Means to heal diseases! | Aswamedha-Parva-Section-12 | Mahabharata In Tamil
(அஸ்வமேதிக பர்வம் - 12)
பதிவின் சுருக்கம் : உடல் மற்றும் மன நோய்களைப் போக்கும் வழிமுறைகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...
வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, "உடல் சார்ந்து {சாரீரம்}, மனம் சார்ந்து {மானஸம்} என இருவகை நோய்கள் உள்ளன. உடலும், மனமும் ஒன்றோடொன்று செயல்பரிமாற்றம் செய்து கொள்ளும்போது, அவை {நோய்கள்} உண்டாகின்றன. மேலும் அவ்விரண்டின் தொடர்பில்லாமல் ஒருபோதும் அவை எழுவதில்லை.(1) உடலில் உண்டான நோய் உடல்நோய் என்றும், மனத்தை இருக்கையாகக் கொண்டது மன நோய் என்றும் அறியப்படுகின்றன.(2) ஓ! மன்னா, குளிர், வெப்பம் (சளி {கபம்} மற்றும் பித்தம்), காற்றுமயவுடனீர் {வாதம்} ஆகியவை {அதாவது வாதம், பித்தம், கபம் ஆகியவை} உடலில் தோன்றும் முக்கிய மாற்றங்களாகும், இந்த உடநீர்கள் சமமாகப் பிரிந்து, முறையான அளவுகளில் இருக்கும்போது அவை உடல்நலத்தைக் குறிக்கும் நல்ல அறிகுறிகளாகின்றன.(3) வெப்ப உடனீர்கள் குளிர்ச்சியாலும், குளிர் உடனீர்கள் வெப்பத்தாலும் செயல்படுகின்றன (தணிக்கப்படுகின்றன). சத்வம், ரஜஸ், தமஸ் என்பவை ஆன்ம குணங்களாகும்,(4) உரிய அளவுகளில் அவற்றின் இருப்பு (மன) நலத்தைக் குறிக்கிறது என்று கல்விமான்களால் சொல்லப்படுகிறது. ஆனால், இவை மூன்றில் ஏதாவதொன்று மேம்பட்டால், (சமநிலையை மீட்டெடுக்க) சில தீர்வுகள் இருக்கின்றன.(5)
மகிழ்ச்சி கவலையாலும், கவலை மகிழ்ச்சியாலும் வெல்லப்படுகின்றன. கவலையால் பீடிக்கப்பட்ட மக்கள் சிலர் (கடந்தகால) மகிழ்ச்சியை நினைவுகூர விரும்புகின்றனர், அதே வேளையில் பிறரோ மகிழ்ச்சியை அனுபவிக்கும்போது, கடந்த காலக் கவலையை நினைவுகூர விரும்புகின்றனர்.(6) ஆனால் நீரோ, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, உமது கவலைகளையும், உமது மகிழ்ச்சியையும் நினைவுகூர விரும்பவில்லை எனும்போது, கவலை என்ற இந்த மாயையைத் தவிர நீர் வேறு எதை நினைவுகூர விரும்புகிறீர்? அல்லது, ஓ! பிருதையின் மகனே, உமது உள்ளார்ந்த இயல்பாக இருக்கும் இதன் மூலம்(7) நீர் தற்செயலாக வெல்லப்படுகிறீரா?
மாதவிடாய் காலத்தில், சபா மண்டபத்தில் பாண்டவர்கள் அனைவரின் முன்னிலும் தன் உடலை மறைத்துக் கொள்ள ஒரேயொரு துண்டுத் துணியுடன் கிருஷ்ணை {திரௌபதி} நின்று கொண்டிருந்த அந்தப் பரிதாபக்காட்சியை நீர் உமது மனத்தில் நினைவுகூர விரும்பவில்லை. நகரத்தை விட்டுப் புறப்பட்டு, நாடு கடந்து, மான் தோலை உமது ஆடையாகக் கொண்டு, பெருங்காட்டில் நீர் திரிந்ததை நினைத்துப் பார்க்கமாட்டீர், அதேபோல, ஜடாசுரனிடம் அடைந்த துன்பம், சித்திரசேனனுடனான போர், சைந்தவர்களால் நீர் அடைந்த துன்பங்கள் ஆகியவற்றையும் நீர் உமது மனத்தில் நினைவுகூரமாட்டீர்.(8-11) ஓ! பிருதையின் மகனே, பகைவர்களை வென்றவரே, நாடு கடத்தப்பட்டு, முற்றான தலைமறைவு வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தபோது கீசகனால் திரௌபதி உதைக்கப்பட்டதையோ,(12) உமக்கும், துரோணருக்கும், பீஷ்மருக்கும் இடையில் நடைபெற்ற போர் நிகழ்வுகளையோ நீர் நினைவுகூர்வதும் முறையாகாது. ஒவ்வொருவரும் தனியாக மனத்தால் எதிர்த்துப் போரிடுவதற்கான நேரம் இப்போது வாய்த்திருக்கிறது[1].(13)
[1] கும்பகோணம் பதிப்பில், "துரோணருடனும், பீஷ்மருடனும் உமக்கு யுத்தம் நேர்ந்தது போல, அகங்காரமொன்றுடன் செய்ய வேண்டிய யுத்தமானது உமக்கு ஸமீபித்திருக்கிறது" என்றிருக்கிறது.
எனவே, ஓ! பாரதகுலத்தின் தலைவரே, உமது மனத்திற்கு எதிராகப் போரிடத் தயாராவீராக, நுண்மயமாதல் {தியானம் செய்தல்} மற்றும், உமது சொந்த கர்மத்தின் தகுதியால் புரியாத புதிராக இருப்பதன் (இருக்கும் மனத்தின்) அடுத்தக் கரையை நீர் அடைவீராக.(14) இந்தப் போரில் உமக்கு ஏவுகணைகளோ, நண்பர்களோ, பணியாட்களோ தேவையில்லை. தனியாகப் போரிட வேண்டிய போருக்கான காலம் இப்போது வாய்த்திருக்கிறது.(15) இந்தப் போராட்டத்தில் வெல்லப்பட்டால், நீர் மிக அவலமான நிலையை அடைவீர், ஓ! குந்தியின் மகனே, இஃதை அறிந்து வெற்றியை அடையும்படி செயல்படுவீராக.(16) அனைத்து உயிரினங்களின் விதியையும் இந்த ஞானத்தையும் அறிந்து கொண்டு, உமது மூதாதையரின் ஒழுக்கத்தைப் பின்பற்றி முறையாக உமது நாட்டை ஆள்வீராக" என்றான் {கிருஷ்ணன்}.(17)
அஸ்வமேதபர்வம் பகுதி – 12ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |