The science of Atma (Soul)! | Shanti-Parva-Section-286 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 113)
பதிவின் சுருக்கம் : அத்யாத்மா குறித்து மீண்டும் விசாரித்த யுதிஷ்டிரன்; ஆத்மா, புத்தி, பூதங்கள், புலன்கள் மற்றும் கொணங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விவரித்த பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, மனிதனைப் பொறுத்தவரையில் அத்யாத்மா என்பது என்ன? அஃது எங்கிருந்து எழுகிறது" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அத்யாத்ம அறிவியலின் துணையுடன் ஒருவனால் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். மேலும் அஃது அனைத்து பொருட்களிலும் மேன்மையானது. நான் என் புத்தியின் உதவியைக் கொண்டு நீ கேட்கும் அத்யாத்மா குறித்து உனக்கு விளக்கப் போகிறேன். ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, என் விளக்கத்தைக் கேட்பாயாக.(2) பூமி, காற்று, ஆகாயம், நீர், ஐந்தாவதாக ஒளி ஆகியவையே பெரும்பூதங்களாகும். இவையே தோற்றமும், அழிவுமாகும் (தோற்றம் மற்றும் அழிவிற்கான காரணங்களாகும்).(3) ஓ! பாரதக் குலத்தின் காளையே, உயிரினங்களின் உடல்கள் (நுண்ணுடல் மற்றும் பருவுடல் ஆகிய இரண்டும்) இந்த ஐந்தின் பண்புகளுடைய கலவையின் விளைவேயாகும். அந்தப் பண்புகள் மீண்டும் மீண்டும் தொடங்கி, மீண்டும் மீண்டும் (அனைத்துப் பொருட்களுக்கும் மூலக் காரணமான பரமாத்மாவுக்குள்) கலக்கிறது.(4) பெருங்கடலின் முடிவிலா அலைகள் எழுந்து, தங்களுக்குக் காரணமான கடலிலேயே கலப்பதைப் போல, இந்த ஐந்து அடிப்படை பூதங்களில் இருந்து படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும், இந்த ஐந்து பெரும்பூதங்களுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் கலக்கின்றன.(5) ஓர் ஆமை தன் கால்களை நீட்டி மீண்டும் தனக்குள்ளேயே இழுத்துக் கொள்வதைப் போல, எண்ணிலா உயிரினங்கள் அனைத்தும் இந்த ஐந்து நிலையான பெரும்பூதங்களில் இருந்து எழுந்து (அதனுள்ளேயே நுழைகின்றன).(6)
உண்மையில் ஒலியானது ஆகாயத்தில் இருந்து உண்டாகிறது, அடர்த்தியான பொருள் அனைத்தும் பூமியின் குணத்தைக் கொண்டிருக்கின்றன. உயிரானது காற்றில் இருந்து வருகிறது. சுவை நீரில் இருந்து வருகிறது. வடிவமானது ஒளியின் தன்மையாகும்.(7) இவ்வாறே அசையும் மற்றும் அசையாதவற்றைக் கொண்ட அண்டம் முழுவதும், இந்த ஐந்து பெரும்பூதங்களின் பல்வேறு கலவைகளிலேயே ஒன்றாக நீடித்திருக்கின்றன. அழிவு நேரும்போது, பல்வேறு வகையான முடிவற்ற உயிரினங்களும் தங்களை மீண்டும் அந்த ஐந்தினுக்குள் கலக்கின்றன, பிறகு படைப்புத் தோன்றும்போது மீண்டும் அந்த அந்த ஐந்தில் இருந்து உதிக்கின்றன.(8) படைப்பாளன், அனைத்து உயிரினங்களிலும் தான் சரியென நினைக்கும் அளவுகளில் இந்த ஐம்பூதங்களையும் கலந்து வைக்கிறான்.(9)
ஒலி, காதுகள் மற்றும் துளைகள் அனைத்தும் - ஆகிய இம்மூன்றும் - வெளியையே {ஆகாயத்தையே} தங்கள் தோற்றத்தின் காரணமாகக் கொண்டிருக்கின்றன. சுவை, நீர்மங்கள் அனைத்தும் மற்றும் நாக்கு ஆகியவை நீரின் தன்மையைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.(10) வடிவம், கண், வயிற்றில் உள்ள செரிமான நெருப்பு ஆகியன ஒளியின் இயல்பைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மணம், நுகரும் உறுப்பு {மூக்கு}, உடல் ஆகியன பூமியின் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன.(11) உயிர், தீண்டல் மற்றும் செயல்பாடு ஆகியன காற்றின் தன்மைகளாகச் சொல்லப்படுகின்றன. ஓ மன்னா, ஐம்பூதங்களைக் குறித்தும் நான் உனக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன்.(12)
ஓ! பாரதா, இவற்றைப் படைத்த பரமன், சத்வம், ரஜஸ், தமஸ், காலம் மற்றும் நனவுநிலையின் {அகங்காரத்தின்}செயல்பாடுகள் மற்றும் ஆறாவதாக அமையும் மனத்துடன் சேர்த்து இவற்றைக் கலந்து வைத்தான்.(13) புத்தி என்றழைக்கப்படும் ஒன்று, உள்ளங்காலுக்கு மேலும், உச்சந்தலைக்குக் கீழும் நீ காணும் உட்பகுதியில் வசிக்கிறது.(14) மனிதனில் ஐந்து (அறிவுப்) புலன்கள் இருக்கின்றன. ஆறாவதாக (ஆறாவது புலனாக) மனம் இருக்கிறது. ஏழாவதே புத்தி என்றழைக்கப்படுகிறது. க்ஷேத்ரஜ்ஞன் அல்லது ஆன்மா எட்டாவதாகும்.(15) புலன்களும், செயல்படும் பொருள்களும், அதனதனுக்குரிய செயல்பாடுகளை உணர்வதன் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். சத்வம், ரஜஸ், தமஸ் என்றழைக்கப்படும் நிலைகள், அவற்றின் புகலிடத்திற்காகவோ, அமைப்பிற்காகவோ புலன்களையே சார்ந்திருக்கின்றன.(16) புலன்களானவை, தங்கள் தங்களுக்குரிய பொருட்களின் தாக்கத்தைப் பற்றுவதற்காகவே நீடித்திருக்கின்றன. மனமானது ஐயத்தையே தன் செயல்பாடாகக் கொண்டுள்ளது. புத்தியானது உறுதி {செய்வதையே தன் செயல்பாடாகச்} செய்கிறது. க்ஷேத்ரஜ்ஞன் (பிறவற்றின் {ஏழின்} செயல்பாட்டைக் காணும்) செயல்பாடற்ற சாட்சியாக மட்டுமே சொல்லப்படுகிறான்.(17) சத்வம், ரஜஸ், தமஸ், காலம், செயல்கள் ஆகிய குணங்கள் புத்தியை இயக்குகின்றன. புலன்களும், மேற்குறிப்பிட்ட ஐந்து குணங்களுமே புத்தியாகிறது.(18) புத்தி இல்லாத போது, புலன்களோடு கூடிய மனமும் இன்னும் பிற குணங்கள் (சத்வம், ரஜஸ், தமஸ், காலம் மற்றும் செயல்கள் ஆகிய) ஐந்தும் இயங்குவதில்லை.
எதைக் கொண்டு புத்தியானது பார்க்கிறதோ அது கண் என்று அழைக்கப்படுகிறது.
புத்தி கேட்கும்போது, அது காது என்று அழைக்கப்படுகிறது.
அவள் {புத்தி} நுகரும்போது, அவள் மணத்தின் புலனாகிறாள்;
அவள் சுவைக்குரிய பல்வேறு பொருட்களைச் சுவைக்கும்போது, அவள் நாக்கு என்ற பெயரின் மூலம் அழைக்கப்படுகிறாள்.(19)
மேலும் அவள் தீண்டலின் பல்வேறு பொருட்களைத் தீண்டும்போது அவள் தீண்டும் புலனாகிறாள்.
புத்தியே பல்வேறு வகையில் அடிக்கடி மாறுதலுக்கு உள்ளாகிறாள். புத்தியானவள் எதையும் விரும்பும்போது மனமாகிறாள்.(20)
எதைக் கொண்டு புத்தியானது பார்க்கிறதோ அது கண் என்று அழைக்கப்படுகிறது.
புத்தி கேட்கும்போது, அது காது என்று அழைக்கப்படுகிறது.
அவள் {புத்தி} நுகரும்போது, அவள் மணத்தின் புலனாகிறாள்;
அவள் சுவைக்குரிய பல்வேறு பொருட்களைச் சுவைக்கும்போது, அவள் நாக்கு என்ற பெயரின் மூலம் அழைக்கப்படுகிறாள்.(19)
மேலும் அவள் தீண்டலின் பல்வேறு பொருட்களைத் தீண்டும்போது அவள் தீண்டும் புலனாகிறாள்.
புத்தியே பல்வேறு வகையில் அடிக்கடி மாறுதலுக்கு உள்ளாகிறாள். புத்தியானவள் எதையும் விரும்பும்போது மனமாகிறாள்.(20)
(புத்தி எனும்) தனிப்பட்ட அமைப்பின் அடிப்படைகளான மனத்தோடு கூடிய ஐம்புலன்களும் புத்தியின் படைப்புகளேயாகும். அவை இந்திரியங்கள் என்றழைக்கப்படுகின்றன. அவை களங்கப்படும்போது, புத்தியும் களங்கமடைகிறது.(21) ஜீவனில் புத்தியானவள் மூன்று நிலைகளில் இருக்கிறாள். சில வேளைகளில் அவள் இன்புறுகிறாள்; சில வேளைகளில் அவள் துன்புறுகிறாள்;(22) சில வேளைகளில் இன்பமும் துன்பமும் அற்ற நிலையில் இருக்கிறாள். புத்தியானவள், (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) இந்த மூன்று நிலைகளையே தன் சாரமாகக் கொண்டு, இந்த மூன்று நிலைகளிலேயே சுழன்று கொண்டிருக்கிறாள்.(23) ஆறுகளின் தலைவனான பொங்கும் கடலானது, எப்போதும் தன் கரைகளுக்குள்ளே இருப்பதைப் போலவே, புத்தியும், இந்த (மூன்று) நிலைகளின் தொடர்புடன் (புலன்கள் உள்ளிட்ட) மனத்தில் இருக்கிறாள்.(24)
ரஜஸ் நிலை விழிப்படையும்போது, புத்தியானவள் ரஜஸாக மாறுகிறாள். மகிழ்ச்சி, இன்பம், திளைப்பு, உற்சாகம், இதய நிறைவு ஆகியன(25) ஏதோவொருவகையில் தூண்டப்படும்போது சத்வ தன்மையுள்ளதாகின்றன. குறிப்பிட்ட காரணங்களில் இருந்து எழும் இதய எரிச்சல், துயரம், கவலை, நிறைவின்மை, மன்னிக்கும்தன்மையின்மை(26) ஆகியன ரஜஸின் விளைவுகளாகும். அறியாமை, பற்று, பிழை {குற்றம்}, கவனமின்மை, திகைப்பு, கிலி,(27) அற்பத்தனம் {சிறுமை}, உற்சாகமின்மை, உறக்கம், தாமதித்தல் ஆகியன குறிப்பிட்ட காரணங்களால் உண்டாகும்போது அவை தமஸின் தன்மைகளாகின்றன.(28)
உடல் அல்லது மனமானது இன்பம் அல்லது மகிழ்ச்சியின் தொடர்புடைய எந்நிலையில் எழுந்தாலும், அது சத்வ நிலையின் விளைவாகக் கருதப்பட வேண்டும்.(29) மேலும் ஒருவனுக்குக் கவலைநிறைந்ததாகவும், ஏற்பில்லாததாகவும் இருக்கும் எதுவும் ரஜஸில் இருந்து எழுந்ததாகக் கருதப்பட வேண்டும். அத்தகைய செயல் எதையும் தொடங்காமலேயே (அதைத் தவிர்ப்பதற்காக) ஒருவன் தனது கவனத்தைத் திருப்ப வேண்டும்.(30) உடல் அல்லது மனத்தில், உணர இயலாத, புதிரான வகையில் பிழை நிறைந்து அல்லது திகைப்படையச் செய்யும் எதுவும் தமஸுடன் தொடர்புடையதாக அறியப்பட வேண்டும்.(31) இவ்வாறே நான் இவ்வுலகில் புத்தியில் வசிக்கும் பொருட்கள் அனைத்தையும் உனக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன். இவற்றை அறிவதன் மூலம் ஒருவன் விவேகியாகிறான். ஞானத்தின் குறியீடாக வேறு எது இருக்கு முடியும்?(32)
புத்தி மற்றும் ஆன்மா ஆகிய இரு நுண்ணியப் பொருட்களுக்கிடையிலான வேறுபாட்டை இப்போது அறிவாயாக. இவற்றில் ஒன்றான புத்தியே குணங்களை உண்டாக்குகிறது. மற்றொன்றான ஆன்மா அவற்றை உண்டாக்குவதில்லை.(33) இயல்பில் அவை ஒன்றுக்கொன்று வேறானவையாக இருந்தாலும் அவை எப்போதும் ஒரே நிலையில் கலந்தே இருக்கின்றன. ஒரு மீனானது, தான் வசிக்கும் நீரிலிருந்து வேறான ஒன்றாகும், ஆனால் மீனும், நீரும் ஒன்றாகத்தான் இருந்தாக வேண்டும்.(34) குணங்களால் ஆன்மாவை அறிய முடியாது. எனினும் ஆன்மாவானது அவற்றை அறியும். அறியாமை கொண்டோர் புத்தியில் குணங்கள் இருப்பதைப் போல இந்தக் குணங்கள் ஆன்மாவில் கலந்த நிலையிலேயே இருக்கின்றன என்று கருதுகிறார்கள். எனினும், ஆன்மாவானது செயல்பாடின்றி அனைத்தையும் காணும் சாட்சி மட்டுமே என்பதால் உண்மை அவ்வாறானதாக இல்லை.(35) புத்திக்கு எந்தப் புகலிடமும் கிடையாது. (புத்தியின் இருப்பில் ஈடுபடும்) உயிர் என்றழைக்கப்படுவது, குணங்கள் ஒன்றாகச் சேர்வதன் விளைவுகளில் இருந்தே உண்டாகிறது. (புத்தியின் மூலம் உண்டாக்கப்பட்ட இந்தக் குணங்களைத் தவிர) காரணங்களாகச் செயல்படும் வேறு சில, உடலில் வசிக்கும் புத்தியைப் படைக்கின்றன. குணங்களின் உண்மை இயல்பையோ அவற்றுடைய இருப்பின் வடிவத்தையோ எவராலும் உணர முடியாது.(36)
ஏற்கனவே சொல்லப்பட்டது போலப் புத்தியே குணங்களைப் படைக்கிறது. ஆன்மாவானது (செயலற்ற சாட்சியாக) அவற்றைக் காண மட்டுமே செய்கிறது. புத்திக்கும், ஆன்மாவுக்கு இடையில் நீடிக்கும் இந்த ஒற்றுமை நித்தியமானதாகும்.(37) உள் வசிக்கும் புத்தியானது, உயிரற்றவையும், புரிந்து கொள்ளாதவையுமான புலன்களின் மூலமே அனைத்துப் பொருட்களையும் புரிந்து கொள்கிறது. உண்மையில் புலன்களானவை (தன்னால் பொருட்களைக் காண முடியாது என்றாலும், பிறர் காண ஒளியை வீசும்) விளக்குகளைப் போன்றவை மட்டுமே.(38) இதுவே (புலன்கள், புத்தி மற்றும் ஆன்மாவின்) இயற்கையாகும். இதை அறியும் ஒருவன், துயரத்திற்கோ இன்பத்திற்கோ வசப்படாமல் உற்சாகமாக வாழ வேண்டும். அத்தகைய மனிதனே செருக்கின் ஆதிக்கத்தைக் கடந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(39) புத்தியானவள் தன் இயல்பின் மூலம் இந்தக் குணங்கள் அனைத்தையும் உண்டாக்குகிறாள் என்பது - சிலந்தியானது (தன் இயல்பின் விளைவால்) வலை பின்னுவதைப் போன்றதாகும். இந்தக் குணங்களைச் சிலந்தி பின்னும் வலையாக அறிய வேண்டும்.(40)
அழிவடையும்போது குணங்கள் இருப்பதில்லை; அவற்றின் இருப்பு புலப்படுவதில்லை. எனினும், ஒரு பொருள் புலன்களின் திறனைக் கடக்கும்போது அதன் இருப்பு (அல்லது இல்லாமை) உள்ளுணர்வால் உறுதி செய்யப்படுகிறது. இஃது ஒரு குழுவினருடைய கருத்தாகும். வேறு சிலர், அழிவோடு சேர்த்து குணங்களும் இல்லாமல் போகின்றன என்று உறுதி செய்கின்றனர்.(41) புத்தி மற்றும் சிந்தனை குறித்துச் சொல்லப்படும் முடிச்சுகள் நிறைந்த இந்தப் பிரச்சனையை அவிழ்த்து, ஐயமனைத்தும் களையும் ஒருவன் கவலையை விட்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.(42) அதன் ஆழத்தை அறியாத மனிதர்கள், மயக்கமெனும் நீரால் நிறைந்த ஓர் ஆற்றைப் போன்ற இந்தப் பூமியில் விழும்போது துயரடைவதைப் போலவே, புத்தியில் ஒற்றுமை இருக்கும் இந்த நிலையில் இருந்து விழும் மனிதனும் துயரடைகிறான்.(43) எனினும் அத்யாத்மாவை அறிந்து மனோவுறுதி கொண்ட ஞானிகள், அந்த நீரின் மறுகரையை அடைய இயன்றவர்கள் என்பதால் அவர்கள் ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை. உண்மையில், ஞானமே (அந்த ஆற்றில்) திறமிக்கத் தோணியாகும்.(44) ஞானமற்றவர்களை அச்சுறுத்தும் பீதி நிறைந்த கிலிகளை ஞானிகள் சந்திக்க வேண்டியதில்லை. அறவோரைப் பொறுத்தவரையில், அவர்களில் எந்த மனிதனும் அடைந்த கதிக்கு மேன்மையான கதியை அவர்களில் எவரும் அடைவதில்லை. உண்மையில், இவ்வகையில் அறவோர் தங்கள் சமத்தன்மையை வெளிக்காட்டுவர்.(45) ஞானியைப் பொறுத்தவரையில், (அவன் அறியாமையில் மூழ்கியிருந்த) கடந்த காலங்களில் அவனால் செய்யப்பட்ட எந்தச் செயல்களையும், (ஞானமடைந்த பிறகு) அவன் செய்த கொடுமைநிறைந்த எந்தச் செயல்களையும் ஞானத்தையே தன் ஒரே வழிமுறையாகக் கொள்வதன் மூலம் அழிக்கிறான். பிறகு, அவன் ஞானமடைந்த பிறகு, பிறரின் தீச்செயல்களைக் கண்டிப்பது, பற்றின் ஆதிக்கத்தில் தானே தீச்செயல்களைச் செய்வது என்ற அந்த இரண்டு தீமைகளையும் செய்வதை நிறுத்துகிறான்" என்றார் {பீஷ்மர்}.(46)
சாந்திபர்வம் பகுதி – 286ல் உள்ள சுலோகங்கள் : 46
ஆங்கிலத்தில் | In English |