Samvarta assented! | Aswamedha-Parva-Section-07 | Mahabharata In Tamil
(அஸ்வமேதிக பர்வம் - 07)
பதிவின் சுருக்கம் : வேள்வி செய்வதற்குப் பிருஹஸ்பதியிடம் அனுமதி பெற்று வருமாறு மருத்தனிடம் கேட்ட ஸம்வர்த்தர்; முன்கதையை ஸம்வர்த்தரிடம் சொன்ன மருத்தன்; நிபந்தனையின் பேரில் வேள்வி செய்வதற்கு இணங்கிய ஸம்வர்த்தர்...
{வியாசர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, சம்வர்த்தர் {மருத்தனிடம்}, "நீ எவ்வாறு என்னை அறிந்து கொண்டாய்? மேலும் என்னைக் குறித்து உனக்குச் சொன்னது யார்? என் நன்மையை விரும்புவாயெனில் இதனை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக.(1) நீ உண்மையைச் சொன்னால், உன் விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் நீ அடைவாய், நீ என்னிடம் பொய்யைச் சொன்னால், உன் தலை நூறு துண்டுகளாகப் பிளக்கும்" என்றார்.(2)
மருத்தன் {சம்வர்த்தரிடம்}, "தமது வழியில் திரிந்து கொண்டிருந்த நாரதர், நீர் எங்கள் குடும்பப் புரோஹிதரின் மகன் என உம்மைக் குறித்து என்னிடம் சொன்னார், இது (இந்தத் தகவல்) என் மனத்தை (உம்மிடம்) சீரிய நிறைவடையச் செய்தது" என்றான்.(3)
சம்வர்த்தர் {மருத்தனிடம்}, "இதை நீ என்னிடம் உண்மையாகவே சொல்லியிருக்கிறாய். வேள்விகளைச் செய்யும் ஒருவனாக அவர் (நாரதர்) என்னை அறிவார். தற்போது நாரதர் எங்கே வாழ்கிறார் என்பதை இப்போது எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டார்.(4)
மருத்தன் {சம்வர்த்தரிடம்}, "தெய்வீகத் தவசிகளின் இளவரசரான அவர் (நாரதர்), உம்மைக் குறித்த இந்தச் செய்தியை எனக்குச் சொல்லிவிட்டு, உமது பாதுகாப்பில் என்னை விட்டுவிட்டு நெருப்புக்குள் நுழைந்தார்" என்றான்".(5)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "மன்னனிடம் (மருத்தனிடம்) இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்ட சம்வர்த்தர் பெரும் நிறைவை அடைந்தார், மேலும் அவர் (மருத்தனிடம்), "நானும் இவையனைத்தையும் செய்யவல்லவனே" என்றார்.(6)
பிறகு, ஓ! இளவரசே, பித்தனைப் போல அலைந்து திரியும் அந்தப் பிராமணர் {சம்வர்த்தர்}, கொடுஞ்சொற்களால் மருத்தனை மீண்டும் மீண்டும் வசைபாடி,(7) "பெருமூளைக் கோளாறால் பீடிக்கப்பட்டவனும், தன்மனத்தின் சீரற்ற இச்சைகளின்படி எப்போதும் செயல்படுபவனும், இத்தகைய ஒருமை மனநிலை கொண்டவனுமான என்னைப் புரோஹிதராகக் கொண்டு ஏன் இந்த வேள்வியைச் செய்ய நீ விரும்புகிறாய்?(8) என் அண்ணன் {பிருஹஸ்பதி} வேள்விகளை நடத்த வல்லவர், அவர் வாசவனிடம் (இந்திரனிடம்) சென்று அவனது வேள்விகளைச் செய்து வருகிறார், நீயும் உன் வேள்வியை அவரைக் கொண்டே செய்வாயாக.(9) என் வீட்டுப் பொருட்களையும், அகநிலை உணவர்வுபெற்ற தேவர்களையும், வேள்வி செய்யும் வாடிக்கையாளர்களையும் என அனைத்தையும் என்னிடம் இருந்து பலவந்தமாக அபகரித்துக் கொண்டு, என் உடலை மட்டுமே இப்போதைக்கு என்னிடம் விட்டு வைத்திருக்கிறார்,(10) ஓ! அவிக்ஷித்தின் மகனே {மருத்தனே}, அனைத்து வகையிலும் அவர் என் மதிப்புக்குரியவர் என்பதால், அவரது அனுமதியின்றி எவ்வழியிலும் என்னால் உன் வேள்வியைச் செய்ய இயலாது.(11) எனவே, வேள்வி செய்யும் விருப்பமேதும் உனக்கிருந்தால், முதலில் நீ அந்தப் பிருஹஸ்பதியிடம் சென்று, அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்டு என்னிடம் திரும்பி வருவாயாக" என்றார்.(12)
மருத்தன், "ஓ! சம்வர்த்தரே, நான் முதலில் பிருஹஸ்பதியிடம்தான் சென்றேன், ஆனால் வாசவனின் {இந்திரனின்} ஆதரவை விரும்பிய அவர், வேள்வி செய்பவனாக என்னை விரும்பவில்லை.(13) அவர் {பிருஹஸ்பதி}, "இறவாதவர்களின் புரோஹிதர் என்ற நிலையை அடைந்த பிறகு, இறந்து போகிறவர்களுக்குப் பணி செய்ய நான் விரும்பவில்லை. பூமியின் தலைவனாகியிருக்கும் மருத்தன் எப்போதும் தன்னை எதிர்க்கும் விருப்பம் கொண்டிருக்கிறான் என்றும், மருத்தனின் வேள்வியைச் செய்ய வேண்டாம் என்றும் சொல்லி சக்ரனால் (இந்திரனால்) நான் தடுக்கப்பட்டேன்" என்று சொன்னார். அவ்வாறே ஆகட்டும் என்று பலனைக் கொன்றவனிடம் (இந்திரனிடம்) சொன்னதன் மூலம் உமது அண்ணன் {பிருஹஸ்பதி} அதற்கு இணங்கினார்.(15) ஓ! தவசிகளில் சிறந்தவரே {சம்வர்த்தரே}, தேவர்களின் தலைவனுடைய பாதுகாப்பை அடைவதில் அவர் வென்ற பிறகு, இதய நிறைவுடன் நான் அவரிடம் சென்றேன் என்றாலும் அவர் எனக்குப் புரோஹிதராகச் செயல்பட மறுத்துவிட்டார்.(16) இவ்வாறு மறுக்கப்பட்ட நான் இப்போது நான் கொண்டுள்ள அனைத்தையும் செலவு செய்து உம்மைக் கொண்டு ஒரு வேள்வியைச் செய்து, உமது நற்காரியங்களின் தகுதியால் வாசவனை விஞ்ச விரும்புகிறேன்.(17) ஓ! பிராமணரே {சம்வர்த்தரே}, என்னிடம் எக்குற்றமும் இல்லாமலே பிருஹஸ்பதியால் மறுக்கப்பட்ட நான் இப்போது அவரிடம் சென்று இந்த வேள்வியைச் செய்வதில் அவரது உதவியை நாட விரும்பவில்லை" என்றான்.(18)
சம்வர்த்தர் {மருத்தனிடம்}, "ஓ! மன்னா, நான் உன்னிடம் கேட்கப் போகும் அனைத்தையும் செய்வதற்கு இணங்கினால், நிச்சயம் நீ விரும்பும் அனைத்தையும் நிறைவேற்ற என்னால் முடியும்,(19) என்றாலும், உன் வேள்வியை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்பதைப் பிருஹஸ்பதியும், புரந்தரனும் (இந்திரனும்) அறிய நேர்ந்தால், கோபத்தால் நிறையும் அவர்கள், உனக்குத் தீங்கிழைக்க அவர்களால் இயன்ற அனைத்தையும் செய்வார்கள் என்றும் உணர்கிறேன்.(20) எனவே, நான் என் பொறுமையையும், மாறாநிலையையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உன் நிலையுறுதியை எனக்கு உறுதிப்படுத்துவாயாக, மாறாக நான் உன்னிடம் கோபமடைந்தால், உன்னையும், உன் குடும்பத்தாரையும் சாம்பலாகக் குறைத்துவிடுவேன் (அழித்துவிடுவேன்)" என்றார்.(21)
மருத்தன் {சம்வர்த்தரிடம்}, "எப்போதேனும் நான் உம்மைக் கைவிட்டால், மலைகள் இருக்கும் வரையும், ஆயிரங்கதிர் சூரியன் தொடர்ந்து வெப்பத்தை வெளியிடும் வரையும் ஒருபோதும் நான் அருள் உலகங்களை அடையமாட்டேன்,(22) நான் உம்மைக் கைவிட்டால், ஒருபோதும் உண்மை ஞானத்தை அடையாதவனாக, உலகம் சார்ந்த (பொருள்) தேடல்களுக்கு அடிமையாகவே நான் நீடித்திருப்பேன்" என்றான்.(23)
சம்வர்த்தர் {மருத்தனிடம்}, "ஓ! அவிக்ஷித்தின் மகனே, இந்தச் செயலைச் செய்வதில் உன் மன விருப்பம் சிறந்திருக்கிறது, ஓ! மன்னா, அதே போலவே, நானும் வேள்வியைச் செய்வதற்கான {சிறந்த} திறனை என் மனத்தில் கொண்டிருக்கிறேன்,(24) ஓ! மன்னா, நீ கொண்டிருக்கும் நல்ல பொருட்கள் அனைத்தும் அழியாதனவாகும், மேலும், சக்ரனையும், தேவர்களையும், கந்தர்வர்களையும் விட நீ அவற்றை {செல்வத்தை} அதிகமாக ஆள்வாய்.(25) என்னைப் பொறுத்தவரையில், செல்வம் திரட்டுவதிலோ, வேள்விக் கொடைகளிலோ விருப்பமேதுமில்லை, இந்திரனுக்கும், என் அண்ணனுக்கும் ஏற்பில்லாததை மட்டுமே நான் செய்யப் போகிறேன் {விரும்புகிறேன்}.(26) நிச்சயம் நான் உன்னைச் சக்ரனுக்கு இணையானவனாக ஆக்குவேன், மேலும் உனக்கு ஏற்புடையதையே செய்வேன் என்பதையும் நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்[1]" என்றார் {சம்வர்த்தர்}.(27)
[1] கும்பகோணம் பதிப்பில், "அவிக்ஷித்தின் குமாரனே, உனக்குக் கர்மங்களில் நல்ல புத்தி உண்டாகுக. வேந்தனே, எனக்கும் யாகம் செய்விக்க வேண்டுமென்கிற எண்ணம் இருக்கிறது. அரசனே, குறைவற்றதும், உத்தமமுமான திரவியமிருக்குமிடத்தையும் உனக்குச் சொல்கிறேன். அதனால், தேவர்களையும், கந்தர்வர்களையும், இந்தரனையும் நீ கீழ்ப்படுத்தக்கூடும். எனக்குப் பணத்திலாவது, சிஷ்யர்களிடத்திலாவது விருப்பமில்லை. ஆனால், ஸஹோதரரான பிருஹஸ்பதி, இந்திரன் இருவர்களுக்கும் அப்ரியத்தைச் செய்ய விரும்புகிறேன். உன்னை நிச்சயம் இந்திரனுக்குச் சமமாகவும் செய்துவிடுகிறேன். உனக்குப் பிரியத்தையும் செய்கிறேன். இதை உனக்கு உண்மையாகச் சொல்கிறேன்" என்றிருக்கிறது.
அஸ்வமேதபர்வம் பகுதி – 07ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |