Utatthya and Mandhatri! | Shanti-Parva-Section-90 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 90)
பதிவின் சுருக்கம் : பிரம்ம முனிவரான உதத்யர், மன்னன் மாந்தாதாவுக்குப் போதித்த அரசநீதியை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "(முன்னொரு காலத்தில்) வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும் அங்கீரச குலத்தவருமான உதத்தியர் {உசத்தியர்}, யுவனாஸ்வனின் மகனான மாந்தாத்ரியிடம் {மன்னன் மாந்தாதாவிடம்} உற்சாகமாக உரையாடினார்.(1) ஓ! யுதிஷ்டிரா, வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரான உதத்தியர், அந்த மன்னனிடம் {மாந்தாதாவிடம்} சொன்ன யாவற்றையும் நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன்.(2)
உதத்தியர் {மன்னன் மந்தாதாவிடம்}, "நீதியின் படி செயல்படவே ஒருவன் மன்னனாகிறானேயன்றி கணிக்கமுடியாதபடி நடந்து கொள்வதற்காக அல்ல. ஓ! மாந்தாத்ரி, உண்மையில் மன்னனே இவ்வுலகின் பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்வாயாக.(3) மன்னன் நீதியுடன் செயல்பட்டால், அவன் தேவ நிலையை அடைகிறான். மறுபுறம், அவன் நீதியில்லாமல் செயல்பட்டாலோ அவன் நரகில் மூழ்குகிறான்.(4) அனைத்துயிர்களும் அறத்திலேயே ஓய்ந்திருக்கின்றன. அறமோ மன்னனில் ஓய்ந்திருக்கிறது. எனவே, அறத்தை உயர்த்திப் பிடிக்கும் மன்னனே, உண்மையில் மன்னனாவான்.(5) நீதிமிக்க ஆன்மாவையும், அருள்கள் அனைத்தையும் கொண்ட மன்னன் அறத்தின் வடிவம் என்றே சொல்லப்படுகிறான். மன்னன், அநீதியை தண்டிக்கத் தவறினால், தேவர்கள் அவனது மாளிகையைக் கைவிடுவார்கள், மேலும் அவன் மனிதர்களுக்கு மத்தியில் கடுங்கண்டனத்தையீட்டுவான்.(6) தங்கள் கடமைகளை நோற்கும் மனிதர்களின் முயற்சிகள் எப்போதும் வெற்றியால் மகுடம் சூட்டப்படும். இதன் காரணமாகவே மனிதர்கள் அனைவரும் செழிப்பை உண்டாக்கும் அறவிதிகளுக்குக் கீழ்ப்படிந்த நடக்க முனைகிறார்கள்.(7)
பாவத்தைக் கட்டுப்படுத்தாதபோது, நீதிமிக்க நடத்தை முடிவுக்கு வந்து, அநீதி பெருமளவில் அதிகரிக்கிறது.(8) பாவம் கட்டுப்படுத்தப்படாதபோது, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள உடைமை உரிமைகளின்படி, "இஃது எனது, இஃது எனதில்லை" என்று எவனாலும் சொல்லமுடியாது.(9) உலகில் பாவமே மேலோங்கியிருக்கும்போது மனிதர்களால் தங்கள் மனைவியர், விலங்குகள், நிலங்கள் மற்றும் வீடுகளை அனுபவிக்க முடியாது.(10) பாவத்தைக் கட்டுப்படுத்தாத போது, தேவர்கள் எந்த வழிபாட்டையும் பெற மாட்டார்கள், பித்ருக்கள் சிராத்தங்களில் எந்தக் காணிக்கைகளையும் பெற மாட்டார்கள், விருந்தினர்கள் விருந்தோம்பலைப் பெற மாட்டார்கள்.(11) பாவத்தைக் கட்டுப்படுத்தாத போது, மறுபிறப்பாள வர்க்கத்தினர் வேதங்களைக் கற்க மாட்டார்கள், அல்லது உயர்ந்த நோன்புகளை நோற்கமாட்டார்கள், அல்லது வேள்விகளைப் பரவ விடமாட்டார்கள்.(12) ஓ! மன்னா {மாந்தாதா}, பாவத்தைக் கட்டுப்படுத்தாத போது, மனிதர்களின் மனமானது, ஆயுதங்களால் காயமடைந்தோரைப் போன்ற, பலவீனத்தையும் குழப்பத்தையும் அடையும் .(13) இம்மையிலும், மறுமையிலும் தங்கள் கண்களைச் செலுத்தும் முனிவர்கள், பூமியில் நீதியின் வடிவமாக இருக்கும் வகையில் மன்னனை மேன்மையானவனாக அமைத்தார்கள்[1].(14) எவனிடம் நீதி ஒளிர்கிறதோ அவனே ராஜன் என்று அழைக்கப்படுகிறான். மேலும் எந்த மன்னனிடம் அறமில்லையோ அவன் விருஷலன் என்று அழைக்கப்படுகிறான்[2].(15)
[1] "பீஷ்மர் இதை மிகப் பழமையான உரையாடல் என்று சொல்கிறார். ஒருவேளை இந்தச் சுலோகமானது, பிரம்மவர்த முனிவர்களை இந்தியப் பகுதியில் முடியாட்சியின் வடிவத்தை ஏற்படுத்த தூண்டிய எழுத்தாளருடைய கருத்தின் நோக்கங்களைக் குறிப்பிடுகிறது எனக் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] இந்தச் சுலோகம் ராஜன் மற்றும் விருஷலன் என்ற வார்த்தைகளின் சொற்பிறப்பியலைக் கொடுக்கிறது. எவனிடம் அறம் ஒளிர்கிறதோ (ராஜதே {Raajate}) அவன் ராஜனாவான். எவனிடம் விருஷம் என்றழைக்கப்படும் அறம் மறைகிறதோ அவன் விருஷலன் ஆவான். அடுத்தச் சுலோகத்தைப் பார்க்கவும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
எவன் விருஷத்தை {அறத்தை} பலவீனமடையச் செய்கிறானோ அவன் விருஷலன் என்ற பெயரில் அறியப்படுகிறான். எனவே, ஒரு மன்னன் அறத்திற்கான காரணத்தை முன்னேற்ற வேண்டும்.(16) அனைத்துயிரினங்களும் அறத்தின் வளர்ச்சியில் வளர்கின்றன, அதன் சிதைவில் அழிகின்றன. எனவே, அறம் அழிய ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.(17) செல்வத்தை (தனத்தை) அடைந்து, பாதுகாக்கத் துணைபுரியும் காரணத்தால் நீதியே தர்மம் {அறம்} என்றழைக்கப்படுகிறது. ஓ! மன்னா, தவசிகள், தர்மமே மனிதர்களின் அனைத்துத் தீய செயல்களையும் கட்டுப்படுத்தி, எல்லைகளை நிர்ணயிக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள்.(18)
தான்தோன்றி (பிரம்மன்), உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காகவே தர்மத்தை {அறத்தை} உண்டாக்கினான். இதன் காரணமாகவே, ஒரு மன்னன், தன் குடிமக்களின் நன்மைக்காக அறவிதிகளின்படி செயல்பட வேண்டும்.(19) மேலும், இதே காரணத்திற்காகவே, ஓ! மனிதர்களில் புலியே {மந்தாதா}, அனைத்திலும் முதன்மையானதாகத் தர்மம் {அறம்} சொல்லப்படுகிறது. மனிதர்களில் முதன்மையான எவன், தன் குடிமக்களை நீதியுடன் ஆள்கிறானோ, அவனே மன்னன் என்று அழைக்கப்படுகிறான்.(20)
பிரம்மன் |
காமத்தையும், கோபத்தையும் அலட்சியம் செய்து, அறவிதிகளை நீ நோற்பாயாக. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மன்னர்களின் செழிப்புக்கு உகந்ததாக இருக்கும் அறமே அனைத்திலும் முதன்மையானது.(21) மேலும், தர்மமானது பிராமணனிடம் இருந்து உண்டானது. இதன்காரணமாகவே, எப்போதும் பிராமணன் வழிபடப்பட வேண்டும். ஓ! மாந்தாத்ரி, நீ பிராமணர்களின் விருப்பங்களைப் பணிவுடன் நிறைவு செய்வாயாக.(22) பிராமணர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதைப் புறக்கணித்தால், மன்னன் தனக்கு ஆபத்தை வரவழைத்துக் கொள்கிறான். அத்தகு புறக்கணிப்பின் விளைவால் அவன், நண்பர்கள் எவரையும் அடைவதில் தவறி, தன் எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்கிறான்.(23)
விரோசனன் மகனான அசுரன் பலியின் {மகாபலியின்} மூடத்தனத்தால் எழுந்த பிராமணர்களுக்கு எதிரான வன்மத்தின் விளைவாக, முன்பு அவனிடமே {மகாபலியிடமே} வசித்திருந்த செழிப்பின் தேவி {திருமகள்} அவனைக் கைவிட்டாள்.(24) அவள் {திருமகள்}, அந்த அசுரனைக் கைவிட்டுத் தேவர்களின் தலைவனான இந்திரனிடம் சென்றாள். புரந்தரனுடன் {இந்திரனுடன்} வாழும் அந்தத் தேவியைக் கண்ட பலி, பலவாறாக வீண் வருத்தமடைந்தான்.(25)
பலி_மகாபலி |
ஓ! பலமிக்கவனே {மந்தாதா}, இதுவே வன்மம் மற்றும் செருக்கின் விளைவாகும். ஓ! மாந்தாத்ரி {மாந்தாதா}, செழிப்பின் தேவி {திருமகள்} கோபத்தில் உன்னைக் கைவிடாதவாறு நீ விழிப்புடன் இருப்பாயாக.(26) அநீதியானது {அதர்மமானது}, செழிப்பின் தேவியிடம் {திருமகளிடம்} செருக்கு {அகங்காரம்} என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றது என்று சுருதிகள் அறிவிக்கின்றன. ஓ! மன்னா {மந்தாதா}, இந்தச் செருக்கே தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு மத்தியில் பலரை அழிவடையச் செய்தது.(27) அவனால் {செருக்கால்} அரசமுனிகள் பலரும் அழிவை அடைந்திருக்கின்றனர். எனவே, ஓ! மன்னா, நீ விழிப்படைவாயாக. அவனை {செருக்கை} வெற்றிகொள்வதில் வெல்பவனே மன்னனாகிறான். மறுபுறம், அவனால் {செருக்கால்} வெற்றி கொள்ளப்படுபவன் எவனோ, அவன் ஓர் அடிமையே ஆகிறான்.(28) ஓ! மாந்தாத்ரி, நீ அழிவில்லா (புகழ்) வாழ்வை விரும்பினால், செருக்கு மற்றும் அநீதி {அதர்மம்} ஆகிய இரண்டிலும் ஈடுபடாத ஒரு மன்னனாக வாழ்வாயாக.(29) (செருக்கால்) போதையுண்டிருப்பவன், (நேர்மையின் விதிகளில்) அலட்சியமாக இருப்பவன், அறத்தை ஏளனம் செய்பவன், உணர்வற்றவன், ஒன்றுசேர்ந்திருக்கும் அவர்கள் அனைவருடனும் சேர்ந்து கொள்பவன் ஆகியோரின் தோழமையைத் தவிர்ப்பாயாக.(30)
முன்பு உன்னால் தண்டிக்கப்பட்டவன், அதிலும் குறிப்பாகப் பெண்களின் நிமித்தமாகத் தண்டிக்கப்பட்ட அமைச்சர்களின் தோழமை, மலைகள், சமமற்ற நிலங்கள், அடைவதற்கரிதான காடுகள், யானைகள், குதிரைகள் மற்றும் நச்சுப்பாம்புகள் ஆகிவற்றிடம் இருந்து விலகிச் செல்வாயாக. நீ இரவில் திரிவதைக் கைவிட வேண்டும். மேலும், கஞ்சத்தனம், பகட்டு, தற்புகழ்ச்சி, கோபம் ஆகிய பிழைகளையும் நீ தவிர்க்க வேண்டும்.(32) அறியாத பெண்களிடமோ, இருபாலினத்தோரிடமோ {பேடிகளிடமோ}, காமவெறிபிடித்தவர்களிடமோ, பிறரின் மனைவியரிடமோ, திருமணமாகாத கன்னியரிடமோ நீ ஒருபோதும் உடலுறவில் ஈடுபடக்கூடாது.(33) தீயொழுக்கத்தை மன்னன் கட்டுப்படுத்தாத போது, வர்ணக் குழப்பம் பின்தொடரும், மதிப்பிற்குரிய குடும்பங்களில் கூட, பாவம் நிறைந்த ராட்சசர்களும், அலிகளும், உறுப்பிழந்த பிள்ளைகளும், தடித்த நா படைத்தவர்களும், மூடர்களும் பிறப்பெடுக்கத் தொடங்குவார்கள்.(34) எனவே, மன்னன் தன் குடிமக்களுக்கு நன்மை செய்வதன் பொருட்டு, நீதியுடன் செயல்படக் குறிப்பான கவனத்தைக் கொள்ள வேண்டும்.(35)
ஒரு மன்னன் கவனமில்லாமல் செயல்பட்டால், அதன் விளைவாகப் பெருந்தீமையே விளையும். அநீதியானது {அதர்மமானது} அதிகரித்தால், அது வர்ணக்குழப்பத்தையே உண்டாக்கும்.(36) கோடைகால மாதங்களில் குளிர் ஏற்பட்டு, அதற்குரிய காலம் வரும்போது மறைந்துபோகும். வறட்சி, வெள்ளம், தொற்றுநோய்கள் ஆகியன மக்களைப் பீடிக்கும்.(37)
அத்தகு தருணங்களில், தீமை விளைவிக்கும் நட்சத்திரங்கள் எழுந்து, பயங்கரமான எரிநட்சத்திரங்கள் தோன்றும். நாட்டின் அழிவைக் குறிக்கும் பல்வேறு சகுனங்கள் பிறவும் தோன்றும்(38) மன்னன் தன் பாதுகாப்புக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல், தன் குடிமக்களையும் பாதுகாக்காமல் இருந்தால், முதலில் பின்னவர்களுக்கு {குடிமக்களுக்கு} அழிவு ஏற்பட்டு, பிறகு அந்த அழிவானது மன்னனையே பற்றும்.(39) இரு மனிதர்கள் ஒன்றுசேர்ந்து ஒருவனின் செல்வத்தைப் பறிப்பார்கள், குழுவாகச் செயல்படும் பலர் அந்த இருவரிடமும் கொள்ளையடிப்பார்கள். கன்னியரின் கற்பு அழிக்கப்படும். அத்தகு நிலைகள் மன்னனின் பிழைகளில் இருந்தே உண்டாகின்றன என்று சொல்லப்படுகிறது.(40) மன்னன் அறத்தைக் கைவிட்டு, கவனமில்லாமல் செயல்பட்டால், மனிதர்களுக்கு மத்தியில், உடைமைக்கான உரிமைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விடும்" என்றார் {உதத்தியர்}.(41)
அத்தகு தருணங்களில், தீமை விளைவிக்கும் நட்சத்திரங்கள் எழுந்து, பயங்கரமான எரிநட்சத்திரங்கள் தோன்றும். நாட்டின் அழிவைக் குறிக்கும் பல்வேறு சகுனங்கள் பிறவும் தோன்றும்(38) மன்னன் தன் பாதுகாப்புக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல், தன் குடிமக்களையும் பாதுகாக்காமல் இருந்தால், முதலில் பின்னவர்களுக்கு {குடிமக்களுக்கு} அழிவு ஏற்பட்டு, பிறகு அந்த அழிவானது மன்னனையே பற்றும்.(39) இரு மனிதர்கள் ஒன்றுசேர்ந்து ஒருவனின் செல்வத்தைப் பறிப்பார்கள், குழுவாகச் செயல்படும் பலர் அந்த இருவரிடமும் கொள்ளையடிப்பார்கள். கன்னியரின் கற்பு அழிக்கப்படும். அத்தகு நிலைகள் மன்னனின் பிழைகளில் இருந்தே உண்டாகின்றன என்று சொல்லப்படுகிறது.(40) மன்னன் அறத்தைக் கைவிட்டு, கவனமில்லாமல் செயல்பட்டால், மனிதர்களுக்கு மத்தியில், உடைமைக்கான உரிமைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விடும்" என்றார் {உதத்தியர்}.(41)
சாந்திபர்வம் பகுதி – 90ல் உள்ள சுலோகங்கள் : 41
ஆங்கிலத்தில் | In English |