The greatness of Narada! | Shanti-Parva-Section-230 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 57)
பதிவின் சுருக்கம் : நற்குணங்களே உலகை வசப்படுத்தும் என்பதைச் சொல்ல நாரதரைக் குறித்து உக்ரசேனருக்கும், கிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அனைவரின் அன்புக்குரியவனாக, அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துபவனாக, அனைத்துத் தகுதிகளையும் {புண்ணியங்களையும்}, அனைத்து சாதனைகளையும் கொண்டவனாக எவன் இருக்கிறான்" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக முந்தைய சந்தர்ப்பம் ஒன்றில் உக்ரசேனனால் கேட்கப்பட்டுக் கேசவனால் {கிருஷ்ணனால்} சொல்லப்பட்ட வார்த்தைகளை இப்போது நான் சொல்லப் போகிறேன்.(2)
உக்ரசேனன் {கிருஷ்ணனிடம்}, "மனிதர்கள் அனைவரும் நாரதரின் தகுதிகளைக் குறித்துப் பேசுவதில் பேராவல் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அந்தத் தெய்வீக முனிவர் உண்மையில் அனைத்து வகைத் தகுதிகளையும் கொண்டவராக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஓ! கேசவா, இதைக் குறித்த யாவையும் எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(3)
வாசுதேவன், "ஓ! குகுரர்களின் தலைவரே {உக்ரசேனரே}, ஓ! மன்னா, நான் அறிந்த வரையில் நாரதரின் நற்பண்புகளைக் குறித்துச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பீராக. நாரதர் எந்த அளவுக்கு ஒழுக்கத்தில் நல்லவராகவும், பக்திமானாகவும் இருக்கிறாரோ அந்த அளவுக்கு அவர் சாத்திரங்களைக் கற்றவராக இருக்கிறார்.(4) இருப்பினும், அவரது ஒழுக்கத்தைப் பொறுத்தவரையில், அவர் ஒருவனின் குருதியைக் கொதிக்கச் செய்யும் செருக்கை ஒருபோதும் பேணிவளர்ப்பதில்லை. இதன்காரணமாகவே அவர்கள் எங்கும் கொண்டாடப்படுகிறார்.(5) நிறைவின்மை, கோபம், அலட்சியப் போக்கு {சபலம்}, அச்சம் ஆகியவை நாரதரிடம் கிடையாது. அவர்கள் காரிய தாமதம் செய்வதில் இருந்து விடுபட்டவராகவும், துணிவுமிக்கவராகவும் இருக்கிறார். இதன் காரணமாகவே அவர் எங்கும் கொண்டாடப்படுகிறார்.(6) நாரதர் அனைவரின் மதிப்புமிக்க வழிபாட்டுக்கும் தகுந்தவரே. ஆசை அல்லது பேராசையின் மூலம் அவர் தனது வார்த்தைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை. இதன் காரணமாகவே அவர்கள் எங்கும் கொண்டாடப்படுகிறார்.(7) அவர், ஆன்ம ஞானத்திற்கு வழிவகுக்கும் கோட்பாடுகளை முழுமையாக அறிந்தவராகவும், அமைதியான மனநிலை கொண்டவராகவும், பெருஞ்சக்தியைக் கொண்டவராகவும், தன் புலன்களுக்குத் தலைவராகவும் இருக்கிறார். அவர் வஞ்சனையில் இருந்து விடுபட்டவராக, பேச்சில் வாய்மைநிறைந்தவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(8) சக்தி, புகழ், நுண்ணறிவு, ஞானம், பணிவு, நற்பிறப்பு, தவங்கள் மற்றும் வயதால் அவர் புகழ்பெற்றவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(9) அவர் நன்னடத்தைக் கொண்டவராக இருக்கிறார். அவர் நன்றாக உடுத்தி நன்றாக அலங்கரித்துக் கொள்கிறார். தூய்மையான உணவை அவர் உண்கிறார். அவர் அனைவரிடமும் அன்புள்ளவராக இருக்கிறார். அவர் உடலாலும் மனத்தாலும் தூய்மையானவராக இருக்கிறார். அவர் இனிய பேச்சைக் கொண்டவராக இருக்கிறார். அவர் பொறாமை மற்றும் வன்மத்தில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் வழிபடப்படுகிறார்.(10)
நிச்சயமாக அவர் எப்போதும் அனைத்து மக்களின் நன்மையில் ஈடுபடுகிறார். அவரிடம் எந்தப் பாவமும் வசிப்பதில்லை. பிறரின் தீப்பேற்றில் அவர் ஒருபோதும் மகிழ்ச்சியடைவதில்லை. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் வழிபடப்படுகிறார்.(11) வேத மந்திரங்களைக் கேட்பதன் மூலமும், புராணங்களைக் கவனிப்பதன் மூலமும் அவர் உலகம் சார்ந்த ஆசைகள் அனைத்தையும் வெல்ல எப்போதும் முனைகிறார். அவர் பெருந்துறவியாவார், மேலும் அவர் எவரையும் ஒருபோதும் அவமதிப்பதில்லை. இதன் காரணமாகவும் அவர் எப்போதும் மதிப்புடன் வழிபடப்படுகிறார்.