The fear of Agni! | Aswamedha-Parva-Section-09 | Mahabharata In Tamil
(அஸ்வமேதிக பர்வம் - 09)
பதிவின் சுருக்கம் : பிருஹஸ்பதியின் வருத்தம்; பிருஹஸ்பதியை ஏற்றுக்கொள்ளும்படி அக்னி தேவன் மூலம் மருத்தனிடம் சொன்ன இந்திரன்; மருத்தனின் மறுப்பு; அக்னியின் மறுப்பு...
{வியாசர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, "இந்திரன், "ஓ! பிருஹஸ்பதி, நீர் அமைதியாக உறங்குகிறீரா? உமது பணியாட்கள் உமக்கு ஏற்புடையவற்றைச் செய்கிறார்களா? நீர் தேவர்களின் நன்மையை நாடுகிறீரா? ஓ! பிராமணரே, தேவர்கள் உம்மைப் பாதுகாக்கிறார்களா?" என்றான்.(1)
பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, "ஓ! தேவர்களின் தலைவா, நான் என் படுக்கையில் அமைதியாக உறங்குகிறேன். என் பணியாட்கள் எனக்குப் பிடித்தவாறு நடந்து கொள்கிறார்கள், மேலும் நான் எப்போதும் தேவர்களின் நன்மையை நாடுகிறேன். அவர்களும் என்னை நன்றாகப் பேணிக் காக்கிறார்கள்" என்றார்.(2)
இந்திரன் {பிருஹஸ்பதியிடம்}, "பிறகு மனத்திலோ, உடலிலோ ஏன் இந்த வலி {துயரம்}? நீர் ஏன் இப்போது நிறம் மங்கி, தோற்றம் குலைந்திருக்கிறீர்? ஓ! பிராமணரே, உமக்கு வலியுண்டாக்கிய மக்கள் அனைவரையும் நான் கொல்லும் வகையில் அவர்கள் {அம்மக்கள்} யார் என்பதை என்னிடம் சொல்வீராக” என்று கேட்டான்.(3)
பிருஹஸ்பதி, "ஓ! இந்திரா, (பிராமணர்களுக்குப்) பெருங்கொடைகளுடன் மருத்தன் ஒரு பெரும் வேள்வியைச் செய்யப் போகிறான் என்றும், அவனது வேள்வியில் சம்வர்த்தன் புரோகிதனாகச் செயல்படப் போகிறான் என்றும் நான் கேள்விப்படுகிறேன். எனவே, அந்த வேள்வியில் அவன் புரோகிதராகச் செயல்படக்கூடாது என நான் விரும்புகிறேன்” என்றார்.(4)
இந்திரன் {பிருஹஸ்பதியிடம்}, "ஓ! பிராமணரே, புனித மந்திரங்கள் அனைத்தையும் அறிந்தவரான நீர் தேவர்களின் புரோஹிதரான போதே உமது விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைந்துவிட்டீர். மேலும், மரணம் மற்றும் முதுமையின் ஆதிக்கங்களையும் கடந்துவிட்டீர். உம்மைச் சம்வர்த்தரால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டான்.(5)
பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, "பகைவனின் செழிப்பு ஒருவனது உணர்வுகளுக்கு எப்போதும் பெருந்துன்பத்தைத் தரும், இந்தக் காரணத்தினாலேயே நீ தேவர்களுடன் சேர்ந்து அசுரர்களையும், அவர்களின் உற்றார் உறவினர்களையும் துன்புறுத்தி, அவர்களில் மிகச் செழிப்பானவர்களைக் கொல்கிறாய்;(6) ஓ! தேவர்களின் தலைவா, என் பகைவன் செழிப்படைகிறான் என்ற எண்ணத்தில் என் தோற்றம் மாறியிருக்கிறது. எனவே, ஓ! இந்திரா, சம்வர்த்தனையும், மன்னன் மருத்தனையும் அனைத்து வழிமுறைகளினாலும் தடுப்பாயாக" என்றார்.(7)
அக்னியிடம் திரும்பிய இந்திரன், "ஓ! ஜாதவேதா, நான் சொல்வதைப் பின்பற்றி மன்னன் மருத்தனிடம் சென்று, பிருஹஸ்பதியை அவனிடம் கொடுத்து, இந்தப் பிருஹஸ்பதி அவனது வேள்வியைச் செய்து கொடுத்து அவனை இறவாதவனாக்குவார் {அமரனாக்குவார்} என்று அவனிடம் சொல்வாயாக" என்றான்.(8)
அக்னி {இந்திரனிடம்}, "ஓ! போற்றுதலுக்குரியவனே, இப்போதே நான் உன் தூதனாக அங்கே சென்று மன்னன் மருத்தனிடம் பிருஹஸ்பதியைக் கொடுக்கிறேன்" என்றான். இந்திரனின் சொற்களை உண்மையாக்கவும், பிருஹஸ்பதிக்கு மதிப்பளிக்கவும் அக்னி புறப்பட்டுச் சென்றான்".(9)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "பிறகு அந்த உயர்ஆன்ம நெருப்பு தேவன், குளிர் காலத்தின் இறுதியில் வரம்பற்றுச் சுழன்று முழங்கும் வலிமைமிக்கக் காற்றைப் போலக் காடுகளையும், மரங்கள் அனைத்தையும் சூறையாடியபடி தன் குற்றேவலைப் புரியச் சென்றான்.(10)
மருத்தன் {சம்வர்த்தரிடம்}, "காண்பீராக. இன்று நெருப்பின் தேவன் தன் சொந்த உடலுடன் வருவதைக் காண்கிறேன். எனவே, ஓ! முனிவரே {சம்வர்த்தரே}, அவனுக்கு ஓர் இருக்கையையும், நீரையும், ஒரு பசுவையும், கால் கழுவ நீரையும் அளிப்பீராக" என்றான்.(11)
அக்னி {மருத்தனிடம்}, "ஓ! பாவமற்றவனே, நீ அளிக்கும் காணிக்கைகளான நீர், இருக்கை மற்றும் கால் கழுவுவதற்கான நீர் ஆகியவற்றை நான் ஏற்கிறேன். இந்திரனின் ஆணைக்கிணங்க வந்திருக்கும் அவனது தூதனாக என்னை அறிவாயாக" என்றான்.(12)
மருத்தன் {நெருப்பு தேவனிடம்}, "ஓ! நெருப்பின் தேவா, தேவர்களின் மகிமைமிக்கத் தலைவன் {இந்திரன்} மகிழ்ச்சியாக இருக்கிறானா? எங்களிடம் நிறைவுடன் இருக்கிறானா? தேவர்கள் அவனிடம் மாறாப்பற்றுடன் இருக்கின்றனரா? இவை அனைத்திலும் முறையாக என்னைத் தெளிவடையச் செய்வாயாக" என்றான்.(13)
அக்னி {மருத்தனிடம்}, "ஓ! பூமியின் தலைவா, சக்ரன் முற்றான மகிழ்ச்சியுடனும், உன்னிடம் நிறைவுடனும், முதுமையில் இருந்து விடுதலைபெற்றவனாக உன்னை ஆக்கும் விருப்பத்துடனும் இருக்கிறான். தேவர்கள் அனைவரும் அவனிடம் மாறாப் பற்றுடன் இருக்கிறார்கள். ஓ! மன்னா, தேவர்கள் தலைவன் {இந்திரன்} சொன்ன செய்தியைக் கேட்பாயாக.(14) ஓ! இளவரசே, மருத்தனிடம் பிருஹஸ்பதியை அளிக்கவும், உன் வேள்வியை (தேவர்களின்) இந்தப் புரோஹிதர் செய்யவும், இறக்கக்கூடியவனாக மட்டுமே இருக்கும் உன்னை இறவா நிலை அடையச் செய்யும் நோக்கத்துடனும் என்னை உன்னிடம் அனுப்பியிருக்கிறான்" என்றான்.(15)
மருத்தன் {அக்னி தேவனிடம்}, "இருபிறப்பாள பிராமணரான சம்வர்த்தர் என் வேள்வியைச் செய்யப் போகிறார், மஹேந்திரனின் புரோஹிதராகச் செயல்பட்டவர் இப்போது இறக்கக்கூடிய மனிதர்களின் புரோஹிதராகச் செயல்படுவது நன்றாகத் தெரியவில்லை என நான் பிருஹஸ்பதியிடம் வேண்டுகிறேன்" என்றான்.(16)
அக்னி, "இந்தப் பிருஹஸ்பதி உன் புரோஹிதராகச் செயல்பட்டால், தேவராஜனின் (இந்திரனின்) ஆசியின் மூலம் தேவ மாளிகையின் உயர்ந்த பகுதியை நீ அடைவாய், மேலும் புகழடையும் நீ நிச்சயம் தேவலோகத்தை வெல்வாய்.(17) மேலும், ஓ! மனிதர்களின் தலைவா, பிருஹஸ்பதி உன் புரோஹிதராகச் செயல்பட்டால், மனிதர்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளையும், தெய்வீக உலகங்களையும், பிரஜாபதியால் உண்டாக்கப்பட்ட உயர்ந்த உலகங்கள் அனைத்தையும், ஏன் தேவர்களின் மொத்த அரசையும் நீ வெல்ல இயன்றவனாவாய்" என்றான்.(18)
சம்வர்த்தர் {அக்னி தேவனிடம்}, "நீ பிருஹஸ்பதியை மருத்தனிடம் அளிப்பதற்காக மீண்டும் ஒருபோதும் வராதே; ஓ! பாவகா, அவ்வாறு நீ செயல்பட்டால் கோபமடையும் நான் என் கடுந்தீயக் கண்களால் உன்னை எரித்துவிடுவேன் என்பதை அறிவாயாக" என்றார்".(19)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "அப்போது அக்னி நெருப்பால் அடையப்போகும் அழிவை அறிந்து, அரச மரத்தின் இலைகளைப் போல நடுங்கிக் கொண்டே தேவர்களிடம் திரும்பிச் சென்றான். பிருஹஸ்பதியோடு வரும் ஆகுதிகளைச் சுமப்பவனை (அக்னியைக்) கண்ட உயர் ஆன்ம சக்ரன் பின்வருமாறு சொன்னான்:"(20)
இந்திரன் {அக்னி தேவனிடம்}, "ஓ! ஜாதவேதா (அக்னியே), என் ஆணையின்படி பிருஹஸ்பதியை மருத்தனிடம் அளிக்கச் சென்றாய். வேள்வியைச் செய்யும் அம்மன்னன் என்ன செய்தான்? அவன் நான் சொன்னதை ஏற்றானா?" என்று கேட்டான்.(21)
அக்னி {இந்திரனிடம்}, "நீ சொன்னதை மருத்தன் ஏற்கவில்லை. என்னால் தூண்டப்பட்ட போது அவன் பிருஹஸ்பதியிடம் கரங்கூப்பி மீண்டும் மீண்டும் சம்வர்த்தரே தன் புரோஹிதராகச் செயல்படுவார் என்று சொன்னான்.(22) மேலும் அவன் உலகம் சார்ந்த, மற்றும் தெய்வீக உலகங்களையும், பிரஜாபதியின் உயர்ந்த உலகங்கள் அனைத்தையும் அடைவதைத் தான் விரும்பவில்லை என்பதையும், அவ்வாறு அவன் நினைத்திருந்தால், இந்திரனின் விதிமுறைகளைத் தானே ஏற்றுக் கொண்டிருப்பான் என்பதையும் உறுதியாகச் சொன்னான்" என்றான்.(23)
இந்திரன், "நீ அந்த மன்னனிடம் திரும்பச் சென்று, அவனைச் சந்தித்து, நான் சொல்லும் முக்கியம் நிறைந்த வார்த்தைகளையும், அவன் அதற்குக் கீழ்ப்படியவில்லையெனில் நான் என் வஜ்ராயுதத்தால் அவனைத் தாக்குவேன் என்பதையும் அவனிடம் சொல்வாயாக." என்றான்.(24)
அக்னி {இந்திரனிடம்}, "ஓ! வாசவா, இந்தக் கந்தர்வர்களின் மன்னன் {இந்தத் திருதராஷ்டிரன்} உன் தூதனாக அங்கே செல்லட்டும். நான் அங்கே செல்ல அஞ்சுகிறேன். ஓ! சக்ரா, தவப்பயிற்சிகளுக்கு அடிமையானவரும், பெரும் கோபத்திலிருப்பவருமான சம்வர்த்தர் சினத்துடன் இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்னார் என்பதை அறிவாயாக.(25) ‘மன்னன் மருத்தனிடம் பிருஹஸ்பதியை அளிப்பதற்காக எவ்வகையிலாவது நீ மீண்டும் இங்கே வந்தால், என் கடுந்தீயக் கண்களால் உன்னை நான் எரித்துவிடுவேன்’ என்று அவர் சொன்னார்" என்றான்.(26)
சக்ரன் {அக்னி தேவனிடம்}, "ஓ! ஜாதவேதா, வேறு பொருட்கள் அனைத்தையும் எரிப்பவன் நீயே, உன்னைச் சாம்பலாகக் குறைக்க வேறு எவராலும் முடியாது. ஓ! ஆகுதிகளைச் சுமப்பவனே, உன்னை நெருங்க உலகமனைத்தும் அஞ்சுகின்றன. உன்னுடைய இந்தச் சொற்கள் நம்பத்தகாதவையாகும்" என்றான்.(27)
அக்னி {இந்திரனிடம்}, "ஓ! சக்ரா, உன் கரங்களின் வலிமையால் நீ சொர்க்கம், பூமி மற்றும் ஆகாயத்தின் ஆட்சிப்பகுதிகளைச் சூழ்ந்து உள்ளடக்கினாய். அவ்வாறிருந்தும், (பழங்காலத்தில்) விருத்திரனால் எவ்வாறு தேவலோகத்தின் அரசுரிமையை உன்னிடம் இருந்து பறிக்க முடிந்தது?" என்று கேட்டான்.(28)
இந்திரன் {அக்னி தேவனிடம்}, "என்னால் என் பகைவர்களை அடங்கச் செய்ய முடியும். நான் விரும்பினால் மலையின் அளவை ஓரணுவாகக்கூட என்னால் குறைக்க முடியும். ஆனால், ஓ! வாஹ்னி, ஒரு பகைவனால் அளிக்கப்படும் சோம பானக் காணிக்கையை நான் ஏற்பதில்லை, பலவீனர்களை வஜ்ராயுதத்தால் நான் தாக்க மாட்டேன் (என்பதால் சில காலத்திற்கு விருத்திரனால் என்னை வெல்ல முடிந்தது). ஆனால் என்னிடம் பகை உண்டாக்கிக் கொள்வதன் மூலம் எந்த மனிதனால் அமைதியாக வாழ முடியும்?(29) நான் காலகேயர்களைப் பூமிக்கு விரட்டிவிட்டேன், தானவர்களைச் சொர்க்கத்தில் இருந்து அகற்றினேன், பிரஹலாதனின் இருப்பைச் சொர்க்கத்தில் முற்றுக்குக் கொண்டு வந்தேன். என்னிடம் பகையைத் தூண்டுவதன் மூலம் எந்த மனிதனால் அமைதியாக வாழ முடியும்?" என்று கேட்டான்.(30)
அக்னி, "ஓ! மஹேந்திரா, பழங்காலத்தில் இரட்டை தேவர்களான அஸ்வினிகளுடன் கூடிய சர்யாதியின் வேள்வியைச் சியவன முனிவர் நடத்தி, சோமக் காணிக்கையைத் தனியாகத் தானே பெற்றுக் கொண்டபோது, கோபத்தில் நிறைந்த நீ சர்யாதியின் வேள்வியைத் தடுக்க முயன்றாய் நினைவிருக்கிறதா?(31) அப்போது உன் வஜ்ரத்தால் சியவனரைப் பலவந்தமாகத் தாக்கினாய். ஓ! புரந்தரா, கோபமடைந்த அந்தப் பிராமணரால், தமது பக்தியின் சக்தியால் வஜ்ராயுதத்துடன் கூடிய உன் கரத்தை முடக்க முடிந்தது.(32) மேலும் சினத்தில் அவர் அனைத்து வடிவங்களையும் ஏற்க வல்லவனும், பயங்கரத் தோற்றம் கொண்டவனும், மதன் என்ற பெயர் கொண்டவனுமான ஓர் அசுரனை உனக்குப் பகைவனாக உண்டாக்கினார். நீ அவனைக் கண்டதும் அச்சத்தால் உன் கண்களை மூடிக் கொண்டாய்.(33) அவனுடைய பெருந்தாடைகளில் ஒன்று பூமியிலும், மற்றொன்று தேவலோகத்திலும் விரிந்திருந்தது. நூறு யோஜனைகள் நீளம் கொண்ட ஆயிரம் கூரிய பற்களுடன் அவன் காணப் பயங்கரனாக இருந்தான்.(34) வெள்ளித் தூண்களைப் போல இருந்த நான்கு முக்கியப் பற்கள் இருநூறு யோஜனை நீளம் கொண்டவையாக இருந்தன. அவன் தன் பற்களைக் கடித்துக் கொண்டும், சூலத்தை உயர்த்திக் கொண்டும் உன்னைக் கொல்லும் நோக்கோடு உன்னைத் தொடர்ந்த போது,(35) அந்தப் பயங்கர ராட்சசனைக் கண்ட நீ, பார்வையாளர்கள் அனைவருக்கும் (பரிதாபம் நிறைந்த) காட்சிப் பொருளானாய். ஓ! தானவர்களைக் கொன்றவனே, அந்த ராட்சசனிடம் கொண்ட அச்சத்தால் கூப்பிய கரங்களுடன் பணிந்து அந்தத் தவசியின் பாதுகாப்பை நீ கேட்டாய்.(36) ஓ! சக்ரா, பிராமணர்களின் வலிமை க்ஷத்திரியர்களுடையதைவிடப் பெரியதாகும். பிராமணர்களைவிட சக்திமிக்கவர்கள் வேறு எவரும் இல்லை. ஓ! சக்ரா, பிராமணர்களின் சக்தியை முறையாக அறிந்த நான், சம்வர்த்தருடன் ஒருபோதும் மோதலை விரும்பவில்லை" என்றான் {அக்னி}.(37)
அஸ்வமேதபர்வம் பகுதி – 09ல் உள்ள சுலோகங்கள் : 37
ஆங்கிலத்தில் | In English |