Royal sage Marutta! | Aswamedha-Parva-Section-04 | Mahabharata In Tamil
(அஸ்வமேதிக பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : ஸம்வர்த்தர் மற்றும் மருத்தன் ஆகியோரின் வரலாற்றை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய வியாசர்; இமய மலையின் வடபுறத்தில் வேள்வி செய்யத் தொடங்கிய ராஜரிஷி மருத்தன்...
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஓ! அறம் சார்ந்தவரே, அரசமுனியான மருத்தனின் வரலாற்றை நான் கேட்க விரும்புகிறேன். ஓ! துவைபாயனரே {வியாசரே}, ஓ! பாவமற்றவரே, அதை நீர் எனக்குச் சொல்வீராக" என்றான்.(1)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குழந்தாய், கிருத யுகத்தில் மனு (பூமியின்) செங்கோல் தரித்த தலைவராக இருந்தார். அவரது மகன் பிரசாந்தி {பிரஜாதி} என்று அறியப்பட்டான்.(2) பிரசாந்திக்கு க்ஷுபன் {க்ஷுதன்} என்ற மகன் இருந்தான். தலைவனான மன்னன் இக்ஷ்வாகு, க்ஷுபனின் மகனே ஆவான்.(3) ஓ! மன்னா, அவனுடைய {இக்ஷ்வாகுவினுடைய} நூறு மகன்களும் முதன்மையான பக்தி கொண்டவர்களாக இருந்தனர். மன்னன் இக்ஷ்வாகுவினால் அவர்கள் அனைவரும் ஏகாதிபதிகளாக்கப்பட்டனர்.(4) அவர்களில் மூத்தவனான விம்சன், ஒரு முதன்மையான வில்லாளியானான். ஓ! பாரதா, மங்கலனான விவிம்சன், விம்சனின் மகனாவான்.(5)
ஓ! மன்னா, விவிம்சனுக்குப் பதினைந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும், பலமிக்க வில்லாளிகளாகவும், பிராமணர்களை மதிப்பவர்களாகவும், வாய்மை பேசுபவர்களாகவும்,(6) மென்மையானவர்களாகவும், எப்போதும் நல்லதையே பேசுபவர்களாகவும் இருந்தனர். அனைவருக்கும் மூத்தவனான கனீநேத்ரன், தன் தம்பிகள் அனைவரையும் ஒடுக்கினான்.(7) மொத்த நாட்டையும் கைப்பற்றி, தொல்லைகள் அனைத்தையும் களைந்த கனீநேத்ரனால் தன் மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை; மக்களும் அவனிடம் நிறைவடையவில்லை.(8) ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, அவனை அரியணையில் இருந்து இறக்கிய அவர்கள், அவனது மகனான ஸுவர்ச்சனுக்கு {ஸுவர்ச்சஸுக்கு} அரசுரிமையில் அதிகாரம் வழங்கி, (தங்கள் இதயங்களில்) மகிழ்ந்திருந்தனர்.(9)
தந்தையின் தீய நடத்தையையும், அவன் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதையும் கண்ட அவன் {ஸுவர்ச்சன்}, மக்களுக்கு நன்மை செய்வதில் எப்போதும் முனைப்புள்ளவனாகவும், பிரம்மத்தில் அர்ப்பணிப்புள்ளவனாகவும், வாய்மை பேசுபவனாகவும், புலன்கள் மற்றும் எண்ணங்களை அடக்கித் தூய்மை பயில்பவனாகவும் இருந்தான். தொடர்ந்த அறம் பயில்பவனான அந்த உயர் ஆன்மாவிடம் {ஸுவர்ச்சனிடம்} குடிமக்களும் நல்ல நிறைவுடன் இருந்தனர்.(10,11) அவன் {ஸுவர்ச்சன்} தொடர்ந்து அறச்செயல்கள் செய்து வந்ததால் அவனது கருவூலங்களும், வாகனங்களும் வெகுவாகக் குறைந்தன. அவனது கருவூலம் வெறுமையானதால், சிற்றரசு இளவரசர்கள் அவனைச் சூழ்ந்து தொல்லை கொடுக்கத் தொடங்கினர்.(12) கருவூலம், குதிரைகள் மற்றும் வாகனங்கள் எண்ணிக்கையில் குறைந்திருக்கும் வேளையில், பல பகைவர்களால் இவ்வாறு ஒடுக்கப்படும்போது, மன்னன் தன்னை ஆதரிப்பவர்களுடனும், தன் தலைநகரின் குடிமக்களுடனும் பெருந்தொல்லைக்கு ஆளானான்.(13) அவனது {ஸுவர்ச்சனது} சக்தி பெரிதும் குறைந்தாலும், அம்மன்னனின் சக்தி அறத்தில் நிறுவப்பட்டிருந்ததால் பகைவர்களால் அவனைக் கொல்ல இயலவில்லை.(14) அவன் தன் குடிமக்களுடன் சேர்ந்து பெருந்துன்பத்தின் எல்லையை அடைந்தபோது, அவன் தன் கையை (வாயினால்) ஊதினான், அதிலிருந்து படைகள் தோன்றின.(15) அவன் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் எல்லைகளில் வாழ்ந்தபடியே அந்த மன்னர்கள் அனைவரையும் வெற்றி கொண்டான். ஓ! மன்னா, இந்தச் சூழ்நிலையிலிருந்து அவன் கரந்தமன்[1] என்று {என்ற பெயரால்} கொண்டாடப்பட்டான்.(16)
[1] "கரந்தமன் என்றால் கையை {கரத்தை} ஊதியவன் என்று பொருள்" எனக் கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.
