Kundadhara! | Shanti-Parva-Section-271 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 98)
பதிவின் சுருக்கம் : அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில் அறமே உயர்ந்தது என்பதை எடுத்துக் காட்ட குண்டதாரனிடம் பக்தி கொண்ட ஒரு பிராமணரின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதரே, அறம், பொருள் மற்றும் இன்பம் குறித்து வேதங்கள் பேசுகின்றன. எனினும், ஓ! பாட்டா, (இவை மூன்றில்) எதை அடைவது மேன்மையானதாகக் கருதப்படுகிறது என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாகப் பழங்காலத்தில் தன்னிடம் அர்ப்பணிப்புடன் இருந்த ஒருவனுக்குக் குண்டதாரன் செய்த நன்மை குறித்த பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(2)
ஒரு காலத்தில், செல்வமற்ற ஒரு பிராமணர், கனியில் {பலனில்} உள்ள விருப்பத்தால் தூண்டப்பட்டு அறமீட்ட முற்பட்டார்[1]. வேள்விகளைக் கொண்டாடுவதற்குத் தேவைப்படும் செல்வத்தில் அவர் தொடர்ந்து தம் இதயத்தை நிலைநிறுத்தினார். அவர், தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகக் கடுந்தவப்பயிற்சியில் தம்மை நிறுவிக்கொண்டார்.(3) நன் நோக்கத்தைச் சாதிக்கத் தீர்மானித்த அவர் தேவர்களைப் பெரும் அர்ப்பணிப்புடன் வழிபடத் தொடங்கினார். ஆனால் அத்தகைய தேவ வழிபாட்டின் மூலம் அவர் செல்வத்தை அடையத் தவறினார்.(4) அப்போது அவர், "இதுவரை மனிதர்களால் துதிக்கப்படாத எந்தத் தேவன் இருக்கிறான்? தாமதமில்லாமல் எனக்கு உதவக்கூடிய எந்தத் தேவன் இருக்கிறான்?" என்று தமக்குள்ளேயே சிந்திக்கத் தொடங்கினார்.(5)
[1] கும்பகோணம் பதிப்பில், "தரித்திரரான ஒரு பிராம்மணர் ஆசையினால் தனத்தை நோக்கினார்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "தர்மத்தை நோக்கினார்" என்பது வேறு பாடம் என்றிருக்கிறது.
பொறுமையான மனத்துடன் இவ்வகையில் சிந்தித்துக் கொண்டிருந்த அவர், தம் முன்பு இருப்பவனும், தேவர்களைத் தக்க வைத்துக் கொள்பவனுமான குண்டதாரன் என்று அழைக்கப்படுபவனைக் கண்டார்.(6) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அவனைக் கண்டதும் அந்தப் பிராமணரின் பற்றுணர்வுகள் {பக்தி} தூண்டப்பட்டு, அவர் தமக்குள்ளேயே, "இவன் நிச்சயம் எனக்குச் செல்வத்தை அளிப்பான். உண்மையில் இவனது வடிவமே அதைக் குறிப்பிடுகிறது.(7) இவன் தேவர்களுடன் மிக நெருக்கமாக வாழ்கிறான். மேலும் இவன் இன்னும் பிற மனிதர்களால் துதிக்கப்படவில்லை. இவன் தாமதமில்லாமல் நிச்சயம் அபரிமிதமான செல்வங்களை எனக்கு அளிப்பான்" என்று நினைத்தார்.(8) இவ்வாறு தீர்மானித்துக் கொண்ட அந்தப் பிராமணர், தூபங்கள், நறுமணப்பொருட்கள், மேன்மையான வகையைச் சார்ந்த மலர் மாலைகள் மற்றும் பல்வேறு வகைக் காணிக்கைகளுடன் {குண்டதாரன் என்ற} அந்த மேகத்தை வழிபட்டார்.(9) இவ்வாறு வழிபடப்பட்ட அம்மேகமானவன் {குண்டதாரன்}, தன்னை வழிபட்டவனிடம் மிகவிரைவில் நிறைவடைந்து, அந்தப் பிராமணனுக்கு நன்மை நிறைந்த இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(10)
{குண்டதாரன்}, "பிராமணக் கொலை {பிரம்மஹத்தி செய்தவன்}, மதுபானம் பருகல் {ஸுராபானம் செய்தவன்}, களவு செய்தல், தகுதிவாய்ந்த நோன்புகள் அனைத்தையும் புறக்கணித்தல் ஆகிய குற்றங்களுக்கு ஞானிகள் பாவக்கழிப்புகளை விதித்திருக்கின்றனர். எனினும் நன்றிமறந்தவர்களுக்கு எந்தப் பாவக்கழிப்பும் கிடையாது.(11) எதிர்பார்ப்புக்கு, அநீதி என்ற பெயரைக் கொண்ட ஒரு பிள்ளை உண்டு. மேலும் கோபமானது, பொறாமையின் பிள்ளை என்று கருதப்படுகிறது. பேராசையானது வஞ்சனையின் பிள்ளையாகும். எனினும், நன்றி மறத்தலானது (சந்ததி இல்லாத) தரிசு நிலையாகும்" என்றான்.(12)
இதன்பிறகு, அந்தப் பிராமணர் குசப் புல்லாலான படுக்கையை விரித்து, குண்டதாரனின் சக்தியால் ஊடுருவப்பட்டு, ஒரு கனவில் உயிரினங்கள் அனைத்தையும் கண்டார்.(13) உண்மையில், தூய்மையான ஆன்மாவைக் கொண்டவரும், (உடல்சார்ந்த) இன்பங்கள் அனைத்திலிருந்தும் தனித்திருந்தவருமான அந்தப் பிராமணரிடம், ஆசை, தவங்கள், அர்ப்பணிப்பு ஆகியவை இல்லாததன் விளைவால், அவ்விரவில் குண்டதாரனிடம் தாம் கொண்ட அர்ப்பணிப்பின் விளைவைக் கண்டார்.(14) உண்மையில், ஓ! யுதிஷ்டிரா, அவர் பெரும் ஒளியைக் கொண்ட உயர் ஆன்ம மாணிபத்ரன், தேவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு, தன் ஆணைகளைக் கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.(15) அங்கே மனிதர்கள் செய்த நற்செயல்களால் தூண்டப்பட்டு அவர்களுக்கு நாடுகளையும், செல்வங்களையும் அளிக்கவும், நல்லியல்பில் இருந்து வீழ்ந்துவிட்டவர்களிடம் இருந்து அவற்றை எடுப்பதிலும் அவர்கள் ஈடுபடுவதாகத் தெரிந்தது.(16) அப்போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே, பேரொளி கொண்ட குண்டதாரன், யக்ஷர்கள் அனைவரின் முன்னிலையில் தேவர்களுக்கு முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான்.(17)
தேவர்களுடைய ஆணையின் பேரில் அந்த உயர் ஆன்மா மாணிபத்ரன், நெடுஞ்சான் கிடையாகக் கிடந்த குண்டதாரனிடம், "குண்டதாரனுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான்.(18) அதன் பேரில் குண்டதாரன், "உண்மையில், தேவர்கள் என்னிடம் நிறைவு கொண்டிருப்பதால்தான், அங்கே அந்தப் பிராமணர் என்னைப் பெரிதும் மதிக்கிறார். அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஏதாவதொன்றைக் கொடுத்து உதவ வேண்டும் என நான் வேண்டுகிறேன்" என்றான்.(19)
இதைக் கேட்ட மாணிபத்ரன், தேவர்களின் உத்தரவின் பேரில் மீண்டும் பெரும் நுண்ணறிவைக் கொண்ட குண்டதாரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(20) "ஓ! குண்டதாரா, எழு, எழுவாயாக. உன் காரியம் வெற்றியடைந்தது. மகிழ்ச்சியடைவாயாக. செல்வத்தில் விருப்பமுள்ள இந்தப் பிராமணன் எவ்வளவு செல்வத்தை விரும்புவானோ, அவ்வளவு அவனுக்குக் கொடுக்கப்படும். தேவர்களின் ஆணையின் பேரில் நான் அவனுக்குச் சொல்ல முடியாத அளவுக்குச் செல்வத்தைக் கொடுப்பேன்" என்றான் {மாணிபத்ரன்}.(21,22)
அப்போது குண்டதாரன், மனிதத்தன்மையின் உண்மையற்ற நிலையையும், நிலையில்லாமையையும் சிந்தித்து, அந்தப் பிராமணரை தவங்களை நோக்கிச் செலுத்த தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(23) உண்மையில் குண்டதாரன், "ஓ! செல்வங்களை அளிப்பவரே, நான் இந்தப் பிராமணரின் சார்பாகச் செல்வத்தை வேண்டவில்லை. அவருக்கு மற்றொரு உதவியை அளிக்க விரும்புகிறேன்.(24) என் பக்தருக்காக நான் முத்துக்கள் மற்றும் ரத்தினங்கள் நிறைந்த மலைகளையோ, செல்வங்கள் அனைத்துடன் கூடிய மொத்த பூமியையோ வேண்டவில்லை. எனினும், அவர் நல்லவராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவரது இதயம் அறத்தில் இன்பத்தைக் காணட்டும்.(25) அவர் அறத்தைத் தம்முள் கொண்டிருக்கட்டும். அவரிடம் உள்ள பொருட்கள் அனைத்திலும் அறமே முதன்மையானதாக இருக்கட்டும். இந்த உதவியே எனக்கு ஏற்புடையதாகும்" என்றான்.(26)
மாணிபத்ரன் {குண்டதாரனிடம்}, "அரசுரிமையும், பல்வேறு வகை இன்பமும் எப்போதும் அறத்தின் கனிகளாக இருக்கின்றன. இவன் எப்போதும் அனைத்து வகை உடல் துன்பங்களில் இருந்தும் விடுபட்டு அக்கனிகளை அனுபவிக்கட்டும்" என்றான் {மாணிபத்ரன்}".(27)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்டும், பெரும்புகழைக் கொண்டவனான குண்டதாரன் மீண்டும் மீண்டும் அந்தப் பிராமணருக்கு அறத்தை மட்டுமே வேண்டினான். இதனால் தேவர்கள் பெரிதும் நிறைவடைந்தனர்.(28)
மாணிபத்ரன் {குண்டதாரனிடம்}, "உன்னிடமும், அந்தப் பிராமணனிடமும் தேவர்கள் பெரிதும் நிறைவடைந்திருக்கின்றனர். அவன் அறவோனாவான். அவன் தன் மனத்தை அறத்திற்கே அர்ப்பணிப்பான்" என்றான்.(29)
ஓ! யுதிஷ்டிரா, மேகமான அந்தக் குண்டதாரன், தன் விருப்பம் வெற்றியடைந்ததால் பெரிதும் மகிழ்ச்சியடைந்தான். அவன் பெற்ற அந்த வரம், வேறு எவராலும் அடையப்பட முடியாததாகும்.(30) அப்போது அந்தப் பிராமணர் தம்மைச் சுற்றிலும் நுட்பமான ஆடைகள் {ஸூக்ஷ்மமான மரவுரிகள்} சிதறிக் கிடப்பதைக் கண்டார். (அவை விலைமதிப்புமிக்கவையாக இருந்தாலும்) அவற்றில் மனத்தைச் செலுத்தாத அந்தப் பிராமணர் உலகச் சுவையை இழந்தார்.
அந்தப் பிராமணர், "இவன் {குண்டதாரன்} என் நற்செயல்களில் எந்த மதிப்பையும் கொள்ளவில்லையெனில், வேறு எவன் கொள்வான்? அறவாழ்வை நோற்க நான் கானகம் செல்வதே சிறந்தது" என்றார்"[2].(32)
[2] "குண்டதாரன் தம்மிடம் அக்கறையில்லாமல் இருப்பதையே பிராமணர் இவ்வாறு குறிப்பிடுகிறார். அவர், தன் துதிகளுக்குப் பதிலாக அவன் செல்வத்தைக் கொடுப்பான் என்று நினைத்தார். இதனால் உற்சாகமிகழந்த அவர், குண்டதாரனே என் துதிகளை மனத்தில் கொள்ளாத போது, வேறு எவர் அவ்வாறு செய்வார்? எனவே, நான் செல்வத்திற்கான ஆசை அனைத்தையும் கைவிட்டு கானகத்திற்குள் ஓய்வேன்" என்று நினைக்கிறார். எனினும், அந்தப் பிராமணர் தம்மைச் சுற்றிலும் கிடக்கும் நுட்பமான ஆடைகளை அலட்சியம் செய்வதால் இந்த வாக்கியம் முரண்பட்டதாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பிறகு, அந்தப் பிராம்மணஸ்ரேஷ்டர் தம்முடைய பக்கத்தில் ஸமீபத்தில் வைக்கப்பட்ட ஸூக்ஷ்மமான மரவுரிகளைப் பார்த்தார். உடனே ஒழிவை அடைந்து, "இந்தக் குண்டதாரன் நன்மையை அறியவில்லை. நான் செய்த ஸுகிருதத்தை வேறு யார் அறியப் போகிறார்? இனி மேல் நான் தர்மத்தால் ஜீவிப்பதற்கு வனத்தையே அடைகிறேன்" என்றார்" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "உலகம் சார்ந்த சுவையின்மை வளர்ந்ததாலும், தேவர்களுடைய அருளின் மூலமும் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் காட்டுக்குள் நுழைந்து, கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினார்.(33) ஓ! ஏகாதிபதி, தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் கொடுத்த பிறகு எஞ்சிய கனிகள் மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்ந்து வந்த அந்த மறுபிறப்பாளரின் மனம் அறத்தில் உறுதியாக நிலைத்தது.(34) அந்தப் பிராமணர் படிப்படியாகக் கனிகளையும், கிழங்குகளையும் கூடத் துறந்து, மரங்களின் இலைகளை மட்டுமே தமது உணவாகக் கொண்டார். பிறகு இலைகளையும் துறந்து, நீரை மட்டுமே தம் உணவாகக் கொண்டார்.(35) அதன் பிறகு அவர் காற்றை மட்டுமே உண்டு பல வருடங்களைக் கழித்தார். எனினும் இக்காலம் முழுவதிலும் அவரது பலம் குன்றவில்லை. இது மிக அற்புதமான ஒன்றாகத் தெரிந்தது.(36) அறத்தில் அர்ப்பணிப்புடன், கடுந்தவங்களைச் செய்வதில் ஈடுபட்ட அவர் நீண்ட காலத்திற்குப் பிறகு ஆன்மப் பார்வையைப் பெற்றார்.(37)
பிறகு அவர் {அந்தப் பிராமணர்}, "நான் எவரிடமாவது நிறைவடைந்து செல்வத்தைக் கொடுத்தால், என் பேச்சு ஒருபோதும் பொய்யாகாது" என்று சொல்லித் தமக்குள்ளேயே சிந்தித்தார்[3].(38) புன்னகையால் ஒளிர்ந்த முகத்துடன் அவர் மீண்டும் கடுந்தவங்களில் ஈடுபட்டார்.(39) மீண்டும் (உயர்ந்த) வெற்றியை அடைந்த அவர், தாம் விரும்புவதன் மூலமே மிக உயர்ந்த பொருட்களைத் தம்மால் உண்டாக்க முடியும் என்று நினைத்தார். "நான் எவரிடமாவது நிறைவடைந்து அரசுரிமையைக் கொடுத்தாலும் கூட, என் வார்த்தைகள் பொய்க்காது என்பதால் அவன் உடனே மன்னனாவான்" {என்று நினைத்தார்}.(40)
[3] "தவ வெற்றியடைந்தவர்கள் ஒரு விருப்பத்தைச் சொன்னால் அஃது உடனே நிறைவேறும். "நான் இஃதை உனக்குக் கொடுக்கிறேன்" என்று வார்த்தைகளில் சொல்வது, உடல்பெற்றுப் பெற்றுக்கொள்ளத் தகுந்த நிலையை அடைகிறது. இத்தகைய மனிதர்களின் வார்த்தைகள் பொருளைப் பின்தொடர்வதில்லை, பொருள்களே அவர்களின் வார்த்தைகளைப் பின்தொடருகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அந்தப் பிராமணர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்த போதே, குண்டதாரன், அவரிடம் கொண்ட நட்பாலும், அந்தப் பிராமணர் அடைந்த தவ வெற்றியாலும் தூண்டப்பட்டு, (தன் நண்பரும், பக்தருமான அவரிடம்) தன்னைக் காட்டிக் கொண்டான்.(41) அவனைச் சந்தித்த அந்தப் பிராமணர், நடைமுறை விதிகளின் படி அவனுக்குண்டான வழிபாடுகளைச் செய்தார். எனினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பிராமணர் சற்றே ஆச்சரியமடையவும் செய்தார்.(42)
அப்போது, குண்டதாரன் அந்தப் பிராமணரிடம், "நீர் இப்போது சிறந்த ஆன்மக் கண்ணை அடைந்திருக்கிறீர். உமக்குக் கிட்டிய இந்தப் பார்வையைக் கொண்டு மன்னர்களால் அடையப்படும் கதியைக் காண்பீராக. அதையும் தவிர்த்து உலகங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வீராக" என்றான்.(43) அப்போது அந்தப் பிராமணர், நரகத்தில் மூழ்கிய ஆயிரக்கணக்கான மன்னர்களைத் தமது ஆன்மப் பார்வையால் தொலைவில் இருந்தே கண்டார்.(44)
குண்டதாரன் {பிராமணரிடம்}, "பக்தியுடன் என்னை வழிபட்ட பிறகு, உமது பங்காக நீர் கவலையையே அடைந்தீரென்றால், நான் உமக்குச் செய்த நன்மை என்ன? நான் செய்த உதவியின் மதிப்பென்ன?(45) பாரும், என்ன கதியை அடைவதற்காக மனிதர்கள் உடல்சார்ந்த இன்பங்களில் நிறைவை விரும்புகிறார்கள் என்பதைப் பாரும். சொர்க்கத்தின் கதவு மனிதர்களுக்கு அடைக்கப்பட்டிருக்கிறது" என்றான்".(46)
பீஷ்மர் தொடர்ந்தார், "பிறகு அந்தப் பிராமணர், இவ்வுலகில் காமம், கோபம், பேராசை, அச்சம், செருக்கு, உறக்கம், எதிலும் தாமதம் {மயக்கம்}, செயலின்மை {சோம்பல்} ஆகியவற்றைத் தழுவி வாழும் மனிதர்கள் பலரைக் கண்டார்.(47)
குண்டதாரன், "மனிதர்கள் அனைவரும் இவற்றால் ({காமம் முதலிய} தீய ஒழுக்கங்களால்) கட்டப்பட்டிருக்கிறார்கள். மனிதர்களைக் கண்டு தேவர்கள் அஞ்சுகின்றனர். தேவர்களின் ஆணையின் பேரில் இந்தத் தீயொழுக்கங்கள் அனைத்துப் புறங்களிலும் அழித்துக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன[4].(48) தேவர்களின் அனுமதி இல்லாமல் எந்த மனிதனும் அறவோனாவதில்லை. (அவர்களுடைய அனுமதியின் விளைவால்) உமது தவங்களின் மூலம் நீர் நாடுகளையும், செல்வங்களையும் கொடுக்கும் தகுதியை அடைந்திருக்கிறீர்" என்றான்".(49)
[4] கும்பகோணம் பதிப்பில், "அந்தக் காமமுதலியவைகள் அப்படியே தேவர்களுடைய வார்த்தையினால் எல்லா விஷயங்களிலும் இடையூற்றைச் செய்கின்றன" என்றிருக்கிறது.
பீஷ்மர் தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்டவரும், அற ஆன்மா கொண்டவருமான அந்தப் பிராமணர், அம்மேகத்திடம் {குண்டதாரனிடம்} தலைவணங்கி, நெடுஞ்சாண்கிடையாகத் தம்மைத் தரையில் கிடத்திக் கொண்டு, "உண்மையில், நீ எனக்குப் பேருதவியைச் செய்திருக்கிறாய்.(50) நீ என்னிடம் கொண்ட பெரும் பற்றை உணராமல், ஆசை மற்றும் பேராசையின் ஆதிக்கத்தால் நான் உனக்கு நன்மதிப்பைக் காட்டத் தவறிவிட்டேன் {நன்றி மறந்துவிட்டேன்}" என்றார்.(51)
அப்போது குண்டதாரன் அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரிடம், "நான் உம்மை மன்னித்தேன்" என்று சொல்லி அவரைத் தன் கரங்களால் ஆரத்தழுவிக் கொண்டு அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(52) பிறகு, குண்டதாரனுடைய அருளின் மூலம் தவ வெற்றியை அடைந்த அந்தப் பிராமணர், உலகங்கள் அனைத்திலும் திரிந்து கொண்டிருந்தார்.(53) அறம் மற்றும் தவங்களின் மூலம் பலத்தை ஈட்டிய ஒருவன், வானத்தில் மிதந்து பயணிக்கும் {கமனம் செய்யும்} தகுதியையும், தன் விருப்பங்கள் மற்றும் நோக்கங்கள் அனைத்தையும் கனியச் செய்யும் தகுதியையும் அடைந்து, இறுதியாக உயர்ந்த கதியை அடைகிறான்.(54) தேவர்கள், பிராமணர்கள், யக்ஷர்கள், நல்லோர், சாரணர்கள் ஆகியோர் எப்போதும் அறவோரைத் துதிப்பாரேயன்றி, ஒருபோதும் வளமானவரையோ, ஆசைகளில் ஈடுபாடு கொள்பவர்களையோ துதிப்பதில்லை.(55) உன் மனம் அறத்தில் அர்ப்பணிப்புடன் இருப்பதால் தேவர்கள் உண்மையில் உனக்குச் சாதகமானவர்களாக இருக்கிறார்கள். செல்வத்தால் சிறு மகிழ்ச்சி ஏற்படலாம், ஆனால் அறத்தால் கிட்டும் இன்பத்தின் அளவு மிகப் பெரியதாகும்" என்றார் {பீஷ்மர்}.(56)
சாந்திபர்வம் பகுதி – 271ல் உள்ள சுலோகங்கள் : 56
ஆங்கிலத்தில் | In English |