Ekalavya, Drona and Arjuna | Adi Parva - Section 134 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 70)
பதிவின் சுருக்கம் : தமது மகனுக்கும், சீடர்களுக்கும் இடையில் பாரபட்சம் காட்டிய துரோணர்; அஃதை அறிந்து கொண்ட அர்ஜுனன்; அர்ஜுனனுக்கு இரவில் உணவிட வேண்டாம் என்று சமயற்காரனிடம் சொன்ன துரோணர்; இரவில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட அர்ஜுனன்; துரோணரின் அன்பைப் பெற்ற அர்ஜுனன்; ஏகலவ்யனைச் சீடனாக ஏற்காத துரோணர்; ஏகலவ்யனின் திறமையைக் கண்ட இளவரசர்கள்; கட்டைவிரலைக் கூலியாகக் கேட்ட துரோணர்; துரோணர் தன் சீடர்களுக்கு வைத்த சோதனை...
 |
Ekalavya_Adi Parva - Section 134 | Mahabharata In Tamil
|
வைசம்பாயனர் சொன்னார், "இப்படிப் பீஷ்மரால் வழிபடப்பட்டவரும், மனிதர்களில் முதன்மையானவரும், பெரும் சக்தியைக் கொண்டவருமான துரோணர், குரு குலத்தவரின் வசிப்பிடத்திலேயே தங்கி, அங்கேயே புகழுடன் வாழ ஆரம்பித்தார்.(1) அவர் சிறிது காலத்திற்கு ஓய்வெடுத்த பின், பீஷ்மர் தனது பேரப்பிள்ளைகளான கௌரவர்களை அழைத்து, அவருக்குச் சீடர்களாகக் கொடுத்தார். துரோணருக்குப் பல மதிப்புமிக்கப் பொருட்களையும் பரிசாகக் கொடுத்தார் பீஷ்மர்.(2) அந்தப் பெரும்பலசாலி (பீஷ்மர்) பரத்வாஜரின் மகனுக்கு {துரோணருக்கு} நெல் மற்றும் பலவித செல்வங்கள் நிறைந்ததும், அழகானதும், தூய்மையானதுமான வீடு ஒன்றையும் கொடுத்தார்.(3) அதன்பின், வில்லாளிகளில் சிறந்த துரோணர் மகிழ்ச்சியுடன், பாண்டு மற்றும் திருதராஷ்டிரனின் மைந்தர்களான அந்தக் கௌரவர்களைத் தனது சீடர்களாக ஏற்றுக் கொண்டார்.(4)