I saw him first!| Vana Parva - Section 82d | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} தொடர்ந்தார், "ஒருவன் வடவத்தை விட்டு, ரௌத்திரபதம் என்ற இடத்திற்கு முன்னேறி, மகாதேவனைக் {சிவனைக்} கண்டு குதிரை வேள்வியின் பலனை அடைவான். பிறகு தனது ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்து பிரம்மச்சரிய வாழ்வு முறை வாழ்ந்த மணிமத் {மணிமான்} என்ற இடத்தை அடைந்து, அங்கு ஒரு இரவு தங்குபவன், ஓ மன்னா, அக்னிஷ்டோமா வேள்வியைச் செய்த பலனை அடைவான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் முழு உலகத்தாலும் கொண்டாடப்படும் தேவிகை என்ற இடத்திற்குச் செல்ல வேண்டும். ஓ பாரத குலத்தின் காளையே {பீஷமா}, அங்கேதான் அந்தணர்கள் உண்டானார்கள் என்று நாம் கேள்விப்படுகிறோம். மேலும் திரிசூலம் தாங்குபவனின் {சிவனின்} பகுதியான உலகத்தால் கொண்டாடப்படும் பகுதியும் அங்கிருக்கிறது. ஒருவன் தேவிகையில் நீராடி, மகேஸ்வரனை {சிவனை} வழிபட்டு, தனது சக்திக்குத் தக்கவாறு பால் மற்றும் நெய்யில் அரசியைச் சமைத்து படையல் வைப்பவன், ஓ பாரத குலத்தின் காளையே {பீஷ்மா}, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் வேள்வியைச் செய்தவனின் தகுதியை அடைவான். ருத்ரனின் மற்றும் ஒரு தீர்த்தமான காமகியமும் அங்கே இருக்கிறது. அதில் தேவர்கள் தங்கியிருக்கின்றனர். அங்கே நீராடிய மனிதன் விரைவாக வெற்றியை அடைவான். மேலும் அங்கிருக்கும் யஜனம், பிரம்மவாலுகம், புஷ்பாம்பம் ஆகியவற்றின் நீரையும் தொடும் ஒருவன் தனது மறுபிறவியின் சோகத்திலிருந்தும் விடுபடுகிறான்.
தேவர்களும், முனிவர்களும் ஓய்ந்திருக்கும் அந்தப் புனிதமான தீர்த்தமான தேவிகை ஐந்து யோஜனை நீளமும் {1யோஜனை = 8 மைல்}, அரை யோஜனை அகலமும் கொண்டது. ஓ மன்னா அதன் பிறகு ஒருவன் தீர்க்கசத்திரம் எனும் இடத்தை நோக்கி முன்னேற வேண்டும். அங்கே பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், சித்தர்களும், பெரும் முனிவர்களும், முறையான நோன்பு நோற்று, முதற்படியான சபதங்களை ஏற்றும் அவற்றை உரைத்தும் நீண்ட காலம் தொடரும் வேள்வியைச் செய்து கொண்டிருக்கின்றனர். ஓ மன்னா, தீர்க்கசத்தரத்திற்கு மட்டும் செல்லும் ஒருவன், ராஜசூயம் மற்றும் குதிரை வேள்விகளின் பலன்களுக்கு மேன்மையான பலனை அடைகிறான். அதன்பிறகு ஒருவன் தனது புலன்களைக் கட்டுப்படுத்தி, முறையான உணவுமுறையுடன் சரஸ்வதி {ஆறு} மேருவின் மார்பில் மறைந்து சமசம், சிவோத்பேதம் மற்றும் நாகத்பேதம் ஆகிய இடங்களில் மீண்டும் வெளியாகும் விநசனத்திற்குச் சென்று அக்னிஷ்தோம வேள்வி செய்த பலனை அடையலாம். சிவோத்பேதத்தில் நீராடுவதால் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான். நாகோத்பேதத்தில் நீராடுவதால் ஒருவன் நாகர்களின் உலகத்தை அடைகிறான்.
பிறகு ஒருவன், அடைவதற்கு அரிதான ஷசயான தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ பாராத {பீஷ்மா}, அங்கே, நாரைகள் சச என்ற உருவத்தில் மறைந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் மீண்டும் தோன்றுகின்றன. ஓ பாரத குலத்தின் தலைவனே, அந்த சரஸ்வதியில் ஒருவன் நீராட வேண்டும். அப்படி அங்கே நீராடினால், ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, ஒருவன் சந்திரனைப் போன்ற பிரகாசத்தைப் பெற்று, ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடையலாம். ஓ குரு குலத்தவனே, பிறகு ஒருவன் குமாரகோடி எனும் தீர்த்தத்தை அடைந்து புலன்களை அடக்கி, அங்கே நீராடி, தேவர்களையும் பித்ருக்களையும் வழிபட வேண்டும். இப்படிச் செய்வதால், ஒருவன் பத்தாயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைந்து, தனது மூதாதையர்களை உயர்ந்த உலகங்களுக்கு அனுப்புகிறான்.
ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன், தனது ஆன்மாவைக் கட்டுப்படுத்தி, முன்பொரு காலத்தில் ஒரு கோடி முனிவர்கள் கூடிய இடமான ருத்ரகோடி என்ற இடத்திற்குச் செல்ல வேண்டும். ஓ மன்னா, மகாதேவனைக் காணும் எதிர்பார்ப்பில் பெரும் மகிழ்ச்சியில் மூழ்கி, அங்கே அந்த முனிவர்கள் கூடினர். அவர்கள் ஒவ்வொருவரும், "நானே முதலில் தெய்வத்தைக் காண்பேன்!", " நானே முதலில் தெய்வத்தைக் காண்பேன்!" சொல்லிக் கொண்டனர். ஓ மன்னா {பீஷ்மா} ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அந்த முனிவர்களிடையே சச்சரவைத் தவிர்க்க யோகத்தின் தலைவன் {சிவன்}, தனது யோக சக்தியால் தன்னை ஒரு கோடி உருவங்களாகப் பெருக்கிக் கொண்டு, அவர்கள் ஒவ்வொரு முன்பும் நின்றான். அனைத்து முனிவர்களும், "நானே அவனை முதலில் கண்டேன்" என்று சொன்னார்கள். ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆழ்ந்த அர்ப்பணிப்பு கொண்ட அந்த முனிவர்களிடம் திருப்தி கொண்ட மகாதேவன், அவர்களுக்கு வரமாக, "இந்த நாள் முதல் உங்கள் தர்மம் பெருகட்டும்" என்று சொன்னார்.
ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மனே}, சுத்தமான மனதுடன் ருத்திரகோடியில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்யும் பலனை அடைந்து, தனது முன்னோர்களை விடுவிக்கிறான். பிறகு ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, பெரிதும் புனிதமான கொண்டாடப்படும் பகுதியான சரஸ்வதி கடலில் சங்கமிக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். ஓ மன்னா, அங்கே, பிரம்மனின் தலைமையில் தேவர்களும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும், சித்திரை மாதத்தின் வளர்பிறை பதினான்காம் நாளில் {சதுர்த்தசியில்} கேசவனை வழிபடுகிறார்கள். ஓ மனிதர்களில் புலியே, அங்கே நீராடுவதால் ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானமாகக் கொடுத்த பலனை அடைந்து தனது அனைத்துப் பாவங்களையும் கழுவிக்கொண்டு, பிரம்மனின் உலகத்திற்கு உயர்கிறான். ஓ மன்னா, அந்த இடத்தில் முனிவர்கள் பலர் பல வேள்விகளைச் செய்திருக்கிறார்கள். அந்தப் பகுதிக்குச் செல்வதால் ஒருவன் ஆயிரம் பசுக்களைக் கொடையாகக் கொடுத்த பலனை அடைகிறான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.