Indra completed the sacrifice! | Aswamedha-Parva-Section-10 | Mahabharata In Tamil
(அஸ்வமேதிக பர்வம் - 10)
பதிவின் சுருக்கம் : பிருஹஸ்பதியை ஏற்றுக் கொள்ளும்படி மருத்தனுக்குச் சொல்லி அனுப்பிய இந்திரன்; மருத்தன் மறுத்தது; வேள்வியை நிறைவடையச் செய்த இந்திரன்; அங்கிருக்கும் செல்வத்தைக் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; அஸ்வமேத வேள்வியைச் செய்யச் சொன்னது...
இந்திரன் {அக்னி தேவனிடம்}, "அவ்வாறே இருக்கிறது. பிராமணர்களின் வலிமை பெரியது, பிராமணர்களைவிடப் பலம் நிறைந்தவர்கள் வேறு எவரும் இல்லை, ஆனால், அவிக்ஷித் மகனின் {மருத்தனின்} அற்பச் செருக்கை எல்லாம் ஒருபோதும் உள்ளச்சமநிலையுடன் பொறுத்துக் கொள்ள இயலாது. நான் என் வஜ்ரத்தைக் கொண்டு அவனைத் தாக்கப் போகிறேன்.(1) எனவே, ஓ! திருதராஷ்டிரா, நான் சொல்வது போலச் சம்வர்த்தரால் கவனிக்கப்படும் மன்னன் மருத்தனிடம் சென்று, "ஓ! இளவரசே, பிருஹஸ்பதியை நீ உன் ஆன்ம ஆசானாக ஏற்றுக் கொள்வாயாக, இல்லையெனில் நான் என் பயங்கர வஜ்ரத்தால் உன்னைத் தாக்கப் போகிறேன்" என்ற இந்தச் செய்தியை அவனிடம் சொல்வாயாக" என்றான்".(2)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "பிறகு, திருதராஷ்டிரன் அந்த ஏகாதிபதியின் {மருத்தனின்} அரசவைக்குச் சென்று வாசவன் சொன்ன இந்தச் செய்தியைச் சொன்னான்.(3)
{கந்தர்வ மன்னனான} திருதராஷ்டிரன் {மருத்தனிடம்}, "ஓ! மனிதர்களின் தலைவா, இந்திரனின் செய்தியைச் சொல்லும் நோக்கத்துடன் உன்னிடம் வந்திருக்கும் நான் கந்தர்வன் திருதராஷ்டிரன் என்பதை அறிவாயாக. ஓ! மன்னர்களில் சிங்கமே, உயர் ஆன்மா கொண்டவனான அனைத்து உலகங்களின் தலைவன் {இந்திரன்} சொன்ன சொற்களைக் கேட்பாயாக,(4) சிந்தனைக்கெட்டாத சாதனைகளைச் செய்த அவன் (இந்திரன்), "பிருஹஸ்பதியை உன் வேள்வியைச் செய்யும் புரோஹிதராக ஏற்றுக் கொள்வாயாக. நீ என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்கவில்லையெனில் பயங்கரமான என் வஜ்ராயுதத்தால் நான் உன்னைத் தாக்குவேன்" என்பதை மட்டும் சொல்லி அனுப்பினான்" என்றான்.(5)
மருத்தன் {திருதராஷ்டிரனிடம்}, "நீயும், புரந்தரன் {இந்திரன்}, விஷ்வேதேவர்கள், வசுக்கள் மற்றும் அஸ்வினிகள் ஆகியோர் அனைவரும், ஒரு நண்பனை வஞ்சிப்பதன் {மித்ரதுரோகத்தின்} விளைவுகளில் இருந்து தப்பிக்கவே முடியாது என்பதையும், அஃது ஒரு பிராமணரைக் கொலை செய்வதைப் போன்ற பெரும்பாவமாகும் என்பதையும் அறிவீர்கள்.(6) ஓ! இளவரசே, பிருஹஸ்பதியானவர், உயர்ந்த தேவனும், வஜ்ரத்தைத் தாங்கும் உயர்ந்தவனுமான மஹேந்திரனின் புரோகிதராகவே, செயல்படட்டும், சம்வர்த்தர் என் புரோஹிதராகச் செயல்படுவார். அவனது (இந்திரனின்) சொற்களோ, உன்னுடையவையோ உனக்கு உவப்பாக இல்லை" என்றான்.(7)
கந்தர்வன் {திருதராஷ்டிரன்}, "ஓ! இளவரசர்களின் சிங்கமே, வாசவனின் பயங்கரமான போர் அறைகூவல் சொர்க்கத்தில் {ஆகாயத்தில்} முழங்குவதைக் கேட்பாயாக, இந்திரனின் ஒலியைக் கேட்பாயாக. மஹேந்திரன் உன்மீது வெளிப்படையாகவும், உறுதியாகவும் வஜ்ரத்தைப் பயன்படுத்துவான். எனவே, உன் நலத்தைக் குறித்து ஆலோசனை செய்வாயாக. ஏனெனில், அதைச் செய்வதற்குத் தகுந்த நேரமிது" என்றான்".(8)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "திருதராஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், வாசவனின் ஊளை முழக்கத்தைக் கேட்டவனுமான மன்னன் {மருத்தன்} இந்தச் செய்தியை பக்தியில் உறுதிமிக்கவரும், அறம்சார்ந்த மனிதர்கள் அனைவரிலும் உயர்ந்தவருமான சம்வர்த்தரிடம் தெரிவித்தான்.(9)
மருத்தன் {சம்வர்த்தரிடம்}, "காற்றில் மிதக்கும் இந்த மழை மேகம், தற்போது இந்திரன் அருகில் இருப்பதையே நிச்சயம் குறிப்பிடுகிறது. எனவே, ஓ! பிராமணர்களின் இளவரசரே, நான் உம்மிடம் உறைவிடத்தை நாடுகிறேன், ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, இந்திரன் மீது நான் கொண்டுள்ள அச்சத்தை என் மனத்தில் இருந்து அகற்றுவீராக.(10) வஜ்ரதாரி, பயங்கரமானதும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதுமான ஒளியையும், கொண்டு வெளியின் பத்து திக்குகளையும் சூழ்ந்து வருகிறான். மேலும் இந்த வேள்விக் கூட்டத்தில் உள்ள என் உதவியாளர்கள் அனைவரும் அச்சத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர்" என்றான்.(11)
சம்வர்த்தர் {மருத்தனிடம்}, "ஓ! மன்னர்களில் சிங்கமே, சக்ரன் மீது நீ கொண்டு அச்சம் விரைவில் விலகும், இந்தப் பயங்கரத் துன்பத்தை நான் என் மந்திரங்களின் {ஸம்ஸ்தம்பினி என்ற வித்தையின்} மூலம் விரைவில் அகற்றுவேன். அமைதியடைவாயாக, இந்திரனால் வெல்லப்படுவோம் என்ற அச்சமேதும் உனதாக வேண்டாம்.(12) நூறு வேள்விகளைச் செய்த தேவனிடம் நீ அஞ்சுவதற்கு ஏதுமில்லை. நான் என்னிடமுள்ள வசியங்களைப் பயன்படுத்துவேன். ஓ! மன்னா, தேவர்கள் அனைவரின் ஆயுதங்கள் ஏதும் அவர்களுக்குப் பயனளிக்காது.(13) வெளியின் திக்குகள் அனைத்திலும் மின்னல் கீற்றுகள் பாயட்டும், மேகங்களுக்குள் நுழையும் காற்றானது காடுகளுக்கு மத்தியில் மழையைப் பொழியட்டும், இங்கே காணப்படும் பெருவெள்ளமும், சொர்க்கங்களும், மின்னல் கீற்றுகளும் பயனளிக்கப் போவதில்லை, உனக்கு அஞ்சுவதற்கு ஏதுமில்லை,(14) வாசவன் எங்கே விரும்புகிறானோ அங்கே மழையைப் பொழியட்டும், உன் அழிவுக்காக நீர்த்திரள்களுக்கு (மேகங்களுக்கு) மத்தியில் மிதக்கும் தன் பயங்கர வஜ்ரத்தையும் பயன்படுத்தட்டும், வாஹ்னி (அக்னி) தேவன் அனைத்து வழியிலும் உன்னைப் பாதுகாத்து, உன்னை உன் விருப்பங்கள் அனைத்தையும் அடையச் செய்வான்" என்றார்.(15)
மருத்தன், "உளையிடும் காற்றுடன் சேர்ந்து இந்தப் பயங்கர வஜ்ர இடி {இடி முழக்கம்} என் காதுகளுக்குப் பயங்கரமானதாகத் தெரிகிறது. மேலும் என் இதயம் மேலும் மேலும் பீடிக்கப்படுகிறது. ஓ! பிராமணரே, தற்போது எனக்கு மன அமைதி இல்லாமல் போய்விட்டது" என்றான்.(16)
சம்வர்த்தர், "ஓ! மன்னா, பயங்கரமான இந்த இடிமுழக்கத்தால் உன் மனத்தில் எழும் அச்சம் இப்பொது அகலும். காற்றின் உதவியுடன் இடியை நான் அகற்றப் போகிறேன், உன் மனத்தில் இருக்கும் அச்சம் அனைத்தையும் விலக்கி வைத்து விட்டு உன் இதயம் விரும்பும் வரம் ஒன்றை ஏற்பாயாக, நான் அதை உனக்காகச் செய்வேன்" என்றார்.(17)
மருத்தன், "ஓ !பிராமணரே, இந்திரன் திடீரென இந்த வேள்விக்கு நேரடியாக வந்து அவனுக்கு அளிக்கப்படும் காணிக்கை ஏற்க வேண்டும் என்றும், வேறு தேவர்கள் அனைவரும் தங்களுக்குரிய காணிக்கைப் பங்குகளைப் பெற்று, அவர்களுக்கு அளிக்கப்படும் ஆகுதிகளை ஏற்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்" என்றான்.(18)
சம்வர்த்தர், "என்னுடைய மந்திர சக்தியால் நான் இந்திரனை இந்த வேள்விக்கு நேரடியாக ஈர்த்திருக்கிறேன். ஓ! ஏகாதிபதி, இந்த வேள்விக்கு வரும் வேறு தேவர்களால் வழிபடப்பட்டுத் தன் குதிரைகளுடன் வந்து கொண்டிருக்கும் இந்திரனைக் காண்பாயாக" என்றார்.(19)
அப்போது பிற தேவர்களால் கவனிக்கப்பட்ட தேவர்களின் தலைவன் {இந்திரன்}, மிகச் சிறந்த குதிரைகளால் இழுக்கப்படும் தன் தேரைச் செலுத்திக் கொண்டு, அவிக்ஷித் மகனுடைய {மருத்தனுடைய} வேள்விப்பீடத்தை அணுகி, அந்த ஒப்பற்ற ஏகாதிபதியின் சோம ஆகுதிகளைப் பருகினான்.(20) புரோஹிதருடன் கூடிய மன்னன் மருத்தன், தேவர்க்கூட்டத்துடன் வந்திருக்கும் இந்திரனை வரவேற்க நிறைவான மனத்துடன் எழுந்து, சாத்திரங்களின்படி முறையான மற்றும் முதன்மையான கௌரவங்களுடன் அந்தத் தேவர்களின் தலைவனை {இந்திரனை} வரவேற்றான்.(21)
சம்வர்த்தர், "ஓ! இந்திரா, உனக்கு நல்வரவு, ஓ! கல்விமானே, ஓ! பலன் மற்றும் விருத்திரனைக் கொன்றவனே, உன் இருப்பால் இவ்வேள்வி மகத்தானதானது. என்னால் உண்டாக்கப்பட்ட இந்தச் சோமச் சாற்றை நீ மீண்டும் பருகுவாயாக" என்றான்.(22)
மருத்தன், "ஓ! இந்திரா, அன்புடன் என்னை நோக்குவாயாக, உன் இருப்பால் என் வேள்வி முழுமையடைந்தது, மேலும் என் வாழ்வும் நல்விளைவுகளால் அருளப்பட்டிருக்கிறது. ஓ! சூரேந்திரா, பிருஹஸ்பதியின் தம்பியான இந்தச் சிறந்த பிராமணர் என் வேள்விகளைச் செய்வதில் ஈடுபடுகிறார்" என்றான்.(23)
இந்திரன், "பிருஹஸ்பதியின் தம்பியான இந்த உயர்ந்த சக்தி கொண்ட தவசியை உன் புரோஹிதராக நான் அறிவேன், ஓ! ஏகாதிபதி, இவரது அழைப்பின் பேரில் இந்த வேள்விக்கு வந்த நான், உன்னிடம் முழு நிறைவையடைந்தேன். உன்னிடம் நான் கொண்டிருந்த எதிர்ப்புணர்வு அழிந்தது" என்றான்.(24)
சம்வர்த்தர், "ஓ! தேவர்களின் இளவரசே, "நீ எங்களிடம் நிறைவடைந்திருந்தால், இந்த வேள்விக்கான அனைத்து ஆணைகளையும் நீயே கொடுப்பாயாக, ஓ! சூரேந்திரா, ஓ! தேவா, இஃது உன்னால் ஆனது என்பதை உலகம் அனைத்தும் அறிந்து கொள்ளும் வகையில் (தேவர்களுக்கான) வேள்விப்பங்குகளை நீயே விதிப்பாயாக" என்றார்".(25)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "அங்கிரஸ் மகனால் {சம்வர்த்தரால்} இவ்வேறு கேட்டுக்கொள்ளப்பட்ட சக்ரன், ஓவியத்தில் மகத்தான வகையில் தெரிவது போன்ற ஆயிரம் சிறந்த அறைகளுடன் கூடிய ஒரு சபாமண்டபத்தைக் கட்டுமாறும், பெரியதும், நீடித்து நிலைக்கக்கூடியதும், கந்தர்வர்கள் மற்றும், அப்சரஸ்கள் ஏறிவரப் பயன்படக்கூடியதுமான படிக்கட்டுகளை விரைவாக நிறைவடையச் செய்யுமாறும், சொர்க்கத்தில் இந்திரனின் அரண்மனையில் உள்ளதைப் போன்று அப்சரஸ்கள் நடனம் ஆடுவதற்காக வேள்விக்களத்தில் ஒரு பகுதியை ஒதுக்குமாறும் தேவர்களுக்கு ஆணையிட்டான்.(26,27)
ஓ! மன்னா, இவ்வாறு ஆணையிடப்பட்ட புகழ்பெற்ற சொர்க்கவாசிகள் சக்ரனின் ஆணைகளை விரைவாக நிறைவேற்றினர். அப்போது, ஓ! மன்னா, புகழப்பட்டவனும், முழுமையாக நிறைவடைந்தவனுமான இந்திரன் மன்னன் மருத்தனிடம்,(28) "ஓ! இளவரசே, உனக்கு முன்பு சென்ற உன் மூதாதையர்களும், வேறு தேவர்களும் இந்த வேள்வியில் உன்னுடன் தொடர்பு கொண்டு, உன்னால் அளிக்கப்பட்ட காணிக்கைகளை ஏற்று முழுமையாக நிறைவடைந்திருக்கின்றனர்.(29) ஓ! மன்னா, மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்கள், அக்னியுடன் தொடர்புடைய {அக்னிக்குக் கொடுக்கப்பட வேண்டிய} சிவப்புக் காளையையும், விஷ்வேதேவர்களுடன் தொடர்புடைய பல நிறத் தோல் கொண்டதும், முறையாகப் புனிதமாக்கப்பட்டதுமான நீல காளையையும் வேள்விப்பீடத்தில் காணிக்கையளிக்கட்டும் {ஆலம்பனம் செய்யட்டும்}" என்றான்.(30)
அப்போது, ஓ! மன்னா, அந்த வேள்வி விழா காந்தியில் வளர்ந்தது, அங்கே தேவர்கள் தாங்களே உணவைத் திரட்டினர், தேவர்களின் தலைவனும், {பச்சைக்} குதிரைகளைக் கொண்டவனுமான சக்ரன் {இந்திரன்}, பிராமணர்களால் வழிபடப்பட்டவனாக வேள்விக்கு உதவி செய்பவனானான்.(31) அப்போது வேள்விப் பீடத்தில் ஏறியவரும், சுடர்மிக்க நெருப்பில் இரண்டாவது உடலைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தவருமான சம்வர்த்தர், தேவர்க்கூட்டங்களை உரக்க அழைத்து, புனித மந்திரங்களைச் சொல்லி நெருப்பில் தெளிந்த நெய்யைக் காணிக்கையளித்தார்.(32) பிறகு அந்தப் பலனைக் கொன்றவன் {இந்திரன்} முதலில் சோமச் சாற்றைப் பருகினான், அதன் பிறகு தேவர்க்கூட்டங்கள் சோமத்தைப் பருகினர். அதன் பிறகு மன்னனின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு அவர்கள் அனைவரும் முழு நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் திரும்பிச் சென்றனர்.(33)
பிறகு, பகைவர்களைக் கொல்பவனான அந்த ஏகாதிபதி, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், பல்வேறு இடங்களில் தங்கக் குவியல்களை வைத்து, பிராமணர்களுக்கு அபரிமிதமான செல்வத்தைக் கொடுத்து செல்வத்தின் தேவனான குபேரனைப் போல மகத்தானவனாகத் தெரிந்தான்.(34) பொங்கும் இதயத்துடன் கூடிய மன்னன், பல்வேறு வகைச் செல்வங்களால் தன் கருவூலத்தை நிறைத்து, ஆன்ம ஆசானின் அனுமதியுடன் (தன் நாட்டுக்குத்) திரும்பி, கடலின் எல்லைகள் வரை நீண்டிருந்த மொத்த ஆட்சிப்பகுதியையும் தொடர்ந்து ஆட்சி செய்தான்.(35) இவ்வுலகில் இவ்வளவு அறம் சார்ந்தவனாக இருந்த அம்மன்னனின் வேள்வியில் அபரிமிதமான அளவில் தங்கம் திரட்டப்பட்டது, ஓ! இளவரசே, இப்போது நீ அந்தத் தங்கத்தைத் திரட்டி, முறையான சடங்குகளுடன் தேவர்களை வழிபட்டு இந்த வேள்வியைச் செய்வாயாக" என்றார் {வியாசர்}".(36)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அப்போது சத்தியவதி மகனின் (வியாசரின்) இந்தப் பேச்சைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த பாண்டவ இளவரசனான யுதிஷ்டிரன், அந்த வளங்களைக் கொண்டு தன் வேள்வியைச் செய்ய விரும்பி, தன் அமைச்சர்களுடன் மீண்டும் மீண்டும் ஆலோசனை செய்தான்".(37)
அஸ்வமேதபர்வம் பகுதி – 10ல் உள்ள சுலோகங்கள் : 37
ஆங்கிலத்தில் | In English |