Indra and the parrot! | Anusasana-Parva-Section-05 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 05)
பதிவின் சுருக்கம் : கருணை மற்றும் பக்தியின் சிறப்புகளை விளக்குவதற்காக இந்திரனுக்கும், ஒரு கிளிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! அற உண்மைகளை அறிந்தவரே, கருணையின் தகுதிகளையும் {சிறப்புகளையும்}, பக்திமான்களின் பண்புகளையும் {மேன்மைகளையும்} நான் கேட்க விரும்புகிறேன். ஓ! ஐயா, எனக்கு அவற்றை விளக்குவீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக, வாசவன் {இந்திரன்} மற்றும் உயர்ந்த மனம் படைத்த சுகனின் {கிளியின்} கதை அடங்கிய இந்தப் பண்டைய புராணம் மேற்கோளாகக் குறிப்பிடப்படுகிறது.(2) காசி மன்னனின் ஆட்சிப்பகுதிகளில், ஒரு வேடன் நஞ்சு தோய்த்த கணைகளை எடுத்துக் கொண்டு, தன் கிராமத்திலிருந்து மான்களைத் தேடி வேட்டைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(3) ஒரு பெருங்காட்டில் தேடுதல் வேட்டையில் இருந்தபோது, அருகில் இருக்கும் மான்களைக் கண்ட அவன், இறைச்சியை அடையும் விருப்பத்தில் அவற்றில் ஒன்றின் மீது தன் கணையை ஏவினான்.(4) மானின் அழிவுக்காக ஏவப்பட்ட, தடுக்கப்பட முடியாத கரங்களைக் கொண்ட அந்த வேடனின் கணையானது இலக்கு தவறி அந்தக் காட்டில் ஒரு பெரும் மரத்தைத் துளைத்தது.(5)
கடும் நஞ்சில் தோய்க்கப்பட்ட அந்தக் கணையால் பலமாகத் துளைக்கப்பட்ட அந்த மரம், இலைகளையும், கனிகளையும் உதிர்த்து உலர்ந்து போனது.(6) அந்த மரம் உலர்ந்து போனாலும், அதன் பொந்தில் தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்து வந்த ஒரு கிளி, அந்தக் கானகத் தலைவன் {மரத்தின்} மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் கூட்டை விட்டு அகலாமல் இருந்தது.(7) நன்றியறிந்ததும், அறம்சார்ந்ததுமான அந்தக் கிளி, தானும் அம்மரத்துடன் சேர்ந்து அசைவில்லாமலும் {வெளியே செல்லாமலும்}, உணவில்லாமலும், அமைதியாகவும், துன்பத்துடனும் உலர்ந்து போனது.(8)
பாகனைக் வென்றவன் {இந்திரன்}, உயர் ஆன்மா கொண்டதும், பெரும் இதயம் படைத்ததுமான அந்தப் பறவை இவ்வாறு இன்பதுன்பங்களின் ஆதிக்கத்தில் இயல்புக்கு மீறிய உறுதியுடன் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தான்.(9) சக்ரனின் {இந்திரனின்} மனத்தில் இந்த எண்ணம் எழுந்தது, "இழிந்த விலங்கு பிறவிக்குச் சாத்தியமில்லாத மானுடத்தன்மை வாய்ந்த இந்தத் தாராள உணர்வு இப்பறவைக்கு எவ்வாறு வாய்த்தது?.(10) உயிரினங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று அன்பையும், தாராள உணர்வையும் வெளிப்படுத்துவதைக் காண முடிவதால் தற்செயலான இக்காரியத்தில் ஆச்சரியமில்லைதான்" {என்று இந்திரன் நினைத்தான்}.(11)
சக்ரன் {இந்திரன்}, ஒரு பிராமணரின் வடிவத்தை ஏற்றுப் பூமிக்கு வந்து அந்தப் பறவையிடம்,(12) "ஓ! சுகா, ஓ! பறவைகளில் சிறந்தவனே, தக்ஷனின் பேத்தி (சுகி), (உன்னைத் தன் வாரிசாகப் பெற்றதால்) அருளடைந்தவளானாள். இந்த உலர்ந்த மரத்தை விட்டு நீ என்ன காரணத்தினால் விலகவில்லை?" என்று கேட்டான்.(13)
இவ்வாறு கேட்கப்பட்ட சுகன், அவனுக்குத் தலைவணங்கி, "ஓ! தேவர்களின் தலைவா, என் கடுந்தவங்களின் தகுதியால் நான் உன்னை அடையாளம் கண்டேன். உனக்கு நல்வரவு" என்று மறுமொழி கூறினான்.(14)
ஆயிரங்கண் தேவன் {இந்திரன்}, "நன்று, நன்று" என்று சொல்லி ஆச்சரியமடைந்து தன் மனத்தினுள், "இவன் பெற்றிருக்கும் அறிவு எவ்வளவு ஆச்சரியகரமானது" என்று புகழ்ந்தான்.(15) அந்தக் கிளியானவன் உயர்ந்த நன்னடத்தையும், செயற்தகுதியும் கொண்டவன் என்பதை அறிந்தும், ’அம்மரத்தை விட்டு அவன் அகலாமல் இருக்கும் பற்றுக்கான காரணமென்ன?’ என்று விசாரித்து,(16) "இந்த மரம் உலர்ந்து விட்டது, இலைகளும், கனிகளுமற்றதாக இருக்கிறது, மேலும் பறவைகளின் புகலிடமாகும் தகுதி இதற்கில்லை. இன்னும் நீ ஏன் இதில் தொற்றிக் கொண்டிருக்கிறாய்? இந்தக் கானகம் பெரியதாகும்,(17) மேலும் இதய நிறைவுடன் நீ விரும்பித் தேர்ந்தெடுக்கும் வகையில் இலைகள் அடர்ந்த பொந்துகளைக் கொண்ட எண்ணற்ற அழகிய மரங்கள் இக்காட்டில் இருக்கின்றன.(18) ஓ! பொறுமைசாலியே, உன் ஞானத்தின் மூலம் பகுத்தறிந்து, இறந்ததும், பயனற்றதும், இலைகள் அனைத்தும் உதிர்ந்ததும், இனியும் எந்நன்மையும் கொடுக்க இயலாததுமான இந்தப் பழைய மரத்தைக் கைவிடுவாயாக" என்றான் {இந்திரன்}".(19)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அறம் சார்ந்த சுகன் {கிளி}, சக்ரனின் {இந்திரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, ஆழமான பெருமூச்சுவிட்டபடியே, கவலையுடன்,(20) "ஓ! சச்சியின் கணவா {இந்திரா}, தேவர்களின் தலைவா, தேவர்களின் விதிகளுக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டும். நீ கேட்ட கேள்வி தொடர்புடைய பொருளுக்கான காரணத்தைக் கேட்பாயாக.(21) இந்த மரத்திற்குள்தான் நான் பிறந்தேன், என் குணத்தின் நல்லியல்புகள் அனைத்தையும் நான் இங்கேயே அடைந்தேன். குஞ்சாக இருந்த போது, என் பகைவர்களின் தாக்குதலில் இருந்து இந்த மரத்தில்தான் நான் பாதுகாக்கப்பட்டேன்.(22) ஓ! பாவமற்றவனே, அன்புடையவனான நீ, என் வாழ்வொழுக்கக் கோட்பாட்டில் இருந்து என்னை ஏன் வழுவச் செய்கிறாய்? நான் கருணை நிறைந்தவனாகவும், அறநோக்கத்தில் அர்ப்பணிப்புள்ளவனாகவும் {பக்தியுடனும்}, ஒழுக்கத்தில் உறுதியானவனாகவும் இருக்கிறேன்.(23) நல்லோருக்கு மத்தியில் அன்பு மனப்பான்மையே பெரும் அறச்சோதனை, இதே கருணையும், {மனிதாபிமானம் சார்ந்த} இரக்கவுணர்வும்தான் அறவோருக்கான வற்றாத இன்பத்தின் ஊற்றுக்கண்ணாகும்.(24) அறத்தில் தங்களுக்கு ஏற்படும் ஐயங்களைத் தேவர்கள் அனைவரும் உன்னிடமே கேட்கின்றனர், ஓ! தலைவா, இந்தக் காரணத்தினாலேயே அவர்கள் அனைவருக்கும் மேலாக அரசுபுரியும் நிலையில் நீ நிறுத்தப்பட்டிருக்கிறாய்.(25) ஓ! ஆயிரங்கண் கொண்டவனே, இம்மரத்தைக் கைவிடுமாறு எனக்கு நீ அறிவுரை கூறுவது உனக்குத் தகாது. நல்லது செய்ய இயன்ற போது, இஃது {இம்மரம்} என் வாழ்வை ஆதரித்தது. இப்போது என்னால் எவ்வாறு இதைக் கைவிட முடியும்?" என்று அவனிடம் {இந்திரனிடம்} மறுமொழி கூறினான்.(26)
பாகனைக் கொன்றவனான அந்த அறம்சார்ந்தவன் {இந்திரன்}, நற்பொருள் கொண்ட அந்தக் கிளியின் வார்த்தைகளில் நிறைவடைந்து, அவனிடம் {அந்தக் கிளியிடம்}, "இரக்கமும், கருணையும் கொண்ட உன் மனோநிலையில் நான் நிறைவடைந்திருக்கிறேன்.(27) என்னிடம் இருந்து ஒரு வரத்தைக் கேட்பாயாக" என்றான்.
கருணைநிறைந்த அந்தக் கிளியானவன், "இந்த மரம் மீண்டும் உயிர் பெறட்டும்" என்ற இந்த வரத்தையே அவனிடம் வேண்டினான்.(28) கிளியானவன், அம்மரத்திடம் கொண்ட பெரும்பற்றையும், அவனது உயர்ந்த பண்பையும் அறிந்து பெரும் நிறைவடைந்த இந்திரன், அம்மரத்தின் மீது விரைவில் அமுதத்தைத் தெளிக்கச் செய்தான்.(29) அப்போது அம்மரம் அந்தக் கிளியின் தவங்களின் மூலம் மீண்டும் நிறைந்து, மிக நேர்த்தியான மகத்தான நிலையை அடைந்தது,(30) ஓ! பெரும் மன்னா, அந்தக் கிளியானவனும் தன் வாழ்வின் நெருக்கத்தில் {முடிவில்}, அந்தக் கருணைச்செயலில் விளைந்த அறத்தின் மூலம் சக்ரனின் தோழமையை அடைந்தான்.(31) ஓ! மனிதர்களின் தலைவா, இவ்வாறு கிளியிடம் தோழமை கொண்ட மரத்தைப் போலவே மக்களும் பக்திமான்களின் சேர்க்கை மற்றும் தோழமையின் மூலம் தங்கள் விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைவார்கள்" என்றார் {பீஷ்மர்}.(32)
அநுசாஸனபர்வம் பகுதி – 05ல் சுலோகங்கள் : 32
ஆங்கிலத்தில் | In English |