The gold in Munjaban! | Aswamedha-Parva-Section-08 | Mahabharata In Tamil
(அஸ்வமேதிக பர்வம் - 08)
பதிவின் சுருக்கம் : இமயத்தில் உள்ள முஞ்சவான் மலையில் இருக்கும் தங்கத்தைக் குறித்து மருத்தனுக்குச் சொன்ன ஸம்வர்த்தர்; அங்கே சென்று சிவனைத் துதித்து தங்கத்தை அடைந்த மருத்தன்; கவலையடைந்த பிருஹஸ்பதி; பிருஹஸ்பதியிடம் சென்ற இந்திரன்...
சம்வர்த்தர் {மருத்தனிடம்}, "இமய மலையின் உச்சியில் முஞ்சவான் என்ற பெயரில் ஒரு சிகரம் இருக்கிறது. அங்கே உமையின் துதிக்கத்தக்க தலைவன் (மஹாதேவன்) தொடர்ந்து தவம் செய்து கொண்டிருக்கிறான். வலிமைமிக்கவனும், வழிபடத்தகுந்தவனும், பெரும் பலம் கொண்டவனுமான அந்தத் தேவன் திரிசூல தாரியாக, பல வகைப் பூதகணங்களால் சூழப்பட்டவனாக, அங்கே பெரும் காட்டு மரங்களின் நிழலிலோ, குகைகளிலோ, அந்தப் பெரும் மலையின் முரட்டுச் சிகரங்களிலோ தன் மனைவியான உமையுடன் தன் விருப்பம் போல் திரிந்து கொண்டிருக்கிறான்.(2,3) ருத்திரர்கள், ஸாத்யர்கள், விஷ்வேதேவர்கள், வசுக்கள், யமன், வருணன், தன் பணியாட்களுடன் கூடிய குபேரன்,(4) பூதங்கள், பிசாசங்கள், அஸ்வினி தேவர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், யக்ஷர்கள், தெய்வீக முனிவர்கள்,(5) சூரிய தேவர்கள் {ஆதித்யர்கள்}, காற்றுகளுக்குத் தலைமை தாங்கும் தேவர்கள் {மருத்துகள்}, அனைத்து வகையான ராட்சசர்கள் ஆகியோர் அங்கே பல்வேறு பண்புகளைக் கொண்டவனும், உயர்ந்த ஆன்மாவுமான உமையின் தலைவனை வழிபடுகின்றனர்.(6)
மேலும், ஓ! மன்னா {மருத்தனே}, அங்கே அந்தத் துதிக்கத்தக்க தேவன், வினோதமான கொடூரத் தோற்றங்களுடன் கூடியவர்களும், முரடர்களும், விளையாட்டுத்தனம் கொண்டவர்களுமான குபேரனின் தொண்டர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(7) தன்காந்தியில் ஒளிரும் அந்த மலை காலைச் சூரியனைப் போலப் பிரகாசமானதாக இருக்கிறது.(8) இயற்கையான சதையாலான கண்களுடன் கூடிய எந்த உயிரினத்தாலும் அதன் வடிவத்தையோ, கட்டமைப்பையோ, அங்கே நிலவும் வெப்பம் அல்லது குளிரையோ, சூரியன் ஒளிர்கிறானா? காற்று வீசுகிறதா என்பதையோ உறுதிப்படுத்த முடியாது.(9) மேலும், ஓ! மன்னா, அங்கிருக்கும் எவரையும் முதுமை, பசி, தாகம், மரணம் அல்லது அச்சம் என ஏதும் பீடிக்காது.(10) ஓ! வெற்றியாளர்களில் முதன்மையானவனே {மருத்தா}, அம்மலையின் அனைத்துப் பக்கங்களிலும், சூரியக் கதிர்களைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றன. மேலும், ஓ! மன்னா, குபேரனுக்கு நன்மை செய்ய விரும்புபவர்களும், உயர்த்திய கரங்களுடன் கூடியவர்களுமான அவனது தொண்டர்கள், அழையாமல் நுழைபவர்களிடம் இருந்து அந்தத் தங்கச் சுரங்கங்களைப் பாதுகாக்கின்றனர்.(11)
நீ அங்கே சென்று, சர்வன், வேதன், ருத்ரன், சிதிகண்டன் {கறுத்த கழுத்த கொண்டவன்}, ஸுரூபன், ஸுவர்சன் {நல்ல காந்தி கொண்டவன்}, கபர்தின் {சடையுள்ளவன்}, கராலன் {பயங்கரன்}, ஹர்யக்ஷன் {பொன்னிறக்கண்ணன்}, வரதன்,(13) திரயக்ஷன் {முக்கண்ணன்}, பூஷ்ணோதந்தபித் {சூரியனின் பற்களைத் தகர்த்தவன்}, வாமனன் {குள்ளன்}, சிவன் {நலம் அருள்பவன்}, யாம்யன் {அடக்குபவன்} அவ்யக்தரூபன், ஸத்விருத்தன் {நன்னடை கொண்டவன்}, சங்கரன்,(14) க்ஷேம்யன் {நன்மை செய்பவன்}, ஹரிகேஸன் {பொன்னிற மயிர் கொண்டவன்}, ஸ்தாணு, புருஷன், ஹரிநேத்ரன் {பொன்னிறக் கண்ணன்}, முண்டன், கிருசன் {கோபமுள்ளவன்}, உத்தரணன் {கரையேற்றுபவன்},(15) பாஸ்கரன் {பிரகாசிப்பவன்}, ஸுதீர்த்தன், தேவதேவன், ரம்ஹன் {வேகமுள்ளவன்}, உஷ்ணீஷி {தலைப்பாகை கொண்டவன்}, ஸுவக்த்ரன் {நன்முகம் கொண்டவன்}, ஸஹஸ்ராக்ஷன் {ஆயிரங்கண்ணன்}, மீடுவான் {அனைத்தையும் படைப்பவன்},(16) கிரிசன் {மலையில் படுப்பவன்}, பிரஸாந்தன் {பேரமைதி கொண்டவன்}, யதன் {சந்நியாசி}, சீரவாஸன் {மரவுரியாடை கொண்டவன்}, வில்வதண்டன் {வில்வத்தாலான தண்டம் கொண்டவன்}, சித்தன், ஸர்வதண்டதரன் {அனைவரையும் பாதுகாப்பவன்},(17) மிருகவியாதன் {வேள்வியெனும் மானை அடிக்கும் வேடன்}, மஹான், தனேசன் {வில் கொண்டவன்}, பவன் {படைப்பவன்}, வரன் {சிறந்தவன்}, ஸோமவக்த்ரன் {சந்திரன் போன்ற முகம் கொண்டவன்}, ஸித்தமந்த்ரன், சக்ஷு {கண்ணாக இருப்பவன்},(18) ஹிரண்யபாஹு {பொன்மயக்கரங்கொண்டவன்}, உக்ரன், திக்பதி {திசைகளின் தலைவன்}, லேலிஹானன் {கடைவாயை நாவால் நனைப்பவன்}, கோஷ்டன், சித்தமந்திரன், விருஷ்ணு, பசுபதி, பூதபதி {பூதங்களின் தலைவன்},(19) விருஷன், மாத்ருபக்தன் {தாய்பக்தி கொண்டவன்}, ஸேனானி {படைத்தலைவன்}, மத்யமன், ஸ்ருவஹஸ்தன் {எதிர்பார்க்கும் முகம் கொண்டவன்}, யதி, தன்வி {வில்லாளி}, பார்கவன், அஜன் {பிறப்பற்றவன்},(20) கிருஷ்ணநேத்ரன் {கறுத்த கண் கொண்டவன்}, விரூபாக்ஷன் {பெருவிழியோன்}, தீக்ஷ்ணதம்ஷ்ட்ரன் {கூரிய கோரப் பற்களைக் கொண்டவன்}, தீக்ஷ்ணன், வைஸ்வானரமுகன் {அக்னியை முகத்தில் கொண்டவன்},(21) மஹாத்யுதி, அனங்கன், ஸர்வன் {அனைத்துமாக இருப்பவன்}, திக்பதி, விலோஹிதன் {மிகச் சிவந்தவன்}, தீப்தன் {பிரகாசிப்பவன்}, தீப்தாக்ஷாயன் {பிரகாசிக்கும் கண்களைக் கொண்டவன்}, மஹௌஜன் {சிறந்த ஒளி கொண்டவன்},(22) வசுரேதஸ், ஸுவபு {நல்ல உடல் கொண்டவன்}, பிருது {பருத்தவன்}, கிருத்திவாஸன் {யானைத் தோலை உடையாகக் கொண்டவன்},(23) கபாலமாலி {மண்டையோட்டு மாலை கொண்டவன்}, ஸுவர்ணமுகுடன் {தங்க கிரீடம் கொண்டவன்}, மஹாதேவன், கிருஷ்ணன் {கறுத்தவன்}, திரயம்பகன் {முக்கண்ணன்}, அனகன் {குற்றமற்றவன்},(24) குரோதனன் {கோபமுள்ளவன்}, நிருஸம்ஸன் {கொடூரங்கொண்டவன்}, மிருது {மென்மையானவன்}, பாஹுஸாலிதண்டி {கையில் தண்டம் கொண்டவன்}, தப்ததபஸ், அக்ரூரகர்மன் {கொடூரத்தன்மையற்றவன்}, ஸஹஸ்ரஸிரஸ் {ஆயிரந்தலையோன்}, ஸஹஸ்ரசரணன் {ஆயிரங்காலோன்}, ஸ்வதாஸ்வரூபன், பஹுரூபன் {பலவடிவகங்களைக் கொண்டவன்}, தம்ஷ்ட்ரி {கோரப்பற்களைக் கொண்டவன்},(25) பினாகி {பினாகம் என்ற வில்லைக் கொண்டவன்}, மஹாதேவன், மஹாயோகி {பெரும் யோகி}, அவ்யயன் {அழிவற்றவன்}, திரிஸூலஹஸ்தன் {திரிசூலத்தைக் கையில் கொண்டவன்}, வரதன் {வரமளிப்பவன்}, திரயம்பகன் {முக்கண்ணன்}, புவனேஸ்வரன்,(26) திரிபுரக்னன், திரினயனன், திரிலோகேஸன் {மூவுலகங்களுக்கும் ஈசன்}, மஹௌஜன் {சிறந்த பலம் கொண்டவன்}, ஸர்வபூதபிரபவன் {அனைத்துக்கும் மூலமானவன்}, ஸர்வபூததாரணன் {அனைத்துக்கும் கொடுப்பவன்}, தரணீதரன் {பூமியைத் தரிப்பவன்},(27) ஈஸானன், சங்கரன், ஸர்வன், சிவன், விஸ்வேஸ்வரன், பவன், உமாபதி, பஸுபதி, விஸ்வரூபன், மஹேஸ்வரன்,(28) விரூபாக்ஷன், தஸபுஜன் {பத்துக் கரங்களைக் கொண்டவன்}, விருஷபத்வஜன் {காளை கொடி கொண்டவன்}, உக்ரன், ஸதாணு, சிவன், ரௌத்ரன், ஸர்வன், கிரீசன், ஈஸ்வரன்,(29) ஸிதிகண்டன் {நீலகண்டன்}, அஜன், ஸுக்ரன், பிருது {பருத்தவன்}, பிருதுஹரன் {பருத்தவைகளை அழிப்பவன்}, வரன், விஸ்வரூபன், விரூபாக்ஷன், பஹுரூபன் {பல வடிவங்களைக் கொண்டவன்}, உமாபதி,(30) அனங்காங்கஹரன் {மன்மதனின் உடலை அழித்தவன்}, ஹரன் {அபகரிப்பவன்}, ஸரண்யன், மஹாதேவன், சதுர்முகன் {நான்முகன்} என்று அறியப்படும் அந்தத் துதிக்கத்தக்க தேவனை ஆற்றுப்படுத்துவாயாக.(31) அங்கே சென்று அந்தத் தேவனை {மேற்கண்ட பெயர்களைச் சொல்லி} வணங்கி, அவனது பாதுகாப்பை அடைய ஏங்கிக் கேட்பாயாக. ஓ! இளவரசே, உயர் ஆன்மாவும், பெருஞ்சக்தி கொண்டவனுமான மஹாதேவனை இவ்வாறு வணங்கினால் நீ தங்கத்தை அடைவாய்.(32) இவ்வாறு அங்கே செல்லும் மனிதர்கள் தங்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்[1]" என்றார் {சம்வர்த்தர்}.
[1] கும்பகோணம் பதிப்பில், "மஹாதேவரும், வேகமுள்ளவரும், மஹாத்மாவுமான அவருக்கு நமஸ்காரம் செய்து, அந்த ஸுவர்ணத்தை அடைவாய். மனிதர்கள் அவரிடத்தில் மனத்தைச் செலுத்திக் கணங்களுக்குப் பதியாயிருக்கும் தன்மையையும் அடைகின்றனர். ஸுவர்ண பாத்திரங்களைப் பற்றி என்ன ஸந்தேகம்? ஆகையால், நீ (சீக்கிரம்) செல். தாமதம் செய்யாதே. உனக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும். ஆகையால், ஸுவர்ணத்தைக் கொண்டு வருவதற்காக யானைகளுடனும், குதிரைகளுடனும், ஒட்டகங்களுடனும், உன்னுடைய ஆட்கள் அவ்விடம் செல்லுக" என்றிருக்கிறது.
இவ்வாறு சொல்லப்பட்ட கரந்தமனின் மகன் மருத்தன், அந்த அறிவுறுத்தலுக்கு ஏற்றபடியே செய்தான்.(33) மேலும் அவன் தன் வேள்வியைச் செய்வதற்காக மனித சக்திக்கு மீறிய ஏற்பாடுகளைச் செய்தான். கைவினைஞர்கள் அவ்வேள்விக்காகத் தங்கத்தாலான பாத்திரங்களை உற்பத்தி செய்தனர்[2].(34) தேவர்களின் செல்வத்தைக் காட்டிலும் மேன்மையானதாக இருந்த மன்னன் மருத்தனின் நிறைந்த செல்வத்தைக் கேள்விப்பட்ட பிருஹஸ்பதியும், தமக்கு எதிரான சம்வர்த்தர் செல்வந்தராகிறான் என்ற எண்ணத்தால், இதயம் பீடித்தவராகக் கவலையடைந்து, நிறம் மங்கி, மிகவும் மெலிந்து போனார்.(35,36) பிருஹஸ்பதி வருத்தமடைந்திருப்பதைத் தேவர்களின் தலைவன் அறிந்தபோது, இறவாதவர்களால் தொண்டாற்றப்பட்ட அவரிடம் சென்று இவ்வாறு சொன்னான்" {என்றார் வியாசர்}.(37)
[2] கும்பகோணம் பதிப்பில், "இவ்விதம் சொல்லக்கேட்ட காரந்தமபுத்திரனான அந்த மருத்தன், அவர் சொன்னபடி செய்தான். கங்காதரரை நமஸ்கரித்து உத்தமமான தனத்தை அடைந்தான். மஹாதேவருடைய அருளால் அந்தத் தனத்தை அடைந்து குபேரன் போலானான். பிறகு, மனிதர்களால் செய்ய முடியாத யாகத்திற்கேற்ற எல்லா ஏற்பாடுகளையும் செய்தான். அந்த யாகத்திற்காகச் சிற்பிகள் ஸுவர்ணமயமான பாத்திரங்களையும், யாகசாலைகளையும், ஸாமக்ரிகளையும் அப்பொழுது ஸம்வர்த்தருடைய கட்டளையினால் நன்றாகச் செய்தார்கள்" என்றிருக்கிறது.
அஸ்வமேதபர்வம் பகுதி – 08ல் உள்ள சுலோகங்கள் : 37
ஆங்கிலத்தில் | In English |