Brahma and Sacrifice! | Shanti-Parva-Section-271 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 99)
பதிவின் சுருக்கம் : வேள்வியில் உயிர்க்கொலை நேர்வதால் அஃது இழிந்ததென்பற்காக நாரதர் சொன்ன உஞ்சவிருத்தி பிராமணரின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "(இதயத் தூய்மை, அல்லது தேவ மகிமை என்ற) ஒரே நோக்கத்திற்காக உள்ளவை எனக் கருதப்படும் பல்வேறு வகை வேள்விகளில், ஓ! பாட்டா, எந்த வேள்வியானது, சொர்க்கத்தையோ, செல்வத்தையோ அடைவதற்காக அல்லாமல் அறத்திற்காக (அல்லது அறமீட்டுவதற்காக) மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக, வேள்விகளைச் செய்வதற்காக உஞ்ச முறையின்படி வாழ்ந்து வந்த ஒரு பிராமணரைக் குறித்து முன்பு நாரதரால் சொல்லப்பட்ட வரலாற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2)
நாரதர் {பீஷ்மரிடம்}, "அறத்திற்காகத் தனித்தறியப்பட்ட ஒரு முதன்மையான நாட்டில் {விதர்ப்ப நாட்டில்} ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார்[1]. தவங்களில் அர்ப்பணிப்புடன், உஞ்ச முறையின் படி வாழ்ந்து வந்த அந்தப் பிராமணர், வேள்விகளில் விஷ்ணுவைத் துதிப்பதில் மெய்யுறுதிப்பாட்டுடன் ஈடுபட்டு வந்தார்[2].(3) அவர், சியாமாகம் {சாமைத்தானியம்}, ஸூர்யபர்ணி {மாஷபருணி [ஒரு பயறு வகை]}, ஸுவர்ச்சலை {பிராமிசகம் / ஆளிவிதைகள்} மற்றும் கசப்பானவையும், சுவையில் இனிமையற்றவையுமான வேறுவகைக் கீரைகளை {சாகங்களையும்} தம் உணவாகக் கொண்டார். எனினும், அவரது தவத்தின் விளைவாக இவை அனைத்தும் இனிமையாகச் சுவைத்தன.(4) எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல், வானப்பிரஸ்த வாழ்வை வாழ்ந்த அவர் தவ வெற்றியை அடைந்தார். ஓ! எதிரிகளை எரிப்பவரே {பீஷ்மரே}, கிழங்குகளையும், கனிகளையும் கொண்டு அவர், தமக்குச் சொர்க்கத்தை அளிக்கவல்ல வேள்விகளில் விஷ்ணுவைத் துதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்[3].(5)
[1] கும்பகோணம் பதிப்பில், "விதர்ப்ப தேசத்தில் சிறந்ததான தர்மோத்தரமென்ற ராஜ்யத்தில் உஞ்சவிருத்தி செய்யும் ஒரு பிராம்மணரிஷி இருந்தார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்தப் பிராமணர், அறம் பயிலும் நாடுகளில் சிறந்த விதர்ப்பத்தில் வாழ்ந்து வந்தார்" என்றிருக்கிறது.[2] "அறுவடை செய்யும் உழவர்களால் களங்களில் கைவிடப்படும் தானியங்களைச் சேகரித்து அவற்றில் வாழும் ஒரு மனிதர் உஞ்ச முறையின்படி வாழ்பவராக அழைக்கப்படுகிறார். இங்கே குறிப்பிடப்படும் யக்ஞம் என்பது ஸ்ருதிகளில் விளக்கப்பட்டவாறு விஷ்ணுவைக் குறிக்கும் என உரையாசிரியர் ஊகிக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "அவர் விலங்குகளை அடைய முடியாத காரணத்தால் வேள்விகளில் ஒருபோதும் விலங்குகளைக் கொல்லாமல் இருந்தார். எனவே, அவர் அவ்விலங்குகளுக்குப் பதிலாகக் காய்கறிகளைப் பயன்படுத்தினார். தம்மைச் சொர்க்கத்திற்கு இட்டுச் செல்லும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்ட அவரது வேள்விகள் நோக்கத்தால் உண்மையில் கொடூரமானவையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சத்தியர் என்ற பெயரைக் கொண்ட அந்தப் பிராமணருக்கு, பஷ்கரதாரிணி {புஷ்கரமாலினி / புஷ்கரசாரினி} என்ற பெயரில் ஒரு மனைவி இருந்தாள். அவள் தூய மனதைக் கொண்டவளாக இருந்தாள், மேலும் அவள் கடும் நோன்புகள் பலவற்றால் தன்னை மெலியச் செய்திருந்தாள். (அவள் நன்மையைத் தரும் மனநிலையில் இருந்தாலும், அவளது கணவர், இவ்வாறு கொடூரமான வேள்விகளுக்கு அடிமையாக இருந்தார்). அவள் தன் தலைவரின் ஒழுக்கத்தை அங்கீகரிக்கவில்லை. எனினும், (வேள்வி செய்வதற்காக) அவரது மனைவியாக அவரருகில் அமர அழைக்கும்போது, அவரது சாபத்திற்கு அஞ்சிய அவள், அவரது நடத்தைக்குத் தக்கவே தன்னைத் தகவமைத்துக் கொண்டாள். அவளது உடலை மறைத்திருந்த ஆடைகள் மயில்களின் (உதிர்ந்த) தோகைகளாலானதாக இருந்தது.(6,7) இதில் அவள் விருப்பமில்லாதவளாக இருந்தாலும், ஹோத்ரியாக {தீக்ஷிதராக} இருந்த தன் தலைவரின் ஆணையின் பேரில் அந்த வேள்வியைச் செய்தாள். அந்தக் காட்டில், அந்தப் பிராமணரின் ஆசிரமத்திற்கருகில், மானின் வடிவத்தை ஏற்றவரும் சுக்ர குலத்தைச் சேர்ந்தவரும், அறம்சார்ந்தவருமான பர்னாதர் என்பவர் வாழ்ந்து வந்தார்[4]. அவர் {பர்னாதர்}, சத்தியர் என்ற பெயர் கொண்ட அந்தப் பிராமணரிடம் வெளிப்படையாகப் பேசும் வகையில், "மந்திரங்கள் மற்றும் சடங்குகளுக்குரிய பிற பொருட்களில் குறைபாடுள்ள இதுபோன்ற வகையில் உமது வேள்வி நிறைவடைந்தால், நீர் மிகவும் முறையற்ற வகையில் செயல்பட்டவராவீர். எனவே, உமது வேள்வி நெருப்புக்கான ஆகுதிகளைச் செய்வதற்காக என்னைக் கொன்று துண்டுகளாக வெட்டுவீராக. இதைச் செய்து, பழியற்றவராகி, சொர்க்கத்திற்கு உயர்வீராக" என்றார்.(8-10)
[4] கும்பகோணம் பதிப்பில், "தர்மமறிந்ததும், சருகுகளைப் புஜிப்பதுமான ஒரு மிருகமானது சுக்ரர் பலமுறை கட்டளையிட்டதனால் அந்த வனத்தில் அவர் சமீபத்தில் வஸித்துக் கொண்டிருந்தது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்தக் காட்டில், மிகத் தொலைவில் அல்லாமல் அருகிலேயே சுக்ர குல வழியில் வந்த ஒரு மனிதர் வசித்து வந்தார். அவர் மானின் வடிவில் இருந்தார், அவர் பொறாமை கொண்டவராகவும், அதர்மத்தைப் பின்பற்றுபவராகவும் இருந்தார்" என்றிருக்கிறது.
அப்போது சூரிய வட்டிலின் தலைமைத் தேவியான சாவித்திரி உடல் கொண்ட வடிவத்துடன் அந்த வேள்விக்கு வந்து, அந்த மான் செய்யச் சொன்னதை அந்தப் பிராமணர் {சத்தியர்} செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினாள். இவ்வாறு வற்புறுத்திய அந்தத் தேவியிடம் அந்தப் பிராமணர், "நான் வசிக்குமிடத்திற்கு அருகிலேயே வாழும் இந்த மானை நான் கொல்ல மாட்டேன்" என்று மறுமொழி கூறினார்.(11)
இவ்வாறு அந்தப் பிராமணரால் சொல்லப்பட்ட தேவி சாவித்திரி, விலகியவளாக அந்த வேள்வியின் (பிற) குறைகளைக் காண்பதைத் தவிர்க்கவும், பாதாள உலகை ஆய்வு செய்யவும் விரும்பி அந்த வேள்வி நெருப்புக்குள் நுழைந்தாள்.(12) பிறகு அந்த மானானது {கலைமானானது}, (தன்னைத் துண்டுகளாக வெட்டி வேள்வி நெருப்பில் ஊற்றுமாறு) சத்தியரிடம் மன்றாடிக் கேட்டது. எனினும், நட்புடன் அவரை {மானின் வடிவத்தில் இருந்த பர்னாதரை} ஆரத்தழுவி, "செல்வீராக" என்று சொல்லி விடைகொடுத்து அனுப்பினார்.(13) இதனால் அந்த மான் அந்த இடத்தை விட்டுச் செல்வதாகத் தெரிந்தது. ஆனால் எட்டு அடி எடுத்து வைத்ததும் மீண்டும் திரும்பி, "உண்மையில் என்னை நீர் கொல்வீராக. உம்மால் கொல்லப்படும் நான் நியாயமான கதியை நிச்சயம் அடைவேன் என்று உமக்கு உண்மையாகச் சொல்கிறேன். நான் உமக்கு (தெய்வீகப்) பார்வைக் கொடுக்கிறேன். தெய்வீக அப்சரஸ்களையும், உயர் ஆன்ம கந்தர்வர்களின் அழகிய வாகனங்களையும் காண்பீராக" என்றது.(15)
ஏக்கத்துடன் கூடிய கண்களால், நீண்ட நேரம் (அந்தக் காட்சியைக்) கண்டும், (வேள்விக்காக வேண்டும்) அந்த மானைக் கண்டும், கொலையால் மட்டுமே சொர்க்கவாசத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையிலும், (அந்த மான் சொன்ன ஆலோசனையை) அவர் அங்கீகரித்தார் {தீர்மானம் கொண்டார்}.(16) தர்மனே மானாகி அந்தக் காட்டில் பல வருடங்கள் மானாக வாழ்ந்து வந்தான். (வாய்ப்பைக் கண்டு மயங்கிய பிராமணரைக் கண்ட) தர்மன், அவரது விடுதலைக்கான ஆலோசனைகளைச் சொல்லும் வகையில், "வேள்வி குறித்த விதிகளுக்கு இஃது (உயிரினங்களைக் கொல்வது) இணக்கமானதில்லை" என்றான்[5].(17)
[5] கும்பகோணம் பதிப்பில், "மிருகமாகிப் பல வருஷங்கள் வனத்தில் வஸித்துக் கொண்டிருந்த அந்தத் தர்மமானது அந்தப் பாவத்திற்குப் பரிஹாரத்தைச் செய்து கொண்டது. இது யாகத்திற்கு ஏற்பட்ட நல்ல விதியில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
அந்தப் பிராமணரின் மனம் மானைக் கொல்ல விரும்பிய இந்தச் சிந்தனையின் விளைவால், அவர் செய்த பெரிய அளவிலான தவங்கள் மிகவும் குறைந்த நிலையை அடைந்தன. எனவே, உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பது வேள்வியின் எந்தப் பகுதியுமாகாது[6].(18) சிறப்புமிக்கத் தர்மன், (தன் உண்மை வடிவை ஏற்று), அந்தப் பிராமணர் வேள்வி செய்வதற்காகப் புரோஹித அலுவலைச் செய்து துணைபுரிந்தான். அதன் பிறகு, அந்தப் பிராமணர் (புத்துயிர் பெற்ற) தமது தவங்களின் விளைவால், தமது மனைவியின் மனநிலையை அடைந்தார்[7]".(19) வெகுமதிகளைப் பொறுத்தவரையில் தீங்கிழையாமை என்ற அறமே முழுமையானதாகும். எனினும், கொடுமையைக் கொண்ட அறமானது, (முடிவுடன் கூடிய) சொர்க்கம் என்ற அளவுக்கு மட்டுமே நன்மையைத் தரும். நான் உம்மிடம் பிரம்மத்தை உச்சரிப்பவர்களின் அறமான வாய்மை அறத்தைக் குறித்துப் பேசிருக்கிறேன்" {என்றார் நாரதர்}.(20)
[6] கும்பகோணம் பதிப்பில், "அப்பொழுது மிருகஹிம்ஸை செய்ய நினைத்த அவருடைய அவ்வித அபிப்பிராயத்தால் பெரிய தவம் நசித்துவிட்டது. ஆகையால், ஹிம்ஸையானது யாகத்திற்கு உரியதன்று" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் இதைத் தர்மனே சொல்வது போல் வருகிறது. "மானைக் கொன்று வேள்வி செய்ய உமது மனத்தில் நினைக்காதீர். அதனால் பெருந்தவங்கள் அழிவடையும். வேள்விகளில் எந்த வன்முறையும் இருக்கக்கூடாது" என்று தர்மன் சொல்வது போல வருகிறது.[7] "இங்கே சொல்லப்படும் சமாதானம் Samaadhaanam என்பது தியானத்தில் ஆழ்வது, அல்லது உலகில் எந்தப் பற்றும் கொள்ளாத மனநிலையைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பிறகு அவர் தவத்தினால் மனைவியின் பெரிய ஸமாதானத்தையும் அடைந்தார்" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 272ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |