகளிலும் யாரைத் தான் துயரங்கள் அணுகாது? எனினும், ஆத்மா, அனாத்மா ஆகியவற்றை அறிந்தோர் ஒருபோதும் துயர்களில் அஞ்சுவதில்லை.(14) இயல்பாகவே இமயத்தைப் போல அசையாதவனாக இருக்கும் ஞானி ஒருபோதும் கோபவசப்படமாட்டான்; புலன் நுகர் பொருட்களில் பற்றுதலுடன் ஒருபோதும் துன்புறமாட்டான்; அவன் ஒருபோதும் சோகத்தில் ஒப்பாரி வைப்பதோ, மகிழ்ச்சியில் இன்புறுவதோ கிடையாது. அத்தகைய மனிதன் பெரும் துன்பங்களில் பீடிக்கப்படும்போதும் ஒருபோதும் துயருக்கு வசப்படுவதில்லை.(15) பெரும் வெற்றிகளால் மகிழ்ச்சியடையாதவனும், பேரிடர்களில் திகைப்படையாதவனும், இன்பத்தையும், துன்பத்தையும் தாங்கிக் கொள்பவனும், அசையாத இதயத்துடன் அவை இரண்டுக்கும் நடுவான நிலையில் இருப்பவனுமான ஒருவன் மிக மேன்மையானவன் ஆவான்.(16) ஒருவன் எந்நிலைக்கு வீழ்ந்தாலும், அவன் துயரின் வசப்படாமல் உற்சாகமாக இருக்க வேண்டும். உண்மையில் ஒருவன், தன் மனத்தால் சுமக்கப்படுவதும், பெருகுவதும், (விலக்கப்படாமல் இருந்தால்) நிச்சயம் துன்பத்தைத் தரவல்லதுமான தனது துயரை இவ்வாறே விரட்ட வேண்டும்.(17)
ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகள் ஆகிய இரண்டின் அடிப்படையில் கடமைகளைக் குறித்த விவாதங்களை நடத்தும் கல்விமான்களின் எந்தச் சபையில் ஒரு தீய மனிதன் நுழைந்தால் அச்சப்படவில்லையோ, அது நல்ல சபையல்ல, உண்மையில், அது சபை என்ற பெயரில் அழைக்கப்படத் தகாததாகும். எந்த மனிதன், அறம் குறித்த விசாரணையில் நுழைந்து, தான் அடைந்த தீர்மானங்களின் அடிப்படையில் செயல்படுவதில் வெல்வானோ அவன் தன் இனத்தில் முதன்மையானவன் ஆவான்[5].(18) ஒரு ஞானியின் செயல்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளக்கூடியனவல்ல. ஞானியானவன், தனக்குத் துன்பங்கள் நேர்கையில் ஒருபோதும் திகைப்படைவதில்லை. அவன் முதிர் வயது கௌதமரைப் போல, மிகப் பயங்கரப் பேரிடரின் விளைவால், தன் நிலையில் இருந்து வீழ்ந்துவிட்டாலும் கூட ஒருபோதும் திகைப்படையாதவனாகவே இருப்பான்[6].(19)
[5] "இந்த ஸ்லோகத்தின் நோக்கம், கடமைகளைக் குறித்த சரியான தீர்மானங்கள் நேர்வது மிக அரிதானது என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "இது பலத்த அடியாகும். கேட்பவனான இந்திரன், மிகத் தீய மனநிலையின் விளைவால், கௌதமரின் மனைவியான அஹல்யையின் கற்புக்குக் களங்கம் ஏற்படுத்தினான். கௌதமர் தன் மனைவியைக் கல்லாக மாற்றி அவளைத் தண்டிக்க வேண்டியிருந்தது. எனினும், இந்தத் தண்டனையானது, கௌதமரின் இல்லற வாழ்வை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது. இத்தகைய பயங்கரத் துன்பத்திலும் கௌதமர் தன் இதயத்தின் உற்சாகத்தை இழக்கவில்லை. இந்தச் சாடைப் பேச்சின் விளைவானது, பேசுபவன் அவனைப் போன்றவனல்ல, ஆனால் கௌதமரைப் போன்றவன் என்று இந்திரனுக்குச் சொல்வதற்காக அமைந்ததாகும். அதாவது, நமுசி தன் ஆசைகளுக்கு அடிமையாக இல்லாமல், தன் புலன்களுக்கும், இதயத்துக்கும் தலைவனாக இருந்தான் என்பதாகும். {இதையே நமுசி இந்திரனுக்குச் சொல்ல முயற்சிக்கிறான்}" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மந்திரங்கள், பம், சக்தி, ஞானம், ஆற்றல், நடத்தை, ஒழுக்கம், செல்வச்செழிப்பு ஆகிய இவற்றில் எதைக் கொண்டும் ஒரு மனிதனால், தனக்கு விதிக்கப்படாத ஒன்றை அடையமுடியாது. பிறகு, ஒருவன் தன் இதயத்தை எதில் நிலைநிறுத்தியிருந்தானோ, அஃதை அடையாததில் என்ன சோகம் இருக்க முடியும்?(20) நான் பிறப்பதற்கு முன்னால், எவை தங்கள் கரங்களில் காரியங்களை வைத்திருந்தனவோ அவையே நான் என்ன செய்ய வேண்டும், துன்புற வேண்டும் என்பதை விதித்திருக்கின்றன. இவ்வாறு எனக்காக விதிக்கப்பட்டதையே நான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். பிறகு, மரணத்தால் என்னை என்ன செய்ய முடியும்?(21) ஒருவன் தனக்காக விதிக்கப்பட்டதை மட்டுமே அடைகிறான். அவன் எங்கே செல்ல வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அங்கேயே செல்கிறான். விதிக்கப்பட்ட இன்ப துன்பங்கள் மட்டுமே அடையப்படுகின்றன.(22) எந்த மனிதன், இதை முழுமையாக அறிந்து திகைப்படையாமல் இருக்கிறானோ, எவன் இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டிலும் நிறைவுடன் இருக்கிறானோ, அவன் தன் இனத்தில் முதன்மையானவனாகக் கருதப்படுகிறான்" என்றான் {நமுசி}" {என்றார் பீஷ்மர்}.(23)
சாந்திபர்வம் பகுதி – 226ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |