Indra resisted Vrihaspati! | Aswamedha-Parva-Section-05 | Mahabharata In Tamil
(அஸ்வமேதிக பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : ஸம்வர்த்தர் மற்றும் பிருஹஸ்பதிக்கு இடையிலான சச்சரவு; மருத்தனைக் கண்டு பொறாமை அடைந்த இந்திரன்; மருத்தனின் புரோகிதரான பிருஹஸ்பதியை அவனுக்கு எதிராகத் தூண்டிய இந்திரன்...
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஓ! பேசுபவர்களில் சிறந்தவரே, அம்மன்னன் {மருத்தன்} எவ்வாறு அவ்வளவு பலசாலியானான்? மேலும், ஓ! இருபிறப்பாளரே {பிராமணரே}, அவன் எவ்வாறு அவ்வளவு தங்கத்தை அடைந்தான்?(1) மேலும், ஓ! மதிப்புக்குரிய ஐயா, அந்தச் செல்வம் அனைத்தும் இப்போது எங்கே இருக்கிறது? ஓ! தவசியே, அதை நாம் அடைவது எவ்வாறு?" என்று கேட்டான்.(2)
அதன்பேரில் வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "பிரஜாபதியான தக்ஷனின் எண்ணற்ற பிள்ளைகளான அசுரர்களும், தேவர்களும் (தங்களுக்குள் போரிடுவதற்காக) ஒருவரையொருவர் அறைகூவி அழைத்துக் கொண்டிருந்ததைப் போலவே, ஓ! மன்னா, அங்கிரஸின் மகன்களான பெருஞ்சக்தி கொண்ட பிருஹஸ்பதியும், அவருக்கு இணையான நோன்புகளைக் கொண்ட தவசியான ஸம்வர்த்தரும் ஒருவரையொருவர் அறைகூவி அழைத்தனர். பிருஹஸ்பதி மீண்டும் மீண்டும் ஸம்வர்த்தரைக் கவலை கொள்ளச் செய்யத் தொடங்கினார்.(4,5) ஓ! பாரதா, தொடர்ந்து தமது அண்ணனால் கவலைக்குள்ளான அவர், தமது வளங்களைக் கைவிட்டுத் திறந்த வெளியைத் தவிரத் தன் உடலை மறைக்க வேறொன்றும் இல்லாத நிலையில் காட்டுக்குச் சென்றார்[1].(6)
[1] "திகம்பரராகச் சென்றார், அதாவது முற்றிலும் நிர்வாண நிலையில் சென்றார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
(அந்நேரத்தில்) அசுரர்களை வென்று அவர்களை அழித்திருந்த வாசவன் {இந்திரன்}, தெய்வீக உலகங்களின் ஆட்சி உரிமையை அடைந்து, அங்கிரஸின் மூத்த மகனும், பிராமணர்களில் சிறந்தவருமான பிருஹஸ்பதியைத் தன் புரோஹிதராக நியமித்தான். முற்காலத்தில், வலிமை, ஆற்றல் மற்றும் குணம்மிக்க மனிதர்களில் ஒப்பற்றவனும்; சதக்ரதுவைப் போலப் பலமிக்கவனும், அற ஆன்மா கொண்டவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனுமான மன்னன் கரந்தமன் {ஸுவர்ச்சன்} தன் குடும்பப் புரோஹிதராக அங்கிரஸைக் கொண்டிருருந்தான்.(7-9) ஓ! மன்னா, அவன் தனது வாய் மூச்சின் மூலம் தியானத்தின் காரணமாக உண்டாக்கப்பட்ட வாகனங்களையும், போர்வீரர்களையும், பின்பற்றுவோர் பலரையும், விலைமதிப்புமிக்கச் சிறந்த கட்டில்களையும் கொண்டிருந்தான். மேலும் அவனது சொந்த நற்குணங்களின் மூலம் அந்த ஏகாதிபதி அனைத்து இளவரசர்களையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.(10,11)
மேலும், அவன் விரும்பிய காலம் வரை வாழ்ந்திருந்து தனது சட உடலுடனேயே அவன் சொர்க்கிற்கு உயர்ந்தான். பகைவர்களை வெல்பவனும், யயாதியைப் போன்ற அறவோனுமான அவனது மகன் அவிக்ஷித் {காரந்தமன்},(12) பூமி அனைத்தையும் தன் ஆட்சிப் பகுதிகளின் கீழ் கொண்டு வந்தான். தகுதியிலும், வலிமையில் அம்மன்னன் {அவிக்ஷித்} தன் தந்தைக்கு {ஸுவர்ச்சனுக்கு} ஒப்பானவனாக இருந்தான்.(13) அவன் {அவிக்ஷித்}, பெரும் சக்தி கொண்டவனும், வாசவனுக்கு ஒப்பானவனுமாக மருத்தன் என்ற பெயரில் ஒரு மகனைக் கொண்டிருந்தான். பெருங்கடல்களை ஆடையாக உடுத்தியிருக்கும் பூமாதேவி அவனிடம் ஈர்ப்பு கொண்டாள்.(14) அவன் எப்போதும் தேவர்களின் தலைவனை {இந்திரனை} எதிர்த்து வந்தான்; ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, வாசவனும் மருத்தனை எதிர்த்து வந்தான்.(15)
பூமியின் தலைவனான மருத்தன், தூய்மையானவனாகவும், கச்சிதம் கொண்டவனாகவும் இருந்தான். பெரும் முயற்சி செய்தாலும் சக்ரனால் {இந்திரனால்} அவனை வெல்ல முடியவில்லை.(16) அவனைக் கட்டுப்படுத்த இயலாத அவன், தேவர்களுடன் சேர்ந்து குதிரைகளைச் செலுத்தி வந்து பிருஹஸ்பதியை அழைத்து அவரிடம் இவ்வாறு பேசினான்.(17) அவன் {இந்திரன்}, "ஓ! பிருஹஸ்பதியே, எனக்கு ஏற்புடையதைச் செய்ய நீர் விரும்பினால், தேவர்கள் மற்றும் மூதாதையரின் ஆன்மாக்கள் சார்பாக மருத்தனுக்காக எந்தப் புரோகித அலுவல்களையும் செய்யாதீர். ஓ! பிருஹஸ்பதியே, நான் மூவுலகங்களின் ஆட்சி உரிமையைப் பெற்றிருக்கிறேன், மருத்தனோ வெறுமனே பூமியின் ஆட்சியாளனாக மட்டுமே இருக்கிறான்.(18,19) ஓ! பிராமணரே, தேவர்களின் இறவா மன்னனுக்குப் புரோஹிதராகச் செயல்படும் உம்மால், மரணத்திற்கு உட்படும் மருத்தனுக்கும் புரோஹிதச் செயல்பாடுகளைத் தயக்கமின்றி எவ்வாறு செய்ய முடிகிறது?(20) உமக்கு நன்மை நேரட்டும். என் தரப்பையோ, ஏகாதிபதியான மருத்தனின் தரப்பையோ அடைவீராக. மருத்தனைக் கைவிட்டு என்னிடம் வருவீராக" என்றான் {இந்திரன்}.(21)
தேவர்களின் அரசனால் இவ்வாறு அழைக்கப்பட்ட பிருஹஸ்பதி, சற்று நேரம் சிந்தித்து, இறவாதவர்களின் மன்னனிடம் மறுமொழி கூறினார்.(22) அவர் {பிருஹஸ்பதி}, "உயிரினங்களின் தலைவன் நீயே, உன்னிலேயே உலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. நமுசி, விஷ்வரூபன் மற்றும் பலன் ஆகியோரை அழித்தவன் நீயே.(23) ஓ! வீரா, தேவர்களுக்குச் செழிப்பை உண்டாக்கியவன் நீயே, ஓ! பலனைக் கொன்றவனே, சொர்க்கத்தையும், பூமியையும் ஆதரிப்பவன் நீயே.(24) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, ஓ! பாகனைத் தண்டித்தவனே, உனக்குப் புரோகித அலுவல் புரிந்த பிறகு, என்னால் ஒரு மானிட இளவரசனுக்கு எவ்வாறு தொண்டாற்ற முடியும்? நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.(25) நெருப்பின் தேவன், வெப்பம் உண்டாக்குவதை நிறுத்தினாலோ, பூமி தன் இயல்பை மாற்றிக் கொண்டாலோ, சூரியன் ஒளி தருவதை நிறுத்தினாலோ கூட நான் ஒருபோதும் {நான் சொன்னதில்} வாய்மையில் இருந்து விலக மாட்டேன்" என்று சொன்னார் {பிருஹஸ்பதி என்றார் வியாசர்}".(25)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பிருஹஸ்பதியின் பேச்சைக் கேட்ட இந்திரன், பகை உணர்வுகள் தீர்ந்தவனாகி, அவரைப் புகழ்ந்துவிட்டு தன் மாளிகைக்குத் திரும்பச் சென்றார்".(27)
அஸ்வமேதபர்வம் பகுதி – 05ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |