ஜுன் 7, வைகாசி விசாகத்தன்று தொடங்கப்பட்ட சல்லிய பர்வத்தின் மொழிபெயர்ப்பு செப்டம்பர் 19ல் நிறைவடைந்திருக்கிறது. சல்லிய பர்வம் முடித்தது செப்டம்பர் 19ம் தேதிதான் என்றாலும், நண்பர் திரு.ஜெயவேலன் அவர்கள் செப்டம்பர் 16ம் தேதியே வந்து, உடல்நிலை சரியில்லாமல் உறங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி ரூ.6,500/- கொடுத்துச் சென்றார். 65 பகுதிகளைக் கொண்ட சல்லிய பர்வத்தின் மொழிபெயர்ப்பை நிறைவு செய்ய 105 நாட்கள் ஆகியிருக்கின்றன. இதற்கு, எடுத்துக் கொண்ட நாட்கள் மிக அதிகம் என்றாலும், இடையிடையே ஆதிபர்வத்தில் பிழைதிருத்தங்களையும், சுலோக எண்கள் சேர்ப்பையும் செய்ய முடிந்தது.
ஆதிபர்வத்தில் பிழைதிருத்தம் செய்வதில் ஈடுபட்ட போது, முன்பு ஒப்புநோக்காத கும்பகோணம் பதிப்பையும், மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் ஆகியோரின் பதிப்புகளை இப்போது ஒப்புநோக்க முடிந்தது. அதன் காரணமாகப் பல அடிக்குறிப்புகளைச் சேர்த்திருக்கிறேன். இவ்வாறு ஒப்பு நோக்குவதால், பல இடங்களில் ஒரு தெளிவு கிடைக்கிறது. உதாரணத்திற்கு, பாண்டு இறந்ததும், மாத்ரி உடன்கட்டை ஏறுவது, திரௌபதி சுயம்வரத்தில் கர்ணன் மறுக்கப்படுவது ஆகியவற்றில் புதிய திறப்புகள் கிடைக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் வரும் இடங்களில் எல்லாம் கங்குலியின் வார்த்தைகளை அப்படியே கொடுத்து விட்டு, அடிக்குறிப்புகளில் மேற்கண்ட மூன்று பதிப்புகளில் என்ன இருக்கிறது என்பதன் சாரத்தைக் கொடுத்திருக்கிறேன். ஆதிபர்வம் பிழை திருத்தமும் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது. அந்த வகையில் பெரும் நிறைவை அடைகிறேன்.
மேலும் "உதங்க சபதம்" முதற்கொண்டு, "யயாதி" வரை ஐந்து மஹாபாரதச் சிறுகதைகளையும், ஒரு கதைத்தொகுப்பையும் கிண்டில் புத்தகங்களாக்கியது இந்தப் பிழை திருத்தத்தால் ஏற்பட்ட மற்ற நன்மைகளே. சல்லிய பர்வம் மொழிபெயர்த்த காலத்தில் தான் இந்த மின்நூல்கள் அனைத்தையும் கிண்டிலில் அளித்திருக்கிறேன். இப்போது ஆதிபர்வம் பிழைதிருத்தம் நிறைவை எட்டும் தருணத்தில், "ஜெயம்" என்ற வரிசையில் ஏன் வியாசரின் 24,000 வரிகளைத் தேடக் கூடாது என்று தோன்றியது. ஆதிபர்வத்தின் தொடக்க அத்தியாயத்திலேயே சூத முனிவர், "உண்மையாக வியாசர் முதலில் 24,000 செய்யுள்களில் தனிபட்ட பகுதிகளை {அத்யாயங்களைக்} கொண்ட பாரதத் தொகுப்பையே செய்தார்; அவ்வளவு மட்டுமே கல்விமான்களால் {உண்மையான} பாரதம் என்றழைக்கப்படுகிறது" என்று சொல்கிறார். எனவே, சல்லிய பர்வம் மொழிபெயர்ப்பு நிறைவடைந்ததும், முதல் வேலையாக, "ஜெயம்" தொடருக்கான "வெற்றிமுழக்கம்" என்ற முதல் புத்தகத்திற்குத் தேவையான பகுதிகளைத் தொகுக்கத் தொடங்கினேன். இதோ இன்று விஜயதசமி அன்று ஜெயம் வரிசையிலான முதல் மின்புத்தகமான "வெற்றிமுழக்கத்தை" கிண்டிலில் வெளியிட்டுவிட்டேன். சல்லியபர்வம் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த காலத்திற்குள்ளேயே இவை முழுவதையும் செய்ய முடிந்தது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்தக் காலத்திற்குள் எனக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய மற்றொரு தருணம், ஏசிஎல் திரு.சீனிவாசன் அவர்கள் நடத்திய ஆண்டுவிழா மலர் வெளியீட்டு நிகழ்ச்சியாகும். முழுமஹாபாரதம் மொழிபெயர்ப்புக்கென என்னைத் தன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்து, மனிதநேயர் ஜி.வரதராஜன் அவர்கள் கரங்களால் நினைவுப் பரிசு வழங்கி, மெத்தப் புகழ்ந்து கௌரவித்தார். நான் பிறந்து வளர்ந்த திருவொற்றியூரிலேயே நான் செய்துவரும் முழுமஹாபாரத மொழிபெயர்ப்பைக் குறித்து யாரும் அறியாதது வேதனையை அளித்தாலும், ஏசிஎல் அவர்கள் என்னை அறிமுகப்படுத்தியதும், அரங்கிலிருந்தோர் செய்த கரவொலியும் ஆர்ப்பரிப்பும் நம்பிக்கையை அளித்தது. முழுமஹாபாரத மொழிபெயர்ப்பு இன்னும் வெகுமக்களைச் சென்றடையவில்லை. என்னதான் முழுத் தொகுப்பும் வலைத்தளத்தில் இருந்தாலும், புத்தகமாகும்போதுதான் வெகுமக்களைச் சென்றடையும் என்று நினைக்கிறேன். அதற்கான முயற்சிகளை வேகமாகச் செய்ய வேண்டும்.
சௌப்திக பர்வம் மொழிபெயர்ப்பை இதோ இன்று "விஜயதசமியில்" தொடங்குகிறேன்.
நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
30.9.2017
திருவொற்றியூர்