The pledge taken by Arjuna! | Vana Parva - Section 241 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
துரியோதனனை மீட்பதே குடும்ப மதிப்பை உயர்த்தும், பாண்டவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும் என்று யுதிஷ்டிரன் பீமனிடம் சொன்னது; அர்ஜுனன் துரியோதனனை மீட்க உறுதியேற்றது...
யுதிஷ்டிரன் {பீமனிடம்}, "ஓ! குழந்தாய் {பீமா}, அவல நிலையில் இருக்கும் குருக்கள், அச்சத்துடன் நமது பாதுகாப்பை நாடி வந்திருக்கும்போது, நீ ஏன் இப்படிப்பட்ட மொழியைப் பேசுகிறாய். ஓ! விருகோதரா {பீமா}, ஒற்றுமையின்மையும், சச்சரவுகளும் இரத்த உறவுகளுக்கு மத்தியில் நடக்கத்தான் செய்கின்றன. இது போன்ற பகைமைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால், அதன் காரணமாகக் குடும்ப மதிப்புப் பாதிப்படையக்கூடாது. எந்த அந்நியனாவது நமது குடும்ப மதிப்பைக் கெடுக்கும் வகையில் செயல்படும்போது, அந்நியனிடம் நேரும் இந்த அவமதிப்பை நல்லவர்கள் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். நாம் சில காலமாக இங்கேதான் தங்கியிருக்கிறோம் என்பதைக் கந்தர்வர்களின் தீய மன்னன் {சித்திரசேனன்} அறிவான். எனினும் நம்மை எண்ணிப் பாராமல், நமக்கு ஏற்பில்லாத இக்காரியத்தை அவன் செய்திருக்கிறான்.
ஓ! மேன்மையானவனே {பீமா}, துரியோதனனை வலுக்கட்டாயமாகச் சிறைபிடித்திருப்பது, நமது குடும்பப் பெண்களை அவமதித்திருப்பது ஆகியவற்றை ஓர் அந்நியன் செய்ததால் நமது குடும்ப மதிப்பு அழிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மனிதர்களில் புலிகளே {தம்பிகளே}, எழுந்திருங்கள். தாமதமின்றி ஆயுதமேந்தி நமது பாதுகாப்பை நாடியிருப்பவர்களை மீட்டு, நமது குடும்ப மதிப்பைக் காப்பாற்றுங்கள். மனிதர்களில் புலியே {பீமா}, வெல்லப்பட முடியாத வீரமிக்க அர்ஜுனனும், இரட்டையர்களும் {நகுல, சகாதேவர்களும்}, நீயும் சென்று சிறைபிடிக்கப்பட்டிருக்கும் துரியோதனனை விடுவியுங்கள். போர்வீரர்களில் முதன்மையானவர்களே {தம்பிகளே}, தங்கக் கொடிகளுடன் கூடிய இந்தச் சுடர்மிகும் தேர்களும், திருதராஷ்டிரன் மகன்களுக்குச் சொந்தமான அனைத்துவிதமாக ஆயுதங்களும் ஏற்கனவே இங்குத் தயாராக இருக்கின்றன. இந்திரசேனனையும், பிற தேரோட்டிகளையும் அவற்றை வழிநடத்தச் செய்து, ஆழ்ந்த சடசடப்போசை கொண்ட அந்த ரதங்களில் செல்லுங்கள். அவற்றில் {அந்தத் தேர்களில்} பயணித்து, கந்தர்வர்களோடு போரிட்டு, துரியோதனனை மீட்க ஊக்கமுடன் முயற்சி செய்யுங்கள்.
(இங்கு இருப்பவர்களுக்கு மத்தியில் உள்ள) சாதாரண க்ஷத்திரியன் கூட, தனது சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி, தன்னை அடைக்கலமாக நாடி வந்தவனைக் காப்பான். அப்படியிருக்கையில், ஓ! விருகோதரா {பீமா}, உன்னைக் குறித்து நான் என்ன சொல்வேன்? "ஓ!, எனது உதவிக்கு விரைந்து வாருங்கள்" என்று துணைக்கு அழைக்கும் வார்த்தைகளைக் கேட்ட பிறகும், கைகள் கூப்பித் தஞ்சமடைவதைக் கண்ட பிறகும், உயர் ஆன்மா படைத்த எவன்தான் அந்த எதிரிக்குத் துணையாகச் செல்ல மாட்டான்? வரம் பெறுதல், ஆட்சி அடைதல், மகனின் பிறப்பு ஆகியவை மகிழ்ச்சியின் பெரும் ஊற்றக்கண்கள் ஆகும். ஆனால், பாண்டுவின் மகன்களே {தம்பிகளே}, துயரத்தில் இருக்கும் எதிரியை விடுவிப்பது, ஒன்று சேர்ந்த இவை மூன்றையும் பெறுவதற்குச் சமமாகும். துயரத்தில் மூழ்கியிருக்கும் துரியோதனன், நமது கரங்களின் பலத்தால், தனது உயிரைப் பெறக் {காத்துக்கொள்ளக்} கோரும்போது, அதைவிட மகிழ்ச்சியின் பெரிய ஊற்றுக்கண் உங்களுக்கு வேறு என்ன இருக்கிறது?
ஓ! விருகோதரா {பீமா}, இப்போது நான் ஈடுபட்டிருக்கும் நோன்பு முடிந்துவிட்டால், நானே அவனது உதவிக்கு ஓடுவேன் என்பதில் சிறிதும் சந்தேகம் கொள்ளாதே. ஓ! பாரதா {பீமா}, துரியோதனனை விடுவிக்கச் சமரசக் கலைகள் அனைத்தையும் முயன்று பார். எனினும், அந்தச் சமரசக் கலைகளின் மூலம் கந்தர்வர்களின் மன்னனைச் சமாளிக்க முடியவில்லையென்றால், எதிரியிடம் சிறு பூசல் செய்தாவது சுயோதனனை {துரியோதனனை} மீட்க நீ முயற்சிக்க வேண்டும். ஆனால், அதன் பிறகும் கந்தர்வர்களின் தலைவன் {சித்திரசேனன்} குருக்களை விடவில்லையென்றால், அனைத்து வகைகளிலும் எதிரியை நசுக்கி அவர்கள் {குருக்கள்} மீட்கப்பட வேண்டும். ஓ! விருகோதரா {பீமா}, எனது நோன்பு ஆரம்பித்து இன்னும் முடியாத நிலையில், இதைத்தான் என்னால் உனக்குச் சொல்ல முடியும்" என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அஜாதசத்ருவின் {யுதிஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, மூத்தவரின் {அண்ணனின்} கட்டளைகளை மதித்து, தானே {அந்த} உறுதியேற்றுக் கொண்டான். அர்ஜுனன், "அமைதியின் மூலம், கந்தர்வர்கள் திருதராஷ்டிரர்களை {கௌரவர்களை} விடுவிக்கவில்லையெனில், இன்று இந்தப் பூமி கந்தர்வ மன்னனின் இரத்தத்தைக் குடிப்பாள்!" என்றான். உண்மை பேசும் அர்ஜுனன் ஏற்ற இந்த உறுதியைக் கேட்ட கௌரவர்களுக்கு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, (தொலைந்து போன} தங்கள் மனம் மீண்டு வந்தது போல இருந்தது.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.