"Leave my brother" said Arjuna! | Vana Parva - Section 242 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரனின் உத்தரவுக்கிணங்க முதலில் கந்தர்வர்களைப் பாண்டவர்கள் மெதுவாகத் தாக்கியது; பின்பு கந்தர்வர்களிடம் சமரசம் பேசியது; இரண்டும் பலனளிக்காத்தால் கடுமையான போர் வெடித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட பீமசேனனைத் தலைமையாகக் கொண்ட அந்த மனிதர்களில் காளையர் {பாண்டவர்கள்}, மகிழ்ச்சி பொங்கிய பிரகாசமான முகங்களுடன் எழுந்தனர். அந்தப் பலமிக்கப் போர்வீரர்கள் {பாண்டவர்கள்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிறகு அருகில் இருந்த சுத்தமான தங்கத்துடன் பல வண்ணங்களில் இருந்த துளைக்கமுடியாத கவசங்களைப் பூண்டு, பல்வேறு வகையான தெய்வீக ஆயுதங்களை ஏந்திக் கொண்டனர். இப்படிக் கவசம் பூண்ட அந்தப் பாண்டவர்கள் கொடிக்கம்பங்களுடன் கூடிய அந்த ரதங்களில் ஏறி, விற்களையும் அம்புகளையும் ஏந்தி, பார்ப்பதற்குச் சுடர்விடும் நெருப்பு போலத் தெரிந்தனர். போர்வீரர்களில் புலி போன்ற அவர்கள், வேகமாகக் குதிரைகளால் இழுக்கப்பட்ட நன்கு அலங்கரிக்கப்பட்ட அந்தத் தேர்களில் பயணித்து, ஒரு கணமும் தாமதியாமல் அந்த இடத்திற்கு முன்னேறினர்.
பாண்டுவின் மகன்களான அந்தப் பலமிக்கப் போர்வீரர்கள் இப்படி (துரியோதனனை விடுவிப்பதற்காக) ஒன்றுகூடி விரைந்து வருவதைக் கண்ட குரு படையினர் {கௌரவப் படையினர்}, ஓங்கிக் குரல் கொடுத்தனர். வெற்றியில் மிதந்து கொண்டிருந்த அந்த விண்ணதிகாரிகளும் {கந்தர்வர்களும்}, கட்டுக்கடங்காத போர்வீரர்களான பாண்டுவின் மகன்களும், அச்சமற்று அந்தக் கானகத்தில் மோதிக் கொண்டனர். வெற்றிக்களிப்பில் இருந்த கந்தர்வர்கள், தேர்களில் அமர்ந்து தங்களை நோக்கி வரும் பாண்டுவின் நான்கு வீரமிக்க மகன்களைக் கண்டதும், தங்களை நோக்கி வரும் போராளிகளை நோக்கித் திரும்பினர். சினத்தால் தூண்டப்பட்டு உலகின் சுடர்மிக்கப் பாதுகாவலர்களைப் {லோகபாலர்களைப்} போல வரும் பாண்டவர்களைக் கண்ட கந்தமாதனவாசிகள் {கந்தர்வர்கள்} களத்தில் வரிசையாக நிற்க ஆரம்பித்தனர்.
ஓ! பாரதா {ஜனமேஜயா}, பெரும் ஞானம் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனின் வார்த்தைகளுக்கு இணங்க, அங்கே நடந்த மோதல் சிறியதாகவே இருந்தது. ஆனால், எதிரிகளை அழிப்பவனான அர்ஜுனன், கந்தர்வ மன்னனின் {சித்திரசேனனின்} முட்டாள் வீரர்கள், இந்தச் சிறுமோதல் மூலம் தங்களுக்கு எது நன்மை என்பதைப் புரிந்து கொள்ளவில்லை என்பதைக் கண்டு, அந்த ஒப்பற்ற விண்ணதிகாரிகளிடம் {கந்தர்வர்களிடம்} சமரசத் தொனியில், "என் சகோதரனான மன்னன் சுயோதனனை {துரியோதனனை} விட்டுவிடுங்கள்" என்றான். பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட கந்தர்வர்கள் பெருத்த ஒலியுடன் சிரித்து, அவனிடம் {அர்ஜுனனிடம்}, "ஓ! குழந்தாய், நாங்கள் யாருடைய ஆட்சியின் கீழ் எங்கள் நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்துகிறோமோ, அந்த ஒருவரின் கட்டளைக்கே இவ்வுலகில் கீழ்ப்படிவோம். ஓ! பாரதா {அர்ஜுனா}, அந்த ஒருவரின் கட்டளையின் படியே நாங்கள் செயல்படுவோம். அந்தத் தேவனைத் {சித்திரசேனனைத்} தவிர வேறு யாரும் எங்களுக்கு உத்தரவிடமுடியாது" என்றனர்.
கந்தர்வர்களால் இப்படிச் சொல்லப்பட்ட குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவர்களிடம், "பிறர் மனைவியருடனான இத்தொடர்பு, மனிதர்களுடனான இந்தப் பகைமை ஆகிய இவை இரண்டும் கந்தர்வ மன்னனைக் கண்டிக்கப் போதுமானவை ஆகும். இவை அவனுக்குத் {சித்திரசேனனுக்கு} தகாது. எனவே, வலிமைமிக்க ஆற்றல் கொண்ட இந்த அனைத்து திருதராஷ்டிரன் மகன்களையும் விட்டுவிடுங்கள். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் ஆணைக்கிணங்க இந்தப் பெண்டிரையும் விட்டுவிடுங்கள். கந்தர்வர்களே! அமைதியான முறையில் நீங்கள் திருதராஷ்டிரன் மகன்களை விடவில்லையென்றால், நான் நிச்சயம் எனது பராக்கிரமத்தை வெளிப்படுத்திச் சுயோதனனை (அவன் கட்சியில் இருந்து) மீட்பேன்" என்றான்.
அவர்களுடன் இப்படிப் பேசிய பிருதையின் {குந்தியின்} மகனும், இடது கையாலும் வில்லைப் பயன்படுத்துபவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்} விண்ணை அதிகாரம் செய்யும் தனது கூரிய கணைகளை, ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்கள் மீது மழையெனப் பொழிந்தான். இப்படித் தாக்கப்பட்ட அந்த வலிமைமிக்கக் கந்தர்வர்கள், பதிலுக்குப் பாண்டுவின் மகன்கள் மீது அடர்த்தியான அம்புகளின் மழையைப் பொழிந்தனர். பாண்டவர்களும் அந்தச் சொர்க்கவாசிகளை {கந்தர்வர்களைத்} திரும்பத் தாக்கினர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிறகு, சுறுசுறுப்பான செயல்கள் கொண்ட கந்தர்வர்களுக்கும், கட்டுக்கடங்காதவர்களான பாண்டுவின் மகன்களுக்கும் இடையில் நடந்த அந்த மோதல் கடுமையின் எல்லையைக் கடந்ததாக இருந்தது.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.