(12) அவர் அனைவரையும் சமமாகப் பார்க்கிறார்; எனவே, அவர் எவரிடமும் அன்பு கொள்வதுமில்லை எவரையும் வெறுப்பதுமில்லை. அவர் எப்போதும் கேட்பவனுக்கு இனிமையானவற்றையே பேசுகிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(13) அவர் சாத்திரங்களின் பெரும் கல்வியைக் கொண்டவராக இருக்கிறார். அவர் பல்வேறு இனிமையான காரியங்களைக் குறித்து உரையாடுகிறார். அவரது அறிவும், ஞானமும் பெரியனவாகும். அவர் பேராசையில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். வஞ்சனையில் இருந்தும் விடுபட்டவராக இருக்கிறார். பெரிய இதயம் கொண்டவராக இருக்கிறார். கோபத்தையும், பேராசையையும் வென்றவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(14) ஈட்டல் அல்லது இன்பம் தொடர்புடைய எந்தக் காரியத்திற்காகவும் அவர் ஒருபோதும் எவரிடமும் சச்சரவு செய்ததில்லை. அனைத்துக் களங்கங்களும் அவரிடம் இருந்து கிழித்து எறியப்பட்டன. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(15)
(பிரம்மத்திடம்) அவரது அர்ப்பணிப்பு உறுதியானதாகும். அவர் ஆன்மா பழியற்றதாகும். அவர் ஸ்ருதிகளை நன்கறிந்தவராக இருக்கிறார். கொடுமையில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். வஞ்சனை அல்லது குற்றங்களின் ஆதிக்கத்தைக் கடந்தவராக அவர் இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(16) (பிறரின்) பற்றுக்குரிய அனைத்துப் பொருட்களிலும் அவர் பற்றில்லாதவராக இருக்கிறார்.[1] அவர் ஒருபோதும் நீண்ட காலம் ஐயத்தின் ஆதிக்கத்திற்கு அடங்கியதில்லை. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(17) அவர் ஈட்டல் மற்றும் இன்பம் தொடர்புடைய பொருட்களில் எந்த ஏக்கமும் கொள்பவரில்லை. அவர் தன்னைத்தானே ஒருபோதும் புகழ்ந்து கொள்வதில்லை. அவர் வன்மத்தில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். பேச்சில் மென்மை கொண்டவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(18) அவர் ஒன்றுக்கொன்று வெவ்வேறான மனிதர்கள் அனைவரின் இதயங்களிலும் எந்தப் பழியும் சொல்லாமல் அவற்றை {அவர்களின் இதயங்களைக்} கவனிக்கிறார். பொருட்களின் தோற்றம் தொடர்புடைய அனைத்து காரியங்களையும் அவர் நன்கறிந்தவராக இருக்கிறார்.(19) அவர் எவ்வகை அறிவியலையும் ஒருபோதும் அலட்சியம் செய்வதில்லை, அல்லது அவற்றில் வெறுப்பைக் காட்டுவதில்லை. அவர் தனது சொந்த தகுதிக்குரிய அறநெறியின்படி வாழ்கிறார். அவர் ஒருபோதும் கனியற்ற வகையில் காலத்தைக் கடத்துவதில்லை. அவரது ஆன்மா எப்போதும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(20)
உழைப்பைச் செலுத்த வேண்டிய காரியங்களில் அவர் எப்போதும் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். அவர் அறிவையும், ஞானத்தையும் ஈட்டியிருக்கிறார். அவர் யோகத்தில் ஒரு போதும் தணிவடைந்ததில்லை. அவர் எப்போதும் கவனத்துடனும், முயற்சிக்கான ஆயத்தத்துடனும் இருக்கிறார். அவர் எப்போதும் கவனமிக்கவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(21) அவர் தன் குறைகள் எதற்காகவும் ஒருபோதும் நாணமடைந்ததில்லை. அவர் மிகுந்த கவனம் கொண்டவராக இருக்கிறார். அவர் எப்போதும் பிறருக்கான நன்மையில் அவர்களுடன் சேர்ந்து எப்போதும் ஈடுபடுகிறார். அவர் பிறரது இரகசியங்களை ஒருபோதும் வெளியிடுவதில்லை. இதன் காரணமாகவும் அவர் எப்போதும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(22) மதிப்புமிக்கப் பொருட்களை அடையும் சந்தர்ப்பங்களிலும் அவர் ஒருபோதும் திளைப்பின் வசப்படுவதில்லை. எந்த இழப்பிலும் அவர் ஒருபோதும் வருந்துவதுமில்லை. அவரது புத்தி உறுதியானதாகவும், நிலையானதாகவும் இருக்கிறது. அவரது ஆன்மா அனைத்துப் பொருட்களிலும் பற்றில்லாமல் இருக்கிறது. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(23) இவ்வாறு அனைத்துத் தகுதிகளையும், சாதனைகளையும் கொண்டவரும், அனைத்து காரியங்களிலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்பவரும், தூய்மையான உடலும் மனமும் கொண்டவரும், முற்றிலும் மங்கலகரமானவரும், காலத்தின் போக்கு மற்றும் குறிப்பிட்ட செயல்களின் வாய்ப்புக்குரிய காலங்களையும் நன்கறிந்தவரும், இனிமையான பொருட்கள் அனைத்தையும் நன்கறிந்தவருமான அவரிடம் எவர்தான் அன்புபாராட்டாமல் இருப்பார்கள்?" என்று கேட்டான் {கிருஷ்ணன்}".(24)
சாந்திபர்வம் பகுதி – 230ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |