The arrival of Vyasa! | Asramavasika-Parva-Section-27 | Mahabharata In Tamil
(ஆஸ்ரமவாஸ பர்வம் - 27)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு பெரும் முனிவர்களின் ஆசிரமங்களைப் பார்த்த யுதிஷ்டிரன்; திருதராஷ்டிரன் இருந்த ஆசிரமத்திற்கு வந்த சதயூபனும், வியாசரும்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா, அறம்சார்ந்தவர்களான அந்தத்தவசிகளின் ஆசிரமத்தில், மங்கல நட்சத்திரக்கூட்டத்தின் சிறப்பியல்பைக் கொண்ட அந்த இரவை இவ்வாறே அவர்கள் கழித்தனர்.(1) அப்போது அங்கே நிகழ்ந்த உரையாடல் அறநெறி மற்றும் செல்வம் குறித்த பல சிந்தனைகளைக் கொண்டதாக இருந்தது. ஸ்ருதிகளில் இருந்து பல்வேறு குறிப்புகளையும், இனிமை நிறைந்த சொற்களையும் கொண்டதாக அஃது இருந்தது.(2) ஓ! மன்னா, பாண்டவர்கள் விலைமதிப்புமிக்கப் படுக்கைகளைவிட்டு, வெறும் தரையில் தங்கள் தாயின் அருகில் தங்களைக் கிடத்திக் கொண்டனர்.(3)
உண்மையில், அந்த வீரர்கள், உயர் ஆன்ம மன்னன் திருதராஷ்டிரனுடைய உணவை உண்டு அந்த இரவைக் கழித்தனர்.(4) அந்த இரவு கடந்ததும், தன் காலைச் செயல்கள் அனைத்தையும் செய்த மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகளின் துணையுடன் அந்த ஆசிரமத்தை ஆய்வு செய்தான்.(5) அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, திருதராஷ்டிரனின் ஆணையின் பேரில், தன் குடும்பத்துப் பெண்கள், பணியாட்கள் மற்றும் புரோகிதருடன், அந்த ஆசிரமத்திற்குள் தான் விரும்பிய அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருந்தான்.(6)
சுடர்மிக்க நெருப்புகளுடன் கூடிய வேள்விப் பீடங்கள் பலவற்றையும், அவற்றில் அமர்ந்திருந்தவர்களும், தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆகுதிகளை ஊற்றித் தங்கள் தூய்மைச் சடங்குகளைச் செய்பவர்களான பல தவசிகளையும் அங்கே கண்டான்.(7) அந்தப் பீடங்கள் காட்டின் கனிகள் மற்றும் கிழங்குகளாலும், மலர்க்குவியல்களாலும் நிறைந்திருந்தன. தெளிந்த நெய்யின் புகை அவற்றில் இருந்து சுருண்டு மேலெழுந்தது. அதுதவிர, அவை வேதங்களின் உடல்வடிவங்களைப் போலத் தெரிந்த உடல்களைக் கண்ட தவசிகள் பலரும், சகோதரத்துவம் கொண்ட பலரும் அங்கே நிறைந்திருந்தனர்.(8)
மான்கூட்டங்கள் அனைத்து வகை அச்சத்தில் இருந்தும் விடுபட்டு அங்கேயும் இங்கேயும் ஓய்ந்து, மேய்ந்து கொண்டிருந்தன. ஓ! மன்னா {ஜனமேஜயா}, அங்கே இனிய இசையொலிகளை எழுப்புவதில் ஈடுபடும் எண்ணற்ற பறவைகளும் இருந்தன.(9) மயில்கள், தாத்யூகங்கள், கோகிலங்களின் {குயில்களின்} இசையொலி மற்றும் வேறு குருவிகளின் இனிய பாடல்களும் மொத்த காட்டிலும் எதிரொலித்துக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(10) சில இடங்களில் கல்விமான்களான பிராமணர்களால் ஓதப்படும் வேத மந்திரங்களை எதிரொலித்துக் கொண்டிருந்தன. சில இடங்கள், காட்டில் திரட்டப்பட்ட கனிகள் மற்றும் கிழங்குகளின் பெருங்குவியல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(11)
அப்போது மன்னன் யுதிஷ்டிரன், அந்தத் தவசிகளுக்காகத் தான் கொண்டு வந்திருந்த தங்கத்தாலான அல்லது தாமிரத்தாலான குடுவைகளையும்,(12) ஓ! பாரதா {ஜனமேஜயா}, மான்தோல்கள், விரிப்புகள் {கம்பளங்கள்}, மரத்தாலான வேள்விக்கரண்டிகள் {ஸ்ருக்குகள், ஸுர்வங்கள்}, கமண்டலங்கள், மரத்தாலான தட்டுகள் {ஸ்தாலிகள்}, குடங்கள் மற்றும் பாத்திரங்களை அவர்களுக்குக் கொடுத்தான்.(13) இரும்பாலான பல்வேறு வகைப் பாத்திரங்கள், சிறு பாத்திரங்கள், வெவ்வேறு அளவிலான குடுவைகள் ஆகியனவும், தவசிகளில் ஒவ்வொருவரும் எவ்வளவு விரும்பினார்களோ அவ்வளவும் மன்னனால் கொடுக்கப்பட்டன.(14) அற ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், காட்டுக்குள் இவ்வாறு உலவி, தவசிகளின் பல்வேறு ஆசிரமங்களைக் கண்டு, பல கொடைகளைக் கொடுத்து, தன் பெரிய தந்தை {திருதராஷ்டிரன்} இருந்த இடத்திற்கே திரும்பி வந்தான்.(15)
அவன் {யுதிஷ்டிரன்} பூமியின் தலைவனான மன்னன் திருதராஷ்டிரன், தன் காலைச் சடங்குகளைச் செய்து முடித்து, தன்னருகில் காந்தாரியுடன் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்டான்.(16) அற ஆன்மா கொண்ட ஏகாதிபதி, பணிவுடன் தலைகுனிந்திருக்கும் ஒரு சீடரைப் போல அந்த இடத்தின் அருகில் அமர்ந்திருக்கும் தன் தாயான குந்தியையும் கண்டான்.(17) அவன் தன் பெயரை அறிவித்துக் கொண்டு அந்த முதிர்ந்த மன்னனை {திருதராஷ்டிரனை} வணங்கினான். அந்த முதிய மன்னன், "அமர்வாயாக" என்ற சொற்களைச் சொன்னான். திருதராஷ்டிரனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, குசப்புல்லாலான ஒரு பாயில் யுதிஷ்டிரன் அமர்ந்தான்.(18) ஓ! பாரதக் குலத்தோனே {ஜனமேஜயனே}, பீமனும், பாண்டுவின் பிற மகன்களும், அந்த மன்னனை வணங்கி, அவனது பாதத்தைத் தீண்டி, அவனது அனுமதியைப் பெற்றுக் கொண்டு கீழே அமர்ந்தனர்.(19) அவர்களால் சூழப்பட்ட அந்த முதிர்ந்த குரு மன்னன் மிக அழகானவனாகத் தெரிந்தான். உண்மையில் அவன் தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் பிருஹஸ்பதியைப் {Vrihaspati} போன்ற வேத காந்தியில் ஒளிவீசினான்.(20)
அவர்கள் அமர்ந்ததும், குருக்ஷேத்திரவாசிகளான சதயூபன் உள்ளிட்ட பெரும் முனிவர்கள் பலரும் அங்கே வந்தனர்.(21) சிறப்புமிக்கவரும், கல்விமானும், பெருஞ்சக்தி கொண்டவரும், தெய்வீக முனிவர்களாலேயே கூட மதிக்கப்படுபவருமான வியாசர், தம்முடைய எண்ணற்ற சீடர்களுக்குத் தலைமை தாங்கியவராக யுதிஷ்டிரனுக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.(22) குரு மன்னன் திருதராஷ்டிரன், பெருஞ்சக்தி கொண்ட குந்தியின் மகன் யுதிஷ்டிரன், பீமசேனன் மற்றும் பிறரும் எழுந்து நின்று, சில அடிகள் முன்னோக்கி நகர்ந்து அந்த விருந்தினர்களை வணங்கினார்கள்.(23)
சதயூபன் மற்றும் பிறரால் சூழப்பட்டிருந்தவரும், அருகில் நெருங்கி வந்தவருமான வியாசர் திருதராஷ்டிரனிடம், "அமர்வாயாக" என்றார்.(24) அதன்பிறகு சிறப்புமிக்க வியாசர் கருப்பு மான்தோலில் வைக்கப்பட்ட குசப்புற்களாலானதும், பட்டுத் துணியால் மூடப்பட்டதுமான ஒரு சிறந்த இருக்கையில் அம்ரந்தார். அவர்கள் அவருக்காக அந்த இருக்கையை ஒதுக்கியிருந்தனர்.(25) வியாசர் அமர்ந்ததும், தீவில் பிறந்தவரான அந்தத் தவசியிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, பெருஞ்சக்தி கொண்ட அந்த முதன்மையான மறுபிறப்பாளர்கள் அனைவரும் அமர்ந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(26)
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 27ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |