The greatness of virtue! | Shanti-Parva-Section-273 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 100)
பதிவின் சுருக்கம் : ஒருவன் மேன்மையடைவதற்கு அறமே காரணமென யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "எந்த வழிமுறைகளின் மூலம் ஒரு மனிதன் பாவம் நிறைந்தவனாகிறான்? எதன் மூலம் அவன் அறமீட்டுகிறான்? எதன் மூலம் அவன் துறைவை அடைகிறான்? எதன் மூலம் அவன் விடுதலையை {முக்தியை} வென்றெடுக்கிறான்?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நீ கடமைகள் அனைத்தையும் அறிவாய். உன் தீர்மானங்களை உறுதி செய்து கொள்வதற்காக மட்டுமே நீ இக்கேள்வியைக் கேட்கிறாய். விடுதலை {முக்தி}, துறவு, பாவம், அறம் ஆகியவற்றை, அவற்றின் வேர் வரை இப்போது கேட்பாயாக.(2) ஐந்து {புலன் நுகர்} பொருட்களை (வடிவம் {ஒளி}, சுவை, மணம், ஒலி, தீண்டல் {ஊறு})[1] உணரும் எவனுடைய விருப்பமும் முதலில் அவற்றின் பின்னால் ஓடுவதிலேயே இருக்கிறது. உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் தலைவா, புலன்களின் அகப்பாட்டெல்லைக்குள் அவை வந்ததும், விருப்போ வெறுப்போ எழுகிறது.(3) ஒருவன், அந்தப் பொருளை அடைவதற்காக (விரும்பியதை அடைவதற்காகவும், வெறுப்பதைத் தவிர்ப்பதற்காகவும்) முனைந்து, அதிக உழைப்பைக் கோரும் செயல்களைத் தொடங்குகிறான். அவனுக்கு மிக ஏற்புடையவையாகத் தோன்றும் வடிவங்களையும், மணங்களையும் (எஞ்சிய மூன்று புலன்களுக்குரிய மூன்று பொருட்களையும்) மீண்டும் மீண்டும் அனுபவிப்பதற்காகத் தன்னால் முடிந்த சிறந்த முறையில் முயற்சிக்கிறான்.(4)
[1] கும்பகோணம் பதிப்பில், "புருஷனானவன் (சப்தஸ்பர்ச ரூப ரஸ கந்தங்களென்கிற) ஐந்து விஷயங்களுடைய அனுபவத்திற்காக இச்சையை முன்னிட்டுப் பிரவ்ருத்திக்கிறானல்லவா?" என்றிருக்கிறது.
படிப்படியாக, பற்று {ராகம்}, வெறுப்பு {த்வேஷம்}, பேராசை {லோபம்}, தீர்மானப்பிழை {மோகம்} ஆகியவை எழுகின்றன.(5) பேராசை மற்றும் பிழையில் மூழ்கியதும், பற்று மற்றும் வெறுப்பினால் பாதிப்படைந்ததுமான மனம் ஒருபோதும் அறத்தை நோக்கிச் செல்லாது.(6) உண்மையில், அவன் கபடமான முறையில் அறத்தை அடைய முயற்சிக்கிறான், கபடமான முறையில் செல்வத்தை அடைய விரும்புகிறான். ஓ! குருகுலத்தின் மகனே {யுதிஷ்டிரனே}, கபடத்தால் செல்வத்தை ஈட்டுவதில் ஒருவன் வெல்லும்போது,(7) அத்தகைய ஈட்டலில் முழுமையாகத் தன் இதயத்தை நிறுத்துகிறான். அப்போதுதான் அவன், நலன்விரும்பிகள் மற்றும் விவேகிகளால் நயமாகக் கண்டிக்கப்பட்டாலும், அறிவுக்குச் சரியாகப் பொருந்தக்கூடியவையும், சாத்திரவிதிகளுக்கு இணங்கக்கூடியவையுமான பதில்களை அனைவருக்கும் அளித்து, பாவம் நிறைந்த செயல்களைச் செய்யத் தொடங்குகிறான்.(8)
அவன் பாவம் நிறைந்த வகையில் சிந்திப்பதாலும், பாவம் நிறைந்த வகையில் பேசுவதாலும், பாவம் நிறைந்த வகையில் செயல்படுவதாலும், பற்று மற்றும் பிழையில் பிறந்த அவனது மூவகைப் பாவங்கள் மிக வேகமாக அதிகரிக்கின்றன.(9) அவன் பாவ வழியில் நடக்கத் தொடங்கும்போதே, நல்லோர் அவனது தீய தன்மையைக் குறித்துக் கொள்கின்றனர். எனினும், அந்தப் பாவம் நிறைந்த மனிதனுக்கு ஒப்பான மனநிலையுடன் கூடியவர்கள், அவனுடன் நட்பு கொள்கின்றனர்.(10) அவன் இம்மையில் மகிழ்ச்சி அடைவதில் வெல்வதில்லை. அவ்வாறிருக்கையில், மறுமையில் எவ்வாறு மகிழ்ச்சியை அடைவான்? இவ்வாறே ஒருவன் பாவம் நிறைந்தவனாகிறான். அறவோர் குறித்து இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(11) அத்தகைய மனிதன் எந்த அளவுக்குப் பிறரின் நன்மையை நாடுகிறானோ, அந்த அளவுக்குத் தனக்கான நன்மையை அடைவதில் வெல்கிறான். பிற மக்களுக்கான நன்மை நிறைந்த கடமைகளைப் பயில்வதன் மூலம், அவன் மிக உயர்ந்த கதியை இறுதியில் அடைகிறான்.(12)
எவன், தன் ஞானத்தின் உதவியுடன் மேற்குறிப்பிட்ட குற்றங்களைக் காண்கிறானோ, எவன் மகிழ்ச்சி எது, துன்பம் எது, அவை ஒவ்வொன்றும் எவ்வாறு அடையப்படுகிறது என்பதைத் தீர்மானிப்பதில் திறம் பெற்றவனாக இருக்கிறானோ, எவன் நல்லோரிடம் மதிப்புடன் காத்திருக்கிறானோ {பணிவிடை செய்கிறானோ},(13) அவன் நல்லோருடனான பழக்கம் மற்றும் அத்தகைய தோழமை ஆகிய இரண்டின் விளைவால் அறத்தை ஈட்டுவதில் முன்னேற்றமடைகிறான். அத்தகையவனின் மனமானது, அறத்தில் திளைக்கும், அவன் அறத்தையே தன் ஆதரவாகச் செய்து கொண்டு வாழ்வான்.(14) அவன் செல்வத்தை ஈட்டுவதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினால், அத்தகைய செல்வத்தை நல்வழிகளில் அடைவதற்கு மட்டுமே அவன் விரும்புவான்.(15) உண்மையில், அவன் தகுதியை {புண்ணியத்தைக்} காணும் பொருட்களின் வேர்களில் மட்டுமே நீரை ஊற்றுவான். இவ்வழியிலேயே ஒருவன் அறவோனாகி, நல்லோரைத் தன் நண்பர்களாக அடைகிறான்.(16)
நண்பர்கள், செல்வம், பிள்ளைகள் ஆகியவற்றை அடைவதன் விளைவால் அவன் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியாக இருக்கிறான். (இன்பத்தைப் பொறுத்தவரையில்) எந்த உயிரினமும், தான் பெறும் ஒலி, தீண்டல், சுவை, வடிவம் மற்றும் மணம் ஆகியவற்றில் சிறப்பாளுமையை அறத்தின் கனியாக {தர்ம பலமாக} அடைகிறது. இதை நினைவில் கொள்வாயாக. ஓ! யுதிஷ்டிரா, அறத்தின் கனியை {தர்மபலத்தைப்} பெற்ற மனிதன் இன்பத்திற்கு வசப்படுவதில்லை.(17,18) (புலப்படத்தக்க) இத்தகைய அறத்தின் கனிகளில் நிறைவடையாமல், ஞானக்கண்ணால் வழிநடத்தப்படும் அவன் துறவை மேற்கொள்கிறான். அவன் ஞானக்கண்ணை அடையும்போது, சுவை மற்றும் மணம் முதலிய ஆசைகளின் நிறைவில் இன்பங்கொள்வதை நிறுத்துகிறான்.(19) அவன் தன் மனத்தை ஒலி, தீண்டல், வடிவம் முதலியவற்றை நோக்கி ஓட அனுமதிக்காத போதுதான், ஆசையில் இருந்து விடுபடுவதில் வெல்கிறான். எனினும் அவன் அறத்தையோ, அறச்செயல்களையோ ஒருபோதும் கைவிடமாட்டான்.(20)
பிறகு, உலகங்கள் அனைத்தும் அழியத்தக்கனவே என்பதைக் காணும் அவன், (சொர்க்கம் மற்றும் இன்பம் ஆகிய வடிவங்களிலான வெகுமதிகளுடன் கூடிய) அறத்தைக் கைவிட முனைந்து, (நன்கறியப்பட்ட) வழிமுறைகளின் மூலம் விடுதலையை {முக்தியை} அடைய முயற்சிக்கிறான்.(21) பாவம் நிறைந்த அனைத்துச் செயல்களையும் படிப்படியாகக் கைவிடும் அவன், துறவை மேற்கொண்டு, அற ஆன்மாவாகி, இறுதியில் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறான்.(22) ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, ஓ! பாரதா, நீ கேட்ட பாவம், அறம், துறவு, விடுதலை {முக்தி} ஆகியவற்றைக் குறித்து நான் இப்போது சொன்னேன்.(23) எனவே, ஓ! யுதிஷ்டிரா, நீ அனைத்துச் சூழ்நிலைகளிலும் அறத்தையே பின்பற்ற வேண்டும். ஓ! குந்தியின் மகனே, அறத்தைப் பின்பற்றும் உனக்கு வெற்றி நித்தியமானதாகும்" என்றார் {பீஷ்மர்}[2].(24)
[2] "இங்கே குறிப்பிடப்படும் தர்மம் dharma நிஷ்காம தர்மமாகும் Nishkaam dharm {ஆசையற்ற அறம்}. ஏனெனில் சகாம தர்மங்கள் Sakaama dharma {ஆசைகளுடன் கூடிய அறங்கள்} நித்தியமானவையல்ல, சொர்க்கம் போன்ற பொருட்களுக்கு ஒரு முடிவு உண்டு" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 273ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |