The indications of a Brahmagnani! | Shanti-Parva-Section-229 | Mahabharata In Tamill
(மோக்ஷதர்மம் - 565)
பதிவின் சுருக்கம் : பிரம்ம ஞானிகளின் குறியீடுகளைப் பற்றித் தேவலருக்கும் ஜைகீஷவ்யருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "எந்த மனநிலை, கடமைகளின் எந்த வழிமுறை, எந்த ஞானம், எந்தச் சக்தி ஆகியவற்றைக் கொண்டு ஒருவன், மாற்றமில்லாததும், தொடக்ககால இயற்கைக்கு {பிரகிருதிக்கு} எட்டாததுமான பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்?" என்று கேட்டான்[1].(1)
[1] "வேறு அனைத்தும் பிரகிருதியின் பாதிப்புக்கு உள்ளாகும். பரமாத்மா மட்டுமே அதனால் பாதிக்கப்படாததாகும். எனவே, பிரம்மமானது "பிரகிருதிக்கும் மேம்பட்டது" என்று எப்போதும் சொல்லப்படுகிறது. இங்கே பிரகிருதியானது மிகப் பரந்தவகையில் பொருள் கொள்ளப்படுகிறது." எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நிவிருத்தி எனும் அறமொழுகுவதில் ஈடுபடுபவனும், குறைவாக உண்பவனும், புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்தியவனுமான ஒருவனால், மாற்றமில்லாததும், தொடக்ககால இயற்கைக்கு மேலானதுமான பிரம்மத்தை அடையமுடியும்.(2) ஓ! பாரதா, இது தொடர்பாகப் பழங்கதையில் ஜைகீஷவ்யருக்கும், அசிதருக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) ஒரு காலத்தில் பெரும் ஞானம் கொண்டவரும், கடமை மற்றும் அறநெறி குறித்த உண்மைகளை முழுமையாக அறிந்தவருமான ஜைகீஷவ்யரிடம் அசித தேவலர் பேசினார்.(4)
தேவலர் {ஜைகீஷவ்யரிடம்}, "புகழப்படும்போது நீர் மகிழ்ச்சியடைவதில்லை. பழிகூறப்படும்போதோ, நிந்திக்கப்படும்போதோ நீர் கோபவசப்படுவதில்லை. உண்மையில் உமது ஞானம்தான் என்ன? இஃதை எங்கிருந்து பெற்றீர்? உண்மையில் அந்த ஞானத்தின் புகலிடம் எது?" எனக் கேட்டார்".(5)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு தேவலரால் கேட்கப்பட்டவரும், கடும் தவங்களை உடைய தூய்மையானவருமான ஜைகீஷவ்யர் நம்பிக்கை நிறைந்தவையும், ஆழமான கருத்தைக் கொண்டவையும், உயர்ந்த முக்கியத்துவம் கொண்டவையுமான வார்த்தைகளைச் சொன்னார்.(6)
ஜைகீஷவ்யர் {அசித தேவலரிடம்}, "ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அறச்செயல்களைச் செய்வோர் அனைவரின் மதிப்பீட்டில் எது உயர்ந்த கதியோ, எது உயர்ந்த லட்சியமோ, எது அமைதி நிலையோ அஃதை உமக்குச் சொல்லப் போகிறேன்.(7) ஓ! தேவலரே, புகழ்வோரிடமும், பழிப்போரிடமும் ஒன்றாகவே நடந்து கொள்பவர்களும், தங்கள் சொந்த நோன்புகள் மற்றும் நற்செயல்களை மறைப்பவர்களும்,(8) பதில்குற்றச்சாட்டுகளை வைப்பதில் ஒருபோதும் ஈடுபடாதவர்களும், நன்மையாக இருந்தாலும் (நன்மையை உண்டாக்குவதற்குப் பதில்) தீமையை உண்டாக்கும் என்று கணக்கிடப்படுபவற்றை ஒருபோதும் செய்யாதவர்களும், அடைந்த தீங்கிற்குப் பதில்தீங்கு செய்ய விரும்பாதவர்களுமான மனிதர்களே ஞானம் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்[1].(9) வரப்போவதை நினைத்து அவர்கள் ஒருபோதும் வருந்துவதில்லை. தங்கள் முன்னிலையில் இருப்பவற்றை மட்டும் கருத்தில் கொண்டு செய்ய வேண்டியதைச் செய்வார்கள். கடந்த காலத்தில் நடந்தவற்றுக்காக ஒருபோதும் அவர்கள் துயரில் ஈடுபட மாட்டார்கள், அல்லது அவற்றைத் தங்கள் மனங்களில் நினைத்தும் பார்க்க மாட்டார்கள்.(10)
[1] "வட்டார {வங்க} மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும், 8ம் சுலோகத்தின் இரண்டாவது வரியையும், 9ம் சுலோகத்தின் முதல் வரியையும் தவறாகப் பெயர்த்திருக்கிறார்கள். கே.பி.சிங்கா சில பகுதிகளைத் தவிர்த்திருக்கிறார். பர்துவான் மொழிபெயர்ப்பாளர் வழக்கம்போலவே பொருளில்லாமல் எழுதியிருக்கிறார். நிஹ்னுவந்தி Nihnuvanti என்ற வினைச்சொல்லுக்குப் பொருள் "மறைப்பது" அதாவது "தற்புகழ்ச்சி செய்து கொள்ளாமல் இருப்பது" என்பதாகும். வதிஷ்யந்தி vadishyanti என்ற வினைச்சொல் அஹிதேஹிதம் ahite hitam என்ற தொடருக்குப் பின்பு சொல்லப்பட வேண்டும். ஏனெனில் ஹிதாஹிதம் hita ahitam என்பது எதிரிடை எதிர்முன்னிலை என்ற வழிமுறையில் படிக்கப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தேவலரே, நிந்திப்பவர்களிடத்திலும், கொண்டாடுகிறவர்களிடத்திலும் எப்பொழுதும் ஸமமாயிருந்து கொண்டு எவர்கள் அதை விலக்குகிறார்களோ அவர்களின் நடத்தையும், புண்ணியத்தையும் சொல்கிறேன். அவர்கள் அஹிதமான செய்கையைச் சொன்னாலும் சொல்லுகிறவனைப் பற்றி யாதொன்றும் பேச மாட்டார்கள். நல்ல புத்தியுள்ளவர்கள் அடிப்பவனையும் திருப்பி அடிக்க விரும்பமாட்டார்கள்; கிட்டாத பொருளைப் பற்றிச் சோகப்படமாட்டார்கள்; ஸமயத்தில் கிட்டியதைச் செய்வார்கள்; சென்றவைகளைப் பற்றியும் சோகப்படமாட்டார்கள்; அவர்களை நினைக்கவும் மாட்டார்கள்" என்றிருக்கிறது.
ஓ! தேவலரே, சக்தியையும், ஒழுங்குபடுத்தப்பட்ட மனங்களையும் கொண்ட அவர்கள், மரியாதையுடன் வேண்டிக் கொள்ளப்பட்டால், எது எவ்வழியில் செய்யப்பட வேண்டுமோ, அஃதை அவர் அனைத்துப் பொருட்களைப் பொறுத்தவரையில் எவை அவர்களுக்காகக் காத்திருக்குமோ அவற்றைத் தங்கள் விருப்பப்படியே செய்வார்கள்[2].(11) முதிர்ந்த அறிவு, பெரும் ஞானம், முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்ட கோபம் ஆகியவற்றுடன் ஆசைகளைத் தங்கள் ஆளுகையின் கீழ் வைத்திருக்கும் அவர்கள் எவருக்கும் எண்ணத்திலோ, சொல்லிலோ, செயலிலோ தீங்கிழைப்பதில்லை.(12) பொறாமை அற்ற அவர்கள் எவருக்கும் தீங்கிழைக்கமாட்டார்கள். தற்கட்டுப்பாடு கொண்ட அவர்கள், அடுத்தவரின் செழிப்பைப் பார்த்து ஒருபோதும் துன்பப்பட மாட்டார்கள்.(13) அத்தகைய மனிதர்கள் மிகைப்படுத்திப் பேசுவதையோ, மற்றவர்களைத் துதிபாடுவதில் ஈடுபடுவதையோ, அவர்களைக் குறித்துத் தவறாகப் பேசுவதையோ ஒருபோதும் செய்ய மாட்டார்கள். தங்களைப் புகழ்பவர்களாலோ, பழிப்பவர்களாலோ அவர்கள் ஒருபோதும் பாதிப்படைவதில்லை.(14) அவர்கள் தங்கள் ஆசைகள் அனைத்தையும் பொறுத்தவரையில் அமைதியான மனநிலையில் இருந்து, அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதிலேயே ஈடுபடுவார்கள். அவர்கள் ஒருபோதும் கோப வசப்படுவதோ, மகிழ்ச்சிக்கூத்தாடுவதோ, எவ்வுயிருக்கும் தீங்கிழைப்பதோ கிடையாது.(15)
[2] "இந்தச் சுலோகத்தைக் கே.பி.சிங்கா தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்" எனக் கங்குலி இங்கே தெரிவிக்கிறார். கும்பகோணம் பதிப்பில், "சக்தியும், உறுதியான விரதமுமுள்ளவர்கள் பொருள் விருப்பத்துடன் வந்த பெரியோர்களுக்குத் தம்சக்திக்குத் தக்கபடி உபகாரஞ்செய்வார்கள்.
அவர்கள், தங்கள் இதய முடிச்சுகள் அனைத்தையும் அவிழ்த்து மிக மகிழ்ச்சியாகக் கடந்து செல்வார்கள். அவர்களுக்கு நண்பர்கள் எவருமில்லை, அதே போல அவர்களும் பிறருக்கு நண்பராயிருப்பதில்லை.(16) அவர்களுக்கு எதிரிகள் எவரும் கிடையாது, அதே போல அவர்களும் பிற உயிரினங்களுக்கு எதிரிகளாக இருப்பதில்லை. உண்மையில், இவ்வழியில் வாழக்கூடிய மனிதர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே தங்கள் வாழ்வைக் கடத்துவார்கள்[3].(17) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, அறம் மற்றும் அறநெறிகளின் விதிகளில் ஞானத்தை அடைவோரும், அவ்விதிகளை நடைமுறையில் பயில்வோரும் இன்பத்தை அடைவதில் வெல்வார்கள், அதே வேளையில் அறவழியில் இருந்து வீழ்ந்தவர்கள் துன்பங்கள் மற்றும் துயரங்களால் பீடிக்கப்படுவார்கள்.(18) நான் இப்போது அறவழியைப் பின்பற்றுகிறேன். பிறரால் இகழப்படுவதன் மூலம், அவர்களிடம் நான் ஏன் எரிச்சல் அடைய வேண்டும்? அல்லது பிறரால் புகழப்படுவதன் மூலம், அவர்களிடம் நான் ஏன் நிறைவு கொள்ள வேண்டும்?(19) மனிதர்கள் தாங்கள் ஈடுபடும் செயல்களில் இருந்து அவர்கள் விரும்பிய எந்தப் பொருளையும் அடையட்டும். (ஈட்டல் மற்றும் இழத்தலில் நான் வேறுபாடற்றவனாக இருக்கிறேன்). புகழும், இகழும் என் வளர்ச்சிக்கோ, குறைவிற்கோ பங்களிக்க இயலாதவையாக இருக்கின்றன[4].(20)
[3] கும்பகோணம் பதிப்பில், "ஹ்ருதயக்ரந்தியென்னும் அஜ்ஞானத்தை விலக்கிவிட்டு ஸுகமாக உலாவி கொண்டிருப்பார்கள். மற்ற பிராணிகளுக்கும் பந்துக்களாயிருக்கிற இவர்களுக்கு வேறு பந்துக்களில்லை. எவர்கள் ஒருவனுக்கும் விரோதிகளல்லரோ அவர்களுக்கு விரோதிகளுமில்லை. இவ்விதம் நடக்கிற மனிதர்கள் எப்போதும் ஸுகமாக ஜீவிப்பார்கள்" என்றிருக்கிறது.[4] கும்பகோணம் பதிப்பில், "மனிதர்கள் எதை எதை விரும்புகிறார்களோ விரும்பங்காரணத்தால அதை அதை அடைகிறார்கள். நிந்தையாலும், ஸ்துதியாலும் குறைவும் வளர்ச்சியும் எனக்கு உண்டாவதில்லை" என்றிருக்கிறது.
பொருட்களின் உண்மைகளைப் புரிந்து கொண்டவன், அவமதிப்பையே கூட அமுதமாக எண்ணி நிறைவை அடைவான். அறிவுள்ள மனிதன், மதிப்பையே நஞ்சாக எண்ணி உண்மையில் எரிச்சலடைவான்.(21) இந்தக் களங்கங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவன் பிறரால் அவமதிக்கப்பட்டாலும் இம்மையிலும், மறுமையிலும் அச்சமில்லாமல் உறங்குவான். மறுபுறம், அவனை அவமதிப்பவனோ அழிவை அடைவான்.(22) எந்த ஞானியர் உயர்ந்த கதியை அடைய முனைவார்களோ அவர்கள் இத்தகைய ஒழுக்கத்தைப் பின்பற்றியே வெற்றியை அடைவார்கள்.(23) தன் புலன்கள் அனைத்தையும் வென்ற மனிதன், வேள்விகள் அனைத்தையும் செய்தவனாகக் கருதப்படுகிறான். அத்தகைய மனிதன், அழிவில்லாத்தும், தொடக்கக் கால இயற்கையும் {பிரகிருதியும்} எட்டமுடியாமல் விஞ்சி நிற்கும் உயர்ந்த ஏணியுமான பிரம்மத்தை அடைவான்.(24) தேவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், ராட்சசர்கள் ஆகியோராலும் கூட இந்த உயர்ந்த கதியை அடைந்தவனின் ஏணியை எட்ட முடியாது" என்றார் {ஜைகீஷவ்யர்}".(25)
சாந்திபர்வம் பகுதி – 229ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English |