Unrivalled regions attained through Narada! | Vana Parva - Section 83b| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைப் பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "ஓ குருகுலத்தின் மகனே {பீஷ்மா}, அதன்பிறகு ஒரு பயணி வம்சமூலகத்தை {Vansamulaka} அடைந்து அங்கே நீராடுவதால் தனது குலத்தை வளர்க்கும் பலனைப் பெறுகிறான்.. ஓ பாரதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, பிறகு காயசோதனம் என்ற தீர்த்தத்தை {Kayasodhana} அடையும் ஒருவன் அங்கே நீராடி, தன்னைச் சுத்திகரித்துக் கொண்ட பிறகு, சுத்திகரித்துக் கொண்ட அந்த உடலுடன் நிகரற்ற சிறந்த பேறு கொண்ட உலகத்தை சந்தேகமற அடைவான். ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன், எந்த இடத்தில் பெரும் சக்தி கொண்ட விஷ்ணுவால் உலகங்கள் படைக்கப்பட்டனவோ, லோகோத்தாரம் {Lokoddara} என்ற பெயரால் மூவுலகங்களிலும் புகழ்பெற்ற அந்தத் தீர்த்தத்தை அடைய வேண்டும். மூவுலகங்களாலும் வழிபடப்படும் அந்தத் தீர்த்தத்தை அடையும் ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, அங்கே நீராடி எண்ணிலடங்கா உலகங்களைத் தானே ஈட்டிக் கொள்கிறான். பிறகு ஸ்ரீ எனும் தீர்த்தத்தை {tirtha called Sree} அடையும் ஒருவன் அங்கே நீராடி, பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட்டு உயர்ந்த செழிப்பை அடைகிறான்.
பிரம்மச்சரிய வாழ்வு முறையை மேற்கொண்டு, ஒருமுகம் கொண்ட ஆன்மாவுடன் ஒருவன் அடுத்ததாக கபிலம் என்ற தீர்த்தத்தை {tirtha called Kapila} அடைய வேண்டும். அங்கே நீராடி, தனது சொந்த பித்ருக்களையும், தேவர்களையும் வழிபடும் மனிதன் ஆயிரம் கபில வகை பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு சூரியன் என்ற தீர்த்தத்தை {tirtha called Surya} அடைந்து அங்கே நீராடி கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் பித்ருக்களையும் தேவர்களையும் வணங்கி, முழுவதும் உண்ணாதிருப்பவன் அக்னிஷ்டோமா வேள்வியின் பலனை அடைந்து (கடைசியாக) சூரியனின் உலகத்தை அடைகிறான். பிறகு ஒரு பயணி கோபவனம் என்ற தீர்த்தத்தை {Gobhavana} அடைந்து அங்கே நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான். ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, பிறகு ஒரு பயணி சங்கினீ என்ற தீர்த்தத்தை {tirtha called Shankhini} அடைந்து, அங்கே இருக்கும் தேவி தீர்த்தத்தில்{Devi-tirtha}நீராடி பெரும் பராக்கிரமத்தை அடைகிறான். ஓ மன்னா, பிறகு ஒருவன் சரஸ்வதியில் அமைந்திருக்கும் தரந்தகம் என்ற தீர்த்தத்தை {Tarandaka }அடைய வேண்டும். அந்தத் தீர்த்தம் யக்ஷர்களின் சிறப்புமிகுந்த தலைவனும் குபேரனின் வாயில் காப்போனுமான {துவாரரக்ஷகனின்) யக்ஷனின் தீர்த்தமாகும். ஓ மன்னா, அங்கே நீராடும் ஒருவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான்.
ஓ அறம்சார்ந்த மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் பிரம்மவர்த்தம் {tirtha called Brahmavarta) என்றழைக்கப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். பிரம்மவர்த்தத்தில் நீராடும் ஒருவன் பிரம்மனின் உலகத்திற்கு உயர்கிறான். ஓ மன்னா, பிறகு ஒருவன் சுதீர்த்தம் {tirtha called Sutirtha} என்றழைக்கப்படும் அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே தேவர்களுடன் சேர்ந்து பித்ருக்களும் நேரடியாகவே வசிக்கின்றனர். ஒருவன் அங்கே நீராடி பித்ருக்களையும் தேவர்களையும் வணங்க வேண்டும். இப்படிச் செய்வதால் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து (கடைசியாக) பித்ருக்களின் உலகத்தை அடைகிறான். இதன் காரணமாகவே ஓ அறம் சார்ந்தவனே {பீஷ்மா}, அம்புமதியில் {Amvumati} அமைந்திருக்கும் சுதீர்த்தம் அற்புதமானதாகக் கருதப்படுகிறது. ஓ பாரத குலத்தில் சிறந்தவனே, பிறகு காசீஸ்வரனின் {கோசேஸ்வரனின்} தீர்த்தத்தில் {Kasiswara} நீராடி ஒருவன் அனைத்து நோயிலும் இருந்து விடுபட்டு, வழிபடப்படும் பிரம்மனின் உலகத்தை அடைகிறான். பிறகு, அங்கே மாத்ரி {மாத்ரு} {Matri} என்று அழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராட வேண்டும். மாத்ரி தீர்த்தத்தில் நீராடும் ஒருவன், ஓ மன்னா, பெரும் புத்திரப்பேறையும், பெரும் செழிப்பையும் அடைகிறான்.
பிறகு ஒருவன், கட்டுப்படுத்தப்பட்ட புலனுடனும், முறையான உணவுப்பழக்கத்துடனும் சீதவனம் {tirtha called Shitavanatirtha} என்றழைக்கப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ பெரும் மன்னா {பீஷ்மா}, வேறு எந்தத் தீர்த்தத்திற்கும் இல்லாத பலன் இந்தத் தீர்த்தத்திற்குச் சொல்லப்படுகிறது. ஒருவன் இங்கே செல்வதாலேயே புனிதத்தை அடைகிறான். தனது முடியை அந்தத் தீர்த்தத்ததில் கைவிடுவதால் {மழிப்பதால்} {தலை மயிரில் நீர் தெளிப்பதால் என்று வடமொழி மூலத்தில் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஆனால் கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பில் casting off his hair என்றே இருக்கிறது}, ஓ பாரதா, ஒருவன் பெரும் அருளுடைமையை அடைகிறான். அங்கேயே இருக்கும் மற்றொரு தீர்த்தம் ஸ்வாவிலோமபாக {ஸ்வானலோமாபநயன} தீர்த்தம் {Shwavillomapaha} என்ற பெயரில் இருக்கிறது. ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, அந்த நீரில் மூழ்கி கற்ற அந்தணர்கள் பெரும் திருப்தியை அடைகிறார்கள். ஓ மன்னா, நல்ல அந்தணர்கள், தங்கள் முடியை அந்தத் தீர்த்தத்தில் கைவிட்டு பிராணாயமத்தால் புனித நிலையை அடைந்து, கடைசியாக உயர்ந்த நிலையை அடைகின்றனர். ஓ மன்னா, அங்கே அந்தத் தீர்த்தத்தில் தசாஸ்வமேதிகா என்ற பெயருடைய தீர்த்தமும் {Dasaswamedhika} இருக்கிறது. ஓ மனிதர்களில் புலியே, அங்கே நீராடும் ஒருவன் உயர்ந்த நிலையை அடைகிறான்.
ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் மனுஷ தீர்த்தம் என்ற தீர்த்தத்தை {tirtha called Manusha }அடைய வேண்டும். ஓ மன்னா வேடர்களின் கணைகளால் துன்புற்ற கருப்பு நிற மான்கள் அதன் நீரில் மூழ்கி மனித உருவை அடைந்தன. பிரம்மச்சரிய வாழ்வுமுறை கொண்டு, ஒருமுகமான ஆன்மாவுடன் ஒருவன் அந்தத் தீர்த்தத்தில் நீராடுவதால் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு சொர்க்கத்தில் வழிபடப்படுகிறான். மனுஷ தீர்த்தத்திற்கு கிழக்கில் ஒரு குரோச தூரத்தில் சித்தர்கள் ஓய்ந்திருக்கும் ஆபாகம் என்ற ஆறு இருக்கிறது. அந்த இடத்தில் எவன் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட்டு சாமை அரிசியைத் தானமளிக்கிறானோ, அவன் பெரிதான அறப்பலன்களை அடைகிறான். அங்கே ஒரு அந்தணனுக்கு உணவளிக்கப்பட்டாலும், அது ஒரு கோடி அந்தணர்களுக்கு உணவளித்ததற்கு இணையாகும். அந்தத் தீர்த்தத்தில் நீராடி, தேவர்களையும் பித்ருக்களையும் வழிபட்டு, ஒரு இரவு தங்கும் மனிதன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான்.
ஓ மன்னா, பிறகு ஒருவன், பிரம்மனின் இடமான பிரம்மோதும்பரம் {Brahmodumvara} என்ற பெயரால் பூமியில் அறியப்படும் இடத்தை அடைய வேண்டும். ஏழு முனிவர்கள் இருக்கும் அந்தக் குளத்திலும், உயர் ஆன்ம கபிலரின் கேதாரம் என்ற தீர்த்தத்திலும் சுத்தமான மனதுடனும், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் நீராடும் ஒருவன் அங்கே இருக்கும் பிரம்மனைக் கண்டு, அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, பிரம்மனின் உலகத்தை அடைகிறான். கபிலரின் அணுகமுடியாத தீர்த்தமான கேதாரத்தை {tirtha called Kedara} அடைந்து, தனது தவ நோன்புகளால் தனது பாவங்களனைத்தையும் எரிக்கும் ஒருவன், விரும்பும் போது {அரூபமாக} மறையும் சக்தியை {அந்தர்த்தான சக்தியை} அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா} பிறகு ஒருவன், சரகம் {சங்கர} என்று அழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் {tirtha called Saraka} சென்று அங்கே தேய்பிறையின் பதினான்காம் நாளில் {சதுர்த்தசியில்} மகாதேவனைக் {சிவனைக்} காணும் ஒருவன் தனது விருப்பங்கள் ஈடேறி சொர்க்கம் அடைகிறான்.
ஓ குருகுலத்தின் மகனே {பீஷ்மா}, சரகம், ருத்ரகோடி மற்றும் அங்கிருக்கும் கிணறுகள் மற்றும் தடாகங்களில் மூன்று கோடி {30 million} தீர்த்தங்கள் இருக்கின்றன. ஓ பாரதர்களின் தலைவனே {பீஷ்மா}, அங்கே அந்தத் தீர்த்தத்ததில் இலஸ்பதம் {சுத்தாஸ்பதம்} {Ilaspada.} என்ற பெயர் கொண்ட தீர்த்தமும் இருக்கிறது. அங்கே நீராடி, தேவர்களையும் பித்ருக்களையும் வழிபடும் ஒருவன், என்றும் நரகத்தில் மூழ்காது வாஜபேய வேள்வியின் கனியை அடைகிறான். பிறகு கிந்தானம், கிஞ்சப்பியம் {Kindana and Kinjapya} எனும் தீர்த்தங்களை அடையும் ஒருவன், ஓ பாரதா {பீஷ்மா} எண்ணிலடங்கா தானங்களும், கணக்கிலடங்கா வழிபாடுகளும் செய்த பலனை அடைகிறான். பிறகு, கலசீ என்ற பெயர் கொண்ட தீர்த்தத்தில் {tirtha called Kalasi } அர்ப்பணிப்புடனும், புலன்களைக் கட்டுப்படுத்தியும் நீராடும் மனிதன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ குருக்களின் தலைவா {பீஷ்மா}, சரகத்தின் {சங்கரத்தின்} கிழக்கே, உயர் ஆன்ம நாரதரின் அனாஜன்மா {அஜானந்தை-Anajanma} என்ற பெயர் கொண்ட தீர்த்தமொன்று இருக்கிறது. அங்கே நீராடும் ஒருவன், ஓ பாரதா {பீஷ்மா}, தனது இறப்புக்குப் பிறகு, நாரதரின் கட்டளையின் பேரில் பலவகையான நிகரற்ற உலகங்களுக்குச் செல்கிறான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.