Samvarta! | Aswamedha-Parva-Section-06 | Mahabharata In Tamil
(அஸ்வமேதிக பர்வம் - 06)
பதிவின் சுருக்கம் : வேள்வி செய்து தர பிருஹஸ்பதியிடம் வேண்டிய மருத்தன்; பிருஹஸ்பதி மறுத்தது; ஸம்வர்த்தரைக் குறித்து மருத்தனிடம் சொன்ன நாரதர்; ஸம்வர்த்தரைக் கண்டடைந்த மருத்தன்...
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாகப் பிருஹஸ்பதி மற்றும் ஞானியான மருத்தன் ஆகியோர் குறித்த பழைய புராணம் குறிப்பிடப்படுகிறது.(1) அங்கிரஸ் மகனான பிருஹஸ்பதி தேவர்களின் தலைவனுடன் (இந்திரனுடன்) செய்து கொண்ட உடன்படிக்கையைக் கேள்விப்பட்ட மன்னன் மருத்தன் ஒரு பெரும் வேள்விக்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்தான்.(2) நாநயமிக்கவனான அந்தக் கரந்தமனின் பேரன் {மருத்தன்} தன் மனத்தில் வேள்வி குறித்த கருத்தை உருவாக்கிக் கொண்டு பிருஹஸ்பதியிடம் சென்று இவ்வாறு பேசினான்.(2)
அவன் {மருத்தன் பிருஹஸ்பதியிடம்}, "ஓ! வழிபடத்தகுந்த தவசியே, முன்பொரு சமயம் நீர் முன்மொழிந்த வேள்வியை உமது அறிவுரைக்கு இணக்கமாகச் செய்ய விரும்பி, அதற்குண்டான பொருட்களையும் திரட்டிவிட்டேன். அவ்வேள்வியைச் செய்விக்கும் புரோஹிதராக நான் உம்மையே நியமிக்க விரும்புகிறேன். ஓ! சிறந்தவரே, நீ எங்கள் குடும்பப் புரோஹிதர், எனவே, வேள்விக்குரிய பொருட்களை எடுத்துக் கொண்டு, வேள்வியை நீரே செய்வீராக" என்றான்.(4,5)
பிருஹஸ்பதி {மருத்தனிடம்}, "ஓ! பூமியின் தலைவா, உன் வேள்வியைச் செய்ய நான் விரும்பவில்லை. நான் தேவர்களின் தலைவனால் (இந்திரனால்) புரோஹிதராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். மேலும் இவ்வாறே செயல்படுவதாக நான் அவனுக்கு உறுதியளித்திருக்கிறேன்" என்றார்.(6)
மருத்தன் {பிருஹஸ்பதியிடம்}, "பரம்பரையாக நீரே எங்கள் குடும்பப் புரோஹிதராவீர், மேலும், இக்காரணத்திற்காகவே நான் உம்மிடம் மதிப்புக் கொண்டிருக்கிறேன். வேள்விகளில் நீர் எனக்கு உதவ வேண்டும் எனக் கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது. எனவே, என் வேள்வியில் புரோகிதராக நீர் அலுவல் புரிய வேண்டும்" என்றான்.(7)
பிருஹஸ்பதி {மருத்தனிடம்}, "ஓ! மருத்தா, இறவாதவர்களுக்குப் {சொர்க்கவாசிகளுக்குப்} புரோஹிதராகச் செயல்பட்ட நான், இறக்கவல்ல மானிடர்களுக்கு எவ்வாறு அதுபோல் செயல்பட முடியும்? நீ இங்கிருந்து செல்வாயோ, இருப்பாயோ, இறவாதவர்களைத் {சொர்க்கவாசிகளைத்} தவிர நான் வேறு எவருக்கும் புரோஹிதராகச் செயல்படுவதை நிறுத்தி விட்டேன் என நான் உனக்குச் சொல்கிறேன்.(8) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இப்போது என்னால் உனது புரோஹிதராகச் செயல்பட இயலாது. உன் விருப்பப்படி வேள்வியைச் செய்வதற்காக வேறு எவரையும் நீ நியமித்துக் கொள்வாயாக" என்றார்".(9)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் மருத்தன், அவமானத்தால் குழப்பமடைந்து, கவலையில் ஒடுக்கப்பட்ட மனத்துடன் இல்லம் திரும்பிக் கொண்டிருக்கும் போது, வழியில் நாரதரைச் சந்தித்தான்.(10) தெய்வீக முனிவரான நாரதரைக் கண்ட அந்த ஏகாதிபதி {மருத்தன்}, கூப்பிய கரங்களுடன் முறையாக வணங்கியபடி அவர் முன்பு நின்றான். அப்போது, நாரதர் அவனிடம் இவ்வாறு சொன்னார். அவர் {நாரதர்}, "ஓ! அரசமுனியே, மனம் நிறைந்தவனாக நீ காணப்படவில்லையே? நீ நலமாக இருக்கிறாயா? ஓ! பாவமற்றவனே, நீ எங்கே சென்றிருந்தாய்? உன் மன வருத்தத்திற்கான காரணம் எங்கிருக்கிறது?(11,12) மேலும், ஓ! மன்னா, ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உனக்கு மறுப்பேதும் இல்லையென்றால் அதை (உன் கவலைக்கான காரணத்தை) எனக்குச் சொல்வாயாக. ஓ! இளவரசே, உன் மனக்கவலையை அகற்றுவதற்கு நான் எல்லா முயற்சிகளையும் செய்வேன்" என்று சொன்னார் {நாரதர் என்றார் வியாசர்}".(13)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பெரும் முனிவரான நாரதரால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் மருத்தன், தன் அற ஆசானிடம் {உபாத்யாயரிடம்} தனக்குக் கிடைத்த விருப்ப மறுப்பை அவரிடம் தெரிவித்தான்.(14)
மருத்தன் {நாரதரிடம்}, "என் வேள்வியில் புரோஹிதராகச் செயல்பட வேண்டி நான் அங்கிரஸின் மகனும், இறவாதவர்களின் புரோஹிதருமான பிருஹஸ்பதியிடம் சென்றேன், ஆனால் அவர் நான் அளித்த வாய்ப்பை ஏற்கவில்லை.(15) அவரிடம் இருந்து விருப்ப மறுப்பைப் பெற்ற நான் இனியும் வாழ விரும்பவில்லை. ஓ! நாரதரே, இவ்வாறு அவர் என்னைக் கைவிட்டதால், நான் பாவத்தால் மாசடைந்திருக்கிறேன்" என்றான்".(16)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "அம்மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்ட நாரதர், ஓ! வலிமைமிக்க இளவரசே {யுதிஷ்டிரா}, அவிக்ஷித்தின் மகனான அவனை {மருத்தனை} மீட்பதாகத் தோன்றும் சொற்களை அவனுக்கு மறுமொழியாகச் சொன்னார்.(17)
நாரதர் {மருத்தனிடம்}, "சம்வர்த்தர் என்ற பெயரைக் கொண்ட அங்கிரஸின் அறம் சார்ந்த மகனொருவர் அனைத்து உயிரினங்களும் ஆச்சரியப்படும் வகையில் பூமி முழுவதும் நிர்வாணமாகத் திரிந்து வருகிறார்;(18) ஓ! இளவரசே, பிருஹஸ்பதி உன் வேள்வியைச் செய்ய விரும்பவில்லையெனில் நீ பலமிக்க அந்தச் சம்வர்த்தரிடம் செல்வாயாக. அவருக்கு உன்னிடம் நிறைவேற்பட்டால் அவர் உனக்கு வேள்வியைச் செய்து தருவார்" என்றார்.(19)
மருத்தன் {நாரதரிடம்}, "ஓ! நாரதரே, நீர் சொன்ன இந்த வார்த்தைகளால் நான் புத்துயிர் பெற்றவனாக உணர்கிறேன். ஆனால், ஓ! பேசுபவர்களில் சிறந்தவரே, நான் சம்வர்த்தரை எங்கே காணலாம் என்பதையும், என்னால் எவ்வாறு அவரருகில் இருக்க முடியும் என்பதையும், அவரிடம் இருந்தும் விருப்ப மறுப்பைப் பெற்றால் நான் வாழ விரும்பேன் என்பதால், அவர் என்னைக் கைவிடாதவாறு நான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(20,21)
நாரதர் {மருத்தனிடம்}, "ஓ! இளவரசே, மஹேஸ்வரனைக் காண விரும்பும் அவர், பித்தன் வேடத்தில் வாராணசி {காசி} நகரத்தில் சுகமாகத் திரிந்து கொண்டிருக்கிறார்.(22) அந்த நகரத்தின் வாயிலை அடைந்ததும், அதனருகில் ஏதோவோரிடத்தில் ஒரு சடலத்தை நீ வைக்க வேண்டும், ஓ! இளவரசே, எந்த மனிதர் அச்சடலத்தைக் கண்டதும் விலகிச் செல்வாரோ அந்த மனிதரையே சம்வர்த்தராக அறிவாயாக,(23) அவரை அறிந்ததும், அந்தப் பலமிக்க மனிதர் எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் அவரது காலடித்தடங்களைப் பின்தொடர்ந்து சென்று, (நீண்ட காலம்) ஒரு தனிமையான இடத்தில் அவர் இருப்பதைக் கண்டு, பணிவுடன் கரங்களைக் கூப்பி அவரிடம் நீ பாதுகாப்பை நாடுவாயாக.(24) {சம்வர்த்தரான} தம்மைக் குறித்த செய்தியை யார் உனக்குச் சொன்னது என அவர் உன்னைக் கேட்டால், சம்வர்த்தரைக் குறித்து நாரதர் உனக்குச் சொன்னதாக அவரிடம் சொல்வாயாக.(25) {நாரதரான} என்னைப் பின்பற்றுமாறு அவர் உன்னைக் கேட்டுக் கொண்டால், எத்தயக்கமுமின்றி நான் {நாரதராகிய நான்} நெருப்புக்குள் நுழைந்துவிட்டேன் என நீ அவருக்குச் சொல்வாயாக" என்றார் {நாரதர்}"[1].(26)
[1] கும்பகோணம் பதிப்பில், "என்னை உனக்கு எவன் சொன்னான்? என்று உன்னை அவர் கேட்டால், ‘நாரதர் சொன்னார்’ என்று சொல். பகைவரை அழிப்பவனே, அந்த ஸம்வர்த்தர் என்னைப் பின்தொடர்ந்து வர விரும்பி, ‘அந்த நாரதர் எங்கே?’ என்று உன்னை வினவினால், நான் அக்நியில் பிரவேசித்துவிட்டதாகப் பயமின்றிச் சொல்" என்றிருக்கிறது.
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "நாரதரின் முன்மொழிவுக்குத் தன் ஒப்புதலை அளித்த அந்த அரசமுனி, அவரை முறையாக வழிபட்ட பிறகு, அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்டு, வாராணசி நகரகத்திற்குப் புறப்பட்டு,(27) அஃதை {வாராணசியை} அடைந்ததும் நாரதரின் சொற்களை நினைவுகூர்ந்த அந்தப் புகழ்பெற்ற இளவரசன், நகரத்தின் வாயிலில் ஒரு சடலத்தை வைத்துச் சொன்னது போலவே செய்தான்.(28) தற்செயலாக அந்தப் பிராமணரும் {சம்வர்த்தரும்} அதே நேரத்தில் {வாராணசி} நகரத்தின் வாயிலில் நுழைந்தார். அப்போது சடலத்தைக் கண்ட அவர் திடீரென விலகிச் சென்றார்.(29)
அவர் திரும்பிச் செல்வதைக் கண்டவனும், அவிக்ஷித்தின் மகனுமான அந்த இளவரசன் {மருத்தன்}, கூப்பிய கரங்களுடனும், {சீடனாகி} அவரிடம் இருந்து அறிவுரையைப் பெறும் நோக்கத்துடனும் அவரது பாதச் சுவடுகளைப் பின்தொடர்ந்து சென்றான்.(30) பிறகு ஒரு தனிமையான இடத்தில் அவரைக் கண்டபோது அந்தச் சம்வர்த்தர் புழுதியையும், சாம்பலையும் இறைத்து அம்மன்னன் மீது சளியையும், எச்சிலையும் துப்பினார்.(31) சம்வர்த்தரால் இவ்வாறு ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டாலும் அந்த மன்னன் பணிவுடனும், கூப்பிய கரங்களுடனும், அந்தத் தவசியை அமைதியடைச் செய்ய முயன்றான்.(32) நீண்ட காலத்திற்குப் பிறகு களைப்படைந்த சம்வர்த்தர், பல கிளைகளைக் கொண்டதும், புனிதமானதுமான ஓர் அரச மரத்தின் குளிர்ந்த நிழலை அடைந்ததும், தன் வழியில் இருந்து விலகி ஓய்வெடுக்க அமர்ந்தார்" என்றார் {வியாசர்}.(33)
அஸ்வமேதபர்வம் பகுதி – 06ல் உள்ள சுலோகங்கள் : 33
ஆங்கிலத்தில் | In English |