Uparichara (a) Vasu! | Adi Parva - Section 63a | Mahabharata In Tamil
(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 5)
பதிவின் சுருக்கம் : கடுந்தவம் இருந்த உபரிசரனைச் சமாதானப்படுத்திய இந்திரன் சேதி நாட்டைக் கவனமாக ஆளச் சொல்வது...
வானத்தில் பறக்கும் உபரிசரன் |
வசு என்றும் அழைக்கப்பட்ட அந்தப் பௌரவகுல மன்னன் {உபரிசரன்}, இந்திரனின் ஆலோசனையின்படி அருமையானதும், இன்பத்தை அளிப்பதுமான சேதி நாட்டை அடக்கி ஆண்டான்.(2) சில காலங்களுக்குப் பிறகு, ஆயுதங்களை விடுத்து, தனிமையான இடத்தில் இருந்து, கடுந்தவம் செய்தான். அந்தக் காலத்தில், அவன் {உபரிசரன்} தேவர்களின் தலைமைப் பதவியை வேண்டிக் கடுந்தவம் இருக்கிறான் என்று எண்ணிய தேவர்கள், இந்திரனின் தலைமையில் வந்து அந்த ஏகாதிபதியை {உபரிசரனை} அணுகினர்.(3) தேவர்கள், அவன் {உபரிசரன்} முன் தோன்றி, மென்மையாகப் பேசி அவனைத் தவத்தைக் கைவிடவைத்து வெற்றி பெற்றனர்.(4) தேவர்கள், "ஓ பூமியின் தலைவா! {உபரிசரனே} பூமியில் அறம் குறையாதபடி நீ பார்த்துக் கொள்ள வேண்டும். உன்னால் காக்கப்பட்ட அந்த அறம், பதிலுக்கு இந்த அண்டத்தையே காக்கும்" என்றனர்.(5)
அதன்பிறகு இந்திரன், "ஓ மன்னா! {உபரிசரா} கவனமாகவும், உறுதியாகவும் இருந்து பூமியில் அறத்தைக் காப்பாற்றுவாயாக. அறம் சார்ந்து வாழ்வதாலேயே, (மறுமையில்) பல புனிதமான பகுதிகளை நீ நித்தியமாய்க் காண்பாயாக.(6) நான் தேவலோகத்தைச் சார்ந்தவனாகவும், நீ பூலோகத்தைச் சார்ந்தவனாகவும் இருப்பினும், நீ எனக்கு நண்பனாகவும், அன்புக்குரியவனாகவும் இருக்கிறாய். ஓ மனிதர்களின் மன்னா! {உபரிசரா} இன்பந்தருவதும், விலங்குகள் நிறைந்ததும், புனிதமானதும், செல்வமும் {தனமும்}, சோளமும் {தானியங்களும்} நிறைந்ததும், சொர்க்கத்தைப் போல் பாதுகாக்கப்பட்டதும், உவப்பான தட்பவெப்ப நிலை கொண்டதும் {சீதோஷ்ணமுள்ளதும்}, இன்பத்திற்குரிய அனைத்து பொருள்களாலும் அருளப்பட்டதும், செழிப்பானதுமான பூமியின் இந்தப் பகுதியிலேயே வாழ்வாயாக.(7,8) ஓ சேதியின் ஏகாதிபதியே! {உபரிசரனே} உனது ஆளுகைக்குட்பட்ட இந்த இடம் வளங்களால் நிறைந்துள்ளது. ரத்தினங்கள், விலைமதிப்பில்லாக் கற்கள், வளமான தாதுக்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.(9) இந்தப் பகுதியில் உள்ள நகரமும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் அறம் சார்ந்து {அர்ப்பணிப்புடன்} இருக்கின்றன. மக்களும் நேர்மையாகவும், மனநிறைவுடனும் இருக்கின்றனர். அவர்கள் கேலிக்காகக் கூடப் பொய் பேசுவதில்லை.(10)
மகன்கள் தங்கள் தந்தைகளிடம் இருந்து சொத்தைப் பிரித்துக் கொள்வதில்லை. அதுபோக, தங்கள் பெற்றோரின் நன்மையிலேயே எப்போதும் விருப்பங்கொண்டுள்ளனர். உழுவதற்காக ஏரில் பூட்டப்படவோ, வண்டியில் பாரம் சுமக்க வைக்கவோ உள்ள மாடுகள் மெலிந்தவையாக இல்லை. (11) மாறாக அவை நன்றாகப் பேணப்பட்டுத் பருத்தவைகளாக இருக்கின்றன. சேதியில், நான்கு வகையை {வர்ணத்தைச்} சேர்ந்தவர்களும் அவரவர்களுக்கான தொழில்களையே செய்கின்றனர். மூவுலகங்களில் நடக்கும் காரியங்கள் அனைத்தையும் நீ அறிந்திருப்பாயாக. (12) ஆகாயத்தில் தேவர்கள் மட்டுமே பயணிக்கும் ஸ்படிகமயமான தேர் ஒன்றை நான் உனக்குத் தருகிறேன்.(13) உலக மனிதர்களிலேயே நீ ஒருவன் மட்டுமே, தேர்களிலேயே சிறந்ததான இந்தத் தேரில், உடல் கொண்ட தேவனைப் போலப் பறந்து செல்வாய்.(14) வாடாத தாமரைகளைக் கொண்ட வெற்றி மாலை {வைஜயந்தி மாலை} ஒன்றை உனக்கு நான் தருகிறேன். போர்க்களங்களில் நீ அதை அணிந்திருந்தால், ஆயுதங்களால் காயமடையமாட்டாய்.(15) ஓ மன்னா {உபரிசரா}, ஒப்பற்றதும், அருளப்பட்டதுமான இந்த மாலை, பூமியில் இந்திரனின் மாலை {வைஜயந்தி மாலை} என்று அறியப்படும். {அணிந்து கொள்ளும்} உனக்கு இது தனி அடையாளமாகட்டும்" என்றான் {இந்திரன்}.(16)
விருத்திரனைக் கொன்றவன் (இந்திரன்), அந்த மன்னனுக்கு {உபரிசரனுக்கு}, நேர்மையானவர்களையும், சாதுக்களையும் காப்பதற்காக ஒரு மூங்கில் தடியைக் {கோலைக்} கொடுத்தான்.(17) ஒரு வருடம் சென்ற பிறகு, அந்த மன்னன், அந்தக் கோலை நிலத்திலே நாட்டி அதைக் கொடுத்தவனான சக்ரனை {இந்திரனை} வழிபட்டான்.(18) அப்போதிலிருந்து, ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, மன்னர்கள் அனைவரும், வசுவின் {உபரிசரனின்} உதாரணத்தைத் தொடர்ந்து, தரையில் மூங்கில் தடியை நட்டு இந்திரனை வழிபட்டு, {இந்திரவிழாவைக் [இந்திரோத்ஸவத்தைக்]} கொண்டாடி வருகின்றனர்[1].(19) அந்தத் தடியை நட்டு வைத்துவிட்டு, அதைத் தங்கமயமான துணியாலும், நறுமணத் தைலங்களாலும், மலர் மாலைகளாலும் மற்ற பல அணிகலன்களாலும் அலங்கரிக்கின்றனர்.(20)
[1] கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகமாக, "அப்போது பூமியில் இந்திரனைப் பூஜிப்பதற்காக அந்த அரசன் அந்தக் கோலுக்கு எல்லா உத்ஸவங்களிலும் சிறந்த நகரப்ரவேசம் என்கிற உத்ஸவத்தைச் செய்வித்தான். அதுமுதல் இன்னமும் அந்த ராஜா நடத்தினபடி எல்லா ராஜஸ்ரேஷ்டர்களும் மார்கழி மாதம் சுக்கிலபக்ஷத்தில் கோலுக்கு நகரப்ரவேசத்தைப் பெரிய யாகமாகச் செய்கின்றனர். அதற்கு மறுதினம் அந்தக் கோலைப் பொற்கிங்கிணிகளாலும், சந்தனங்களாலும், புஷ்பமாலைகளாலும், ஆபரணங்களாலும் அலங்காரஞ்செய்து, அரசர்கள் எடுத்து நாட்டுகின்றனர். புஷ்பமாலைகளாற் சுற்றப்பட்டதும், முப்பத்திரண்டு சாண் அளவுள்ளதுமாகிய அந்தக் கோலைத் தூக்கி ஸுவர்ணமயமான வஸ்திரங்களை அந்தக் கோலுக்குச் சுற்றி, வஸ்திரங்களினாலும், அன்னபானங்களினாலும் பிராமண ஸ்ரேஷ்டர்களைத் திருப்தி செய்வித்து அவர்களால் புண்ணியாஹவாசனம் செய்வித்து ஆறுகஜம் உயரமிருக்கும் பள்ளத்தில் {ஆறு கஜம் = 18 அடி; ஒரு அடி =1-1/3 சாண்; ஆக 6 கஜம் என்பது 24 சாண். 24 சாண் வெளியே தெரியும்படி நடவேண்டும் என்பதே வழக்கம். ஆறுகஜ உயரம் வெளியே தெரியும்படி இருக்க எட்டு சாண் பள்ளத்தில் நடவேண்டும் என்றிருக்க வேண்டும். 24 சாண் என்பது 24 தத்துவங்களைக் குறிக்கும். (பூதங்கள் - 5 (நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு), ஞானேந்திரியங்கள் -5 (மெய், வாய், கண், மூக்கு, செவி), கர்மேந்திரியங்கள் -5 (வாய், கை, கால், மலவாய், கருவாய்), தன்மாத்திரைகள் -5 (சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்), அந்தக்கரணங்கள் -4 ((மனம், அறிவு, நினைவு, முனைப்பு) எட்டு சாண் என்பது உடலைக் குறிக்கும். 24 தத்துவங்கள் எண்சாண் உடலில் நிலைபெறுவதை இது அடையாளப்படுத்துகிறது.} அந்தத்துவஜத்தை நாட்டுகின்றனர். அந்தக் காலத்தில் சங்கங்களும், பேரிகைகளும், மிருதங்கங்களும் வாசிக்கப்படும். மஹாத்துமாவான உபரிசரவஸுவினிடம் அன்பினால் தானே கோல் வடிவமெடுத்துக் கொண்டு வந்த பகவனாகிய இந்திரன் அந்தக் கோலில் பூஜிக்கப்படுகிறான். மணிபத்திரன் முதலிய யக்ஷர்களும், தேவர்களுடன் பூஜிக்கப்படுகின்றனர். வேண்டுகிறவர்களுக்கு அனேகவிதமான தானங்களைக் கொடுத்து இஷ்டமித்திரர்களுடன் புஷ்பமாலைகளாலும், பலவித ஆடைகளாலும் அலங்காரஞ்செய்து கொண்டு, ராஜாவின் ஆக்ஞையினால் ஜலம் நிரம்பிய அநேகம் தோல் துருத்திகளைக் கொண்டு விளையாடி, ராஜாவைக் கண்டு வேடிக்கையான பேச்சுகளைப் பேசி, நகரத்து ஜனங்களும், கிராமத்து ஜனங்களும் விளையாடுகின்றனர். ஸூதர்களெனப்பட்ட பௌராணிகர்களும் {சூதர்கள் மட்டுமே புராணம் சொல்பவர்களாகவும் இருந்திருப்பார்களோ என இந்த வாசகம் சிந்திக்க வைக்கிறது}, அரசனைப் பற்றிய ஸ்தோத்திரங்களைப் பாடுகிற மாகதர்களும், நாடகம் ஆடுகிறவர்களும், நர்த்தனஞ்செய்கிறவர்களும் ஸந்தோஷிக்கின்றனர். ராஜஸ்ரேஷ்டரே! அந்த உபரிசரராஜன் காலத்தில் எல்லாரும் ஸந்தோஷமாகப் பெரிய உத்சவத்தைச் செய்தனர்" என்றிருக்கிறது. இந்தக் குறிப்பு, கங்குலியிலோ, மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, பிபேக்திப்ராயின் பதிப்பிலோ இல்லை. இன்றும் எந்த விழா எடுப்பதாக இருந்தாலும் மூங்கிலால் முகூர்த்தக் கால் நடுவது என்னும் உற்சவம் இதைப் போலவே கொண்டாடப்படுகிறது. இன்று பதினாறு கணுக்கள் கொண்ட மூங்கிலை, நான்கு கணுக்கள் நிலத்தில் பதியுமாறு நட்டு, முகூர்த்தக்கால் நடப்படுகிறத்ய். சங்ககாலத்தில் இந்திரவிழா, வசந்தவிழா போன்றவை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டன.
இப்படியே தேவனான வாசவன் {இந்திரன்} மலர்மாலைகளாலும், அணிகலன்களாலும் உரிய முறையில் வழிபடப்படுகிறான். இந்திரனும் அம்மன்னனை வாழ்த்துவதற்காக, அன்னத்தின் உருவைக் கொண்டு, அம்மன்னனின் {உபரிசரனின்} வழிபாட்டை ஏற்றான். அப்படி வந்த இந்திரன், வசுவினால் செய்யப்பட்ட வழிபாட்டைக் கண்டு, ஏகாதிபதிகளில் முதன்மையான மன்னன் வசுவிடம் {உபரிசரனிடம்}, "சேதி நாட்டின் மன்னனைப் போல இப்படி என்னை மகிழ்ச்சியுடன் வணங்கி, இந்த விழாவைக் கொண்டாடும் மன்னர்களும், பிற மனிதர்களும், பெரும்புகழையும், வெற்றியையும் தனது நாட்டிற்காகவும், அரசுக்காகவும் அடைவர்.(21-24) அவர்களது நகரங்களும் விரிந்து எப்போதும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்" என்றான் {இந்திரன்}. மன்னன் வசு மனநிறைவு கொண்ட அந்தத் தேவர்களின் தலைவனான உயர் ஆன்ம மகவத்தின் {இந்திரனின்} இந்த வார்த்தைகளால் மகிழ்ந்தான். எந்த மனிதர்கள், நிலங்களையும், ரத்தினங்களையும், விலைமதிப்பில்லா கற்களையும் பரிசாகக் கொடுத்து இந்திரனுடைய விழாவை கொண்டாடினரோ, அவர்கள் உண்மையிலேயே உலகத்தோரால் மதிக்கப்பட்டனர்.(25-27) சேதி நாட்டின் தலைவனான வசு, இந்திரனால் வரங்கள் அருளப்பட்டு, பெரிய வேள்விகளைச்செய்தும், இந்திர விழாவைக் கொண்டாடினான். சேதி நாட்டில் இருந்து கொண்டு அவன் உலகத்தை ஆண்டான். இந்திரனை மனநிறைவு கொள்ளச் செய்ய வசு இந்திர விழாவைக் {இந்திரோத்சவத்தை ஒவ்வொரு ஆண்டும்} கொண்டாடினான். வசுவுக்கு {உபரிசரனுக்கு} பெரும்பலமும் சக்தியும், அளவிடமுடியா வீரமும் கொண்ட ஐந்து புதல்வர்கள் இருந்தனர்.(28,29)
தன் மகன்கள் ஒவ்வொருவரையும், தனது அரசாங்கத்தின் ஒவ்வொரு பகுதிக்குப் பிரதிநிதியாக அமர்த்தினான் அந்த மன்னன். அவனது மகன் பிருஹத்ரதன் மகதத்துக்கு மன்னனாக நியமிக்கப்பட்டு மஹாரதன் என்று அழைக்கப்பட்டான்{மஹாரதனாக விளங்கினான்}.(30) பிராத்யக்ரஹாவும், மணிவாகனன் என்று அழைக்கப்பட்ட குசாம்பனும், மாவெலனும் {மத்சில்லனும்}, பெரும் வீரம் கொண்டவனும், போரில் தோல்வியடையச் செய்யமுடியாதவனுமான யதுவும் அம்மன்னனின் மற்ற மகன்களாவர்.(31) ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, இவர்களே அந்த அரசமுனியின் {உபரிசரனின்} பெரும் சக்தி கொண்ட புதல்வர்களாவர். அந்த ஐந்து மகன்களும் அரசுகளையும், நகரங்களையும் தங்கள் பெயரில் உருவாக்கிக் கொண்டு,(32) பல காலங்களுக்கு நீடித்த தனிப்பரம்பரைகளை நிறுவினர்.
ஆங்கிலத்தில் | In English |