Tuesday, January 21, 2020

நிறைவின் விளிம்பில் - சுவடுகளைத் தேடி

இந்த மொழிபெயர்ப்பைத் தொடங்குவதற்கு முன் செய்த முன்னுரையில், சோ அவர்களின் "மஹாபாரதம் பேசுகிறது" வாங்க வேண்டுமெனக் காசு கேட்ட போது, "இவ்வளவெல்லாம் செலவு செய்யக்கூடாதுப்பா" என அம்மா சொன்னார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். இன்று எவரும் எந்தச் செலவுமின்றி முழு மஹாபாரதத்தையும் இணையத்தில் படிக்கலாம் என்ற நிலை வாய்த்திருக்கிறது. இதில் காலத்தின் கருவியாகப் பயன்பட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.


அனுதினமும் மஹாபாரதத்தையும், இராமாயணத்தையும் பாடல்களாகப் பாடியே எங்களைக் கொஞ்சி வந்த அன்பம்மா, அன்பப்பா {பாட்டி, தாத்தா}; வசவென்றாலும் மஹாபாரதக் கதை சொல்லி எங்களை "வையும்" அம்மா; அம்மாவை வைவதற்காக மஹாபாரதத்தை இழுக்கும் அப்பா ஆகியோர் இன்று இல்லை. நாளுக்கு நாள் ஏதோ ஒரு புராணக் கதையைச் சொல்லும் சித்தி மட்டும் இப்போது துணை. இவர்களனைவரையும் போல நான், என் பிள்ளைகளுக்கோ, எதிர்காலப் பேரப்பிள்ளைகளுக்கோ பொறுமையாக அமர்ந்து சொல்வேன் என்ற நம்பிக்கை மிகக் குறைவே. மற்றவர்களின் நிலையும் என்னைப் போன்றதுதான் என்பதை அறிவேன். இந்த மொழிபெயர்ப்பு அந்த வெற்றிடத்தை இட்டு நிரப்பும் என நம்புகிறேன்.

தந்தை நாத்திகர்; தமிழாசிரியர். அம்மா தெய்வ பக்தி மிக்கவர். அம்மாவும் தமிழாசிரியர். பண்டிகை தினங்களிலும், வேறு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் விவாதங்களைக் கேட்டே வளர்ந்தேன். அந்தச் சிறு வயதில் எனக்கு வாய்த்த நண்பர்களும் நாத்திகர்களின் பிள்ளைகளாகவே அமைந்தார்கள். நான் படித்தது ஒரு கிறிஸ்தவப் பள்ளி. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடைபெறும் விவாதங்களில் நான் பெரும்பாலும் அப்பாவின் பக்கமே நிற்பேன். அம்மாவும் தமிழாசிரியர் என்பதை மறந்து, அவர் அறியாமையில் பேசுகிறார் என்று நினைப்பேன். இவையெல்லாம் என் பதினைந்து வயதுக்குள் நேர்ந்தவை.

என்றோ விளையாட்டுக்கு ஆளில்லாமல் வெறுமையை உணர்ந்த ஒரு நாளில் "ராஜாஜியின் வியாசர் விருந்துகையில் அகப்பட்டது. நேரம் கழிவதற்கெனப் படிக்கப் போய் மிகக் குறைந்த காலத்திலேயே படித்து முடித்துவிட்டேன். போதாதற்கு அப்பா வாங்கும் துக்ளக்கில் பி.ஆர்.சோப்ராவின் டிவி மஹாபாரத வசனங்கள், அதன் பிறகு, "மஹாபாரதம் பேசுகிறது". அதன்பிறகு நேர்ந்த விவாதங்களில் நான் எப்போதும் அம்மாவின் பக்கமே நிற்க நேர்ந்தது. படித்து முடித்துப் பணிக்குச் சென்று, நண்பனோடு சேர்ந்து ஃபேப்ரிகேஷன் தொழில் செய்து, அதன் பிறகு ஏற்பட்ட தொழில் முடக்கத்தில் சொந்தமாகக் கணினி வரைகலை மையம் தொடங்கும் காலத்திற்குள் அமைந்த நண்பர்கள் பெரும்பாலும் கம்யூனிஸ்டுகளாகவே இருந்தனர். அதற்குள் இணையத்தில் கங்குலியின் ஆங்கில மஹாபாரதம் முழுவதையும் படித்திருந்தேன்.

ஒரு கம்யூனிஸ்ட் நண்பர் "அடிமைகளின் வெற்றிப் பயணம்" என்றொரு புத்தகம் எழுதினார். அந்தப் புத்தகத்திற்கு நானே கணினி அச்சுக்கோவையும், வடிவமைப்பும் செய்து கொடுத்தேன். அதில் ஆங்காங்கே இராமாயணம், மற்றும் மஹாபாரதத்தில் இருந்து கதைகளை எடுத்து எள்ளி நகையாடியிருந்தார். தட்டெழுதும்போதே "இது தவறு தோழர்" என்று அவரிடம் சொன்னேன். அவர் ஏற்கவில்லை. கங்குலியின் ஆங்கிலப் பதிப்பில் இருந்து அவருக்கு அச்செடுத்துக் கொடுத்தேன். ஆங்கிலத்தில் இருக்கிறது, எனக்கு நேரம் போதாது என்றார். அவருக்காக ஒன்றிரண்டு அத்யாயங்களை மொழிபெயர்த்துக் கொடுத்தேன். அப்போதும் அவர் ஏற்கவில்லை. புத்தகம் அப்படியேதான் வெளிவந்தது. மற்றொரு கம்யூனிஸ்ட் நண்பர், ஆண்டுவிழா மலர் ஒன்றை நான் வடிவமைத்துக் கொடுத்ததற்கான நினைவுப்பரிசாக "இராமாயணத்தில் புரட்டு" மற்றும் மஹாபாரதம் சம்பந்தமான ஏதோ ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். கூகிளின் பிளாகர் சேவையை அப்போது பயன்படுத்தத் தொடங்கியிருந்தேன். அப்போது அந்த இரண்டு புத்தகத்திற்கும் விரிவான மறுப்பை வெளியிட்டேன். அதற்காகவும் சில பகுதிகளை மொழிபெயர்த்திருந்தேன். அந்த நிலையில்தான், "ஏன் மஹாபாரதத்தை நாமே மொழிபெயர்க்கக்கூடாது? அனைவருக்கும் எட்டும் வகையில் மஹாபாரதம் இல்லாததால்தானே, இவர்கள் இவ்வாறு கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மிக மெதுவாக என்றாலும் ஒவ்வொரு பகுதியாகச் செய்யலாமே என்று விளையாட்டாகத் தொடங்கியதுதான் இப்போது கிட்டத்தட்ட 16,000 பக்கங்கள் நீளும் மொழிபெயர்ப்பாக நிறைவடைந்திருக்கிறது.

03.01.2013-ல் தொடங்கிய இந்த மொழிபெயர்ப்புப் பணி 14.01.2020-ல் நிறைவடைந்தது. 2568 நாட்கள், அஃதாவது ஏழு வருடங்களும், பனிரெண்டு நாட்களும் ஆகியிருக்கின்றன. மொத்தம் உள்ள 18 பர்வங்களில் 100 உபபர்வங்கள், 2116 அத்யாயங்கள், கிட்டத்தட்ட 86,000 ஸ்லோகங்களை உள்ளடக்கியது மஹாபாரதம். ஆற்றின் உயிரோட்டம் போலவே, மஹாபாரதமும் தன்னளவில் உயிரோட்டம் கொண்டது என்று கருதுகிறேன். மொழிபெயர்ப்பை நாம் செய்யவில்லை. மஹாபாரதம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது என்ற எண்ணமே இந்த ஏழு வருடங்களும் என் மனத்தை நிறைத்திருந்தது.

இப்பணியைத் தொடங்கிய போது, தமிழில் ஏற்கனவே கும்பகோணம் பதிப்பின் இருப்பை நான் அறியவில்லை. ஒருவேளை எனக்கு அது தெரிந்திருந்தால் இந்த மொழிபெயர்ப்பைச் செய்வதில் நாட்டம் ஏற்பட்டிருக்காது. ஆதிபர்வ நிறைவின் நெருக்கத்தில் இப்பதிப்பின் இருப்பு சில நண்பர்களால் சுட்டிக்காட்டப்பட்ட போதும் இந்த மொழிபெயர்ப்பை நிறுத்திவிடலாம் என்றுதான் நினைத்தேன். இல்லாததைக் கொண்டுவருவதில் பயனுண்டு. இருப்பதையே மீண்டும் ஏன் செய்ய வேண்டும்? என் நண்பர் ஜெயவேலன் இதற்கு உடன்படவில்லை. "நீங்கள் மொழிபெயர்ப்பது, வட பாடத்தின்படி வங்க மற்றும் பம்பாய் பதிப்புகளை ஒட்டி செய்யப்பட்ட கங்குலியின் பதிப்பு. கும்பகோணம் பதிப்புத் தென்பாடம். மேலும் நீங்கள் செய்வது தற்கால நடையில் இருக்கிறது. இணையத்தில் திறந்த நிலையிலேயே எப்போதும் இருக்கப் போகிறது. நீங்கள் நிச்சயம் தொடர வேண்டும். தொடங்கியதை முடியுங்கள்" என்றார். ஆதிபர்வத்தோடு நிறைவடைய வேண்டிய இந்தப் பணியை அவரது வேண்டுகோளின்படியே மீண்டும் தொடர்ந்தேன்.

08.09.2013 அன்று ஆதி பர்வம் கையோடு நண்பர் திரு.ஜெயவேலன் அவர்கள் ஓர் அத்யாயத்திற்கு ரூ.100/- என மொத்தம் ரூ.23,600/- கொடுத்தார். இந்த வகையில் இன்று வரை ரூ.2,11,600/- கொடுத்திருக்கிறார். இதுபோக வலைத்தளத்தை நிர்வகிப்பதற்கும், முகநூல் விளம்பரங்களுக்குமெனத் தொடர்ந்து செலவு செய்து கொண்டே இருக்கிறார். இதற்கு மேலும் அன்றன்று இடும் பதிவுகளைத் திருத்தியும், வண்ணம் மாற்றியும், உரிய இடங்களில் உரிய படங்களைப் பொருத்தியும் பேருதவி செய்திருக்கிறார். அவரது மனைவி திருமதி.தேவகி ஜெயவேலன் அவர்கள் கிட்டத்தட்ட 5 பர்வங்களை முழுமையாக ஒலிவடிவிலும், காணொளி வடிவிலும் பதிவேற்றியிருக்கிறார். முழு மஹாபாரதமும் நிறைவடைந்ததில் இவர்கள் இருவரின் துணை இன்றியமையாததாகும்.

மொழிபெயர்ப்பின் மிகத் தொடக்கத்திலேயே எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் தமது வலைத்தளத்தில் முழுமஹாபாரதத்தை அறிமுகம் செய்து வைத்தார். அது வரை சொற்ப பார்வைகளே பெற்று வந்த மஹாபாரதம் வலைப்பூ அன்று முதல் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் பெரும் வளர்ச்சியைப் பெற்றது. இன்று இவ்வலைப்பூ ஐம்பது லட்சம் பார்வைகளைக் கடந்திருக்கிறது. பார்வைகளின் எண்ணிக்கை, பார்வையிட்ட நபர்களின் எண்ணிக்கையாகாது எனினும், உலகம் முழுவதும் சென்றடையக்கூடிய பல ஆங்கில வலைப்பூக்களை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறைந்ததல்ல. இதில் பெரும்பங்கு ஜெயமோகன் அவர்களையே சாரும். வெண்முரசு நாவல் வெளியீட்டு விழாவில் மஹாபாரத அறிஞர்கள் பலருக்கும், எனக்கும் நினைவுப்பரிசு கொடுத்து கௌரவித்தார். அப்போது முழுமஹாபாரதம் இலக்கிய உலகில் வெகுமக்களின் கவனத்தைப் பெற்றது. இதன் பின்பும் சென்னை வடபழனியில் நடைபெற்ற விஷ்ணுபுரம் கூட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உரை எனப் பல தளங்களை அமைத்து தந்து கொண்டே இருந்தார். மொழிபெயர்ப்பின் நிறைவை எட்டும் வரை உயர்த்திவிட்ட ஏணிகளில் ஜெயமோகன் அவர்கள் முதன்மையானவர். இவ்வளவு இருப்பினும், என் தந்தைக்குப் பிறகு, நான் நெருங்கிப் பழக அஞ்சுவது இவரிடம்தான். இந்த அச்சம் பீதியாலல்ல; மதிப்பால் எழுவது. நான் எப்பொழுதும் சொல்வதைப் போல இஃது ஏழேழு ஜென்ம பந்தம்.

"ஏன் பழைய பஞ்சாங்கங்களைச் சொல்லி மீண்டும் மக்களை மூடர்களாக்கப் பார்க்கிறாய்?" என்றும், "உனக்குச் சம்ஸ்கிருதம் தெரியுமா? தெரியாதென்றால் நீ ஏன் மொழிபெயர்க்கிறாய்?" என்றும் இருதரப்புகளிலும் கேள்விகளும், தேவையற்ற வேறு கேள்விகளும் மீண்டும் மீண்டும் வந்த போது, அவற்றுப் பதில் சொல்லி காலத்தை வீணாக்க வேண்டாமென்று, ஜெயமோகன் அவர்களது அறிவுறுத்தலின் பேரில் வலைத்தளத்தில் கமென்ட்ஸ் பகுதியை நீக்கினேன். அதற்குப் பதில் விவாத மேடை என்று ஃபோரம் வகையில் ஒரு பக்கத்தை உருவாக்கினேன். அதன் மூலம் நல்ல பல விவாதங்கள் எழுந்தன. தாமரை, மெய்யப்பன் அருண் போன்ற பலர் அதில் நல்ல விவாதங்களை நிகழ்த்தியிருக்கின்றனர். இவர்களில் தாமரை அவர்கள் நமது முழுமஹாபாரதத்தின் துணை கொண்டு "மஹாபாரதப் போர்: ஆடியா? மார்கழியா?" என்ற ஓர் ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். இவ்வாறு இவர்களும் முழுமஹாபாரதத்திற்கான தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். தீபா நடராஜன், தேவகி ஜெயவேலன், ஜெயலட்சுமி அருண் ஆகியோர் ஆடியோ பதிவுகளைச் செய்து பங்காற்றியிருக்கின்றனர். எனினும், ஆடியோ பணி பாதியில் நின்றுவிட்டது.

எழுத்தாளர்கள் திரு.எஸ்.ராமகிருஷ்ணன், திரு.சாரு நிவேதிதா, திரு.பா.ராகவன், ஆகியோர் தங்கள் வலைத்தளங்களிலும், திரு.பி.ஏ.கிருஷ்ணன், திரு.அரவிந்தன் நீலகண்டன், திரு.சுதாகர் கஸ்தூரி ஆகியோர் தங்கள் முகநூல் பக்கங்களிலும் முழுமஹாபாரதத்திற்கு அறிமுகம் தந்தனர். இதன் மூலம் பார்வையாளர்கள் எண்ணிக்கை இன்னும் கூடியது. மிகக் கடினமான பகுதிகளில் சம்ஸ்கிருத ஸ்லோகங்களை ஒப்பு நோக்க வேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் நண்பர் திரு.ஜடாயு அவர்கள் உதவியிருக்கிறார். இன்னும் பலரின் உதவிகள் இந்த மொழிபெயர்ப்பின் நிறைவுக்குத் துணை புரிந்திருக்கின்றன. மயிலாப்பூர் ஆர்கே ராமகிருஷ்ணன் அவர்கள் நுங்கம்பாக்கம் அரிமா சங்கத்தின் சார்பாக ஒரு கூட்டத்திற்கு அழைத்து கௌரவித்து, ரூ.25,000/- காசோலை வழங்கினார். அவ்விழாவில் எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களும், பத்ரி சேஷாத்ரி அவர்களும் பங்கு பெற்று வாழ்த்தினர். இவ்வாறு இந்த மொழிபெயர்ப்பைச் செய்வதில் இவர்களைப் போன்ற ஆளுமைகளும், தனிப்பட்ட நபர்கள் பலரும் ஊக்கமளித்தனர்.

