Vyasa consoled Yudhishthira! | Aswamedha-Parva-Section-02 | Mahabharata In Tamil
(அஸ்வமேதிக பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைத் தேற்றிய கிருஷ்ணன்; காட்டுக்குச் செல்லக் கிருஷ்ணனிடம் அனுமதி கேட்ட யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனை ஆற்றுப்படுத்திய வியாசர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "நுண்ணறிவுமிக்கவனான மன்னன் திருதராஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், புத்திமானான யுதிஷ்டிரன் அமைதியடைந்தான். அப்போது கேசவன் (கிருஷ்ணன்) அவனைத் தூண்டும் வகையில்,(1) "இறந்து போன மூதாதையருக்காக ஒருவன் பெருந்துயரத்தில் ஈடுபட்டால், அவன் அவர்களைத் துயருறவே செய்கிறான்.(2) (எனவே, துயரத்தை நீக்கி) புரோகிதர்களுக்குத் தகுந்த கொடைகளுடன் கூடிய வேள்விகள் பலவற்றை (இப்போது) செய்வீராக; சோம மதுவால் {ஸோமரஸத்தால்} தேவர்களையும், உரிய உணவு மற்றும் பானத்தால் உமது மூதாதையரின் ஆத்மாக்களையும் நிறைவடையச் செய்வீராக.(3) உமது விருந்தினருக்கு இறைச்சியையும், பானத்தையும், இல்லாதவர்களுக்கு {ஏழைகளுக்கு}, அவர்கள் விரும்பும் கொடைகளையும் கொடுத்து நிறைவடையச் செய்வீராக. உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட ஒருவன் இவ்வாறு தன்னை அமைத்துக் கொள்ளக்கூடாது.(4)
எதை அறிய வேண்டுமோ அதை நீர் அறிந்திருக்கிறீர்; எதைச் செய்ய வேண்டுமோ, அதுவும் செய்யப்பட்டுள்ளது. பாகீரதியின் {கங்கையின்) மகனான பீஷ்மர், கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, நாரதர் மற்றும் விதுரர் ஆகியோரால் சொல்லப்பட்ட க்ஷத்திரியக் கடமைகளை {ராஜதர்மங்களை} நீர் கேட்டிருக்கிறீர்.(5) எனவே, மூடர்களின் பாதையில் நீர் நடப்பது தகாது; உமது மூதாதையரின் பாதையைப் பின்பற்றி (பேரரசுக்குரிய) சுமையைச் சுமப்பீராக {அரசுப் பொறுப்பை ஏற்றுக் கொள்வீராக}.(6) ஒரு க்ஷத்திரியன் நிச்சயம் தன் (சொந்த) புகழாலேயே சொர்க்கத்தை அடைய வேண்டும். கொல்லப்பட்ட வீரர்கள் ஒருவரும் (தெய்வீகப் பகுதிகளில் இருந்து) ஒருபோதும் புறங்காட்டி ஓடமாட்டார்கள்.(7) ஓ! வலிமைமிக்க அரசே, உமது துயரைக் கைவிடுவீராக. உண்மையில் நடக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டதே நடந்திருக்கிறது. இப்போரில் கொல்லப்பட்டவர்களை ஒருக்காலும் உம்மால் காண முடியாது" என்றான் {கிருஷ்ணன்}.(8)
பெரும் ஊக்கம் கொண்ட கோவிந்தன் {கிருஷ்ணன்}, அறவோரின் இளவரசனான யுதிஷ்டிரனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு நிறுத்தினான்; யுதிஷ்டிரன் அவனுக்கு இவ்வாறு பதிலளித்தான்.(9) அவன் {யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம்}, "ஓ! கோவிந்தா, உனக்கு என்னிடத்தில் உள்ள அன்பை நான் முழுமையாக அறிவேன். நீ எப்போதும் என்னிடம் அன்புடனும், நட்புடனும் இருக்கிறாய்.(10) ஓ! கதாசக்கரதாரியே, ஓ! யது குலக் கொழுந்தே, ஓ! மகிமைமிக்கவனே, காட்டில் உள்ள தவசிகளின் ஆசிரமங்களுக்குச் செல்ல என்னை நீ அனுமதித்தால், நான் பெரிதும் விரும்பும் காரியத்தைச் செய்தவனாவாய்.(11) என் பாட்டன் {பீஷ்மர்}, மனிதர்களில் முதன்மையானவனும், போர்க்களத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவனுமான கர்ணன் ஆகியோரைக் கொன்றுவிட்டு என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை.(12) ஓ! ஜனார்த்தனா, என் மனம் தூய்மையடைந்து, இந்தக் கொடும்பாவத்தில் இருந்து நான் விடுபடும் வகையில் எனக்கு ஆணையிடுவாயாக" என்றான் {யுதிஷ்டிரன்}.(13)
பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது, பெருஞ்சக்தி கொண்டவரும், வாழ்வின் கடமைகளை அறிந்தவருமான வியாசர், அவனை அமைதிப்படுத்தும் வகையில் இந்தச் சிறந்த சொற்களைப் பேசினார்.(14) அவர் {வியாசர்}, "என் குழந்தாய், உன் மனம் இன்னும் அமைதியடையவில்லை; எனவே, குழந்தைத்தனமான உணர்வில் நீ மீண்டும் மயக்கமடைகிறாய். ஓ! குழந்தாய், மீண்டும் மீண்டும் நாங்கள் ஏன் எங்கள் பேச்சைக் காற்றில் சிதறடிக்க வேண்டும்?(15) போரிட்டு வாழும் க்ஷத்திரியர்களின் கடமைகளை நீ அறிவாய். தன் பங்கைச் சரியாகச் செய்த மன்னன் கவலையில் மூழ்கக்கூடாது.(16) விடுதலை {முக்திக்} கோட்பாட்டை {மோக்ஷதர்மத்தை} நம்பிக்கையுடன் கேட்டிருக்கிறாய்; ஆசையின் மூலம் எழும் நம்பிக்கையின்மைகளை {அச்ச உணர்வுகளை} உன்னிடம் இருந்து நான் மீண்டும் மீண்டும் களைந்திருக்கிறேன்.(17) ஆனால், பிறழ்புத்தி கொண்டவனான {புத்தி கெட்டவனான} நீ, நான் வெளிப்படுத்தியவற்றைக் கவனிக்காமல் அவற்றை நிச்சயம் முற்றாக மறந்திருக்கிறாய். இவ்வாறு இருக்க வேண்டாம். இத்தகைய அறியாமை உனக்குத் தகாது.(18) ஓ! பாவமற்றவனே, அனைத்து வகை பரிகாரங்களையும் நீ அறிவாய்; மேலும், அரச அறங்கள், மற்றும் கொடைப் பயன்கள் {ராஜதர்மங்கள் மற்றும் தான தர்மங்கள்} அனைத்தையும் நீ கேட்டிருக்கிறாய். (19) ஓ! பாரதா, அறங்கள் அனைத்தையும் அறிந்தவனாகவும், ஆகமங்கள் அனைத்திலும் தேர்ந்தவனாகவும் உள்ள நீ, மீண்டும் மீண்டும் அறியாமையின் மூலம் ஏன் (துயரத்தில்) மதி மயங்குகிறாய்?" என்றார் {வியாசர்}.(20)
அஸ்வமேதபர்வம் பகுதி – 02ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |