Virabhadra and Bhadrakali! | Shanti-Parva-Section-284 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 111)
பதிவின் சுருக்கம் : மஹாதேவன் வீரபத்ரனைக் கொண்டு தக்ஷனின் வேள்வியை அழித்ததையும், பத்ரகாளியின் தோற்றத்தையும், சிவனிடம் தக்ஷன் பெற்ற வரத்தையும் ஜனமேஜயனுக்குச் சொன்ன வைசம்பாயனர்...
{நாகவேள்வியில்} ஜனமேஜயன் {வியாசரின் சீடரான வைசம்பாயனரிடம்}, "ஓ! பிராமணரே {வைசம்பாயனரே}, பிரசேதஸின் மகனான பிரஜாபதி தக்ஷனின் குதிரை வேள்வி வைவஸ்வத மனுவின் காலத்தில் எவ்வாறு அழிக்கப்பட்டது?(1) உமா தேவி சினத்திலும், துயரத்திலும் நிறைந்ததைப் புரிந்து கொண்டவனும், பலமிக்கவனும், அனைத்துப் பொருட்களின் ஆன்மா ஆனவனுமான மஹாதேவன் கோப வசப்பட்டான். பிறகு பிரிந்து போன அந்த வேள்வியின் அங்கங்களை அவனது {சிவனின்} அருளைக் கொண்டு தக்ஷனால் எவ்வாறு ஒன்றுதிரட்ட முடிந்தது? இவை யாவையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ! பிராமணரே, உண்மையில் நடந்தவாறே இவை யாவையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)
வைசம்பாயனர் சொன்னார், "பழங்காலத்தில் தக்ஷன், மலைகளில் கங்கை வெளிப்படும் இடமும், முனிவர்களும் சித்தர்களும் வசிக்கும் புனிதமான இடமுமான இமயச் சாரலில் ஒரு வேள்வி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.(3) மரங்கள் மற்றும் பல்வேறு வகைக் கொடிகளால் அடர்ந்த அந்தப் பகுதியில் கந்தர்வர்களும், அப்சரஸ்களும் நிறைந்திருந்தனர். முனிவர் கூட்டங்களால் சூழப்பட்டவனும், அறவோரில் முதன்மையானவனும், உயிரினங்களை உண்டாகச் செய்பவனுமான தக்ஷனிடம் மரியாதையுடன் கைகூப்பியவாறு பூலோகவாசிகளும், ஆகாயவாசிகளும், சொர்க்கவாசிகளும் ஒன்றாகக் காத்திருந்தனர்.(4,5) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், பாம்புகள், ராட்சசர்கள், ஹாஹா, ஹுஹு என்ற பெயரைக் கொண்ட இரு கந்தர்வர்கள், தும்புரு, நாரதர்,(6) விஸ்வாவசு, விஸ்வசேனன், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், சாத்தியர்கள், மருத்துகள்,(7) ஆகியோர் அனைவரும் வேள்வியில் பங்கெடுக்க இந்திரனுடன் அங்கே வந்தனர். வெப்பத்தைப் பருகுபவர்கள், சோமத்தைப் பருகுபவர்கள், புகையைப் பருகுபவர்கள், ஆஜ்யத்தைப் பருகுபவர்கள்,(8) முனிவர்கள், பித்ருக்கள் ஆகியோரும் பிராமணர்களுடன் அங்கே வந்தனர். இவர்களும், ஜராயுஜம், அண்டஜம், ஸ்வேதஜம், உத்பிஜ்ஜம் எனும் நான்கு வகை உயிரினங்களும் அந்த வேள்விக்கு அழைக்கப்பட்டன. மதிப்புடன் அழைக்கப்பட்ட தேவர்களும் தங்கள் துணைகளுடன் அங்கே தெய்வீகத் தேர்ஃகளில் வந்திருந்து சுடர்மிக்க நெருப்புகளைப் போல ஒளிர்ந்தபடியே அமர்ந்திருந்தனர்.(9,10)
அவர்களைக் கண்ட முனிவர் ததீசி துயராலும், கோபத்தாலும் நிறைந்து, "இந்த வேள்வியில் ருத்திரன் துதிக்கப்படாததால், இஃது ஒரு வேள்வியுமல்ல, தகுதியைத் தரும் அறச்சடங்கும் அல்ல.(11) உங்களை நீங்களே மரணத்திற்கும், கட்டுகளுக்கும் நிச்சயம் வெளிப்படுத்திக் கொள்கிறீர்கள். ஐயோ, காலத்தின் போக்கு எவ்வாறு இப்படி அமைந்தது? பிழையால் திகைக்கும் நீங்கள் உங்களுக்காகக் காத்திருக்கும் அழிவைக் காணவில்லை. இந்தப் பெருவேள்வியின் போக்கில் உங்கள் வாயிலில் ஒரு பயங்கரப் பேரிடர் நிற்கிறது. அதை நீங்கள் காணவில்லை" என்றார்.(12)
இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பெரும் யோகி {ததீசி}, (யோக) தியானத்தின் கண்களைக் கொண்டு எதிர்காலத்தைக் கண்டார். அவர் மஹாதேவனையும்ம், சிறந்த வரங்களை அளிப்பவளான அவனது தெய்வீக மனைவியையும்,(13), அந்தத் தேவிக்கு அருகில் உயர் ஆன்ம நாரதரையும் (கைலாச மலைச் சிகரத்தில் அர்ந்திருப்பதையும்) கண்டார். யோகத்தை அறிந்தவரான ததீசி நடக்கப் போவதை உறுதி செய்து கொண்டு உயர்வான நிறைவை அடைந்தார்.(14) தேவர்கள் அனைவரும், அங்கே வந்திருந்த பிறரும், அனைத்து உயிரினங்களின் தலைவனை அழைக்கத் தவறுவதில் ஒரே மனமாய் இருந்தனர்.
ததீசி மட்டுமே, அந்த இடத்தை விட்டு அகல விரும்பி,(15) "எவன் வழிபடப்படக் கூடாதோ அவனை வழிபட்டு, வழிபட வேண்டியவனை வழிபட மறுப்பதன் மூலம் ஒரு மனிதன் கொலை செய்த பாவத்தை எப்போதும் பெற்றிருப்பான்.(16) நான் ஒருபோதும் பொய் பேசியவனில்லை, ஒரு பொய்யையும் நான் ஒரு போதும் பேச மாட்டேன். இங்கே தேவர்கள் மற்றும் முனிவர்களுக்கு மத்தியில் நான் உண்மையைச் சொல்கிறேன்.17) அண்டத்தைப் படைத்தவனும், அனைவரின் தலைவனும், பலமிக்கக் குருவும், வேள்விக் காணிக்கைகளை ஏற்பவனுமான அனைத்துயிரினங்களின் பாதுகாவலன் விரைவில் இந்த வேள்விக்கு வருவான், நீங்கள் அனைவரும் அவனைக் காண்பீர்கள்" என்றார்.(18)
தக்ஷன், "சூலபாணிகளாகவும், தலையில் சடாமுடி தரித்தவர்களாகவும் பல ருத்திரர்களை நாம் கொண்டிருக்கிறோம். அவர்கள் எண்ணிக்கையில் பதினொருவராக இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் நான் அறிவேன், ஆனால் இந்த (புதிய ருத்திரனான) மஹேஸ்வரனை நான் அறியவில்லை" என்றான்.(19)
ததீசி, "மஹேஸ்வரனை அழைக்கக்கூடாது என்பது இங்குள்ளவர் அனைவரின் ஆலோசனையாகத் தெரிகிறது. எனினும், அவனை விட மேன்மையாகச் சொல்லக் கூடிய எந்தத் தேவனையும் நான் காணவில்லை. முன்மொழியப்பட்டிருக்கும் இந்தத் தக்ஷனின் வேள்வி நிச்சயம் அழிவடையப் போகிறது என நான் உறுதியாக இருக்கிறேன்" என்றார்.(20)
தக்ஷன், "இங்கே இந்தத் தங்கக் கலசத்தில், மந்திரங்களாலும், (சடங்குளின்) விதிப்படியும் புனிதமாக்கப்பட்ட வேள்விக் காணிக்கையானது வேள்விகள் அனைத்தின் தலைவனுக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. நான் இந்தக் காணிக்கையை, ஒப்பீட்டைக் கடந்து விஷ்ணுவுக்குக் கொடுக்க விரும்புகிறேன். அவனே பலமிக்கவனும், அனைவரின் குருவுமாவான். அவனுக்காகவே வேள்விகள் செய்யப்படுகின்றன" என்றான்".(21)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அதேவேளையில் தன் தலைவனுடன் அமர்ந்திருந்த உமாதேவி இந்த வார்த்தைகளைச் சொன்னாள். "வேள்விக் காணிக்கைகளில் பாதியையோ, மூன்றில் ஒரு பகுதி பங்கையோ சிறப்புமிக்க என் கணவர் பெறுவதற்கு நான் என்ன கொடைகளைக் கொடுக்க வேண்டும்? என்ன நோன்புகளை இருக்க வேண்டும், என்ன தவங்களைச் செய்ய வேண்டும்?" என்று கேட்டாள்.(22)
துயரால் கலக்கமடைந்து திரும்பத் திரும்ப இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்த தன் மனைவியிடம் சிறப்புமிக்க அந்த மஹாதேவன் மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன், "ஓ! தேவி, நீ என்னை அறியவில்லை. ஓ! மென்மையான அங்கங்களையும், இடையையும் கொண்டவளே, வேள்விகளின் தலைவனிடம் பேச வேண்டிய சரியான வார்த்தைகளை நீ அறியவில்லை.(23) ஓ! நீண்ட கண்களை உடையவளே, தியானமற்ற பாவிகளால் மட்டுமே என்னைப் புரிந்து கொள்ள முடியாது என்பதை நான் அறிவேன். உன் மாயா சக்தியால்தான் இந்திரனின் தலைமையிலான தேவர்களும், மூன்று உலகங்கள் அனைத்தும் திகைப்படைகின்றன[1].(24) வேள்விகளில் ஓதுவார்கள் என்னையே துதிக்கிறார்கள். சாமங்கள் பாடுபவர்கள் தங்கள் ரதந்தரங்களில் என்னையே பாடுகிறார்கள். வேதங்களை அறிந்த பிராமணர்கள் தங்கள் வேள்விகளை எனக்காகவே செய்கிறார்கள். மேலும், அதர்யுக்கள், வேள்விக் காணிக்கைகளின் பங்குகளை {ஹவிர்ப்பாகத்தை} எனக்கே அர்ப்பணிக்கிறார்கள்" என்றான்.(25)
[1] "உன் மாயா சக்தியால் அனைவரையும் மயங்கச் செய்பவளான நீயே மயங்குகிறாயே. நீ மலைப்படைவதும், என்னை அறிந்து கொள்ளாமல் இருப்பதும் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது என்று மஹாதேவன் சொல்கிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
{உமா} தேவி, "சாதாரணத் திறன் கொண்டவர்கள் கூட, தங்கள் மனைவியரின் முன்னிலையில் தங்களையே மெச்சிக் கொண்டு, தற்பெருமையில் ஈடுபடுவார்கள். இதில் எந்த ஐயமும் இல்லை" என்றாள்.(26)
புனிதமானவன் {சிவன்}, "ஓ! தேவர்கள் அனைவரின் ராணியே {தேவர்களுக்கெல்லாம் ஈஸ்வரியே}, நிச்சயமாக என்னை நானே மெச்சிக் கொள்ளவில்லை. ஓ! கொடியிடையாளே, நான் செய்யப் போவதை இப்போது பார். ஓ! அழகிய நிறம் படைத்தவளே, ஓ! என் அழகிய மனைவியே, (உனக்கு நிறைவைத் தராத) இந்த வேள்விக்காக (இந்த வேள்வியை அழிப்பதற்காக) நான் உண்டாக்கப்போகும் ஒருவனைக் காண்பாயாக" என்றான்.(27)
உயிரினும் அன்புக்குரிய தன் மனைவி உமையிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன பலமிக்க மஹாதேவன், காண்போருக்கு மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தச் செய்யும் ஒரு பயங்கரப் பூதத்தைத் தன் வாயில் இருந்து உண்டாக்கினான். அவனது உடலில் இருந்து வெளிப்பட்ட சுடர்மிக்கத் தழல்களுடன் அவனைக் காண இன்னும் பயங்கரமாக இருந்தது. அவனது கரங்கள் எண்ணிக்கையில் பலவாக இருந்தன, அவை ஒவ்வொன்றிலும் காண்போரை அச்சத்தில் ஆழ்த்தும் ஓர் ஆயுதமும் இருந்தது.(28)
அவ்வாறு உண்டாக்கப்பட்ட அந்தப் பூதம், அந்தப் பெருந்தேவனின் முன்பு கூப்பிய கரங்களுடன் நின்று, "நான் நிறைவேற்ற வேண்டிய கட்டளைகள் என்ன?" என்று கேட்டது. மஹேஸ்வரன், "சென்று, தக்ஷனின் வேள்வியை அழிப்பாயாக" என்றான்.(29)
இவ்வாறு அணையிடப்பட்டதும், சிங்கத்தின் ஆற்றலைக் கொண்டதும், மஹாதேவனின் வாயில் இருந்து வெளிவத்துமான அந்தப் பூதம், தன் சக்தி அனைத்தையும் வெளிப்படுத்தாமல், வேறு எவரின் துணையும் இல்லாமல் உமையின் கோபத்தைத் தணிக்கத் தக்ஷனின் வேள்வியை அழிக்க விரும்பியது.(30) கோபத்தால் தூண்டப்பட்டவளான மஹேஸ்வரன் மனைவியும், மஹாகாளி என்று பெயரில் அறியப்பட்ட ஒரு பயங்கர வடிவத்தைத் தானே ஏற்று, (தனக்காக அந்த வேள்வியை அழிக்கத் தன் தலைவனைத் தூண்டியது அவளே என்பதால்) தனது அழிக்கும் செயலைத் தானே தன் கண்களால் காண்பதற்காக, மஹாதேவனின் வாயிலிருந்து வெளிப்பட்ட அந்தப் பூதத்திற்குத் துணையாகச் சென்றாள். அந்த வலிமைமிக்கப் பூதம், மஹாதேவனிடம் தலைவணங்கி அனுமதிபெற்ற பிறகு புறப்பட்டது.(31) சக்தியிலும், பலத்திலும், வடிவத்திலும் அவன் {அந்தப் பூதம்}, தன்னைப் படைத்த மஹேஸ்வரனுக்கு ஒப்பாக இருந்தான். உண்மையில் அவன் (மஹாதேவனின்) கோபம் வாழும் உடலாக இருந்தான்.(32)
அளவிலா வலிமையும், சக்தியும், அளவிலா துணிவும், ஆற்றலும் கொண்ட அவன், தேவியின் கோபத்தைப் போக்குபவனான வீரபத்ரன் என்ற பெயரால் அழைக்கப்படலானான். அப்போது அவன், தன் உடலின் மயிர்க்கால்களில் இருந்து ரௌம்மியர்கள் என்ற பெயரில் அறியப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான கணங்களைப் படைத்தான்.(33) பயங்கர சக்தியும், ஆற்றலும் கொண்டவையும், அக்காரியத்தில் ருத்திரனுக்கு ஒப்பானவையும், கடுமை நிறைந்தவையுமான அந்தக் கணக்கூட்டம், தக்ஷனின் வேள்வியை அழிக்கும் விருப்பத்தால் தூண்டப்பட்டு இடியின் விசையுடன் அந்த இடத்திற்கு விரைந்து சென்றது. பயங்கரம் நிறைந்தவையும், பெரும் வடிவங்களையும் கொண்ட அவை, எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் இருந்தன.(34) அவை தங்கள் குழப்பமான கதறல் மற்றும் அலறல்களால் வானத்தை நிறைத்தன. அவ்வொலி சொர்க்கவாசிகளை அச்சத்தில் நிறைத்தது.(35)
மலைகள் பிளந்து விழுந்தன, பூமி நடுங்கியது. சுழற்காற்றுகள் வீசத்தொடங்கியது. பெருங்கடல் பொங்கியது.(36) தூண்டப்படும் நெருப்புகள் சுடர்விட மறுத்தன. சூரியன் மங்கினான். கோள்கள், விண்மீன்கள், நட்சத்திரக் கூட்டங்கள், சந்திரன் ஆகியவை ஒளிரவில்லை.(37) முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகியோர் நிறம் மங்கினர். அண்டந்தழுவிய இருள் வானத்திலும் பூமியிலும் பரவியது. அவமதிக்கப்பட்ட ருத்திரர்கள் அனைத்திற்கும் தீமூட்டத் தொடங்கினர்.(38) பயங்கர வடிவிலான அவர்களில் சிலர் அடிக்கவும், தாக்கவும் தொடங்கினர். சிலர் கலங்கடிக்கவும், பிறரை நசுக்கவும் தொடங்கினர்.(39) காற்று அல்லது மனோவேகத்தைக் கொண்ட சிலர், நெருக்கத்திலும், தொலைவிலும் விரையத் தொடங்கினர். சிலர் வேள்விப்பாத்திரங்களையும், தெய்வீக ஆபரணங்களையும் நொறுக்கத் தொடங்கினர். ஆகாயத்தில் மினுங்கும் நட்சத்திரங்களைப் போலத் துண்டுகள், தரையில் சிதறிக் கிடந்தன.(40)
சிறந்த பண்டங்கள், பானக்குடுவைகள் மற்றும் உணவுக் குவியல்கள் மலைகளைப் போலத் தெரிந்தன. தெளிந்து நெய்யையும், பாயசத்தையும் சகதியாகவும், கட்டித் தயிரை நீராகவும், சர்க்கரைக் கட்டிகளை மணலாகவும் கொண்ட பாலாறுகள் அனைத்துப் பக்கங்களிலும் ஓடின. அந்த ஆறுகள் அறுசுவைகளைக் கொண்டவையாக இருந்தன. பாகாலான மிக அழகிய தடாகங்களும் அவற்றில் இருந்தன.(41,42) பல்வேறு சிறந்த வகைகளிலான இறைச்சி, பல்வேறு வகையான உணவுகள், பல அற்புத வகைகளிலான பானங்கள், நக்கவும், உறிஞ்சவும் தக்க பல்வேறு வகைகளிலான உணவுகள் ஆகியவற்றைப்(43) பல்வேறு வாய்களைக் கொண்ட அந்தக் கணங்களின் படை உண்ணத் தொடங்கியது. பிறகு அவை, அந்தப் பல்வேறு வகை உணவுகளை வீசவும், சிதறவும் செய்தன. ருத்திரனுடைய கோபத்தின் விளைவால் அந்தப் பெரும் பூதங்கள் ஒவ்வொன்றும் அனைத்தையும் அழிக்கும் யுக நெரிப்பைப் போலத் தெரிந்தன.(44) தெய்வீகத் துருப்புகளைக் கலங்கடித்த அவை, அவர்களை அச்சத்தால் நடுங்கச் செய்து, அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடச் செய்தன. கடுமைநிறைந்த அந்தக் கணங்கள், ஒன்றோடொன்று விளையாடிக் கொண்டு, தெய்வீகக் காரிகைகளைப் பிடித்துத் தள்ளவும், வீசவும் செய்தன.(45)
ருத்திரனின் கோபத்தால் தூண்டப்பட்டுக் கடுஞ்செயல்களைச் செய்த அந்தக் கணங்கள், தேவர்கள் அனைவராலும் பெருங்கவனத்துடன் பாதுகாக்கப்பட்ட அந்த வேள்வியை மிக விரைவில் எரித்தன.(46) ஒவ்வொரு உயிரினத்தையும் அச்சத்தால் பீடிக்கச் செய்த அவற்றின் முழக்கங்கள் மிக உரத்தவையாக இருந்தன. அவை வேள்வித் தலையைக் கொய்து முழக்கமிட்டபடியே மகிழ்ந்தன.(47) பிறகு, பிரம்மனின் தலைமையிலான தேவர்களும், உயிர்களின் மூதாதையான தக்ஷனும் மரியாதையுடன் அந்த வலிமைமிக்கப் பூதத்திடம் தங்கள் கரங்களைக் கூப்பி, "நீ யார் என்பதை எங்களுக்குச் சொல்வாயாக" என்று கேட்டனர்.(48)
அதற்கு வீரபத்ரன், "நான் ருத்திரனுமல்லேன், அவனது மனைவியான உமாதேவியும் அல்லேன். (இந்த வேள்வியில் அளிக்கப்படும்) கூலியைப் பெறுவதற்காகவும் நான் இங்கே வரவில்லை. உமை கோபமடைந்த செய்தியை அறிந்து, அனைத்து உயிரினங்களின் ஆன்மாவான பலமிக்கத் தலைவன் {சிவன்} கோப வசமடைந்தான்.(49) பிராமணர்களில் முதன்மையானவர்களைக் காண நான் இங்கே வரவில்லை. ஆவலால் தூண்டப்பட்டும் நான் இங்கே வரவில்லை. நான் உங்களுடைய இந்த வேள்வியை அழிக்கவே இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிவீராக.(50) வீரபத்ரன் என்ற பெயரால் அறியப்படும் நான், ருத்திரனின் கோபத்தில் இருந்து எழுந்தவனாவேன். பத்திரகாளி என்று அழைக்கப்படும் (என் தோழியான) இந்த மங்கை, தேவியின் கோபத்தில் இருந்து உதித்தவளாவாள். தேவர்களின் தேவனால் அனுப்பப்பட்டே நாங்கள் இருவரும் இங்கே வந்திருக்கிறோம்.(51) ஓ! பிராமணர்களில் முதன்மையானவர்களே, தேவர்களின் தலைவனான உமையின் கணவனிடம் பாதுகாப்பை நாடுவீராக. வேறு எந்தத் தேவனிடம் இருந்தும் வரங்களைப் பெறுவதைவிட அந்த முதன்மையான தேவனின் கோபத்தைத் தூண்டுவதைத் தவிர்ப்பதே கூடத் தகுந்ததாகும்" என்றான் {வீரபத்ரன்}.(52)
வீரபத்ரனின் வார்த்தைகளைக் கேட்டவனும், அறவோர் அனைவரிலும் முதன்மையானவனுமான தக்ஷன், மஹேஸ்வரனை வணங்கி, அவனை நிறைவு செய்வதற்காகப் பின்வரும் ஸ்லோகத்தைச் சொன்னான்.(53) {தக்ஷன்} "பிரகாசமானவனும், நித்தியமானவனும், நிலையானவனும், அழிவற்றவனும், தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனும், அண்டமனைத்தின் தலைவனுமான ஈசானின் பாதங்களின் நான் வீழ்கிறேன்" {என்றான்}[2].(54)
[2] "பின்வரும் ஐந்தரை ஸ்லோகங்கள் (55 முதல் 60 வரையுள்ள சுலோகங்கள்} இடைசெருகலாகத் தோன்றுகின்றன" எனக் கங்குலி இங்கே அடைப்புக்குறிக்குள் விளக்குகிறார். அதன் தொடர்ச்சியாக அந்த ஸ்லோகங்கள் விடுபடவும் செய்கிறது. கும்பகோணம் பதிப்பில், "வீரபத்ரருடைய வார்த்தையைக் கேட்டு, தர்மத்தைத் தரிக்கிறவர்களில் சிறந்தவனான தக்ஷன் பரமேச்வரரைப் பணிந்து ஸ்தோத்திரத்தினால் ஸந்தோஷிக்கச் செய்யலானான். "தேவரும், சிக்ஷரும், சாச்வதரும், நிலையுள்ளவரும், அழிவில்லாதவரும், மஹாத்மாவும், எல்லா உலகத்திற்கும் பதியுமான மஹாதேவனை நான் சரணமடைகிறேன்" என்றான். நன்றாகச் சேகரிக்கப்பட்ட அந்தத் திரவியங்களோடு கூடிய தக்ஷனுடைய யாகத்தில் எல்லாத் தேவர்களும் தபோதனர்களான ரிஷிகளும் அழைக்கப்பட்டார்கள். தேவரும் (ஸ்ருஷ்டி முதலான) எல்லாத் தொழில்களையுமுடையவருமான மஹேச்வரர் அதற்கு அழைக்கப்படவில்லை. அப்பொழுது மஹாதேவியானவள் கோபத்தை அடைந்தாள். அதனிமித்தம் ஈச்வரர் கணங்களை அனுப்பினார். அப்பொழுது யாகசாலை எரிக்கபட்டும், பிராம்மணர்கள் ஓடியும், மஹாத்மாவும், பயங்கரரும், ஜ்வலிக்கிறவருமான விரபத்ரர் நக்ஷத்ர மண்டலத்தை வியாபித்தும், பரிசாரகர்கள் சூலத்தால் மார்பு பிளக்கப்பட்டு அலறிக் கொண்டும், யூபங்கள் அசைத்துப் பிடுங்கி எங்கும் எறியப்பட்டும், கழுகுகள் மாம்ஸத்தில் ஆசை கொண்டு உயரக் கிளம்பியும், கீழே ஸஞ்சரித்துக் கொண்டும், 'க்ஷர்களும், கர்ந்தவர்க் கூட்டங்களும், பிசாசர்களும், உரகர்களும், ராக்ஷஸர்களும் அவற்றின் இறகுகளின் காற்றினால் தள்ளப்பட்டும், அநேகம் நரிகளால் ஊழையிடப்பட்டும் இருக்கும்பொழுது, அநேக நேத்ரங்களையுடையவரும், சத்துருக்களை ஜயிக்கின்றவரும் தேவதேவருமான ஈச்வரர் முகஸ்தானத்தில் முயற்சியுடன் ப்ராணபாணங்களை அடக்கி கண்களால் எங்கும் பார்த்துக் கொண்டு சீக்கிரமாக அக்னி குண்டத்திலிருந்தும் கிளம்பினார்" என்றிருக்கிறது. இதுவே விடுபட்ட 55 முதல் 60 வரையுள்ள அந்தப் பகுதியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு புகழப்பட்ட பெருந்தேவனான அந்த மஹாதேவன், பிராணன் மற்றும் அபானன் (ஐந்து உயிர் மூச்சுகளில் முதன்மையான இரண்டு) ஆகிய இரண்டையும் நிறுத்தி, தன் வாயைச் சரியாக மூடி,(60) அனைத்துப் புறங்களிலும் (நலம் பயக்கும்) தன் பார்வையைச் செலுத்தி, அங்கே தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். பல கண்களைக் கொண்டவனும், எதிரிகள் அனைவரையும் வெல்பவனும், தேவர்கள் அனைவரின் தேவர்களுக்கே தலைவனுமான அவன், வேள்வி நெருப்புள்ள குளியில் இருந்து திடீரென எழுந்தான்.(61) ஆயிரம் சூரியர்களின் பிரகாசத்தைக் கொண்டவனும், மற்றொரு சம்வர்த்தக நெருப்பைப் போலத் தெரிந்தவனுமான அந்தப் பெருந்தேவன், (தக்ஷனைக் கண்டு) மென்மையாகச் சிரித்து, அவனிடம், "ஓ பிராமணா, நான் உனக்காக என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.(62)
சரியாக அந்த நேரத்தில், தேவர்கள் அனைவரின் குருவானவர் {பிருஹஸ்பதி}, மோக்ஷ பகுதிகள் அடங்கிய வேத ஸ்லோகங்களைக் கொண்டு மஹாதேவனைத் துதித்தார். அப்போது அனைத்து உயிரினங்களின் மூதாதையான தக்ஷன், அதீதக் கலக்கமடைந்தும், அச்சத்தாலும், பீதியாலும் நிறைந்து, மரியாதையுடன் தன் கரங்களைக் குவித்து, கண்ணீரால் குளித்த கண்கள் மற்றும் முகத்துடன் அந்தப் பெருந்தேவனிடம் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்.(63)
தக்ஷன், "பெருந்தேவன் என்னிடம் மனம் நிறைந்திருந்தால், அனைத்துயிரினங்களின் பெருந்தலைவன் எனக்கு வரமருளும் மனநிலையில் இருந்தால்,(64) பெருங்கவனத்துடன் நீண்ட வருட காலங்கள் சேகரிக்கப்பட்டவையும், இப்போது எரிக்கப்பட்டு, உண்ணப்பட்டு, பருகப்பட்டு, விழுங்கப்பட்டு, அழிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, சீர்குலைக்கப்பட்டவையுமான இந்த என் பொருட்கள் அனைத்தும்,(65) ஒன்றுக்குமாகாமால் போக வேண்டாம் {வீணாக வேண்டாம்}. இந்தப் பொருட்கள் எனக்குப் பயன்பட வேண்டும். இதுவே நான் வேண்டிக் கேட்கும் வரமாகும்" என்று கேட்டான்.(66)
பகனின் கண்களைப் பிடுங்கியவனான சிறப்புமிக்க ஹரன் அவனிடம் {தக்ஷனிடம்}, "நீ கேட்பது போலவே ஆகட்டும்" என்றான். அனைத்து உயிரினங்கள்ளின் சிறப்புமிக்க மூதாதையும், அறத்தின் பாதுகாவலனுமான அந்த முக்கண் தேவனால் இவ்வார்த்தைகளே சொல்லப்பட்டன.(67) பவனிடம் இருந்து அந்த வரத்தைப் பெற்ற தக்ஷன், காளையைத் தன் சின்னமாகக் கொண்ட அந்தத் தேவனின் முன்பு முழங்காலில் விழுந்து, அவனது ஆயிரத்தெட்டுப் பெயர்களைச் சொல்லித் துதித்தான்" {என்றார் வைசம்பாயனர்}[3].(68)
[3] "இந்தப் பகுதி முழுமையும், இதற்கடுத்து வரும் சிவ சஹஸ்ரநாமங்களைக் கொண்ட பகுதியும் பிபேக்திப்ராயின் பதிப்பில் இல்லை.
சாந்திபர்வம் பகுதி – 284ல் உள்ள சுலோகங்கள் : 68
ஆங்கிலத்தில் | In English |