Dhritarashtra consoled Yudhishthira! | Aswamedha-Parva-Section-01 | Mahabharata In Tamil
(அஸ்வமேதிக பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : கங்கைக் கரையில் பீஷ்மருக்குத் தர்ப்பணம் செலுத்தப்பட்டது; உறவுகளின் அழிவினால் துயரடைந்த யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் சொன்ன திருதராஷ்டிரன்; விதுரனின் சொற்களைப் புறக்கணித்ததே துன்பத்துக்குக் காரணமாக அமைந்தது எனச் சொன்ன திருதராஷ்டிரன்...
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னன் திருதராஷ்டிரன் (பீஷ்மரின் ஆத்மாவுக்கு) நீர்க்காணிக்கைகளை {தர்ப்பணங்களைச்} செலுத்திய பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், புலன்கள் தடுமாறும் நிலையில் கண்களில் நீர் ததும்ப இருந்தவனுமான யுதிஷ்டிரன், முன்னவனை {திருதராஷ்டிரனைத்} தன் முன்னே விட்டு, (ஆற்றின்) கரையில் ஏறி, வேடனால் துளைக்கப்பட்ட ஒரு யானையைப் போலக் கங்கைக் கரையின் கீழே விழுந்தான்.(1,2) அப்போது கிருஷ்ணனால் தூண்டப்பட்ட பீமன், மூழ்கிக் {விழுந்து} கொண்டிருந்த அவனைத் தாங்கி {ஏந்திக்} கொண்டான். பகைக்கூட்டங்களைக் கலங்கடிப்பவனான கிருஷ்ணன், "இவ்வாறு கூடாது" என்று சொன்னான்[1].(3) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தர்மனின் மகனான யுதிஷ்டிரன், கலக்கமடைந்து தரையில் கிடப்பதையும், மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பதையும் பாண்டவர்கள் கண்டார்கள்.(4) மன்னன் மனச்சோர்வுற்றவனாகவும், பலமற்றவனாகவும் இருப்பதைக் கண்ட பாண்டவர்கள், துயரத்தில் மூழ்கியவர்களாக அவனைச் சூழ்ந்து கீழே அமர்ந்தனர்.(5)
[1] கும்பகோணம் பதிப்பில், "பகைவரின் படையை அழிப்பவரான கோவிந்தரும், அவரைப் பார்த்து, "இவ்விதம் (துயரப்பட) வேண்டாம்" என்று சொன்னார்" என்றிருக்கிறது.
உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவனும், ஞானப்பார்வை கொண்டவனுமான மன்னன் திருதராஷ்டிரன், தன் மகன்களுக்காகப் பெரிதும் துயரில் பீடிக்கப்பட்டவனாக அந்த ஏகாதிபதியிடம் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குருக்களில் புலியே, எழுவாயாக.(6) உன் கடமைகளைக் கவனிப்பாயாக. ஓ! குந்தியின் மகனே, க்ஷத்திரிய நடைமுறையின் படியே நீ இந்தப் பூமியை வென்றாய்.(7) ஓ! மனிதர்களின் தலைவா, இனி நீ உன் தம்பிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அவளை {பூமியை} அனுபவிப்பாயாக. ஓ! அறவோரில் முதன்மையானவனே, நீ எதற்காகத் துயரப்பட வேண்டும் என்பதை {என்பதற்கான காரணத்தை} நான் காணவில்லை. ஓ! பூமியின் தலைவா, கனவில் பெற்ற வளங்களைப் போல நூறு மகன்களை இழந்த காந்தாரியும், நானும் தான் வருந்த வேண்டியவர்கள்.(8) பிறழுணர்வுகளைக் கொண்ட நான், நம் நலத்தை வேண்டிய உயர் ஆன்மாவான விதுரனின் பொருள் பொதிந்த சொற்களைக் கேட்காமல் (இப்போது) வருந்திக் கொண்டிருக்கிறேன்.(9)
அறம் சார்ந்தவனும், தெய்வீக உள்நோக்குப்பார்வை {ஆன்ம அறிவைக்} கொண்டவனுமான விதுரன், "துரியோதனனின் குற்றத்தால் உமது குலம் அழியப் போகிறது.(10) ஓ! மன்னா, உமது குலத்தின் நன்மையை நீர் விரும்பினால் என் ஆலோசனையின்படி செயல்படுவீராக. தீய மனம் கொண்ட ஏகாதிபதியான இந்தச் சுயோதனனைக் கைவிடுவீராக,(11) எவ்வகையிலும் அவனைக் காண கர்ணனையோ, சகுனியையோ அனுமதியாதீர். ஆரவாரமில்லாமல், அவர்களின் சூதாட்டத்தைத் தடுத்து, ஒடுக்கி,(12) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பட்டஞ்சூட்டுவீராக. புலன்களைக் கட்டுப்படுத்தியவனான அவனே நீதியுடன் பூமியை ஆள்வான்.(13) ஓ! ஏகாதிபதி, குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரனை நீர் ஏற்கவில்லையென்றால், ஒரு வேள்வியைச் செய்து நாட்டின் பொறுப்பை நீரே ஏற்றுக் கொண்டு,(14) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, ஓ! குலத்தை முன்னேற்றுபவரே, அனைத்து உயிரினங்களையும் சமமாகக் கருதி, உமது உறவுகளை உமது அருளில் வாழச் செய்வீராக" என்றான் {விதுரன்}.(15)
ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, தொலைநோக்குப் பார்வை கொண்ட விதுரன் இதைச் சொன்ன போதும், மூடனான நான் தீயவனான துரியோதனனைப் பின்தொடர்ந்தேன்.(16) அமைதியான அவனது {விதுரனது} இனிய பேச்சைக் காது கொடுத்துக் கேளாததன் விளைவாகவே நான் இந்தப் பெரும் துயரத்தை அடைந்து, துன்பக் கடலில் மூழ்கியிருக்கிறேன்.(17) ஓ! மன்னா, முதியவர்களான உன் தந்தையும் {நானும்}, தாயும் {காந்தாரியும்} துயரில் மூழ்கியிருப்பதைக் காண்பாயாக. ஓ! மனிதர்களின் தலைவா, நீ துயரமடைவதற்கான எந்நிகழ்வையும் நான் காணவில்லை" என்றான் {திருதராஷ்டிரன்}".(18)
அஸ்வமேதபர்வம் பகுதி – 01ல் உள்ள சுலோகங்கள் : 18
ஆங்கிலத்தில் | In English |