The boons acquired by Matanga! | Anusasana-Parva-Section-29 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 29)
பதிவின் சுருக்கம் : பிராமண நிலை அடைய தவம் செய்த மதங்கன்; இந்திரனால் தடுக்கப்பட்டது; மீண்டும் தவம் செய்தது; பிராமண நிலையன்றி வேறு வரங்களைக் கேட்டுப் பெற்ற மதங்கன்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு இந்திரனால் சொல்லப்பட்ட மதங்கன், அவன் சொன்னதைக் கேட்க மறுத்தான். மறுபுறம், ஒழுங்கமைக்கப்பட்ட நோன்புகள் மற்றும் தூய ஆன்மாவுடன் கூடிய அவன், ஓராயிரம் வருடங்கள் ஒற்றைக்காலில் நின்று கொண்டு, தன் ஆன்மாவை ஆழமான தியான யோகத்தில் ஈடுபடுத்தி, கடுந்தவங்களைப் பயின்று வந்தான்.(1) ஓராயிரம் வருடங்கள் கடந்ததும், மீண்டும் அவனைக் காண சக்ரன் அங்கே வந்தான். உண்மையில், பலனையும், விருத்திரனையும் கொன்றவனான அவன் {இந்திரன்} அதே சொற்களையே மீண்டும் அவனிடம் சொன்னான்.(2)
மதங்கன் {இந்திரனிடம்}, "நான் பிரம்மச்சரிய நோன்பை நோற்று, தியானத்தில் குவிந்த ஆன்மாவுடன் ஒற்றைக் காலில் நின்று ஓராயிரம் ஆண்டுகளைக் கடத்தியிருக்கிறேன். பிராமண நிலையை அடைவதில் நான் இன்னும் ஏன் வெல்லாமல் இருக்கிறேன்?" என்று கேட்டான்.(3)
சக்ரன், "சண்டாளனாகப் பிறந்தவனால் எந்த வழிமுறைகளின் மூலமும் பிராமண நிலையை அடைய முடியாது. எனவே, நீ வேறேதேனும் வரங்களைக் கேட்பாயாக. உன் கடும் உழைப்புக் கனியற்றதாகிவிடக்கூடாது" என்று சொன்னான்.(4)
தேவர்களின் தலைவனால் இவ்வாறு சொல்லப்பட்ட மதங்கன் துயரால் நிறைந்தான். அவன் கயைக்குச் சென்று ஒற்றைக் காலில் நின்றபடியே நூறாண்டு காலத்தைக் கழித்தான்.(5) பொறுத்துக் கொள்ள மிகக் கடினமான அத்தகைய யோகத்தை நோற்றதன் விளைவால் தன் நாடி நரம்புகள் புடைத்து, கண்ணுக்குத் தெரியும் வகையில் மிகவும் மெலிந்து போனான். வெறும் தோலும் எலும்புகளும் கொண்டவனாக அவன் குறைந்து போனான். உண்மையில், அந்த அற ஆன்மா கொண்ட மனிதன் {மதங்கன்}, கயையில் கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்த போது, மிகவும் சோர்வடைந்து கீழே தரையில் விழுந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். வரங்களை அளிப்பவனும், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையை அளிப்பதில் ஈடுபடும் தலைவனுமான வாசவன் {இந்திரன்}, அவன் விழுவதைக் கண்டு, விரைவாக அந்த இடத்திற்கு வந்து உடனே அவனைத் தாங்கிக் கொண்டான்[1].(7)
[1] கும்பகோணம் பதிப்பில், "மதங்கன் மிகத் துயரமுற்றவனாகி, கயைக்குச் சென்று, நூறு வர்ஷகாலம் காற்கட்டைவிரலால் நின்றான். யாருக்கும் செய்ய முடியாத தவத்தை மேற்கொண்ட இளைத்து உடம்பெல்லாம் நரம்புகளோடித் தோலும் எலும்புமாயிருந்து தர்மத்திலேயே மனம் வைத்து அவன் தவம் புரிந்தானென்று நமக்குக் கேள்வி. வரன் கொடுக்கவல்லவனும், கொடுப்பவனும், எல்லாப்ராணிகளுக்கும் நன்மையைக் கருதுகிறவனுமான தேவந்த்ரன், தவம் செய்யும் மதங்கன் முன் வந்து அவன் கையைப் பிடித்து" என்றிருக்கிறது. மதங்கள் சோர்வடைந்து விழுந்தான் என்ற குறிப்புக் கும்பகோணம் பதிப்பில் இல்லை. பிபேக் திப்ராயின் பதிப்பில், "இதைக் கேட்ட மதங்கன் பெருந்துயரில் மூழ்கினான். அவன் கயைக்குச் சென்று நூறு வருட காலம் கட்டை விரலில் நின்றான். பல்வேறு வகையான கடுமையான யோகங்களைச் செய்தான். நரம்புகள் மட்டுமே தெரிபவனாக அவன் உடல் மெலிந்து போனான். தர்மத்தையே தன் ஆன்மாவாகக் கொண்ட அவன், வெறும் எலும்புகளாகக் குறைந்தவனாகி கீழே விழுந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அவன் விழுந்து கொண்டிருந்தபோது, வாசவன் வந்து அவனைப் பிடித்துக் கொண்டான். வரங்களை அளிக்கும் அந்தத் தலைவன் உயிரினங்கள் அனைத்தின் நன்மையில் ஈடுபடுபவனல்லவா?" என்றிருக்கிறது. ஆகப் பிபேக் திப்ராயின் பதிப்பிலும் மதங்கன் சோர்வடைந்து விழுந்தான் என்றிருக்கிறது.
சக்ரன், "ஓ! மதங்கா, நீ நாடும் பிராமண நிலை உனக்குத் தகுந்ததாகத் தெரியவில்லை. அந்நிலை உன்னால் அடையப்பட முடியாததாக இருக்கிறது. உண்மையில் உன் வழக்கில் அது பல ஆபத்துகள் சூழப்பட்டதாக இருக்கிறது.(8) ஒரு மனிதன் ஒரு பிராமணரை வழிபடுவதால் மகிழ்ச்சியை அடைகிறான்; அவ்வாறு வழிபடுவதைத் தவிர்க்கும்போது அவன் துயரத்தையும் இடர்களையும் அடைகிறான். அனைத்து உயிரினங்களைப் பொறுத்தவரையில், அவை வெகுமதியாகக் கருதுவதை, அல்லது ஆசைப்படுவதைக் கொடுப்பவனாகவும், அவர்கள் ஏற்கனவே கொண்டுள்ளதைக் காப்பவனாகவும் பிராமணன் இருக்கிறான்.(9) பிராமணர்கள் மூலமே பித்ருக்களும், தேவர்களும் நிறைவை அடைகின்றனர். ஓ! மதங்கா, படைக்கப்பட்டவற்றுள் முதன்மையானவனாகப் பிராமணன் சொல்லப்படுகிறான். ஆசைப்படும் பொருட்கள் யாவையும், ஆசைப்படப்பட்ட அதே வகையிலேயே பிராமணன் அருள்கிறான்[2].(10) எண்ணற்ற வகையில் இருக்கும் படைப்புகளில் திரிந்து, மீண்டும் மீண்டும் மறுபிறவிகளில் சுழலும் ஒருவன், அடுத்தடுத்த பிறவிகளிலேயே பிராமண நிலையை அடைவதில் வெல்கிறான்.(11) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் உண்மையில் அந்நிலையை அடைய முடியாது. நீ வேறேதேனும் வரங்களைக் கேட்பாயாக. நீ வேண்டிக் கேட்கும் இந்தக் குறிப்பிட்ட வரமானது, உனக்குக் கொடுக்கப்பட இயலாததாக இருக்கிறது" என்றான் {இந்திரன்}.(12)
[2] கும்பகோணம் பதிப்பில், "எல்லாப்ராணிகளிலும் ப்ராம்மணன் உயர்ந்தவனென்று சொல்லப்படுகிறான். ப்ராம்மணன் எதைஎதை எப்படி எப்படி நினைக்கிறானோ அதைஅதை அப்படிஅப்படியே செயக்கூடியவன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அனைத்து உயிரினங்களிலும் பிராமணன் உயர்ந்தவனாக இருக்கிறான். நீ கேட்பதைக் கொடுக்கவல்லவர்கள் பிராமணர்களே ஆவர்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இதில் உள்ள உட்குறிப்புத் தேற்றம் செய்யப்பட வேண்டும். மதங்கன் ஒரு பிராமணனாக இருந்தால், அவன் வேறு யாரிடம் இருந்தும் வரங்கள் கேட்க வேண்டியதில்ல. மதங்கன் வேறு யாரிடமாவது வரம் கேட்கலாம் என்றால், அஃது ஒரு பிராமணனாகவே இருக்க முடியும்" என்றிருக்கிறது.
மதங்கன் {இந்திரனிடம்}, "ஓ! சக்ரா, ஏற்கனவே துன்பத்தில் இருக்கும் என்னை, (இத்தகைய சொற்களால்) நீ மேலும் துன்புறுத்துகிறாயா? இந்நடத்தையால், ஏற்கனவே இறந்துவிட்டவனை நீ அடித்துக் கொண்டிருக்கிறாய். பிராமண நிலையை அடைந்தும் அதைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறிய (என்னைப் போன்ற ஒருவனுக்குக் கருணைக் காட்டாமல் இருக்கும்) உனக்காக நான் பரிதாபப்படுகிறேன்[3].(13) ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, மூன்று வகையினர் எவராலும் பிராமண நிலையை உண்மையில் அடைய முடியாது என்றால், ஐயோ, அந்த உயர்ந்த நிலையை (இயற்கையான வழிமுறைகளின் மூலம்) அடைவதில் வென்றவர்கள் அதைக் கடைப்பிடிக்கவில்லையே (பிராமணர்கள் எந்தப் பாவத்தைச் செய்யவில்லை)?(14) அடைதற்கரிதான செல்வத்தைப் போன்ற பிராமண நிலையை அடைந்தும், (தேவையான கடமைகளைச் செய்வதன் மூலம்) அதைத் தக்க வைத்துக் கொள்ள முனையாதவர்கள் இம்மையில் இழிந்த ஈனர்களாகக் கருதப்பட வேண்டும்.(15) பிராமண நிலையை அடைவது மிகக்கடினமானது, அடைந்த பிறகு அதைத் தக்க வைத்துக் கொள்வதும் கடுமையானது என்பதில் ஐயமில்லை. அஃது அனைத்து வகைத் துன்பத்தையும் போக்கவல்லதாகும். ஐயோ, மனிதர்கள் அஃதை அடைந்தும் (அதற்குண்டான அறத்தையும் பிற கடமைகளையும் செய்வதன் மூலம்) அதைத் தக்க வைத்துக் கொள்ள எப்போதும் முனைவதில்லையே.(16)
[3] கும்பகோணம் பதிப்பில், "நீயும் பிராமணத்தன்மையையடைந்து மேலாக விரும்பாமலிருப்பதற்காக, உன்னைப் பற்றியே நான் துயரப்படுகிறேன்" என்றிருக்கிறது.
அத்தகைய மனிதர்களும் பிராமணர்களாகக் கருதப்படும்போது, தன்னில் நிறைவடைந்தவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்திற்கும் மேம்பட்டவனும், உலகப் பொருட்கள் அனைத்தில் இருந்தும் தொடர்பறுந்தவனும், அனைத்து உயிரினிங்களிடமும் கருணை என்ற கடமையை நோற்பவனும், தற்கட்டுப்பாடு எனும் ஒழுக்கத்துடன் கூடியவனுமான நான் ஏன் அந்த நிலைக்குத் தகுந்தவனாகக் கருதப்படவில்லை?(17) ஓ! புரந்தரா, நான் நடத்தையில் ஒழுக்கம் கொண்டவனாக இருப்பினும், என் தாயின் குற்றத்தால் இந்த நிலைக்குக் குறைக்கப்பட்டிருக்கிறேனே, எவ்வளவு கெடுபேறு கொண்டவன் நான்?(18) ஓ! தலைவா, அடைய வேண்டிய நோக்கம் என இதயத்தில் நிலைநிறுத்தி, தொடர்ந்து இவ்வளவு முயற்சிகளைச் செய்த போதிலும் என்னால் அஃதை அடையமுடியவில்லை என்றால், விதியைத் தவிர்க்க முடியாது, அல்லது தனிப்பட்ட முயற்சிகளால் வெல்ல முடியாது என்பதில் ஐயமில்லை.(19) ஓ! அறவோனே, நிலை இவ்வாறிருக்கையில், உண்மையில் நான் உன் அருளுக்குத் தகுந்தவன் என்றால், அல்லது சிறு தகுதியையேனும் கொண்டிருந்தால் வேறு வரங்களை அளிப்பதே உனக்குத் தகும்" என்றான் {மதங்கன்}".(20)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பலனையும், விருத்திரனையும் கொன்றவன் {இந்திரன்}, அவனிடம் {மதங்கனிடம்}, "வேண்டும் வரத்தைச் சொல்வாயாக" என்றான். இவ்வாறு பெரும் இந்திரனால் தூண்டப்பட்ட மதங்கன் பின்வரும் சொற்களைச் சொன்னான்.(21)
மதங்கன், "விரும்பிய வடிவை ஏற்கும் சக்தியுடன், வானத்தின் ஊடாகப் பயணிக்கவும், என் இதயத்தில் நான் நிலைநிறுத்தும் எந்த இன்பத்தை அனுபவிக்கவும் கூடிய வல்லமை எனக்கு வேண்டும். பிராமணர்கள், மற்றும் க்ஷத்திரியர்களின் விருப்பத்துடன் கூடிய துதிகள் எனக்கு வேண்டும்.(22) ஓ! தேவா, நான் உனக்குத் தலை வணங்குகிறேன். ஓ! புரந்தரா, இவ்வுலகில் என் புகழை எப்போதும் வாழச் செய்யவும் வேண்டும்" என்றான்.(23)
சக்ரன் {மதங்கனிடம்}, "ஒரு குறிப்பிட்ட மந்திரத்தின் தேவனாக {சந்தோதேவனாகக்} கொண்டாடப்பட்டு, அனைத்துப் பெண்களாலும் நீ வழிபடப்படுவாய். ஓ! மகனே, உன் புகழ் மூவுலகங்களிலும் ஒப்பற்றதாக இருக்கும்" என்றான்[4].(24) அவனுக்கு இவ்வரங்களை அளித்த வாசவன் அங்கேயே, அப்போதே மறைந்து போனான். மதங்கனும் தன் உயிர் மூச்சைக் கைவிட்டு உயர்ந்த இடத்தை அடைந்தான்.(25) ஓ! பாரதா, பிராமண நிலை எவ்வளவு உயர்ந்தது என்பதை நீ இவ்வாறு காணலாம். பெரும் இந்திரனால் சொல்லப்பட்டதைப் போல அந்த நிலையானது (இயற்கையான பிறப்பு வழியாலன்றி) இம்மையில் அடையக்கூடியதல்ல" என்றார் {பீஷ்மர்}[5].(26)
[4] கும்பகோணம் பதிப்பில், "நீ கேட்டது கேட்டபடியே உடனே நடக்கும். உலகத்திலுள்ள ஸ்த்ரீகளனைவரும் செல்வத்தைக் குறித்துச் செய்யும் கர்மங்களில் உன்னையே பூஜிக்கப் போகின்றனர். சந்தோதேவன் என்று க்யாதிபெற்று ஸ்த்ரீகளால் பூஜிக்கப்படத்தக்கவனாவாய். புத்ரனே, உனது கீர்த்தியும் ஒப்பற்றதாக மூவுலகங்களிலும் பரவும்" என்றிருக்கிறது.[5] இராமாயண ஆரண்யகாண்டத்தில் ஒரு மதங்கர் சொல்லப்படுகிறார். வாலிக்குச் சாபம் கொடுத்தவரும், சபரியின் குருவுமாக இருந்தவர் அவர். மஹாபாரதச் சாந்திபர்வம் பகுதி 297ல் ஒரு மதங்கர் சொல்லப்படுகிறார். அவர் இங்கே இந்த அநுசாஸன பர்வப் பகுதியில் குறிப்பிடப்படும் மதங்கராகவே இருக்க வேண்டும். ஆனால் அங்கே அவர் தவச் சக்தியின் மூலம் முனிவர் என்ற நிலையை அடைந்தவர்கள் பட்டியலில் அவர் வருகிறார். சபா பர்வம் பகுதி 8ல் யம சபையில் இருந்த முனிவர்களின் பட்டியலில் ஒரு மதங்கர் இருக்கிறார். புகழ்பெற்ற சமணக் குகையான எல்லோராவில் செழிப்பின் தேவனாக மதங்கன் என்ற பெயரில் யக்ஷன் ஒருவன் சித்தரிக்கப்படுகிறான். அவன் அருகிலேயே சித்தைகை யக்ஷினியும் இருக்கிறாள். இப்பதிவின் தொடக்கத்தில் இருப்பது எல்லோராவில் உள்ள படம் தான். ஒருவேளை இவர்கள் அனைவரும் ஒருவராகவே இருக்கவும் கூடும்.
அநுசாஸனபர்வம் பகுதி – 29ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |