புத்தகத்தை வாங்க - https://www.amazon.in/dp/B076149736
சூத முனிவரான சௌதி, மஹாபாரதம் ஒரு லட்சம் ஸ்லோகம் கொண்ட நூலாகும் எனச் சொன்னாலும், ஆதிபர்வத்தில், முதல் உபபர்வமான அனுக்கிரமாணிகத்தின், 101ம் சுலோகம், "உண்மையாக வியாசர் முதலில் 24,000 செய்யுள்களில் தனிபட்ட பகுதிகளை {அத்யாயங்களைக்} கொண்ட பாரதத் தொகுப்பையே செய்தார்; அவ்வளவு மட்டுமே கல்விமான்களால் {உண்மையான} பாரதம் என்றழைக்கப்படுகிறது" என்று சொல்கிறது. மேலும், ஆதிபர்வம் 1:20ல், "இந்த {மகாபாரத} வரலாறு "ஜெயம்" என்று அழைக்கப்படுகிறது" என்றும் ஆதிபர்வம் 2:390ல் "துவைபாயனரின் உதடுகளால் சொல்லப்பட்ட இந்தப் பாரதம் இணையற்றதாகும்" என்றும் சொல்லப்படுகிறது.
வியாசரின் உதடுகளால் சொல்லப்பட்ட அந்த 24,000 சுலோகங்கள் எவையாக இருக்க முடியும்? நிச்சயம் அவை முழுமஹாபாரதத்திற்குள் கலந்தே இருக்கும். சுலோக அமைப்புகளைக் கொண்டு அவற்றை அடையாளம் காணலாம் என்று சம்ஸ்க்ருதம் அறிஞர்கள் சொல்கின்றனர். குருக்ஷேத்திரப் பெரும்போருக்குக் காரணமாக அமைந்தவர்களின் வரலாறே அந்த "ஜெயம்" என்ற தொகுப்புக்குள் இருந்திருக்க முடியும் என்று முழுமஹாபாரதத்தைப் படிக்கும் நாமும் ஊகித்தறியலாம்.
குருக்ஷேத்திரப் பெரும்போர் முடிந்ததும், வியாசர் அப்போருக்குக் காரணமாக அமைந்த நிகழ்வுகளையே தொகுக்க முனைந்திருப்பார். அது பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுடைய வரலாறாகவே இருந்திருக்க முடியும். முழுமஹாபாரதம் நெடுகிலும் அனைத்தையும் கோர்க்கும் சரடாக ஓடிக் கொண்டிருப்பது பாண்டவர்கள் மற்றும் கௌர்வர்களின் வரலாறே ஆகும். கண்ணுக்குத் தெரியாமல் மண்ணுக்கடியில் ஓடும் சரஸ்வதி ஆற்றைப் போலவே, வியாசரின், "ஜெயம்" என்ற அத்தொகுப்புக்குள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைக் குறித்த கருத்துகளும் அச்சரடிற்குள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
வியாசரின் உதடுகளால் சொல்லப்பட்டவையாக இருக்கலாம் என்று முழுமஹாபாரதத்தில் ஊகித்தறியக்கூடிய பகுதிகளை மட்டும், "ஜெயம்" என்ற மின்னூல் வரிசையில் தொகுக்கும் ஆவலில் இந்த முதல் மின்புத்தகத்தைச் செய்திருக்கிறேன். இதில் உள்ள ஒவ்வொரு வரியும் முழு மஹாபாரதத்தில் உள்ளவையே. முடிந்தவரை முழுமஹாபாரதத்தில் வரும் ஸ்லோக எண்களுடன் அப்படியே எடுக்கவே முயன்றிருக்கிறேன். எனினும், "வைசம்பாயனர் சொன்னார்", "ஜனமேஜயன் கேட்டான்" என்ற வரிகளையும், "ஓ" என்ற விளியையும், ஜனமேயனின் ஐயந்தெளிவுற வைசம்பாயணர் சொல்லும் சில செய்திகளையும் நீக்கியிருக்கிறேன். மேற்கண்டவற்ற நீக்குவதால், சில ஸ்லோக எண்கள் தவறினாலும், அதை மீண்டும் வரிசைப்படுத்தாமல், முழுமஹாபாரதத்தில் உள்ளவாறே அந்த எண்களைக் கொடுத்திருக்கிறேன். சிற்சில இடங்களில் ஜனமேஜயனின் ஐயந்தெளிவுறச் சொல்லப்படும் செய்திதான் என அறிந்தாலும், அதன் முக்கியத்துவத்தைக் கருதி அப்படியே கொடுத்திருக்கிறேன். சில இடங்களில் சில அத்தியாயங்களையே தாவிச் செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, இந்த ஜெயம் வரிசையில் வரும் அத்தியாயங்களை ஒன்று, இரண்டு, மூன்று என எண்களின் வரிசைப்படியே முறையாக அளித்தாலும், அந்த எண்களுக்கு அடுத்து அடைப்புக்குறிக்குள் முழுமஹாபாரதத்தில் வரும் அத்தியாய எண்ணையும் குறித்திருக்கிறேன். கதைச்சுருக்கம் என்ற பகுதியில் ஒவ்வொரு தலைப்பின் பின்பும் உள்ள அடைப்புக்குறிக்குள் அந்தத் தலைப்பிற்குள் திரட்டப்பட்ட ஸ்லோக எண்களின் தொகையைக் குறித்திருக்கிறேன். இவ்வாறு இந்த முதல் தொகுப்பில் 1805 ஸ்லோகங்கள் திரட்டப்பட்டிருக்கின்றன.
வியாசர், 24,000 ஸ்லோகங்களில் "ஜெயம்" தொகுப்பைச் சொன்ன பிறகு, "அறிமுகம் மற்றும் அந்தப் பகுதிகளின் பொருளடக்கத்துடன் கூடிய நூற்றைம்பது செய்யுள்களில் ஒரு சுருக்கத்தை இயற்றினார்" என்று ஆதிபர்வம் 1:102 ஸ்லோகத்தில் காணக்கிடைக்கிறது. அந்த நூற்றைம்பது ஸ்லோகங்களை ஒட்டியே "ஜெயம்" தொகுப்பும் அமைந்திருக்க முடியும். அந்த நூற்றைம்பது ஸ்லோகங்கள் எவை என்று ஊகித்தறியக்கூடியவற்றை இந்நூலின் முதல் அறிமுக அத்தியாயத்தில் கொடுத்திருக்கிறேன். அதன்படி "ஜெயம்" பாண்டு அடையும் போர் வெற்றியில் இருந்தே தொடங்குகிறது. இருப்பினும் உபரிசரவசுவின் கதையில் இருந்தே ஜெயம் வரிசையின் முதல் மின்புத்தகத்தைத் தொடங்கியிருக்கிறேன்.
ஏற்கனவே தமிழில் வந்திருக்கும் மஹாபாரதச் சுருக்கங்கள் அனைத்தும் இதைத்தானே சொல்லியிருக்கின்ற என்று நினைக்கலாம். மூலஸ்லோகங்களில் இருந்து சொல்லும், பொருளும் மாறாமல் கங்குலியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதையே, தமிழிலும் "முழுமஹாபாரதத்தில்" முடிந்தவரை சொல்லும், பொருளும் மாறாமல் மொழிபெயர்க்க முயற்சி செய்திருக்கிறேன். முழுமஹாபாரதத்தில் இருந்து கிட்டத்தட்ட அப்படியே பிரித்தெடுப்பதால் வியாசரின் சொற்களை நெருக்கமாக உணரமுடியும் என்று நம்புகிறேன். அதையே இந்த "ஜெயம்" வரிசையில் செய்ய முனைகிறேன். சரியாக 24,000 சுலோகங்களைப் பிரித்தெடுக்க முடியாதெனினும், எண்களைக் கருத்தில் கொள்ளாமல், உள்மன உந்துதலிலேயே இதைச் செய்யப் போகிறேன். ஜெயம் வரிசையின் இந்த முதல் மின்புத்தகம் பாண்டவர்கள் அடையும் முதல் வெற்றியோடு நிறைவடைகிறது.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
கிண்டில் மின்புத்தகங்களை வாங்குவதும் படிப்பதும் எவ்வாறு?
ஆங்கிலத்தில் | In English |