ஆதி பர்வம் முதல் விராட பர்வம் வரை இருந்த மொழிபெயர்ப்பின் வேகம் உத்யோக பர்வத்தின் சனத்சுஜாதீயம் பகுதியில் வெகுவாகக் குறைந்திருந்தது. உத்யோக பர்வத்தின் சனத்சுஜாதீயம், பீஷ்ம பர்வத்தின் பகவத்கீதை உள்ளிட்ட முதல் மூன்று உபபர்வங்கள், சாந்தி பர்வத்தின் மோக்ஷதர்ம உபபர்வம், அநுசாஸன பர்வம் முழுவதும், அஸ்வமேத பர்வத்தில் வரும் அனுகீதை ஆகியவற்றை மொழிபெயர்க்கும் போது ஏற்பட்ட சிரமங்கள் பல. கங்குலியின் ஆங்கிலம் விக்டோரியன் ப்ரோஸ் வகையைச் சார்ந்தது. கதையோட்டம் உள்ள பகுதிகளிலேயே சற்று பிசகினாலும் பொருள் மாறிவிடும். நான் மேலே குறிப்பிட்ட பகுதிகள் அனைத்தும் கதை நகராத பகுதிகள். அதுவும் தத்துவ விளக்கங்கள் நிறைந்தவை. அதிலும் குறிப்பாக, கங்குலி பல இடங்களில் முற்றுப்புள்ளி இடம்பெறாத மிக நீண்ட வாக்கியங்களை அமைத்து விளக்கியிருக்கும் பகுதிகளின் பொருளை உணர்ந்து கொள்வது மிகக் கடினமாக இருந்தது. அருகில் ம.வீ.ராமானுஜாச்சாரியர் அவர்களின் கும்பகோணம் மஹாபாரதப் பதிப்பு இருந்ததால் அவற்றின் பொருள் உணர்ந்து மொழிபெயர்க்க முடிந்தது. கங்குலியின் ஆங்கிலப் பதிப்புக்கும், கும்பகோணம் தமிழ் பதிப்புக்கும் அத்தியாய எண்களில், அத்தியாய நீளத்தில், அத்யாயங்கள் இடம்பெறும் வரிசையில் எனப் பல வேறுபாடுகள் உண்டு. அவற்றைத் தேடிக் கண்டு பிடிப்பதிலும் சிரமங்கள் இருந்தன. சில வேளைகளில் பகுதியை சரியாகக் கண்டுபிடித்துவிட்டாலும், கங்குலியின் ஆங்கிலமும் கடுமை காட்டும், கும்பகோணம் பதிப்பின் மணிப்பிரவாள நடையும் கடுமை காட்டும். அப்போது கையில் ஆங்கில அகராதியை வைத்துக் கொண்டு கங்குலியின் ஆங்கிலத்தைச் சொல் சொல்லாகப் பிரித்து, வாக்கியத்தில வரும் சொற்கோவைகளின் வரிசையை ஆய்வு செய்து பொருள் கொள்ள வேண்டியிருந்தது. அப்படி மொழிபெயர்த்த பிறகும், ஒரு வாக்கியத்திற்கு இவ்வளவு நேரம் செலவளிக்க வேண்டியிருந்ததால், சிறு பிழையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக. அந்த வாக்கியத்தின் அடிக்குறிப்பில், கும்பகோணம் பதிப்பு, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் ஆங்கிலப் பதிப்புகள் ஆகியவற்றில் இவ்வாறு இருக்கின்றன என்பதையும் குறிப்பிட வேண்டியிருந்ததால், மேலும் அதிக நேரம் செலவானது. சில வேளைகளில் இதனால் பெருஞ்சோர்வு ஏற்படும். ஆனால் அந்த அத்யாயத்தை நிறைவு செய்ததும். அதன் உள்ளடக்க ஞானச் செறிவு பெரும் உற்சாகம் கொள்ளச் செய்து விடும்.

விராட பர்வம் படித்தால் மழை பெய்யும் என்பார்கள். முழுமஹாபாரதத்தில் விராட பர்வம் நிறைவடைந்த போது கோடை காலம். மழை பெய்தது. தற்செயலாகத் தோன்றலாம். எனக்கும் அவ்வாறுதான் பட்டது. சாந்தி மற்றும் அநுசாஸன பர்வங்களை மொழிபெயர்க்கவோ, உரைக்கவோ அஞ்சுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆங்கில மொழிபெயர்ப்பைப் பதிப்பித்த பிரதாப் சந்திர ராய் அநுசாஸனம் முடியும் தருவாயில் இறந்து போனார். முன்பெல்லாம் மஹாபாரதப் பணியைச் செய்யும் போது சாந்தி பர்வத்தை நிறைவு செய்துவிட்டு, பிறகுதான் ஆதி பர்வத்தைத் தொடங்குவார்களாம். கும்பகோணம் பதிப்பின் முன்னுரையிலும்கூட, தாம் சாந்தி பர்வத்தை முதலில் மொழிபெயர்க்கச் செய்ததைக் குறிப்பிடுகிறார் ம.வீ.ராமானுஜாச்சாரியார். அவரும் பெரும் இன்னல்களைச் சந்தித்தார். ம.வீ.ரா அவர்களின் முன்னுரைகளும், கிஸாரி மோகன் கங்குலி அவர்களில் ஆங்கிலப் பதிப்பைப் பதிப்பித்த பிரதாப் சந்திரராய் அவர்களின் முன்னுரைகளும், கண்ணீரை மட்டுமல்ல நம் நெஞ்சின் குருதியைப் பிழிந்தெடுக்கக்கூடியன. இதுபோன்ற காரியங்களில், "நமக்கு ஒன்றும் ஏற்படாது" என்ற பெருந்துணிச்சல் எப்போதும் எனக்கு உண்டு. என் தந்தையின் மரணத்தால் அத்துணிச்சல் தவிடுபொடியானது. சரியாக அநுசாஸன பர்வம் முடிக்கும்போது என் தந்தை இறந்தார். தள்ளாத வயதிலும் போராடிய பீஷ்மரையும், துரோணரையும் போல எங்களைக் காத்த எங்கள் தந்தை, துரோண பர்வத்தில் பிழை திருத்திக் கொண்டிருந்த காலத்தில் தமது 78வது வயதில் (22.08.2019ல்) மறைந்தார். ஆதி பர்வம் முதல் பீஷ்ம பர்வம் வரை முழுமையாகப் பிழை திருத்திக் கொடுத்திருக்கிறார். தந்தையாகவும், ஆசிரியராகவும், அம்மாவின் மறைவுக்குப் பிறகு தாயாகவும் இருந்தவரை இழந்தது எனக்கு ஈடு செய்யப்பட முடியாத மிகப் பெரிய இழப்பு. அனைத்தையும் இழந்து, நடுத்தெருவில் நிற்பது போன்ற உணர்வு ஒரு மாத காலம் என்னை ஆட்கொண்டது. மஹாபாரத மொழிபெயர்ப்பு சிறிது காலம் தடை பட்டும் நின்றது. மூட நம்பிக்கை என்று கொண்டதெல்லாம் நடைமுறையில் நிகழும்போது ஏற்படும் தடுமாற்றம் சாதாரணமானதல்ல. மோக்ஷதர்மம், அநுசாஸனம் மொழிபெயர்த்தபோது கற்ற ஆன்ம அறிவியல், கடக்க முடியாத அந்தக் கடும்பாதையைக் கடக்கப் பேருதவி செய்தது. ஒவ்வொரு பர்வத்தின் தொடக்கமும் முடிவும் சரியாக ஏதோவொரு பண்டிகை தினங்களிலேயே நேர்ந்திருக்கின்றன. தொடக்கத்தில் அது தற்செயலாகத் தெரிந்தாலும், நாமே அந்த இலக்கை அடைய முயல்கிறோம்; அதுவே நேர்கிறது என்று மனம் ஏற்றுக் கொண்டாலும், பொங்கலுக்கு முன்பு முழு மஹாபாரதத்தையும் நிறைவு செய்யும் வரை இந்நிலையே தொடர்ந்து வந்திருக்கிறது. எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பது இறுதியில் தெரிகிறது. தெய்வீகத் தலையீடு இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது என்று நம்புகிறேன்.

கிசாரி மோகன் கங்குலியின் பதிப்பில், இடையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது மன்மதநாததத்தரால் ஒரு சில பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டன என்ற குறிப்பிருக்கிறது. அதன் பிறகு மன்மதநாததத்தர் அவர்களே முழுமையாகச் செய்த ஒரு பதிப்பும் இருக்கிறது. பிபேக் திப்ராய் அவர்கள் 2005 வாக்கில் மஹாபாரதத்தின் கிரிடிக்கல் எடிஷனை மொழிபெயர்த்தார். அது கிசாரி மோகன் கங்குலியின் பதிப்பைவிட அளவிலும், ஸ்லோக எண்களிலும் சற்றே குறைந்தது.

தமிழில், கும்பகோணம் பதிப்பில் பெரும்பாலான பர்வங்கள் திரு. தி.ஈ. ஸ்ரீநிவாஸாசாரியார் அவர்களாலும், விராட பர்வம் திரு. அ.வேங்கடேசாசார்யர் அவர்களாலும், உத்யோக பர்வம் கருங்குளம் திரு. கிருஷ்ணசாஸ்திரிகள் அவர்களாலும், சாந்தி பர்வம் பைங்காநாடு திரு. கணபதிசாஸ்திரிகள் அவர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டன. வில்லிபாரதம் சௌப்திக பர்வத்துடன் முற்றுபெறுகிறது. இணையத்தில் உள்ள ஆங்கிலப் பதிப்புகளிலும், தமிழில் புத்தக வடிவில் உள்ள பதிப்புகளிலும் கூட ஸ்லோக எண்கள் குறிப்பிடப்படவில்லை.

நமது முழுமஹாபாரதத்தைப் பொறுத்தவரையில் அனைத்தும் என் ஒருவன் கையாலேயே மொழிபெயர்க்கபட்டன. ஸ்லோக எண்களும் இருக்கின்றன. மேலும் இஃது இணையத்தில் எப்போதும் எவராலும் படிக்கப்படும் வகையில் திறந்த நிலையிலேயே இருக்கின்றன. இவ்வகையில் தமிழில் நேர்வது இதுவே முதல் முறை என நம்புகிறேன். முதல் பர்வமான ஆதிபர்வம் ஒன்றாம் அத்தியாயம் முதல் பதினெட்டாம் பர்வமான ஸ்வர்க்காரோஹணிகப் பர்வம் இறுதி அத்தியாயம் வரை உள்ள முழுமஹாபாரதத்தையும் https://mahabharatham.arasan.info/p/contents-of-mahabharata.html என்ற சுட்டியில் காணலாம்.

கிண்டில் மின்நூல்களாக 01.ஆதிபர்வம், 02.சபாபர்வம், 08.கர்ணபர்வம், 09.சல்லியபர்வம், 10.சௌப்திக ஸ்திரீபர்வங்கள், 11.சாந்திபர்வம் முதல் பாகம், 12.சாந்திபர்வம் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள், 13.அநுசாஸனபர்வம் 14.அஸ்வமேதம், ஆஸ்ரமவாஸிகம், மௌஸலம், மஹாப்ரஸ்தானிகம், ஸ்வர்க்காரோகணிகப் பர்வங்கள் ஆகியன விற்பனைக்குக் கிடைக்கின்றன. https://mahabharatham.arasan.info/p/kindle-ebooks.html அல்லது https://www.amazon.com/author/arulselvaperarasan என்ற சுட்டிகளில் அவை கிட்டும். மஹாபாரதம் தொடர்பான வேறு சில மின்னூல்களும் இங்கே கிடைக்கும்.

இந்த மொழிபெயர்ப்பைச் செய்தபோது, Sacred texts வலைத்தளத்தில் உள்ள கிசாரி மோகன் கங்குலியின் மஹாபாரதப் பதிப்பைக் கொண்டு தொடங்கினேன். அதில் ஸ்லோக எண்கள் கிடையாது. துரோண பர்வத்தில் பாதிப் பகுதியை எட்டிய போது ஹோலி புக்ஸ் என்ற வலைத்தளத்தில் கங்குலியின் இரண்டாம் பதிப்புக் கிட்டியது. எனவே துரோண பர்வத்தின் பாதிப் பகுதியில் இருந்து தற்போது முடிந்த பதினெட்டாம் பர்வமான ஸ்வர்க்காரோஹணிகப் பர்வம் வரை ஸ்லோக எண்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். கங்குலியும், பீஷ்ம பர்வத்தில் இருந்துதான் ஸ்லோக எண்களைக் குறிப்பிட்டிருக்கிறார். எனவே ஆதிபர்வம், சபாபர்வங்களில் மன்மதநாததத்தருடைய பதிப்பின் துணை கொண்டு ஏற்கனவே ஸ்லோக எண்களைச் சேர்த்துவிட்டேன். ஸ்லோக எண்களைச் சேர்ப்பது பிற்காலத்தில் எவரும் மேற்கோள் காட்டுவதற்கும், குறித்துக் கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும்.

மேலும் இப்பொழுது செய்திருக்கும் முழுமஹாபாரதத்திலேயே இவை சூதரால் {சௌதியால்} சொல்லப்பட்டவை, இவை வைசம்பாயனரால் சொல்லப்பட்டவை, இவை வியாசரால் சொல்லப்பட்டிருக்கக்கூடியவை என்று பிரித்து, வியாசரால் சொல்லப்பட்டவை என்று அநுமானிக்கப்படும் பகுதியைப் பிரித்தெடுத்து "ஜெயம்" என்ற வரிசையில் மின்னூலாக்கும் திட்டம் இருக்கிறது. இவ்வரிசையில் ஏற்கனவே, "வெற்றிமுழக்கம்", "கொற்றங்கூடல்" என்று இரண்டு புத்தகங்கள் கிண்டிலில் வெளிவந்திருக்கின்றன. மீதி உள்ள பகுதிகளிலும் இவ்வாறு பிரித்தெடுத்து நிறைவு செய்ய வேண்டுமென்றும் எண்ணியிருக்கிறேன். அதன் பிறகு மஹாபாரதத்தின் தொடர்ச்சியான ஹரிவம்சம் மொழிபெயர்க்கலாம் என்றிருக்கிறேன். முழுமஹாபாரதம் இன்னும் அச்சு வடிவில் புத்தகங்களாக வெளிவரவில்லை. அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.

எதைத் தேடினாலும் இணையத்தில் எளிதாகக் கிடைக்கும் இன்றைய நிலையில் இப்பணியைச் செய்து முடிக்க ஏழு ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. அந்தக் காலத்தில், கணினி இல்லாமல் பிரதிகளைத் தேடி நகரங்கள் தோறும் நூலகம் நூலகமாக அலைந்து திரிந்து நம் முன்னோர்கள் பட்ட பாட்டை எண்ணிப் பார்க்கிறேன். அவர்கள் அனைவரும் எந்த நோக்கத்திற்காக அவ்வளவு இன்னல்களுக்கிடையிலும் மஹாபாரதத்தை மொழிபெயர்த்தனரோ கிட்டத்தட்ட அதே நோக்கத்திற்காகவே நானும் இப்பணியைச் செய்யத் தொடங்கினேன். அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களில் சொற்ப அளவைக்கூட அனுபவிக்காத எனக்கே சில இழப்புகள் விரக்தியின் எல்லையைக் காட்டின என்றால், இப்பணிக்காக அவ்வளவையும் அனுபவித்த அவர்கள் நிச்சயம் மனிதப் பிறவிகள் அல்ல; தேவர்கள் ஆவர்.

அமரர்கள் ராஜாஜி, சோ ராமசாமி அவர்கள், கிசாரி மோகன் கங்குலி, மன்மதநாததத்தர், ம.வீ.ராமானுஜாச்சாரியார் ஆகியோரின் பாதம் பணிந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். சமகாலத்தவரான திரு.பிபேக்திப்ராய் அவர்களை வணங்குகிறேன். பரமன் காட்டிய பாதையில் இப்பணி இனிதே நிறைவடைந்தது. அனைவருக்கும் மிக்க நன்றி.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
202001210220


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்