அவனது மகன், (முதலாம்) காரந்தமன் {அவிக்ஷித்}, திரேதா யுகத்தின் தொடக்கத்தில் இந்திரனுக்கு இணையான ஒளியைக் கண்டு, அருள் கொண்டவனாகவும், தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான்.(17) அந்நேரத்தில் அனைத்தும் மன்னர்களும் அவனது கட்டுப்பாட்டில் இருந்தனர்; அதே போல, அவன் தன் செல்வம் கொண்டு செய்த செயல்களாலும், தன்னுடைய ஆற்றலாலும் அவர்களுக்கு மத்தியில் பேரரசனானான்.(18) சுருக்கமாக {சொல்வதென்றால்}, அவிக்ஷித் என்ற பெயரைக் கொண்ட அந்த அறம் சார்ந்த மன்னன் {முதலாம் காரந்தமன்}, வீரத்தில் இந்திரனைப் போன்றவனாக இருந்தான்; மேலும் அவன் வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவனாகவும், தன் புலன்களை அடக்கியவனாகவும் இருந்தான்.(19) அவன், சக்தியில் சூரியனுக்கு ஒப்பானவனாகவும், பொறுமையில் பூமாதேவியைப் போன்றவனாகவும், புத்தியில் இந்திரனைப் போன்றவனாகவும், அமைதியில் இமவான் {இமய} மலையைப் போன்றவனாகவும் இருந்தான்.(20) கல்விமானும், திறன்மிக்கவருமான அங்கிரஸைப் புரோகிதராகக் கொண்டவனும், நூறு குதிரை வேள்விகளைச் செய்தவனுமான அந்த மன்னன் {அவிக்ஷித் / முதலாம் காரந்தமன்}, தன் செயல், எண்ணம், பேச்சு, தற்கட்டுப்பாடு மற்றும் பொறுமை ஆகியவற்றின் மூலம் தன் குடிமக்களின் இதயங்களை மகிழ்ச்சியடையச் செய்தான்.(21,22)
மன்னர்களின் தலைவனும், மருத்தன் என்ற பெயரைக் கொண்டவனுமான அவனுடைய மகன் நற்குணங்களில் தன் தந்தையை விஞ்சியவனாகவும், நீதிமானாகவும், பெரும் புகழைக் கொண்டவனாகவும் இருந்தான்; பத்தாயிரம் யானைகளின் வலிமையுடன் கூடிய அவன் இரண்டாவது விஷ்ணுவைப் போலவே இருந்தான்.(23) அந்த அறம் சார்ந்த ஏகாதிபதி, ஒரு வேள்வியைச் செய்ய விரும்பி, இமயத்தின் வடக்குப் பக்கத்தில் இருந்த மேரு மலைக்குச் சென்று பளபளக்கும் தங்கப் பாத்திரங்களை ஆயிரக்கணக்கில் உண்டாக்கச் செய்தான். அங்கே அந்த உயர்ந்த தங்க மலையில் அவன் {யாகத்திற்கான} சடங்குகளைச் செய்தான்.(24,25) பொற்கொல்லர்கள் {தட்டார்கள்}, எண்ணற்ற கலன்களையும் {குண்டங்களையும்}, பாத்திரங்களையும், சட்டிகளையும் {ஸ்தாலிகளையும்}, இருக்கைகளையும் செய்தனர்.(26) வேள்விச்சாலை இந்த இடத்தில் அருகிலேயே இருந்தது. பூமியின் அறம்சார்ந்த தலைவனான மன்னன் மருத்தன், பிற இளவரசர்களுடன் சேர்ந்து அங்கே ஒரு வேள்வியைச் செய்தான்" என்றார் {வியாசர்}.(27)
அஸ்வமேதபர்வம் பகுதி – 04ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |