The sacrifice of Daksha! | Shanti-Parva-Section-283 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 110)
பதிவின் சுருக்கம் : தக்ஷனின் வேள்வியை அழித்த சிவன்; தன் நெற்றி வியர்வையில் உதித்த நோயைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்தது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, பெரும் ஞானத்தைக் கொண்ட நீர், கல்வியின் ஒவ்வொரு துறையையும் முழுமையாக அறிந்திருக்கிறீர். விருத்திரன் கொல்லப்பட்ட கதையில் இருந்தே உம்மிடம் கேட்க என்னில் ஒரு கேள்வி எழுந்துள்ளது.(1) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, ஓ! பாவமற்றவரே, விருத்திரன் (முதலில்) நோயால் பீடிக்கப்பட்டான் என்றும், அதன் பிறகே வாசவனின் வஜ்ரத்தால் கொல்லப்பட்டான் என்றும் நீர் சொன்னீர்.(2) ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, அந்த நோய் எவ்வாறு உண்டானது? ஓ! தலைவா, அந்நோயின் தோற்றம் குறித்து நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நோயின் தோற்றத்தைக் கேட்பாயாக. ஓ! பாரதா, நோயானது முதலில் இருப்பில் எவ்வாறு உதித்தது என்பது குறித்து முழுமையாக விளக்கி விரிவாகப் பேசப் போகிறேன்.(4) ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில் மேரு மலைகளில் சாவித்ரி என்ற பெயருடைய ஒரு சிகரம் இருந்தது. உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்பட்ட அது, பெரும் காந்தியுடனும், அனைத்து வகை ரத்தினங்கள் மற்றும் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.(5) அளவிலா பரப்பைக் கொண்டிருந்த அந்தச் சிகரத்திற்கும் யாரும் செல்ல முடியாது. அந்த மலையின் சிகரத்தில் தெய்வீக மஹாதேவன் {சிவன்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தான்.(6)
மலைகளின் மன்னனுடைய மகள் {உமை / பார்வதி} அவனது பக்கத்தில் பிரகாசத்துடன் ஒளிர்ந்தபடி அமர்ந்திருந்தாள். உயர் ஆன்ம தேவர்கள், அளவிலா சக்தி கொண்ட வசுக்கள்,(7) மருத்துவர்களில் முதன்மையான உயர் ஆன்ம அசுவினிகள், குஹ்யர்கள் பலரால் பணிவிடை செய்யப்பட்டவனும், பலமும் செழிப்பும் கொண்டவனும், கைலாச சிகரத்தையே தன் வசிப்பிடமாகக் கொண்டவனுமான யக்ஷர்களின் தலைவன் மன்னன் வைஸ்ரவணன் ஆகியோர் அனைவரும் உயர் ஆன்ம மஹாதேவனுக்காக அங்கே காத்திருந்தனர். பெரும் தவசியான உசனஸ் {சுக்கிராச்சாரியர்},(8,9) முனிவர்களில் முதன்மையானவர்கள் தங்களில் முதன்மையானவராகக் கொண்ட ஸனத்குமாரர், அங்கிரஸின் தலைமையிலான பிற தெய்வீக முனிவர்கள்,(10) கந்தர்வர்கள், விஸ்வாவசு, நாரதர், பர்வதர், அப்சரஸ்களின் பல்வேறு இனங்கள் ஆகியோர் அனைவரும் அந்த அண்டத்தின் குருவுக்காக அங்கே காத்திருந்தனர்.(11) தூய்மையான, மங்கலமான காற்று, பல்வேறு நறுமணங்களைச் சுமந்தபடி அங்கே வீசிக் கொண்டிருக்கும். அனைத்துப் பருவங்களுக்கும் உரிய மலர்களுடன் கூடிய மரங்கள் அங்கே நின்று கொண்டிருந்தன.(12) ஓ! பாரதா, எண்ணற்ற வித்யாதரர்களும், சித்தர்களும், தவசிகளும் அனைத்து உயிரினங்களின் தலைவனான மஹாதேவனிடம் காத்திருப்பதற்காக அங்கே சென்றனர்.(13)
பல்வேறு வடிவங்களையும் தன்மைகளையும் கொண்ட பல பூதங்களும், பயங்கரமான பல ராட்சசர்களும், பல்வேறு தன்மைகளைக் கொண்ட வலிமைமிக்கப் பிசாசங்களும்,(14) இன்பத்தில் பித்துப் பிடித்து, பல்வேறு வகை ஆயுதங்களை உயர்த்தியபடி, சக்தியில் சுடர் நெருப்புக்கு ஒப்பாக மஹாதேவனின் அணிவரிசையில் காத்திருந்தனர்.(15) சிறப்புமிக்க நந்தி, அந்தப் பெருந்தேவனின் ஆணையின் பேரில், தன் சுடர்மிக்க சக்தியுடன், நெருப்பின் தழலுக்கு ஒப்பான ஒரு வேலுடன் அங்கே நின்று கொண்டிருந்தான்.(16) ஓ! குருகுலத்தின் மகனே, ஆறுகள் அனைத்திலும் முதன்மையானவளும், அண்டத்தின் புனித நீர்கள் அனைத்திற்கும் பிறப்பிடமானவளுமான கங்கையும், தன் மெய்யுடலுடன் அந்தச் சிறப்பு மிக்கத் தேவனிடம் காத்திருந்தாள்.(17) இவ்வாறு தெய்வீக முனிவர்களாலும், தேவர்களாலும் துதிக்கப்பட்டவனும், அளவிலா சக்தி கொண்ட சிறப்புமிக்கவனுமான மஹாதேவன் அந்த மேருவின் சிகரத்தில் வசித்திருந்தான்.(18)
சில காலம் கழிந்ததும், பிரஜாபதியான தக்ஷன், (வேதங்களில் விதிக்கப்பட்ட) பழங்காலச் சடங்குகளின் படி ஒரு வேள்வியைச் செய்யத் தொடங்கினான்.(19) தக்ஷனின் அந்த வேள்விக்கு, சக்ரனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்கள் அனைவரும் கூடி செல்வதெனத் தீர்மானித்திருந்தனர்.(20) அந்த உயர் ஆன்ம தேவர்கள், மஹாதேவனின் அனுமதியுடன், காந்தியில் நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான தங்கள் தெய்வீகத் தேர்களில் ஏறி, (இமயத்தில்) கங்கை வெளிப்படுகிறது என்று சொல்லப்படும் இடத்திற்குச் சென்றனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(21)
தேவர்கள் செல்வதைக் கண்டதும், மலைகளின் மன்னனுடைய சிறந்த மகள் {உமை} தன் கணவனிடம் {சிவனிடம்}, "ஓ! சிறப்புமிக்கவரே, சக்ரனின் தலைமையிலான அந்தத் தேவர்கள் எங்கே செல்கின்றனர்? ஓ! உண்மையை அறிந்தவரே, என் மனத்தில் பெரும் ஐயம் நிறைந்திருப்பதால் எனக்கு உண்மையைச் சொல்வீராக" என்று கேட்டாள்.(23)
தேவர்கள் செல்வதைக் கண்டதும், மலைகளின் மன்னனுடைய சிறந்த மகள் {உமை} தன் கணவனிடம் {சிவனிடம்}, "ஓ! சிறப்புமிக்கவரே, சக்ரனின் தலைமையிலான அந்தத் தேவர்கள் எங்கே செல்கின்றனர்? ஓ! உண்மையை அறிந்தவரே, என் மனத்தில் பெரும் ஐயம் நிறைந்திருப்பதால் எனக்கு உண்மையைச் சொல்வீராக" என்று கேட்டாள்.(23)
மஹேஸ்வரன், "ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட பெண்ணே, சிறந்தவனான பிரஜாபதி தக்ஷன் ஒரு குதிரை வேள்வியில் தேவர்களைத் துதிக்கிறான். இந்தச் சொர்க்கவாசிகள் அங்கேதான் செல்கின்றனர்" என்றான்.(24)
உமை, "ஓ! மஹாதேவரே, நீர் அவ்வேள்விக்குச் செல்லவில்லையா? அவ்விடத்திற்குச் செல்ல உமக்கென்ன தடை இருக்கிறது?" என்று கேட்டாள்.(25)
மஹேஸ்வரன், "ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட பெண்ணே, பழங்காலத்தில் தேவர்கள் ஓர் ஒப்பந்தத்தைச் செய்தனர், அதன் விளைவாக வேள்விகள் அனைத்திலும் என் பங்கெனக் காணிக்கைகளேதும் ஒதுக்கப்படுவதில்லை.(26) ஓ! அழகிய நிறம்படைத்தவளே, அந்த ஒப்பந்தத்தின் விளைவாக அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைக்கு ஏற்புடைய வகையிலும், பழைய வழக்கத்தைப் பின்பற்றியும், தேவர்கள் வேள்விக் காணிக்கைகளில் எந்தப் பங்கையும் எனக்குத் தருவதில்லை" என்றான்.(27)
உமை, "ஓ! சிறப்புமிக்கவரே, உள்ளவை அனைத்திலும் நீரே பலத்தில் முதன்மையானவர். தகுதி, சக்தி, புகழ், செழிப்பு ஆகியவற்றில் நீர் யாருக்கும் வசப்பட்டவரில்லை, உண்மையில் நீர் அனைவரைக் காட்டிலும் மேன்மையானவர்.(28) எனினும், ஓ! பாவமற்றவரே, வேள்விக் காணிக்கையைப் பொறுத்தவரையில் உள்ள இயலாமையின் விளைவால் நான் பெருந்துயரமடைகிறேன், தலை முதல் பாதம் வரை எனக்கு நடுக்கம் ஏற்படுகிறது" என்றாள்".(29)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்தத் தேவி (பார்வதி), உயிரினங்கள் அனைத்தின் தலைவனான தன் தெய்வீகத் துணைவரிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, துயரில் இதயம் எரிய அமைதியாக இருந்தாள்.(30)
அப்போது மஹாதேவன், அவளது இதயத்தில் இருப்பதையும், அவளது எண்ணங்களையும் புரிந்து கொண்டு, (அந்த அவமதிப்பைத் துடைப்பதற்காக) நந்தியிடம், "(தேவியுடன்) இங்கேயே காத்திருப்பாயாக" என்றான்.(31) தேவர்களின் தேவனும், பிநாகைதாரியும், வலிமையும், சக்தியும் கொண்டவனும், யோகத் தலைவர்கள் அனைவருக்கும் தலைவனும் அவன் {சிவன்}, தன் யோக சக்தி அனைத்தையும் திரட்டி, பயங்கரமான தன் தொண்டர்கள் (பூத கணங்கள்) அனைவரின் துணையுடன் (தக்ஷன் வேள்வி செய்து கொண்டிருந்த) அந்த இடத்திற்குச் சென்று அவ்வேள்வியை அழித்தான். ஓ! மன்னா, அவனது தொண்டர்களில் சிலர் உரத்த கூச்சலிட்டனர், சிலர் பயங்கரமாகச் சிரித்தனர்,(32,33) சிலர் அந்த (வேள்வி) நெருப்புகளைக் குருதியால் தணித்தனர்; பயங்கர முகங்களைக் கொண்ட சிலர், வேள்விப்பீடங்களைத் தள்ளி அவற்றைச் சுழற்றத் தொடங்கினர். வேறு சிலர் அந்த வேள்வியில் துணை புரிந்து கொண்டிருந்தவர்களை விழுங்கத் தொடங்கினர். பிறகு, இவ்வாறு அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பீடிக்கப்பட்ட அந்த வேள்வி மானின் வடிவை ஏற்று வானத்தினூடாகத் தப்பிச் செல்ல முனைந்தது.(35)
அவ்வடிவில் வேள்வியே அவ்வாறு தப்பிச் செல்வதை உறுதிசெய்து கொண்ட மஹாதேவன், வில் மற்றும் கணையுடன் அதைப் பின்தொடரத் தொடங்கினான்.(36) அளவிலா சக்தி படைத்தவனும், தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அவனது இதயம் கோபத்தில் நிறைந்ததன் விளைவால், பயங்கரமான ஒரு வியர்வைத் துளி அவனது நெற்றியில் தோன்றியது.(37) அந்த வியர்வைத்துளி பூமியில் விழுந்த போது, அதிலிருந்து, யுகத்தின் முடிவில் (அனைத்தையும்) அழிக்கும் நெருப்புக்கு {காலாக்னிக்கு} ஒப்பான சுடர்மிக்க நெருப்பு தோன்றியது.(38) ஓ ஏகாதிபதி, அந்நெருப்பிலிருந்து குட்டையான வடிவம் கொண்டவனும், குருதிசிவப்பிலான கண்களைக் கொண்டவனும், பச்சை {மஞ்சள்} நிற மீசை கொண்டவனுமான ஒருவன் தோன்றினான்.(39)
ஒரு பருந்தையோ, ஓர் ஆந்தையையோ போல அவனது உடல் முழுவதும் மயிரால் மறைக்கப்பட்டிருந்தது, அவனது தலைமயிர் சிலிர்த்து நின்று கொண்டிருந்தது. பயங்கரமானவனான அவனுடைய நிறம் கரியதாகவும், அவனது ஆடை குருதி சிவப்பாகவும் இருந்தது. வைக்கோற்பொதியை எரிக்கும் நெருப்பைப் போல, பெருஞ்சக்தி கொண்ட அவன், வேள்வியின் மெய்யுடலை {அந்த மானை / மானின் வடிவில் இருந்த வேள்வியை} விரைவாக எரித்தான்.(40) காரியத்தைச் சாதித்த அவன், அங்கே கூடியிருந்த தேவர்களையும், முனிவர்களையும் நோக்கி விரைந்தான். அச்சத்தால் நிறைந்த தேவர்கள் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(41) ஓ ஏகாதிபதி, அவனுடைய நடையின் விளைவால் பூமி நடுங்கத் தொடங்கினாள்.(42) "ஓ" என்றும், "ஐயோ" என்றும் அண்டமெங்கும் கதறல்கள் கேட்டன. இதைக் குறித்துக் கொண்ட பலமிக்கப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, தன்னை மஹாதேவனிடம் வெளிப்படுத்திக்கொண்டு, பின்வார்த்தைகளில் அவனிடம் பேசினான்.(43)
பிரம்மன் {மஹாதேவனிடம்}, "ஓ! பலமிக்கவனே, இது முதல் தேவர்கள் வேள்விக்காணிக்கைகளில் ஒரு பங்கை உனக்குத் தருவார்கள். ஓ தேவர்கள் அனைவரின் தலைவா, இந்த உன் கோபம் உன்னால் விலக்கப்பட வேண்டும்.(44) ஓ! எதிரிகளை எரிப்பவனே, ஓ! மஹாதேவா, அதோ தேவர்களும், முனிவர்களும் உன் கோபத்தின் விளைவால் மிகவும் கலக்கமடைந்திருக்கின்றனர்.(45) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, ஓ! அற ஆன்மாவே, உன் வியர்வையில் இருந்து உதித்தவன், நோய் என்ற பெயரில் உயிரினங்களின் மத்தியில் உலவுவான்.(46) ஓ! பலமிக்கவனே, இவனது சக்தி அனைத்தும் திரண்ட நிலையிலேயே எஞ்சியிருந்தால் இவனைப் பூமாதேவியால் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, அவனைப் பல்வேறு பகுதிகளாகப் பிரிப்பாயாக" என்றான்.(47)
வேள்விக்காணிக்கைகளில் தனக்குரிய பங்கு முறையாக ஒதுக்கப்படும் என்று பிரம்மன் இந்த வார்த்தைகளைச் சொன்ன போது, பெரும் சக்தி கொண்ட அந்தப் பெரும்பாட்டனிடம் மஹாதேவன், "அப்படியே ஆகட்டும்" என்று மறுமொழி கூறினான்.(48) உண்மையில், பிநாகைதாரியான அந்தப் பவன் {சிவன்}, சற்றே புன்னகைத்து மகிழ்ச்சியால் நிறைந்தான். வேள்விக்காணிக்கைகளில் இருந்து தனக்கெனப் பெரும்பாட்டனால் ஒதுக்கப்பட்ட பங்கை அவன் ஏற்றான்.(49) அனைத்தின் தன்மைகளையும் அறிந்த மஹதேவன், அனைத்து உயிரினங்களின் அமைதிக்காக அந்த நோயை பல பகுதிகளாகப் பிரித்தான். ஓ மகனே, அஃதை அவன் எவ்வாறு செய்தான் என்பதைக் கேட்பாயாக.(50) யானைகளின் தலையில் உணரப்படும் வெப்பம் {மண்டை கொதிப்பு}, மலைகளின் தாது {நிலக்கீல்}, நீரில் மிதக்கும் பாசி, பாம்புகளின் சட்டை,(51) காளைகளின் குளம்புகளில் தோன்றும் புண், விளைச்சலற்ற பூமிப் பகுதிகளின் உப்பு, விலங்குகள் அனைத்தின் மங்கலான பார்வை,(52) குதிரைகளுக்குக் தொண்டையில் தோன்றும் நோய்{கண்டத்தில் தோன்று சதையடைப்பு}, மயில்களுக்குத் தலையில் தோன்றும் கொண்டை {மண்டை வெடிப்பு}, குயில்களின் கண்ணோய் ஆகியன அந்த உயரான்ம மஹாதேவனால் நோயெனப் பெயரிடப்பட்டன.(53)
இதையே நாம் கேள்விப்படுகிறோம். ஆட்டின் ஈரல் நோய், கிளிகளின் விக்கல் ஆகியனவும் நோயின் வடிங்களாகவே அறியப்படுகின்றன. ஓ! அற மன்னா, புலிகளின் களைப்பும் நோயெனவே அறியப்படுகிறது.(54) ஓ! பாரதா, இவற்றைத் தவிர்த்து, மனிதர்களுக்கு மத்தியில் நோயானாது, பிறப்பின்போதும், மரணத்தின் போதும், அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் அனைவரின் உடலுக்குள்ளும் நுழைகிறது.(55) நோய் என்றழைக்கப்படும் இவையும், அவையும் பயங்கர சக்தி கொண்ட மஹேஸ்வரனாகவே அறியப்படுகிறது. உயிரினங்கள் அனைத்தின் மேலும் அதிகாரம் கொண்டவன் அவன் என்பதால் அவன் அனைவராலும் வழிபடத்தகுந்தவனாவான்.(56)
அவனே {மகாதேவனே} அறவோரில் முதன்மையான விருத்திரன் கொட்டாவி விட்டபோது அவனை வென்றவனாவான். அதன் பிறகே சக்ரன் {இந்திரன்} அவன் மீது வஜ்ரத்தை ஏவினான்.(57) ஓ! பாரதா, விருத்திரனின் உடலுக்குள் புகுந்த அந்த வஜ்ரம் அவனை இரண்டாகப் பிளந்தது. வஜ்ரத்தால் இரண்டாகப் பிளக்கப்பட்டவனும், பெரும் யோக சக்திகளைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான அந்தச் சூரன், அளவிலா சக்தியுடன் கூடிய விஷ்ணுவின் உலகத்திற்கு {வைகுந்தத்திற்குச்} சென்றான்.(58) விஷ்ணுவிடம் அவன் கொண்ட பக்தியின் விளைவால் அவன் மொத்த அண்டத்தையும் மூழ்கடிப்பதில் வென்றான். விஷ்ணுவிடம் அவன் கொண்ட பக்தியின் விளைவாலேயே அவன் கொல்லப்பட்ட போது விஷ்ணுவின் உலகத்திற்கு உயர்ந்தான்.(59) ஓ! மகனே, இவ்வாறு விருத்திரனின் கதையைச் சொன்னதன் வழியாக நோயைக் குறித்த விவரங்களை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். வேறு எதைக் குறித்து நான் உன்னிடம் பேச வேண்டும்?(60) மிகுந்த கவனத்துடனும், உற்சாகம் நிறைந்த இதயத்துடனும் நோயின் தோற்றத்தைக் குறித்த இந்தக் கதையைப் படிப்பவன், நோயில் இருந்து விடுபட்டு, தன் பங்காக மகிழ்ச்சியையே எப்போதும் பெறுவான். மகிழ்ச்சியால் நிறையும் அவன், தனது இதயத்தில் நிறுவும் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்" {என்றார் பீஷ்மர்}".(61)
சாந்திபர்வம் பகுதி – 283ல் உள்ள சுலோகங்கள் : 61
ஆங்கிலத்தில் | In English |