Gods ascetism for the grace of Vishnu!| Vana Parva - Section 82c | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} தொடர்ந்தார், "ஓ பாரத குலத்தின் காளையே {பீஷ்மா}, பிறகு சரஸ்வதி நதி கடலோடு கலக்கும் பகுதிக்குச் செல்லும் ஒருவன் நூறு பசுக்களை தானம் கொடுப்பதால் கிடைக்கும் பலனை அடைந்து சொர்க்கத்தையும் அடைந்து, எப்போதும் அக்னியைப் போல பிரகாசித்துக் கொண்டிருப்பான். கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன், அங்கிருக்கும் நீர்நிலைகளின் மன்னனான தீர்த்தத்தில் நீராடி பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் நீர்க்கடன் செய்து மூன்று இரவுகள் அங்கே வாழ்ந்தால் அவன் சந்திரனைப் போன்று பிரகாசித்து, குதிரை வேள்வி செய்ததன் பலனை அடைவான். ஓ பாரதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அதன் பிறகு ஒருவன், துர்வாச முனிவரால் விஷ்ணுவுக்கு வரமளிக்கப்பட்ட வரதானம் என்ற தீர்த்தத்திற்கு செல்ல வேண்டும். வரதானத்தில் நீராடுபவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்ததன் பலனை அடைகிறான். பிறகு ஒருவன், புலன்களை அடக்கி, முறையான உணவுமுறையுடன் துவாராவதிக்குச் {துவாரகைக்குச்} செல்ல வேண்டும். அங்கு பிண்டாரகத்தில் {தீர்த்தத்தில்} நீராடி, அபரிமிதமான தங்கத்தைக் கொடையாகக் கொடுத்த பலனை அடையலாம். ஓ அருளப்பட்டவனே {பீஷ்மா}, அங்கு தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட நாணயங்களும், திரிசூலக் குறி கொண்ட தாமரைகளையும் காணலாம் என்பது விவரிக்க அற்புதமானது. ஓ வீரர்களை அடக்குபவனே, மனிதர்களில் காளையே, அங்கே மகாதேவன் {சிவன்} நேரடியாக இருக்கிறான்.
ஓ பாரதா {பீஷ்மா}, பிறகு சிந்து நதி கடலுடன் சந்திக்கும் பகுதியை அடைந்து, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் ஒருவன் வருண தீர்த்தத்தில் நீராட வேண்டும். அங்கே நீராடி, பித்ருக்களுக்கும், முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் நீர்க்கடன் செலுத்துபவன், ஓ பாரதகுலத்தின் காளையே, வருண உலகத்தை அடைந்து அங்கே தன்னொளி பெற்று பிரகாசிக்கிறான். ஞானவான்கள் அங்கிருக்கும் தெய்வத்தை சங்குகர்ணேஸ்வரன் என்ற பெயரால் வழிபடுபவன், குதிரையை வேள்வி செய்வதால் ஏற்படுவதைப் போன்று பத்து மடங்கு பலனை அடைகிறான். ஓ பாரத குலத்தின் காளையே அந்தத் தீர்த்தத்தை வலம் வந்த ஒருவன், ஓ குருக்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, மூன்று உலகத்தாலும் திரிமி {சமி} என்ற பெயரால் அறியப்பட்டு கொண்டாடப்படும் தீர்த்தத்திற்குச் செல்ல வேண்டும். அந்தத் தீர்த்தம் அனைத்துப் பாவங்களையும் கழுவுகிறது. அங்கேதான் தேவர்கள் பிரம்மனையும், மகேஸ்வரனையும் {சிவனையும்} வணங்குகிறார்கள். அங்கே நீராடிய பிறகு, தேவர்களால் சூழப்பட்ட ருத்திரரை வணங்குபன் பிறவியில் இருந்து செய்த பாவங்களில் இருந்து விடுபடுகிறான். ஓ மனிதர்களில் சிறந்தவனே, அங்கேதான் திரிமி {சமி} அனைத்து தேவர்களாலும் வழிபடப்பட்டான். ஓ மனிதர்களில் சிறந்தவனே, அங்கே நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்ததன் பலனை அடைகிறான். ஓ பெரும் புத்திகூர்மை கொண்டவனே, அண்டத்தைப் படைத்தவனான விஷ்ணு, தைத்தியர்களையும், தானவர்களையும் கொன்ற பிறகு தன்னைச் சுத்திகரித்துக் கொள்ள அந்தத் தீர்த்தத்திற்கே சென்றான்.
ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மனே}, அதன் பிறகு ஒருவன் அனைவராலும் கொண்டாடப்படும வசோர்த்தாரைக்குச் செல்ல வேண்டும். அந்தத் தீர்த்தத்தை அடைந்ததுமே ஒருவன் குதிரை வேள்வி செய்ததன் பலனை அடைகிறான். ஓ குருக்களில் சிறந்தவனே, ஆன்மாவை அடக்கி, கவனம் சிதறாமல், தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செலுத்தும் ஒருவன் விஷ்ணுவின் உலகத்தை அடைந்து வணங்கப்படுகிறான். ஓ பாரதகுலத்தின் காளையே அந்தப் புனிதமான தடாகத்தில் வசுக்கள் இருக்கின்றனர். அங்கே நீராடி அதன் நீரை அருந்துபவன், வசுவாகிறான் என்று கருதப்படுகிறது. அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் சிந்தூத்தமம் என்ற ஒரு கொண்டாடப்படும் தீர்த்தம் இருக்கிறது. ஓ மனிதர்களில் சிறந்தவனே, அங்கே நீராடும் ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு சுத்திகரிக்கப்பட்ட ஆன்மாவுடனும், சுத்தமான நடத்தையுடனும் பத்ரதுங்கத்தை அடையும் ஒருவன் உயர்ந்த நிலையால் அருளப்பட்டிருக்கும் பிரம்மலோகத்தை அடைவான். பிறகு, சித்தர்களால் அடையப்பட்ட இந்திரனின் குமாரிகளின் தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மனிதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அங்கு நீராடுபவன் இந்திரலோகத்தை அடைகிறான். அந்தக் குமாரிகள் தீர்த்தத்திலேயே ரேணுகா என்ற தீர்த்தம் இருக்கிறது. அதுவும் சித்தர்களால் அடையப்பட்டதே. அங்கு நீராடும் ஒரு அந்தணன் சந்திரனைப் போலப் பிரகாசிக்கிறான். பிறகு பஞ்சநதம் என்று அழைக்கப்படும் தீர்த்தத்தை அடைந்து, புலன்களை அடக்கி, முறையான உணவு முறையுடன் இருப்பவன் சாத்திரங்களில் ஒன்றன் பின் ஒன்றாகச் சொல்லப்பட்டிருக்கும் ஐந்து வேள்விகளின் பலன்களை அடைகிறான். பிறகு, ஓ மன்னா, ஒருவன் அற்புதமான பகுதியான பீமையை அடைய வேண்டும். ஓ பாரதர்களில் சிறந்தவனே அங்கே யோனி என்று அழைக்கப்படும் அந்தத் தீர்த்ததில் நீராடும் மனிதன் (தனது அடுத்த பிறவியில்), முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட காது குண்டலங்களுடன் தேவதையின் மகனாகப் பிறந்து, நூறாயிரம் {ஒரு லட்சம்} பசுக்களைத் தானம் கொடுத்ததன் பலனை அடைகிறான்.
அடுத்து ஸ்ரீகுண்டம் {கிரிகுஞ்சம்} என்று மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் இடத்தை அடைந்து, பெருந்தகப்பனை {பிரம்மாவை} வணங்கும் ஒருவன், ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்ததன் பலனை அடைகிறான். ஓ அறம் சார்ந்தவனே, ஒருவன் பிறகு விமல் என்ற அற்புதமான தீர்த்தத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே தங்க மற்றும் வெள்ளி நிற மீன்களைக் காணலாம். அங்கு நீராடும் ஒருவன் வாசவனின் {இந்திரனின்} உலகத்தை அடைந்து, தனது ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொண்டு அனைத்துப் பாவங்களையும் கழுவி உன்னத நிலையை அடையலாம். பிறகு விதஸ்தை என்ற தீர்த்தத்தை அணுகி, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் நீர்க்கடன் செலுத்தும் ஒருவன், வாஜபேய வேள்வியில் கிடைக்கும் பலனை அடையலாம். விதஸ்தை என்ற பெயரால் பாவங்களை அழிக்கும் தீர்த்தம், நாகன் {பாம்பு} தக்ஷகனின் வசிப்பிடமான காஷ்மீர நாட்டில் இருக்கிறது. அங்கே நீராடும் மனிதன் வாஜபேய வேள்வியின் பலனை அடைந்து, அனைத்துப் பாவங்களில் இருந்தும் தனது ஆன்மாவைக் கழுவி, உயர்ந்த உன்னத நிலையை அடைகிறான்.
ஒருவன் பிறகு, வடவம் {மலதை} என்று மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு மாலைப்பொழுதில் உரிய சடங்குகளுடன் நீராடும் ஒருவன், தனது சக்தியில் சிறந்ததை வெளிப்படுத்தி நெய் மற்றும் பாலில் வேக வைத்த அரிசியை ஏழு சுடர் கொண்ட தெய்வத்துக்கு {அக்னிக்கு} படைக்க வேண்டும். பித்ருக்களுக்கு {முன்னோர்களுக்கு} மரியாதை செலுத்தும் விதமாக அங்கு செய்யப்படும் தானம், அளவற்றதாக ஞானவான்கள் கூறுகின்றனர். முனிவர்கள், பித்ருக்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்களின் பல இனங்கள், குஹ்யர்கள், கிண்ணரர்கள், யக்ஷர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், ராட்சசர்கள், தைத்தியர்கள், ருத்திரர்கள், ஏன் பிரம்மனும் கூட, ஓ மன்னா, தங்கள் புலன்களை அடக்கி, ஆயிரம் வருடம் விஷ்ணுவின் கருணைக்காகத் தவம் இருந்து, பால் மற்றும் நெய்யில் சமைக்கப்பட்ட அரசியை கேசவனுக்குப் படைத்து, ஏழு ரிக்குகளுடன் தங்கள் கடன்களைச் செலுத்தினர். ஓ மன்னா, இதனால் திருப்தியடைந்த கேசவன் {விஷ்ணு}, ஐசுவரியம் எனும் எட்டுமடங்கான தன்மையையும், மேலும் அவர்கள் விரும்பிய பலவற்றையும் கொடுத்தான். இவற்றை அருளிய அந்தத் தெய்வம், அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே மேகத்துக்குள் மறையும் மின்னல் போல மறைந்து போனான். ஓ பாரதா {பீஷ்மா}, இதன்காரணமாகவே அந்தத் தீர்த்தம் சப்தசரு என்ற பெயரால் அறியப்படுகிறது. அந்த இடத்தில் ஏழு சுடர் கொண்ட தெய்வத்திற்கு {அக்னிக்கு}, சருவைப் படைப்பவன், நூறாயிரம் {ஒரு லட்சம்} பசுக்களைத் தானம் கொடுத்ததன் பலனையும், நூறு ராஜசூயம் மற்றும் நூறு குதிரை வேள்விகள் செய்த பலனையும் அடைகிறான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.