Enter Vidura! | Asramavasika-Parva-Section-26 | Mahabharata In Tamil
(ஆஸ்ரமவாஸ பர்வம் - 26)
பதிவின் சுருக்கம் : ஒருவரையொருவர் நலம் விசாரித்த திருதராஷ்டிரனும், யுதிஷ்டிரனும்; கூட்டத்தைக் கண்டு விதுரன் விலகிச் செல்வதைக் கண்ட யுதிஷ்டிரன்; விரைந்து சென்ற யுதிஷ்டிரனுக்குள் யோகத்தால் பிரவேசித்த விதுரன்; இந்த அதிசயத்தைத் திருதராஷ்டிரனிடம் சொன்ன யுதிஷ்டிரன்...
திருதராஷ்டிரன், "ஓ! யுதிஷ்டிரா, நீ உன் தம்பிகளுடனும், நகர மற்றும் மாகாணவாசிகளுடனும் அமைதியாகவும், இன்பமாகவும் இருக்கிறாயா?(1) உன்னைச் சார்ந்திருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? உன் அமைச்சர்கள், பணியாட்கள், பெரியோர், ஆசான்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?(2) உன் ஆட்சிப்பகுதிகளில் வாழ்வோர் அச்சமின்றி இருக்கிறார்களா? மனிதர்களின் ஆட்சியாளர்கள் பின்பற்றும் பழைமையானதும், மரபுசார்ந்ததுமான ஒழுக்கத்தை நீ பின்பற்றுகிறாயா?(3) நீதி மற்றும் நேர்மையால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை அலட்சியம் செய்யாமல் நீ உன் கருவூலத்தை நிரப்புகிறாயா? பகைவர்கள், நடுநிலையாளர்கள், கூட்டாளிகள் ஆகியோரிடம் உரிய முறையில் நடந்து கொள்கிறாயா?(4)
(வேள்விகளுக்காகவும், அறச் சடங்குகளுக்காகவும் விதிக்கப்படும்) முதற்கொடைகளை அளித்துப் பிராமணர்களை முறையாகக் கவனித்துக் கொள்கிறாயா? ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, உன் பகைவரே உன் நடத்தையால் நிறைவடைந்திருக்கும்போது குடிமக்கள், உன் பணியாட்கள் மற்றும் உற்றார் உறவினரைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஓ! மன்னர்களின் மன்னா, பித்ருக்களையும், தேவர்களையும் அர்ப்பணிப்புடன் நீ துதிக்கிறாயா?(5,6) ஓ! பாரதா, விருந்தினர்களுக்கு உணவும், பானமும் கொடுத்து நீ அவர்களை வழிபடுகிறாயா? உன் ஆட்சிப்பகுதிகளில் உள்ள பிராமணர்கள், தங்கள் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்புடன் அறப்பாதையில் நடக்கிறார்களா?(7) உன் நாட்டுக்குள் இருக்கும் க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், மற்றும் உன் உறவினர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளை நோற்கிறார்களா? உன் குடிமக்களில் பெண்கள், பிள்ளைகள், முதியவர்கள் ஆகியோர் (துன்பமான சூழ்நிலையில்) வருந்தாமல், (வாழ்வின் தேவைகளுக்காக) பிச்சை எடுக்காமல் இருப்பார்கள் என நான் நம்புகிறேன். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, உன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், உன் வீட்டில் முறையாகக் கௌரவிக்கப்படுகிறார்களா? ஏகாதிபதி, அரசமுனிகளுக்குரிய இந்தக் குலமானது உன்னைத் தங்கள் மன்னனாக அடைந்து, புகழ் மற்றும் மகிமையில் இருந்து வீழாதிருக்கிறது என நான் நம்புகிறேன்" என்றான் {திருதராஷ்டிரன்}".(9)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு சொன்ன அந்த முதிர்ந்த மன்னனிடம் அறநெறியையும், நீதியையும் நன்கறிந்தவனும், செயல்கள் மற்றும் வாக்கில் நன்கு திறம்பெற்றவனுமான யுதிஷ்டிரன், தன் நலம் குறித்த சில கேள்விகளை முன்வைத்துப் பினவருமாறு பேசினான்.(10)
யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, உமது அமைதியும், தற்கட்டுப்பாடும், இதய அமைதியும் வளர்கின்றனவா? என் தாயான இவள் களைப்பும், தொல்லையுமின்றி உமக்குத் தொண்டாற்ற இயன்றவளாக இருக்கிறாளா?(11) ஓ! மன்னா, இவளது காட்டுவாசம் கனியை {பயனை} விளைவிக்குமா? குளிர் மற்றும் காற்று ஆகியவற்றாலும் {ஆகியவற்றுக்கு வெளிப்பட்டும்}, நடப்பதனால் உண்டாகும் களைப்பாலும் மெலிந்திருப்பவளும், இப்போது கடுந்தவப்பயிற்சிகளில் அர்ப்பணிப்பு மிக்கவளாக இருப்பவளும், என் பெரியன்னையுமான இந்த ராணி {காந்தாரி} வலிமையும், சக்தியும் மிக்கவர்களும், க்ஷத்திரிய வகைக் கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருந்தவர்களும், போர்க்களத்தில் கொல்லப்பட்டவர்களுமான இவளது பிள்ளைகளை எண்ணி இன்னும் வருந்தாமல் இருக்கிறாளா?(12,13) இந்தப் படுகொலைக்குப் பொறுப்பான இழிந்த பாவிகளான எங்களை இவள் குற்றஞ்சாட்டுகிறாளா? ஓ! மன்னா, விதுரர் எங்கே? எங்களால் அவரை இங்குக் காண முடியவில்லையே. நோன்புகளை நோற்பவரான சஞ்சயர் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார் என நான் நம்புகிறேன்" என்றான்".(14)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்ட திருதராஷ்டிரன், மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பதிலளிக்கும் வகையில், "ஓ! மகனே, விதுரன் நன்றாக இருக்கிறான். அவன் உணவனைத்தையும் கைவிட்டு, காற்றை மட்டுமே உண்டு, கடுந்தவங்களைச் செய்து வருகிறான். அவன் மெலிந்திருக்கிறான், அவனது தமனிகளும், நரம்புகளும் புலப்படுகின்றன. இந்த வெறுங்காட்டில் சில வேளைகளில் பிராமணர்களால் அவன் பார்க்கப்படுகிறான்" என்றான்.(16)
திருதராஷ்டிரன் இதைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, தொலைவில் விதுரன் தென்பட்டான். அவன் தன் தலையில் சடாமுடி தரித்து, வாயில் சரளைக் கற்களை வைத்துக் கொண்டு, மிக மிக மெலிந்தவனாகக் காணப்பட்டான். அவன் {விதுரன்} முற்றிலும் நிர்வாணமாக இருந்தான். அவனது உடல் முழுவதும் புழுதியும், காட்டு மலர்களின் சாறும் படிந்திருந்தன.(17) க்ஷத்ரி {விதுரன்} தொலைவில் தென்பட்ட போது, அந்தச் செய்தி யுதிஷ்டிரனுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஓ! மன்னா, திடீரென நின்ற விதுரன், (பல மனிதர்கள் நிறைந்திருந்த) ஆசிரமத்தை நோக்கித் தன் கண்களைச் செலுத்தினான் (அவர்களைக் கண்டான்).(18) மன்னன் யுதிஷ்டிரன் தனியனாக அவனைப் பின்தொடர்ந்து சென்றபோது, ஆழ்ந்த காட்டுக்குள் நுழைந்த அவன் {விதுரன்}, பின்தொடர்ந்து வருபவனுக்குச் சிலவேளைகளில் தென்படுபவனாகவும், சில வேளைகளில் தென்படாதவனாகவும் ஓடினான்.(19)
அவன் {யுதிஷ்டிரன்}, "ஓ! விதுரரே, ஓ! விதுரரே, நான் உமக்குப் பிடித்தவனான மன்னன் யுதிஷ்டிரன் வந்திருக்கிறேன்" என்று உரக்கச் சொன்னான். யுதிஷ்டிரன், இவ்வாறு கூச்சலிட்டவாறே பெரும் முயற்சியுடன் விதுரனைப் பின்தொடர்ந்தான்.(20)
நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையான விதுரன், அந்தக் காட்டில் தனிமையான ஓரிடத்தை அடைந்து, மரமொன்றில் சாய்ந்து கொண்டு அசையாமல் நின்றான்.(21) அவன் மிக மிக மெலிந்திருந்தான். (சிறப்பியல்புகள் அனைத்தும் மொத்தமாக மறைந்த நிலையில்) அவன் {விதுரன்} மனிதன் என்ற வடிவத்தை மட்டுமே தக்க வைத்திருந்தான். எனினும் (இத்தகைய மாற்றங்கள் இருந்தாலும்), பெரும் நுண்ணறிவைக் கொண்ட யுதிஷ்டிரன் அவனை அடையாளம் கண்டு கொண்டான்.(22)
யுதிஷ்டிரன், அவனுக்கு எதிரில் நின்று கொண்டு, "நான் யுதிஷ்டிரன் வந்திருகிறேன்" என்றான். உண்மையில், விதுரனை முறையாக வழிபட்டு, விதுரன் கேட்கும் வகையில் யுதிஷ்டிரன் இந்தச் சொற்களைச் சொன்னான்.(23) அதே வேளையில் விதுரன் நிலைத்த கண்களுடன் மன்னனைப் பார்த்தான். மன்னன் மீது இவ்வாறு பார்வையைச் செலுத்திய அவன் யோகத்தில் அசைவற்றவனாக நின்று கொண்டிருந்தான்.(24) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவன் {விதுரன்} அப்போது (தன் யோக சக்தியின் மூலம்) அங்கங்களுடன் அங்கங்களை இணைத்து யுதிஷ்டிரனின் உடலுக்குள் நுழைந்தான். அவன் தன் உயிர் மூச்சை மன்னனுடைய உயிர் மூச்சுடனும், தன் புலன்களை மன்னனின் புலன்களுடனும் கலந்தான்.(25) உண்மையில், சுடர்மிக்க சக்தியுடன் கூடிய விதுரன், யோக சக்தியின் துணையுடன் இவ்வாறு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் உடலுக்குள் நுழைந்தான்.(26)
அப்போது விதுரனின் உடல், நிலைத்த பார்வை கொண்ட கண்களுடன் மரத்திலேயே சாய்ந்திருந்தது. அதிலிருந்து உயிர் தப்பிவிட்டது என்பதை மன்னன் விரைவில் கண்டான்.(27) அதே வேளையில் அவன் {யுதிஷடிரன்} தான் முன்பைவிடப் பலசாலியாகவும், முன்பைவிடக் கூடுதலான நற்பண்புகள் மற்றும் சிறப்புகளுடன் இருப்பதாகவும் உணர்ந்தான். ஓ! ஏகாதிபதி, பெருங்கல்வியும், சக்தியும் கொண்டவனும், பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், தான் மனிதர்களின் மத்தியில் பிறப்பதற்கு முன்பு இருந்த நிலையை நினைத்துப் பார்த்தான்[1]. வலிமையும், சக்தியும் நிறைந்த அவன் {யுதிஷ்டிரன்}, வியாசரின் மூலம் யோகப் பயிற்சி குறித்துக் கேள்விப்பட்டிருந்தான்.(28, 29)
[1] "யுதிஷ்டிரன் தர்மத்தின் சுயமாவான். விதுரரும், முனிவர் ஆணி மாண்டவ்யரின் சாபத்தின் மூலம் சூத்திரனாகப் பிறக்க நேரிட்ட தர்மனாவார். எனவே, இவர்கள் இருவரும் ஒரே சாரம் கொண்டவர்களாவர். விதுரர் தமது மனிதவுடலை இட்டபோது, யுதிஷ்டிரனின் உடலுக்குள் புகுந்து, அதன் மூலம் பின்னவனைப் பலமடையச் செய்தார்" எனக் கங்கலி இங்கே விளக்குகிறார்.
பெருங்கல்வி கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், விதுரனின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்யவும், அதை முறையாக எரிக்கவும் {தகனம் செய்யவும்} விரும்பினான். அப்போது காட்சிக்குப் புலப்படாத குரல் ஒன்று,(30) "ஓ! மன்னா, விதுரன் என்றழைக்கப்படுபவனுக்குரிய இவ்வுலடல் எரிக்கப்படக்கூடாது. இவனில் உன்னுடலும் இருக்கிறது. இவன் அறத்தின் நித்திய தேவனாவான்.(31) ஓ! பாரதா, ஸாந்தானிகம் என்ற பெயரால் அறியப்படும் இன்பலோகம் இவனுடையதாகும்[2]. இவன் யதிகளின் கடமைகளை நோற்றவனாவான். ஓ! பகைவரை எரிப்பவனே, இவனுக்காக நீ வருந்தலாகாது" என்றது.(32)
[2] கும்பகோணம் பதிப்பில், "இவருக்கு வைகர்த்தனமென்னும் உலகம் கிடைக்கப் போகிறது" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "'ஸாந்தானிகமென்னும் உலகங்கள்' என்பது வேறுபாடம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.
இவ்வாறு சொல்லப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அந்த இடத்தில் இருந்து திரும்பி நடந்தது அனைத்தையும் விசித்திரவீரியனின் {திருதராஷ்டிரனிடம்} அரசமகனிடம் தெரிவித்தான்.(33) பெருங்காந்தி கொண்ட அந்த மன்னனும் {திருதராஷ்டிரனும்}, அங்கே இருந்த மனிதர்கள் அனைவரும், பீமசேனனும் பிறரும் இதைக் கேட்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(34)
நடந்ததைக் கேட்ட மன்னன் திருதராஷ்டிரன் நிறைவடைந்தவனாகத் தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, "நீர், கிழங்குகள் மற்றும் கனிகள் உள்ளிட்ட இந்தக் கொடைகளை நீ என்னிடம் இருந்து பெறுவாயாக. ஓ! மன்னா, ஒருவனுடைய விருந்தினன் அவன் உண்பதையே தானும் உண்ண வேண்டும் என்று சொல்லப்படுகிறது" என்றான்.(35) இவ்வாறு சொல்லப்பட்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, "அவ்வாறே ஆகட்டும்" என்று மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்குப்} பதிலளித்தான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} கொடுத்த கனிகளையும், கிழங்குகளையும் உண்டான்.(36) பிறகு அவர்கள், அந்த முதிர்ந்த மன்னனால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, நீரைப் பருகிய பிறகு ஒரு மரத்தினடியில் தங்கள் படுக்கைகளை விரித்து அந்த இரவைக் கழித்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(37)
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 26ல் உள்ள சுலோகங்கள் : 37
ஆங்கிலத்தில் | In English |