Shiva and Mankanaka! | Vana Parva - Section 83c | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "பிறகு ஒருவன் வளர்பிறையின் பத்தாவது நாளில் {தசமி திதியில்} புண்டரீகம் என்று அழைக்கப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடிய ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன், மூன்று உலகத்திலும் திரிவிஷ்டபம் என்று அறியப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே அந்தத் தீர்த்தத்தில் பாவங்களை அழிக்கும் புனிதமான வைதரணி என்றழைக்கப்படும் ஆறு இருக்கிறது. அங்கே நீராடி, காளையைக் குறியீடாகக் கொண்டு, தனது கையில் திரிசூலத்தைக் கொண்டிருக்கும் தெய்வத்தை {சிவனை} வழிபட்டு, அனைத்து பாவங்களில் இருந்தும் ஆன்மசுத்தமடைந்து ஒருவன் மேன்மையான கதியை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் பலகீவனம் எனும் அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ ஏகாதிபதி {பீஷ்மா}, அங்கே அந்தத் தீர்த்தத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக தேவர்கள் தங்கள் தவங்களை இயற்றிக் கொண்டிருக்கின்றனர். பிறகு ஒருவன், திரிஷத்வதி என்ற தீர்த்தத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே நீராடி தேவர்களை வழிபடும் ஒருவன், ஓ பாரதா {பீஷ்மா}, அக்னிஷ்டோமா மற்றும் அதிரதா வேள்விகளால் கிடைக்கும் பலனைவிட மேன்மையான பலனை அடைவான்.
ஓ பாரதர்களின் தலைவா {பீஷ்மா}, சர்வதேவ தீர்த்தத்தை அடைந்து அங்கு நீராடும் மனிதன், ஓ மன்னா {பீஷ்மா}, ஆயிரம் பசுக்களைத் தானமாகக் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு பாணிகாதம் என்ற தீர்த்தத்தில் நீராடும் மனிதன் அனைத்து தேவர்களையும் வழிபட்டு, அக்னிஷ்டோமா மற்றும் அதிரதா வேள்விகளால் கிடைக்கும் பலனைவிட மேன்மையான பலனை அடைவான். மேலும் ராஜசூய வேள்வியின் பலனையும் அடைந்து கடைசியாக முனிவர்களின் உலகை அடைவான். ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் மிஸ்ரகம் என்று அழைக்கப்படும் அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மன்னர்களில் புலியே {பீஷ்மா}, அங்கே அந்தணர்களுக்காக உயர் ஆன்ம வியாசர் அனைத்து தீர்த்தங்களையும் கலந்தார் என்று நாம் கேள்விப்படுகிறோம். ஆகையால், மிஸ்ரகத்தில் நீராடும் ஒருவன் அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடியவனாவான்.
பிறகு ஒருவன், தனது புலன்களை அடக்கி, முறையான உணவுப்பழக்கத்துடன், வியாசவனம் என்ற தீர்த்தத்தை அடையவேண்டும். பிறகு அங்கே இருக்கும் மனோஜவம் என்ற தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு, மதுவதியில் இருக்கும் தேவி {Devi } தீர்த்தத்தை அடைந்து, அங்கே நீராடி தேவர்களையும் பித்ருக்களையும் வழிபடும் ஒருவன், தேவியின் {அந்தப் பெண் தெய்வத்தின்} உத்தரவின் பேரில் ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு முறையான உணவுப்பழக்கத்துடன் கௌசிகியும் திருஷ்டத்வதியும் சங்கமிக்கும் இடத்தில் நீராடும் ஒருவன், அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். பிறகு ஒருவன், பெரும் புத்திகூர்மை கொண்ட வியாசர், தனது மகனை நினைத்து எரியும் துக்கத்துடன் தனது உடலைக் கைவிட எண்ணி பிறகு தேவர்களால் உற்சாகப்படுத்தப்பட்ட இடமான வியாசஸ்தலியை அடைய வேண்டும். வியாசரின் அந்த இடத்திற்கு வரும் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான். ஓ குருகுலத்தின் மகனே {பீஷ்மா}, பிறகு கிந்தத்தம் என்றழைக்கப்படும் கிணற்றை அடைந்து குறிப்பிட்ட அளவு எள்ளை அதற்குள் வீசினால் {ஒரு பிரஸ்தம் [12 பிடி ஒரு குடவம், 4 குடவம் ஒரு பிரஸ்தம்] அதாவது நாற்பத்தெட்டு பிடி எள்ளை தானம் செய்தல் என்றும் சொல்லப்படுகிறது} அவன் அனைத்துக் கடன்களில் இருந்தும் விடுபட்டு வெற்றியை அடைகிறான். பிறகு வேதீ என்ற தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான்.
அஹஸ், சூதினம் என்று கொண்டாடப்படும் தீர்த்தங்களும் இருக்கின்றன. அங்கே நீராடும் ஒருவன், ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, சூரியனின் உலகத்திற்குச் செல்கிறான். பிறகு ஒருவன் மிருகதூமம் என்று மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, அங்கே இருக்கும் கங்கையில் நீராட வேண்டும். அங்கே நீராடி மகாதேவனை {சிவனை} வழிபடுபவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு தேவி தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன் மூன்று உலகங்களாலும் வாமனக தீர்த்தம் என்று கொண்டாடப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே விஷ்ணுபதத்தில் நீராடி வாமனனை வழிபடும் ஒருவனின் ஆன்மா அனைத்துப் பாவங்களிலிருந்தும் சுத்தப்படுத்தப்பட்டு ஒருவன் விஷ்ணுவின் வசிப்பிடத்தை அடைகிறான். பிறகு குலம்புனத்தில் நீராடும் ஒருவன், தனது சொந்த குலத்தை புனிதமாக்குகிறான். பிறகு பவனஹ்ரதத்தை அடையும் ஒருவன் அந்த அற்புதமான மருதர்களின் தீர்த்ததில் நீராடி, ஓ மன்னா, மனிதர்களில் புலியே {பீஷ்மா}, ஒருவன் வாயுத் தேவனின் உலகத்தில் வழிபடப்படுகிறான். பிறகு அமரஹ்ரதத்தில் நீராடும் ஒருவன், அர்ப்பணிப்புடன் தேவர்கள் தலைவனை {இந்திரனை} வழிபட்டு, சொர்க்கத்தில் வழிபடத்தக்கவனாகி அற்புதமான தேரில் அமர்ந்து இறவாதவர்கள் {தேவர்கள்} துணையுடன் உலவும் பேறைப் பெறுகிறான்.
ஓ பெரும் மனிதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன், சாலிஹோத்ரனின் சாலிசூரியம் {சாலிசூர்ப்பம்} என்ற தீர்த்தத்தில் உரிய சடங்குகளுடன் நீராடி, ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். ஓ பாரதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, பிறகு, சரஸ்வதி {நதியில்} இருக்கும் ஸ்ரீகுஞ்சம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மனிதர்களில் சிறந்தவனே, அங்கே நீராடும் ஒருவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் நைமிஷகுஞ்சத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, முற்காலத்தில் நைமிஷ வன தவசிகளான முனிவர்கள் புனிதநீராட்டுப்பயணத்தை {தீர்த்தயாத்திரையை} முன்னிட்டு குருக்ஷேத்திரத்தை அடைந்தார்கள். ஓ பாரதர்களின் தலைவா {பீஷ்மா}, அங்கே சரஸ்வதி நதிக்கரையில் அவர்கள் {முனிவர்கள்} ஓய்ந்திருக்க ஒரு தோட்டம் உண்டாக்கப்பட்டது. அது அவர்களுக்குப் பெரும் திருப்தியைக் கொடுத்தது. அங்கே அந்த சரஸ்வதியில் நீராடும் ஒருவன் அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைவான்.
ஓ அறம்சார்ந்தவனே, பிறகு ஒருவன் அற்புதமான தீர்த்தமான கன்யா தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைவான். பிறகு ஒருவன் பிரம்மனின் அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் (மூன்று) தாழ்ந்த வகையிலான ஒருவன் {அந்தணனல்லாத மூன்று வகையினர்} அந்தண நிலையை அடைகிறான். அப்படி நீராடும் ஒருவன் அந்தணனாக இருப்பின் அவனது அனைத்துப் பாவங்களும் அழிந்து அவன் உயர்ந்த நிலையை அடைவான். ஓ மனிதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் சோமம் என்ற அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, அங்கே நீராடும் ஒருவன் சோமனின் {சந்திரனின்} உலகத்தை அடைவான். ஓ மன்னா, பிறகு ஒருவன், பெரும் ஆன்ம வெற்றிகண்ட மங்கணகர் என்ற பெயரில் கொண்டாடப்படும் முனிவர் இருக்கும் இடமான சப்தசாரஸ்வதம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும்.
ஓ மன்னா, முற்காலத்தில், கூர்மையான குசப்புல்லால் தனது கையை அறுத்துக் கொண்ட மங்கணகரின் கைக்காயத்தில் இருந்து (இரத்தத்திற்குப் பதிலாக) காய்கறிச்சாறு {அல்லது கீரைச்சாறு} சுரந்தது என்று கேள்விப்படுகிறோம். அப்படி தனது கரத்தின் காயத்தில் இருந்து காய்கறிச்சாறு வழிவதைக் கண்ட அந்த முனிவர் கண்களை அகல விரித்து ஆச்சரியமடைந்து கூத்தாடினார். அப்படி அந்த முனிவர் ஆடிய போது அவரோடு சேர்ந்து அசையாத மற்றும் அசையும் உயிரனங்களும் அவரது பராக்கிரமத்தால் ஆடத்தொடங்கின. ஓ மன்னா, பிறகு பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், தவத்தையே செல்வமாகக் கொண்ட முனிவர்களும் மங்கணகரின் செயலால் அசைந்து அக்காரியத்தை மகாதேவனிடம் சொல்லினர். அவர்கள், "ஓ தெய்வமே, அந்த முனிவர் {மங்கணகர்} ஆடாதவாறு நீர் செயல்படுவதே உமக்குத் தகும்" என்றனர்.
அப்படிச் சொல்லப்பட்ட மகாதேவன் {சிவன்}, இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன், ஆடிக்கொண்டிருந்த முனிவரை அணுகி, தேவர்களுக்கு நன்மை செய்ய விரும்பி, "ஓ பெரும் முனிவரே, ஓ அறம் சார்ந்தவரே, நீர் ஏன் ஆடிக் கொண்டிருக்கிறீர்? ஓ முனிவர்களில் காளையே, உமது இந்த மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?" என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர், "ஓ அந்தணர்களில் சிறந்தவரே {சிவனே}, நான் அறத்தின் வழி நடக்கும் ஒரு துறவி. ஓ அந்தணரே, எனது கைக்காயத்தில் இருந்து வழிந்தோடும் காய்கறிச் சாறை நீர் காணவில்லையா? இக்காட்சியைக் கண்ட மகிழ்ச்சியாலேயே நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்" என்றார். உணர்வுகளில் குருடாகிப் போன அந்த முனிவரின் வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தெய்வம் {சிவன்}, சிரித்துக் கொண்டே, "ஓ அந்தணரே, இதனால் நான் ஆச்சரியம் அடையவில்லை. என்னைப் பாரும்" என்றான். ஓ மனிதர்களில் சிறந்தவனே, ஓ பாவமற்ற மன்னா {பீஷ்மா}, இதைச்சொன்ன மகாதேவன் {சிவன்}. தனது கட்டைவிரலை, தனது விரலின் நுனியாலேயே அழுத்தினான். அதனால் உண்டான காயத்தில் இருந்து பனியைப் போன்ற சாம்பல் வெளிவந்தது. ஓ மன்னா {பீஷ்மா}, இதைக் கண்ட முனிவர் வெட்கி அந்தத் தெய்வத்தின் {சிவனின்} பாதத்தில் விழுந்தார். ருத்திர தெய்வத்தைவிட பெரிதான சிறந்த எதுவும் இல்லை என்று நினைத்த அவர் இந்த வார்த்தைகளால் வழிபடத்தொடங்கினார்.
அவர், "ஓ திரிசூலத்தைத் தாங்குபவனே, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் புகலிடமாக இருப்பவனே, நீயே அண்டத்துக்கும் புகலிடமாக இருக்கிறாய். அசைவன அசையாதன ஆகியவற்றைக் கொண்ட மூன்று உலகங்களையும் நீயே படைத்தாய். யுகத்தின் முடிவில் நீயே அனைத்தையும் விழுங்குகிறாய். தேவர்களாலேயே உன்னை அறிய முடியாத போது, என்னால் எப்படி உன்னை அறிய முடியும்? ஓ பாவமற்றவனே, பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவரும் உன்னிலேயே அடக்கம். உலகங்களை ஆக்குபவனும் ஆக்கும்படி செய்பவனும் நீயே. உனது கருணையாலே அனைத்து தேவர்களும் கவலையற்று, பயமற்று இருக்கின்றனர்." என்று மகாதேவனை வழிபட்ட அந்த முனிவர் மேலும், "ஓ தேவர்களுக்குத் தேவா, உனது கருணையை எனக்கு அருள் செய். எனது தவம் சுருங்காமல் இருக்கட்டும்" என்றும் கேட்டார். பிறகு உற்சாக ஆன்மா கொண்ட அந்தத் தெய்வம் அந்த மறுபிறப்பாளரான {பிராமணரான} முனிவரிடம் {மங்கணகரிடம்}, "ஓ அந்தணா, உனது தவம் எனது அருளால் ஆயிரம் மடங்கு உயரட்டும். ஓ பெரும் முனிவா, நான் உன்னுடன் இந்த ஆசிரமத்தில் வசித்திருப்பேன். சப்தசாரஸ்வதத்தில் நீராடி என்னை வழிபடும் எவரும், அதுமுதல் அனைத்தையும் அடையும் சக்தி பெறுவர். மேலும் அவர்கள் கடைசியாக சாரஸ்வத உலகத்தைச் சந்தேகமற அடைவர்." என்று சொன்ன அந்த மகாதேவன் {சிவன்}, அங்கேயே அப்படியே மறைந்து போனான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.