The war between Indra and Vritra! | Aswamedha-Parva-Section-11 | Mahabharata In Tamil
(அஸ்வமேதிக பர்வம் - 11)
பதிவின் சுருக்கம் : விருத்திரனுக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த போரைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அற்புதச் செயல்களைச் செய்யும் வியாசர் மன்னனுடனான {யுதிஷ்டிரருடனான} தமது பேச்சை நிறைவு செய்த போது, உயர்ந்த பலம் கொண்டவனான வசுதேவர் மகன் (கிருஷ்ணன்) அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} பேசினான். பிருதையின் மகனான அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மனம் பீடிக்கப்பட்டவனாகவும், உறவினர்களற்றவனாகவும், போரில் கொல்லப்பட்ட உற்றாருடையவனாகவும் கிரகணத்தால் இருளடைந்த சூரியனைப் போன்றோ, புகையும் நெருப்பைப் போலவோ இருப்பவனாகவும், விழுந்த சிகரம் போலத் தெரிபவனாகவும் இருப்பதை அறிந்த விருஷ்ணி குலத் தூணானவன் (கிருஷ்ணன்), தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} ஆறுதல் அளிக்கும் வகையில் அவனிடம் இவ்வாறு பேசினான்.(1-3)
வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, "இதயக் கோணல்கள் அனைத்தும் அழிவுக்கே (நித்திய தண்டனைக்கே) வழிவகுக்கும், மேலும் ஒழுக்கமனைத்தும் பிரம்மத்திற்கே (ஆன்மச் சிறப்புக்கே) வழிகுக்கும். இதுவே, இது மட்டுமே உண்மை ஞானங்கள் அனைத்தின் குறிக்கோளும், நோக்கமுமாகும். (இதைப் புரிந்து கொண்டவனை) மனத்தின் கவனச்சிதறலால் என்ன செய்துவிட முடியும்?(4) உமது சொந்த சதைக்குள் {உடலுக்குள்} இன்னும் மறைந்திருக்கும் பகைவர்களை நீர் அறியவில்லை என்பதால், உமது கர்மமும் ஒழியவில்லை, உமது பகைவர்களும் அடக்கப்படவில்லை.(5) (எனவே) இந்திரனுக்கும், விருத்திரனுக்கும் இடையில் நடந்த போர் குறித்த கதையை நடந்தவாறே, அதனை நான் கேட்டவாறே உண்மையில் உமக்கு உரைக்கப் போகிறேன்.(6)
பழங்காலத்தில், ஓ! மன்னா, பிருத்வியானது (பூமியானது) விருத்திரனால் சூழப்பட்டது. மணங்கள் அனைத்தின் இருக்கையாக இருக்கும் பூமிக்குரிய பொருள் {தன்மை} இவ்வாறு பிரிக்கப்பட்டதால், அனைத்துப் பக்கங்களிலும் கெட்ட மணங்கள் {துர்நாற்றங்கள்} எழுந்தன. நூறு வேள்விகளைச் செய்தவன் (இந்திரன்) இச்செயலால் மிகவும் சினமடைந்தவனாக விருத்திரன் மீது தன் வஜ்ராயுதத்தை ஏவினான்.(7,8)
வலிமைமிக்கவனான இந்திரனின் வஜ்ராயுத்தால் ஆழமாகக் காயமடைந்த விருத்திரன் (நீர்நிலைகளுக்குள்) நுழைந்தான். அவ்வாறு செய்ததால் அவன் அவற்றின் தன்மைகளை அழித்தான்.(9) விருத்திரனால் நீர்நிலைகள் கைப்பற்றப்பட்டதும், அவற்றின் நீர்த்தன்மைகள் அவற்றைவிட்டு அகன்றன. இதனால் பெருங்கோபம் அடைந்த இந்திரன் மீண்டும் தன் வஜ்ராயுதத்தால் அவனைத் தாக்கினான்.(10)
மிகப்பெரும் பலசாலியான இந்திரனின் வஜ்ரத்தால் தாக்கப்பட்ட அவன் (விருத்திரன்) ஜோதிக்குள் (ஒளிப்பொருளுக்குள்) தஞ்சம்புகுந்து, அதன் உள்ளார்ந்த இயல்பைச் சுருக்கினான்.(11) விருத்திரனால் மூழ்கடிக்கப்பட்ட ஒளிரும் பொருள் அதன் தன்மை, நிறம் மற்றும் வடிவத்தை இழந்ததும்(12) கோபம் நிறைந்த இந்திரன் மீண்டும் தன் வஜ்ரத்தை அவன் மேல் ஏவினான்.
அளவற்ற சக்தி கொண்ட இந்திரனால் மீண்டும் இவ்வாறு காயமடைந்த(13) விருந்திரன், திடீரென வாயுவுக்குள் நுழைந்து, அதன் உள்ளார்ந்த இயல்பைக் கெடுத்தான்.(14) விருத்திரனால் ஆட்கொள்ளப்பட்ட அந்தப் பொருள் {வாயு} அதன் தன்மையையும், தீண்டலையும் இழந்தது. மீண்டும் கோபத்தால் நிறைந்த இந்திரன், அவன் மீண்டும் தன் வஜ்ரத்தை வீசினான்.
அந்த வலிமைமிக்கவனால் (இந்திரனால்) காயமடைந்த அவன் ஆகாசத்தை (வெளியை) மூழ்கடித்து அதன் உள்ளார்ந்த தன்மையைப் பறித்தான். விருத்திரனால் மூழ்கடிக்கப்பட்ட ஆகாசத்தின் இயல்பு, ஒலி ஆகியவை அழிந்தன. நூறு வேள்விகளைச் செய்த தேவன் இதனால் பெருஞ்சினம் கொண்டு அவனை மீண்டும் தன் வஜ்ரத்தால் தாக்கினான்.(15,16)
வலிமைமிக்க இந்திரனால் இவ்வாறு தாக்கப்பட்ட அவன் {விருத்திரன்} திடீரென (சக்ரனின் {இந்திரனின்}) உடலுக்குள் நுழைந்து அதன் முக்கியப் பண்புகளை அபகரித்தான்.(17) விருத்திரனால் பீடிக்கப்பட்ட அவன் {இந்திரன்} பெரும் மாயையில் நிறைந்திருந்தான்.
ஓ! மதிப்பிற்குரிய ஐயா, பாரதக் குலத்தில் பெரும் வலிமைமிக்கவரே,(18) (அவன் இவ்வாறு பீடிக்கப்பட்டபோது) வசிஷ்டர் அவனுக்கு ஆறுதலளித்தார் என்றும், நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, தன் உடலுக்குள் இருந்த விருத்திரனை தன் புலப்படாத வஜ்ரத்தின் மூலம் கொன்றான் என்று கேள்விப்படுகிறோம். ஓ! இளவரசரே, இந்தத் தெய்வீக ரகசியம் சக்ரனால் பெருந்தவசிகளுக்குச் சொல்லப்பட்டது, பதிலுக்கு அவர்கள் அஃதை எனக்குச் சொன்னார்கள்" என்றான் {கிருஷ்ணன்}.(19,20)
அஸ்வமேதபர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |