Do thou Aswamedha Sacrifice! | Aswamedha-Parva-Section-03 | Mahabharata In Tamil
(அஸ்வமேதிக பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் குதிரை வேள்வியைச் செய்யச் சொன்ன வியாசர்; அதற்குப் போதிய பொருளின்மையைச் சுட்டிக்காட்டிய யுதிஷ்டிரன்; மருத்தனின் வேள்வியில் எஞ்சிய பொருளைக் கொண்டு வரச் சொன்ன வியாசர்...
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, உனக்கு ஞானம் போதவில்லை என நான் கருதுகிறேன். ஒருவனும் தன் சொந்த ஒழுக்கத்தால் எந்தச் செயலையும் செய்வதில்லை.(1) ஓ! கௌரவமளிப்பவனே, தெய்வமே நல்ல, அல்லது தீய செயல்களில் அவனை ஈடுபடுத்துகிறது. இதில் வருந்துவதற்கு எங்கே இடமிருக்கிறது?(2) இழிசெயல்களைச் செய்துவிட்டதாக நீயே கருதிக் கொள்கிறாய். எனவே, ஓ! பாரதா, பாவத்தைக் களையும் வழியைக் கேட்பாயாக.(3)
பாவமிழைப்பவர்கள், ஓ! யுதிஷ்டிரா, தவம், வேள்வி மற்றும் கொடைகளின் மூலம் தங்களை அவற்றிலிருந்து எப்போதும் விடுவித்துக் கொள்ளலாம்.(4) ஓ! மன்னா, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பாவம் நிறைந்த மக்கள், வேள்வி, தவங்கள் மற்றும் ஈகையினால் தூய்மையடைகின்றனர்.(5) உயர் ஆன்ம தேவர்களும், அசுரர்களும் அறத்தகுதியை ஈட்டுவதற்காக வேள்விகளைச் செய்கின்றனர்; எனவே, வேள்விகள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவையாகின்றன.(6) உயர் ஆன்ம தேவர்கள் வேள்விகளின் மூலமே இவ்வளவு அற்புதமிக்கப் பலசாலிகளாக வளர்ந்தனர்; சடங்குகளைச் செய்தே அவர்கள் தானவர்களை வெற்றி கொண்டார்கள்.(7)
ஓ! யுதிஷ்டிரா, ராஜசூயம், குதிரை வேள்வி ஆகியவற்றையும், சர்வமேதம் மற்றும் நரமேதம் ஆகியவற்றையும் செய்வதற்கு நீ ஆயத்தமாவாயாக[1].(8) தசரதனின் மைந்தனான ராமனைப் போன்றோ, துஷ்மந்தன் {துஷ்யந்தன்} மற்றும் சகுந்தலையின் மைந்தனும், பூமியின் தலைவனும், அதிகப் பலம் வாய்ந்தவனும், உன் மூதாதையுமான மன்னன் பரதனைப் போன்றோ, விதிக்கு இணக்கமான வகையில் தக்ஷிணைகளுடன் கூடிய குதிரை வேள்வியை {அஸ்வமேத யாகத்தை} நீ செய்வாயாக" என்றார் (9,10).
[1] "நரமேதம் என்பது மனித வேள்வியாகும். அந்தக் காலத்தில் மனிதர்களைப் பலி கொடுக்கும் வேள்வி நடைமுறை வழக்கில் இருந்தது என்பது இதன் மூலம் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "குதிரை வேள்வியானது இளவரசர்களைத் தூய்மையடையச் செய்யும் என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்டதாகும். ஆனால், நீர் கேட்கத்தகுந்த ஒரு கருத்தையும் நான் கொண்டுள்ளேன்.(11) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, பெரும் எண்ணிக்கையிலான இரத்த உறவினர்களைப் படுகொலை செய்து விட்டு சிறு அளவிலான கொடையை அளிப்பதற்குக் கூட நான் இயலாதவனாக இருக்கிறேன்; கொடுப்பதற்கு என்னிடம் செல்வமேதும் இல்லை.(12) துன்பத்தில் இருப்பவர்களும், பச்சையான {ஆறாத புதிய} காயம் கொண்டவர்களும், பரிதாப நிலையில் இருப்பவர்களும், மன்னர்களின் மகன்களுமான இந்தச் சிறுவர்களிடம் என்னால் செல்வத்தை வேண்ட முடியாது.(13) ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நானே பூமியை அளித்துவிட்டு, பெருஞ்சோகத்தில் இருக்கும்போது, ஒரு வேள்வியைச் செய்வதற்காக எவ்வாறு என்னால் கப்பம் விதிக்க முடியும்?(14)
ஓ! தவசிகளில் சிறந்தவரே, துரியோதனனின் குற்றத்தால் பூமியின் மன்னர்கள் அழிவை அடைந்தனர், {அதன் காரணமாக} நாங்களும் சிறுமைகளை அறுவடை செய்தோம்.(15) செல்வத்துக்காகத் துரியோதனன் பூமியைப் பாழாக்கினான்; தீய மனம் கொண்ட அந்தத் திருதராஷ்டிர மகனின் {துரியோதனனின்} கருவூலமும் வெறுமையாக உள்ளது.(16) (இவ்வேள்வியில்) பூமியே தக்ஷிணை; முதல் சந்தர்ப்பத்தில் பரிந்துரைக்கப்பட்ட விதி இதுவே ஆகும். இவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், கல்விமான்களால் இவ்விதி வழக்கமாகத் தலைகீழாகவே செய்யப்படுகிறது.(17) மேலும், ஓ! தவசியே, (இந்தச் செயல்முறைக்கு) மாற்றாக எதையும் கொள்ள நான் விரும்பவில்லை.[2] ஓ! மதிப்பிற்குரிய ஐயா, இக்காரியத்தில், உமது ஆலோசனையைச் சொல்லி எனக்கு உதவுவதே உமக்குத் தகும்" என்றான் {யுதிஷ்டிரன்}.(18)
[2] கும்பகோணம் பதிப்பில், "அஸ்வமேதமென்னும் இந்தப் பெரிய யாகத்தில் பூமியே தக்ஷிணையென்று கற்றறிந்தவர்கள் கண்டிருக்கின்றனர். மிகுந்து வைத்துக் கொள்வது விதிக்கு மாறாகும். தபோதனரே, (இதற்கு) பிரதியாக வேறு தக்ஷிணையைக் கொடுத்து யாகம் செய்ய எனக்கு இஷ்டமில்லை" என்றிருக்கிறது.
பிருதையின் மகனால் {குந்தியின் மகன் யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், சிறிது நேரம் சிந்தித்த கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, நீதிமானான அம்மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்},(19) "(இப்போது) வெறுமையாக இருக்கும் இந்தக் கருவூலம் நிறையும். ஓ! பிருதையின் மகனே, உயர் ஆன்ம மருத்தனின் வேள்வியில் பிராமணர்களால் விட்டுச் செல்லப்பட்ட தங்கம் இமவான் (இமய) மலையில் இருக்கிறது" என்றார்[3].(20,21)
[3] "மன்னன் மருத்தன் இமய மலையில் வைத்துப் பிராமணர்களுக்குப் பொன் கொடுத்து ஒரு வேள்வியைச் செய்தான். அவர்களால் மொத்த அளவையும் சுமந்து செல்ல முடியாததால், முடிந்த அளவுக்கு எடுத்துக் கொண்டு, எஞ்சியதை அங்கேயே விட்டுச் சென்றனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "மருத்தனால் செய்யப்பட்ட அவ்வேள்வியில் எவ்வாறு அவ்வளவு தங்கத்தைத் திரட்ட முடிந்தது? மேலும், ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, அவன் {மருத்தன்} எப்போது {எக்காலத்தில்} ஆட்சி செய்தான்?" என்று கேட்டான்.(22)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பிருதையின் மகனே, கரந்தம குலத்தில் உதித்த அம்மன்னனை {மருத்தனைக்} குறித்துக் கேட்க ஆவல் உனக்கிருந்தால், பெரும் பலம் மிக்கவனும், பெருஞ்செல்வம் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி எப்போது ஆண்டான் என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக" என்றார்.(23)
அஸ்வமேதபர்வம் பகுதி – 03ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |