Yudhishthira entered Hasitnapur! | Aswamedha-Parva-Section-14 | Mahabharata In Tamil
(அஸ்வமேதிக பர்வம் - 14)
பதிவின் சுருக்கம் : வியாசர் முதலியோர் யுதிஷ்டிரனைத் தேற்றியது; பீஷ்மர் முதலியோருக்கு ஈமச் சடங்குகளைச் செய்து ஹஸ்தினாபுரம் திரும்பிய யுதிஷ்டிரன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "நண்பர்களை இழந்த அரசமுனி யுதிஷ்டிரன், பெரும் தவத்தகுதிகளைக் கொண்ட இந்த முனிவர்களால் இவ்வாறு ஆறுதல் சொல்லப்பட்டான்.(1) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, வழிபடத்தகுந்த விஷ்டரஸ்ரவனாலும் {கிருஷ்ணனாலும்}, கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, தேவஸ்தானர், நாரதர், பீமன், நகுலன், கிருஷ்ணை (திரௌபதி), சகாதேவன், புத்திமானான விஜயன் {அர்ஜுனன்} ஆகியோராலும், இன்னும் பிற பெரும் மனிதர்களாலும், சாஸ்திரங்களை நன்கு அறிந்த பிராமணர்களாலும் உற்சாகமளிக்கப்பட்ட அந்த மனிதர்களின் தலைவன் {யுதிஷ்டிரன்}, தனது மன நோய்கள், தன் அன்புக்குரிய உறவினர்களின் மரணத்தால் எழுந்த கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டான்.(2-4)
இறந்து போன தன் நண்பர்களுக்கான ஈமச் சடங்குகளைச் செய்த அந்த ஏகாதிபதி யுதிஷ்டிரன், பிராமணர்கள் மற்றும் தேவர்களைக் கௌரவித்து, கடல்களைக் கச்சையாகக் கொண்ட பூமியின் அரசுரிமையைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான்.(5) தன் நாட்டை மீட்ட அந்தக் குரு இளவரசன் {யுதிஷ்டிரன்}, அமைதியான மனத்துடன் கூடியவனாக, அங்கிருந்த வியாசர், நாரதர் மற்றும் பிற தவசிகளிடம் இவ்வாறு சொன்னான்.(6)
{யுதிஷ்டிரன்}, "பெரியவர்களும், புராதனமானவர்களும், முதிர்ந்தவர்களுமான உங்களைப் போன்ற தவசிகளின் வார்த்தைகளால் ஆறுதலடைந்தேன், இப்போது கவலைக்கான எந்தக் காரணமும் எனக்கில்லை.(7) அதேபோல, நான் பெருஞ்செல்வத்தை அடைந்திருக்கிறேன், அதைக் கொண்டு தேவர்களை வழிபடுவேன். எனவே, உங்கள் துணையுடன் நான் இப்போது அந்த வேள்வியைச் செய்வேன்.(8) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, அந்த (இமாலயப்) பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது என்று நாம் கேள்விப்படுகிறோம். எனவே, ஓ! பிராமணரே, தவசியே, பாட்டனே, உமது பாதுகாப்பின் கீழ் நாங்கள் இமய மலைகளைப் பாதுகாப்பாக அடையும் வகையில் ஆணையிடுவீராக. நான் செய்யப் போகும் வேள்வி முழுமையாக உமது கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது, மேலும், துதிக்கத்தகுந்த தெய்வீக முனிவரான நாரதர் மற்றும் தேவஸ்தானர் ஆகியோரும் எங்கள் நலத்திற்கான நல்ல பொருள் பொதிந்த சிறந்த சொற்களைச் சொல்லியிருக்கின்றனர்.(9,10) பெருஞ்சோதனைகளும், துன்பங்களும் நிறைந்த காலத்தில் பேறற்ற எந்த மனிதனும், அறம்சார்ந்த மனிதர்களால் அங்கீகரிக்கப்படும் இத்தகைய ஆசான்கள் மற்றும் நண்பர்களின் தொண்டைப் பெறும் நற்பேற்றைப் பெற்றதில்லை" {என்றான் யுதிஷ்டிரன்}.(11)
மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பெருந்தவசிகள், மன்னனிடமும் {யுதிஷ்டிரனிடமும்}, கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனிடமும் இமய மலைப் பகுதிகளுக்குச் செல்லுமாறு ஆணையிட்டுவிட்டு, அங்கே கூடியிருந்த கூட்டத்தின் முன்னிலையே மறைந்து போனார்கள். அதன்பிறகு, தர்மனின் அரச மகனான மன்னன் {யுதிஷ்டிரன்} சற்று நேரம் அங்கே அமர்ந்திருந்தான்.(12,13) பீஷ்மர் மாண்டதன் விளைவால் பாண்டவர்கள் அப்போது அவருடைய ஈமச் சடங்குகளைச் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இவ்வாறு அவர்கள் ஈடுபட்டிருந்தபோது, பீஷ்மர், கர்ணன் மற்றும் முதன்மையான பிற கௌரவர்களின் சடலங்களுக்கு இறுதிச் சடங்குகளில் {உத்தரக்கிரியைச் செய்வதில்} பிராமணர்களுக்கு அவர்கள் பெருங்கொடைகளை அளித்ததால் நெடுங்காலம் கடந்ததைப் போலத் தெரிந்தது. அப்போது அந்தக் குருகுல வழித்தோன்றல்களில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்},(14,15) (போரில் கொல்லப்பட்ட வீரர்களுக்கான) ஈமச்சடங்குகளைத் திருதராஷ்டிரனோடு சேர்ந்து செய்து, பிராமணர்களுக்கு அபரிமிதமான செல்வத்தைக் கொடையளிதான். முன்னே செல்லும் திருதராஷ்டிரனுடன் கூடிய அந்தப் பாண்டவத் தலைவன் {யுதிஷ்டிரன்}(16) ஹஸ்தினாபுர நகரத்திற்குள் நுழைந்தான். ஞானக்கண்களைக் கொண்டவனும், தன் பெரியப்பாவுமான அரசனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஆறுதல் சொன்ன அந்த அறம்சார்ந்த இளவரசன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகளுடன் சேர்ந்து பூமியைத் தொடர்ந்து ஆண்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(17,18)
அஸ்வமேதபர்வம் பகுதி – 14ல் உள்ள சுலோகங்கள் : 18
ஆங்கிலத்தில் | In English |