No grief! | Shanti-Parva-Section-287 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 114)
பதிவின் சுருக்கம் : துக்கத்தையும், மரணத்தையும் தவிர்ப்பது எவ்வாறு என்று கேட்ட யுதிஷ்டிரன்; நாரதருக்கும், சமங்கருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "உயிரினங்கள் எப்போதும் துன்பத்தையும், மரணத்தையும் கண்டு அஞ்சுகின்றன. ஓ! பாட்டா, இந்த இரண்டும் நேராமல் தவிர்ப்பது எவ்வாறு என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, இது தொடர்பாக நாரதருக்கும், சமங்கருக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2)
நாரதர் {சமங்கரிடம்}, "(பெரியோரை வணங்க சிலர் தங்கள் தலைகளை மட்டுமே தாழ்த்துகின்றனர்) நீர் பெரியோர்களை வணங்க உமது மார்பு தரையைத் தொடும் வரை நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்து வணங்குகிறீர். நீர் உமது கரங்களைக் கொண்டே (வாழ்வெனும் ஆற்றைக்) கடப்பதாகத் தெரிகிறது[1]. நீர் எப்போதும் துன்பத்தில் இருந்து விடுபட்டவராகவும், மிகுந்த உற்சாகம் நிறைந்தவராகத் தென்படுகிறீர். நீர் எப்போதும் நிறைவுடையவராகவும், மகிழ்ச்சியானவராகவும் ஒரு குழந்தையைப் போல (இன்பமாக) விளையாடிக் கொண்டிருப்பவராகவும் தென்படுகிறீர்" என்றார்.(4)
[1] "உமக்கு நேரும் பயங்கரத் துயத்திலும் நீர் உம்மைச் சார்ந்தே இருக்கிறீர். வாழ்வெனும் பயங்கர ஆற்றை ஒரு தோணியும் இல்லாமல் வெறும் கரங்களின் உதவியுடன் மட்டுமே கடப்பது பெரும் தற்சார்பையே குறிப்பிடுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சமங்கர் {நாரதரிடம்}, "ஓ! கௌரவங்களை அளிப்பவரே. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலங்களைக் குறித்த உண்மையை நான் அறிவேன். எனவே நான் ஒருபோதும் உற்சாகமிழப்பதில்லை[2].(5) இவ்வுலகில் செயல்களின் தொடக்கம் எது, அவற்றால் அடையப்படும் கனிகள் என்னென்ன, அந்தக் கனிகள் எவ்வாறு பல்வேறு வகைகளில் இருக்கின்றன என்பதையும் நான் அறிவேன். எனவே நான் ஒருபோதும் துன்பத்தின் வசப்படுவதில்லை[3].(6) ஓ! நாரதரே, கல்லாதவர்கள், ஆதரவற்றவர்கள், செல்வந்தர்கள், குருடர்கள், மூடர்கள், பித்தர்கள் என நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பாரும்[4].(7) இவர்கள் தங்கள் முற்பிறவிச் செயல்களின் மூலம் வாழ்கிறார்கள். நோய்களில் இருந்து விடுபட்டவர்களான தேவர்களே கூட, முற்பிறவிகளின் செயற் தன்மையின் மூலம் (அந்நிலையில்) இருக்கிறார்கள். பலவீனர்களும், பலவான்களும் என அனைவரும் தங்கள் முற்பிறவி செயல்களின் தன்மையால் வாழ்கின்றனர். எனவே, நீர் நம்மை மதிப்பதே உமக்குத் தகும்.(8) ஆயிரங்களைக் கொண்டவர்கள் வாழ்கிறார்கள். நூறுகளைக் கொண்டவர்களும் வாழ்கிறார்கள். துன்பத்தில் மூழ்கியவர்களும் வாழ்கிறார்கள். நாமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பதையும் பாரும்.(9)
[2] "எது இல்லையோ, எது இருக்கப் போவதில்லையோ அஃது இந்தக் கணத்தில் இருப்பதில்லை. எனவே, அசத்-ன் இயல்பில் உள்ளவை அனைத்தும் இருப்பில்லாதவை. நமது துன்பங்களும் அசத்துடன் தொடர்புடையவை. இதை அறிந்த நான் துன்பங்கள் அனைத்தையும் கைவிடுகிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "செயல்கள் துன்பத்திற்கானவை; வெளிப்படையாகத் தோன்றுவதைப் போலல்லமால் செயல்களின் கனிகளும் துன்பத்திற்கானவை; பல்வேறு செயற்கனிகளும், எதிர்பாராமல் சில வேளைகளில் நேரும் பிறகனிகளும் கூடத் துன்பத்திற்கானவையே என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே, செயல்களைத் தவிர்த்து, செயல்களின் கனிகளை அடையாததற்கு வருந்தாமல், அல்லது வெளிப்படையாக இனிமையாகத் தெரியும் கனிகளை அடையாததற்கு வருந்தாமல் இருப்பதால் நான் துன்பத்தில் ஈடுபடுவதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "செயல்களைத் தவிர்க்கிறோம் என்பதால் நாம் இறப்பதில்லை; உண்மையில் பிறரைப் போலவே நாம் வாழ்கிறோம்; அதுவும் சமமற்ற சூழ்நிலை கொண்ட பிறரும் வாழ்கிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! நாரதரே, நாம் துன்பவசப்படாமல் இருக்கும்போது, (அறக்) கடமை பயிற்சியோ, (அறச்) செயல் நோற்போ நமக்கு என்ன செய்துவிட முடியும்? இன்ப துன்பங்கள் அனைத்தும் முறிவற்றவை என்பதால், அவற்றால் ஒருபோதும் நம்மைக் கலங்கடிக்க முடிவதில்லை[5].(10) ஞானிகள் என்று எதனால் மனிதர்கள் சொல்லப்படுகிறார்கள், அது பிழையில் {குற்றத்தில்} இருந்து புலன்களை விடுபடச் செய்யும் ஞானமே ஆகும். புலன்களே பிழைக்கும் {குற்றத்திற்கும்}, துயரத்திற்கும் வசப்படுகிறது. பிழைக்கு {குற்றத்திற்கு} ஆட்படும் புலன்களைக் கொண்ட ஒருவன் ஞானத்தை அடைவான் என்று ஒருபோதும் சொல்ல முடியாது.(11) பிழையின் ஆதிக்கத்தால் மனிதன் கொள்ளும் செருக்கானது, அவன் அடங்கியிருக்கும் பிழையின் {குற்றத்தின்} வடிவம் மட்டுமே ஆகும். பிழை செய்யும் மனிதனைப் பொறுத்தவரையில் அவனுக்கு இம்மையும் கிடையாது, மறுமையும் கிடையாது. துன்பங்கள் எப்போதும் நீடித்திருப்பதில்லை, இன்பமும் எப்போதும் இருக்காது என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும்[6].(12) திருப்பங்கள் மற்றும் துன்ப நிகழ்வுகள் நிறைந்த இந்த உலகவாழ்வை என்னைப் போன்ற ஒருவன் ஒருபோதும் பின்பற்ற மாட்டான். அத்தகைய ஒருவன், இன்பத்திற்குரிய பொருட்களை விரும்புவதில் கவனம் கொள்ள மாட்டான், அவை கொண்டு வரும் மகிழ்ச்சியை நினைக்க மாட்டான், அல்லது அவை கொண்டு வரும் துன்பங்களையும் நினைக்க மாட்டான்.(13) தற்சார்பு கொள்ள இயன்ற ஒருவன், பிறரின் பொருள்களில் ஒருபோதும் பேராசை கொள்ள மாட்டான்; அடையப்படாத லாபங்களைக் குறித்து நினைக்க மாட்டான்; அபரிமிதமான செல்வத்தை அடைவதால் மகிழ்ச்சியை உணர மாட்டான்; செல்வத்தை இழப்பதால் துன்பவசப்பட மாட்டான்.(14) நண்பர்களாலோ, செல்வத்தாலோ, உயர்ந்த பிறப்பாலோ, சாத்திரக் கல்வியாலோ, மந்திரங்களாலோ, சக்தியாலோ மறுமையின் துன்பத்தில் ஒருவனை மீட்க முடியாது. ஒழுக்கத்தின் மூலமே ஒருவனால் அங்கே இன்பத்தை அடையமுடியும்.(15)
[5] "அறியாமையானது கவலையின் வேராகக் கிடக்கிறது. அறியாமையைக் கைவிடுவதால் நாம் துன்பத்தைத் தவிர்த்திருக்கிறோம். எனவே, அறமோ, வேள்வி முதலியவற்றைப் போன்ற அறச் செயல்களோ நமக்கு எந்த நன்மையையும், தீமையையும் செய்துவிட முடியாது. இன்ப துன்பங்களைப் பொறுத்தவரையில், அவற்றின் மதிப்பை நாம் அறிந்திருப்பதாலும், அவை நீடிக்கும் காலத்தை ஒப்பிடுகையில் மிகக் குறுகியவையாக இருப்பதாலும் இவை இரண்டாலும் நம்மை அசைக்க முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "எனவே, "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று எவரும் செருக்கில் ஈடுபடலாகாது, "நான் துன்பநிலையில் இருக்கிறேன்" என்று எவரும் துயரில் ஈடுபடலாகாது. ஞானியானவன், இந்த நிலையற்ற மனநிலைகளால் கலக்கமடைந்து ஒருபோதும் துன்புறக்கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
யோகத்தை அறியாத மனிதனின் புத்தியை ஒருபோதும் விடுதலையை {முக்தியை} நோக்கிச் செலுத்த முடியாது. யோகத்தை அறியாத ஒருவனால் ஒருபோதும் மகிழ்ச்சியை அடைய முடியாது. பொறுமையும், கவலையைக் கைவிடும் மனோவுறுதியுமே மகிழ்ச்சி உண்டாவதற்கான இரண்டு அறிகுறிகளாகும்.(16) ஏற்புடைய {இனிமையான} எதுவும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. இன்பம் செருக்கைத் தூண்டுகிறது. மேலும் செருக்கானது கவலையை உண்டாக்குகிறது. இந்தக் காரணங்களுக்காகவே நான் இவை அனைத்தையும் தவிர்க்கிறேன்.(17) என் உடல் உயிருள்ளதாகத் திரிந்து கொண்டிருப்பதால், இதயத்தைத் திகைப்படையச் செய்யும் துயரம், அச்சம், செருக்கு ஆகியவற்றையும், இன்ப துன்பங்களையும் நான் (கவலையற்ற) சாட்சியாக மட்டுமே காண்கிறேன்[7].(18) செல்வம் மற்றும் இன்பம் ஆகிய இரண்டையும், தாகம் மற்றும் பிழையையும் கைவிட்டு, துயரத்தில் இருந்தும், அனைத்து வகை இதயக் கவலைகளிலும் இருந்தும் விடுபட்டுப் பூமியில் திரிந்து விருகிறேன்.(1) அமுதம் பருகிய ஒருவனைப்போல, இம்மையிலோ, மறுமையிலோ, மரணத்திலோ, கொடூரத்திலோ, காமத்திலோ, அவ்வகையான எவற்றிலோ எனக்கு அச்சமேதும் இல்லை.(20) ஓ! பிராமணரே, நான் செய்த கடுமையான, அழிவற்ற தவங்களின் விளைவாக நான் இந்த ஞானத்தை அடைந்திருக்கிறேன். ஓ! நாரதரே, இதன் காரணமாகவே, என்னிடம் வரும் துன்பத்தால் என்னைப் பீடிப்பதில் வெல்ல முடிவதில்லை" என்றார் {சமங்கர்}" {என்றார் பீஷ்மர்}.(21)
[7] "நான் உயிர் வாழும் ஓர் உடலைக் கொண்டிருப்பதால் அவற்றைக் காணும் கடன் எனக்கு இருக்கிறது; ஆனால் நான் அவற்றை ஒரு கவலையுமில்லாத சாட்சியாக மட்டுமே காண்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 287ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |