Life Portions of Gods! | Adi Parva - Section 67b | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 3)
பதிவின் சுருக்கம் : மகாபாரதத்தில் வரும் பாத்திரங்கள் யார் யாருடைய அம்சங்கள் என்ற விரிவு...
ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே} மன்னன் யுதிஷ்டிரன் தர்மனுடைய {தர்ம தேவனான யமனுடைய} ஒரு பகுதியாவான்; பீமசேனன் காற்று தேவனுடையவன் {வாயு தேவனுடையவன்}; அர்ஜுனன் தேவர்களின் தலைவனான இந்திரனுடையவன்;(111) அதே போல உயிரினங்கள் அனைத்திலும் அழகானவர்களும், பூமியில் ஒப்பற்ற அழகைக் கொண்டவர்களுமான நகுலனும், சகாதேவனும், அசுவினி இரட்டையர்களுடைய பகுதிகளாவர் என்பதைத் தெரிந்து கொள்வாயாக.(112)
சோமனின் மகனான வலிமைமிக்க வர்ச்சஸ் என்று அறியப்பட்டவனே, அர்ஜுனனின் மகனாக, அற்புதச் செயல்களைச் செய்யும் அபிமன்யுவானான்.(113) மேலும், ஓ மன்னா {ஜனமேஜயா}, அவன் அவதரிப்பதற்கு முன்னர், சோமதேவன் (சந்திரன்), தேவர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான், "என்னால் எனது மகனைக் கொடுக்க (பிரிய) முடியாது. அவன் எனக்கு உயிருக்கும் அதிகமான விருப்பத்துக்குரியவனாவான்.(114) இது சிறிய காலமாக இருக்கட்டும். இந்த வரம்பை மீற வேண்டாம். பூமியில் அசுரர்களை அழிப்பது தேவர்களின் பணியாகும், எனவே இஃது எங்கள் பணியுமாகும். ஆகவே, இந்த வர்ச்சஸ் அங்கே போகட்டும், ஆனால் அவன் அங்கே அதிகக் காலம் இருக்க வேண்டாம். நாராயணனைத் தோழனாகக் கொண்ட நரன் இந்திரனின் மகனாகப் பிறக்கப் போகிறான்,(115,116) மேலும் அவன் பாண்டுவின் வலிமைமிக்க மகனான அர்ஜுனன் என்று அறியப்படப் போகிறான். இந்த எனது மகன் {வர்ச்சஸ்} அவனது {அர்ஜுனனின்} மகனாகி, பாலனாக இருக்கும்போதே வலிமைமிக்கத் தேர்வீரனாகத் திகழட்டும்.(117) தேவர்களில் சிறந்தவர்களே, அவன் பதினாறு வருடங்கள் பூமியில் தங்கட்டும். அவன் பதினாறாவது வயதை அடைகையில், உங்கள் பகுதிகளாகப் பிறக்கும் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அழிவை அடையும் போர் ஏற்படப் போகிறது.(118) ஆனால் ஒரு குறிப்பிட்ட மோதல், நரன் மற்றும் நாராயணன் ஆகிய இருவரும் இல்லாமல் (அம்மோதலில் கலந்து கொள்ளாத நிலையில்) நடைபெறப் போகிறது.(119) உண்மையில், தேவர்களே, உங்கள் பகுதிகள் {அவதாரங்கள்}, சக்கர வியூகம் என்ற பெயரில் அறியப்படும் படைநிலையை ஏற்படுத்திக் கொண்டு போரிடப் போகின்றனர். என் மகன் பகைவர்கள் அனைவரையும் தன் முன்னால் புறமுதுகிட நிர்ப்பந்திப்பான்.(120) வலிமைமிக்க அந்தப் பிள்ளை {வர்ச்சஸ்-அபிமன்யு}, ஊடுருவ முடியாத வியூகத்தை ஊடுருவி, அதற்குள் அச்சமின்றித் திரிந்து, பகைவரின் படையணியில் நான்கில் ஒரு பாகத்தை அரை நாளுக்குள் யமனுலகத்திற்கு அனுப்புவான். நாளின் முடிவில் எண்ணற்ற வீரர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும் தங்கள் பொறுப்புக்குத் திரும்பும்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட என் மகன் என் முன் தோன்றுவான். மேலும் அவன், தன் பரம்பரையில் ஒரு வீர மகனைப் பெற்றெடுப்பான். அவனே கிட்டத்தட்ட அழிந்த பாரதக் குலத்தைத் தொடரச் செய்வான் {தழைக்க வைப்பான்}" {என்றான் சோமன்}.(121-124)
சோமனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சொர்க்கவாசிகள் {தேவர்கள்}, "அப்படியே ஆகட்டும்" என்றனர். பிறகு அவர்கள் அனைவரும் நட்சத்திரங்களின் மன்னனை (சோமனைப்) புகழ்ந்து வழிபட்டனர்.(125) இப்படியே, ஓ மன்னா {ஜனமேஜயா}, உன் தந்தையுடைய தந்தைமாரின் பிறப்பை (பிறப்பு குறித்தவற்றை) உனக்கு உரைத்துவிட்டேன். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் அக்னியின் ஒரு பகுதி என்பதையும் அறிவாயாக.(126) மேலும், முதலில் பெண்ணாகப் பிறந்த அந்தச் சிகண்டி ஒரு ராட்சசனாவான் (ராட்சசனின் அவதாரமாவான்) என்பதையும் அறிவாயாக. ஓ பாரதக் குலத்தின் காளையே, திரௌபதியின் ஐந்து மகன்களாக ஆன(127) அந்தப் பாரத இளவரசர்களில் காளைகள், விஸ்வர்கள் என்று அறியப்பட்ட தேவர்களாவர். அவர்களின் பெயர்கள் பிரிதிவிந்தியன், சூதசோமன், சுரூதகீர்த்தி,(128) நகுலன் மகனான சதானீகன், மற்றும் சுருதசேனன் என்பதாகும். யதுக்களில் முதன்மையான சூரன், வசுதேவரின் தந்தையாவான்.(129) அவன் {சூரன்}, தன்னழகில் உலகில் ஒப்பற்றவளான பிருதை என்று அழைக்கப்பட்ட மகள் ஒருத்தியைக் கொண்டிருந்தான். சூரன், தனக்குப் பிறக்கும் முதல் குழந்தையை, வாரிசற்றவனும், தன் அத்தையின் மகனுமான குந்திபோஜனக்கு அளிப்பதாக நெருப்பின் முன்னிலையில் உறுதியேற்றிருந்ததால் {சத்தியம் செய்திருந்ததால்}, அந்த ஏகாதிபதியின் {குந்திபோஜனின்} உதவிகளை எதிர்பார்த்து, அவனுக்குத் தன் மகளைக் கொடுத்தான். அதன்பேரில் குந்திபோஜன் அவளை {பிருதையைத்} தன் மகளாக்கிக் கொண்டான்[5]. அதிலிருந்து அவள் தன் (தன்னைத் தத்தெடுத்த) தந்தையின் வீட்டில், பிராமணர்களுக்கும், விருந்தினர்களுக்கும் பணிவிடை செய்வதில் ஈடுபட்டாள்.(130-132)
ஒரு நாள் அவள் {குந்தி}, கடும் நோன்புகளைக் கொண்டவரும், உண்மை மற்றும் அறத்தின் புதிர்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்தவரும், துர்வாசர் என்ற பெயரைக் கொண்டவருமான கோபக்காரத் தவசிக்குப் பணிவிடை செய்ய வேண்டியிருந்தது. பிருதை {குந்தி}, முழு ஆன்மக் கட்டுப்பாடோடும், மிகுந்த கவனத்தோடும் அந்தக் கோபக்கார முனிவரை {துர்வாசரை} மன நிறைவு கொள்ளச் செய்தாள்.(133,134) அந்தப் புனிதமானவர் {துர்வாசர்}, அந்தக் கன்னிகையின் {குந்தியின்} பணிவிடையால் மனம் நிறைந்து அவளிடம், "ஓ பேறுபெற்றவளே, நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். (நான் உனக்குக் கொடுக்கப் போகும்) இந்த மந்திரத்தால், நீ விரும்பும் தேவர்களை (உன்னிடம்) அழைக்க உன்னால் முடியும்.(135) அவர்களின் அருளால் நீ குழந்தைகளை அடைவாய்" என்றார். இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பெண் {குந்தி}, (சிறிது நேரத்திற்குப் பின்னர்) ஆவல் மேலீட்டால்,(136) தனது கன்னிப் பருவ காலத்தில் தேவன் சூரியனை {அந்த மந்திரத்தைக் கொண்டு} அழைத்தாள். அதன் பேரில் ஒளியின் தலைவனும் {சூரியனும்} அவளைக் கருவுறச் செய்து,(137) ஆயுததாரிகள் அனைவரிலும் முதல்வனாக ஆன ஒரு மகனை {கர்ணனை} அவளிடம் பெற்றான். உறவினர்களுக்கு அஞ்சிய அவள் {குந்தி}, காது குண்டலங்களுடனும், கவசத்துடனும் வெளிவந்த அந்தப் பிள்ளையை ரகசியமாக ஈன்றெடுத்தாள். அவன் {அந்தக் குழந்தை}, ஒரு தெய்வீகக் குழந்தையின் அழகைக் கொடையாகக் கொண்டு,(138) பகலை உண்டாக்குபவனை {சூரியனைப்} போன்ற காந்தியுடன் இருந்தான். அவனது உடலின் ஒவ்வொரு பகுதியும் சமச்சீராகவும், நன்கு அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.(139) அச்சத்தால் குந்தி அந்த அழகிய குழந்தையை நீரில் விட்டாள். ஆனால் இப்படி நீரில் வீசப்பட்ட அப்பிள்ளை {கர்ணன்}, ராதையின் சிறப்புமிக்கக் கணவனால் {அதிரதனால்} எடுக்கப்பட்டு,(140) அவனது மனைவியால் {ராதையால்} அவர்களின் மகனாக ஏற்கப்பட {தத்தெடுக்கப்பட} அவளிடம் கொடுக்கப்பட்டான். அந்த இணையர் {அதிரதனும், ராதையும்}, அப்பிள்ளை விரைவில் எந்தப் பட்டப்பெயரால் நிலம் முழுவதும் அறியப்பட்டானோ[6] அதே வசுசேனன் என்ற பெயரையே அவனுக்குக் கொடுத்தனர். அவன் வளர்ந்து வருகையில், மிகப் பலவனாகவும், ஆயுதங்கள் அனைத்தில் விஞ்சி நிற்பவனாகவும் ஆனான்.(141,142) வெற்றியாளர்கள் அனைவரிலும் முதல்வனான அவன் விரைவில் அறிவியல்களை {வேதாங்கங்களை} நன்கறிந்தான். உண்மையைத் தன் பலமாகக் கொண்ட அந்த நுண்ணறிவு மிக்கவன் {வசுசேனன்-கர்ணன்} வேதங்களை உரைத்தபோது, பிராமணர்களுக்குக் கொடுக்கக்கூடாது என்று அவனிடம் ஏதும் இருக்கவில்லை.(144)
அந்த வேளையில், பொருள்கள் அனைத்தையும் தொடங்கி வைப்பவனான இந்திரன், தன் மகனான அர்ஜுனனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் உந்தப்பட்டு, ஒரு பிராமணரின் வடிவத்தை ஏற்று அவனிடம் {கர்ணனிடம்} வந்து, அவனது காதுகுண்டலங்களையும், இயற்கையான மார்புக் கவசத்தையும் அவ்வீரனிடம் இரந்து கேட்டான்.(145) அவ்வீரனும் {கர்ணனும்}, தன் காது குண்டலத்தையும், கவசத்தையும் எடுத்து அந்தப் பிராமணனிடம் கொடுத்தான். (அந்தத் தானத்தை ஏற்ற) சக்ரன் {இந்திரன்}, (அவனது வெளிப்படைத் தன்மையில்) ஆச்சரியமடைந்து, தானமளித்தவனுக்கு ஓர் ஈட்டியை {சக்தி ஆயுதத்தைக்} கொடுத்து, இவ்வார்த்தைகளில், "ஓ வெல்லப்பட முடியாதவனே {கர்ணா}, தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், ராட்சசர்கள் ஆகியோருக்கு மத்தியில் எவன் மீது நீ (இவ்வாயுதத்தை) ஏவினாலும், அவன் நிச்சயம் கொல்லப்படுவான்" என்றான். அந்தச் சூரியனின் மகன் முதலில் வசுசேனன் என்ற பெயராலேயே உலகத்தில் அறியப்பட்டான்.(146,147) ஆனால், அவனது செயல்களின் தொடர்ச்சியால் அவன் கர்ணன் என்று அழைக்கப்படலானான். மேலும் பிருதையின் முதல் மகனும், பெரும் புகழைக் கொண்டவனுமான அந்த வீரன், இயற்கையான தன் மார்புக் கவசத்தை அறுத்து எடுத்ததால் கர்ணன்[7] என்று அழைக்கப்பட்டான். ஓ மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அவ்வீரன் சூத சாதியிலேயே வளரத்தொடங்கினான்.(148,149) ஓ மன்னா {ஜனமேஜயா}, மேன்மையான மனிதர்கள் அனைவரிலும் முதல்வனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், எதிரிகளைத் தண்டிப்பவனும், பகலை உண்டாக்குபவனின் {சூரியனின்} சிறந்த பகுதியைக் கொண்டவனுமான அந்தக் கர்ணன் துரியோதனனுக்கு, நண்பனாகவும், ஆலோசகனாகவும் இருந்தான்.(150)
பெரும் வீரம் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, நித்தியமானவனும், தேவர்களுக்குத் தேவனுமான நாராயணனின் ஒரு பகுதியாக மனிதர்களுக்கு மத்தியில் இருந்தான்.(151) பெரும்பலத்தைக் கொண்ட பலதேவன் {பலராமன்}, நாகன் சேஷனின் ஒரு பகுதியாவன்.(152) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெரும் சக்தி கொண்ட பிரதியும்னன், சனத்குமாரனாவான் என்பதை அறிவாயாக. இப்படியே பல்வேறு தேவலோகவாசிகளின் பகுதிகள், வசுதேவ குலத்தில் மேன்மை மிகுந்த மனிதர்களாகப் பிறந்து மகிமையை அதிகரித்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, நான் ஏற்கனவே சொன்னதைப் போல, அப்சர இனங்களைச் சேர்ந்தோரின் பகுதிகள் இந்திரனின் உத்தரவின் பேரில் உலகத்தில் அவதரித்தனர்.(153,154) அப்படிப் பதினாறாயிரம் {16000} தேவகன்னிகைகள், இந்தப் பூமியில் பிறந்து வாசுதேவனின் {கிருஷ்ணனின்} மனைவிகளாகினர். ஸ்ரீ-இன் {லட்சுமியின்} ஒரு பகுதியானவள், நாராயணனின் நிறைவுக்காகப் பீஷ்மகனின் குலத்தில் பூமியில் அவதரித்தாள். அவள் {லட்சுமி} கற்புடைய ருக்மிணி என்ற பெயரைக் கொண்டிருந்தாள். குளவி போன்ற மெல்லிய இடைகொண்ட களங்கமற்ற திரௌபதி, சச்சியின் (தேவலோக ராணி {இந்திரனின் மனைவி}) பகுதியைக் கொண்டு துருபதனின் குலத்தில் பிறந்தாள். தோற்றத்தில் அவள் குள்ளமாகவோ, உயரமாகவோ இல்லை. உடலில் நீலத் தாமரையின் மனம் கொண்டு(155-158), தாமரை இதழ்களைப் போலப் பெரிய கண்களுடன், உருண்ட அழகிய தொடைகளுடன், அடர்த்தியான சுருள் முடிகள் கொண்ட கருமையான கேசத்துடன் அவள் இருந்தாள். நல்ல அம்சங்கள் அனைத்தையும் கொண்டு, வைடூரிய நிற மேனியுடன் இருந்த அவள்,(159) மனிதர்களில் முதன்மையான ஐவரின் இதயங்களை மந்திரத்தால் மயக்கி {பாம்பாட்டியைப் போல ஆட்டி} வைப்பவளானாள். சித்தி, திருதி என்ற இரு தேவிகள் அந்த ஐவரின் தாயாகி(160) குந்தி மற்றும் மாத்ரி என்று அழைக்கப்பட்டனர். மதி என்பவள் {என்ற தேவி} சுபலனின் மகள் (காந்தாரி) ஆனாள்[8]. இவ்வாறே, ஓ மன்னா! {ஜனமேஜயா}, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், ராட்சசர்கள் ஆகியோருக்குரிய அவரவர் பகுதிகளின்படியான அவதாரங்கள் குறித்த அனைத்தையும் நான் உனக்கு உரைத்துவிட்டேன்.(161-162)
போரில் வெல்லப்பட முடியாத ஏகாதிபதிகளாகப் பூமியில் பிறந்தவர்கள், நீண்டு பரந்திருந்த யதுக்களின் குலத்தில் பிறந்திருந்த உயர் ஆன்மாக்கள், பிற குலங்களில் பிறந்திருந்த வலிமைமிக்க ஏகாதிபதிகள், பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்களாகப் பிறந்திருந்தவர்கள் ஆகிய அனைவரும் என்னால் முறையாக உரைக்கப்பட்டிருக்கின்றனர்.(163)
செல்வம், புகழ், சந்ததி, நீண்ட ஆயுள், வெற்றி ஆகியவற்றை அளிக்க வல்லதும், (தங்கள் தங்கள் பகுதிகளுடன் பிறந்த மேன்மையானவர்களின்) அவதாரங்கள் குறித்ததுமான இந்த விவரிப்பானது {அம்சாவதாரமானது}, {வெறுப்பற்ற}சரியான மனநிலையிலேயே எப்போதும் கேட்கப்பட வேண்டும்.(164) கேட்பவன் மிக மோசமாகக் கவலையில் ஆழ்ந்திருப்பவனாக இருந்தாலும், தேவர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள் ஆகியோரின் பகுதிகளின் படியான அவதாரங்கள் குறித்த இந்த விவரிப்பை {அம்சாவதரணத்தைக்} கேட்டு, அண்டத்தின் படைப்பு {பிறப்பு}, பாதுகாப்பு {வாழ்வு}, அழிவு {மரணம்} ஆகியவற்றை அறிந்து, ஞானத்தை அடைந்து, எப்போதுமே {கவலையில்} வீழாதவனாக {சோர்வடையாதவனாக} இருப்பான்" என்றார் {வைசம்பாயனர்}.(165)

[5] கும்பகோணம் பதிப்பில், "பராக்கிரமசாலியான அந்தச் சூரன் பிள்ளையில்லாமலிருந்த தன் அத்தையின் புத்ரனுடைய புத்ரனாகிய குந்திபோஜனென்பவனுக்குத் தன் ஸந்ததியில் முதன்மையானதைக் கொடுப்பதாகப் பிரதிஜ்ஞை செய்தபடி, அந்தப் பெண் முதலிற்பிறந்தவளாதலால், அந்தக் குந்திபோஜனை விருத்தி செய்வதற்காக, அவளை அவனுக்குப் பெண்ணாகக் கொடுத்தான். மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே குந்திபோஜன், சூரனின் அத்தை மகனே என்றும், குந்திபோஜனின் உதவியை எதிர்பார்த்தே சூரன் தன் மகளை அவனுக்குக் கொடுத்தான் என்றும் இருக்கிறது.
ஒரு நாள் அவள் {குந்தி}, கடும் நோன்புகளைக் கொண்டவரும், உண்மை மற்றும் அறத்தின் புதிர்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்தவரும், துர்வாசர் என்ற பெயரைக் கொண்டவருமான கோபக்காரத் தவசிக்குப் பணிவிடை செய்ய வேண்டியிருந்தது. பிருதை {குந்தி}, முழு ஆன்மக் கட்டுப்பாடோடும், மிகுந்த கவனத்தோடும் அந்தக் கோபக்கார முனிவரை {துர்வாசரை} மன நிறைவு கொள்ளச் செய்தாள்.(133,134) அந்தப் புனிதமானவர் {துர்வாசர்}, அந்தக் கன்னிகையின் {குந்தியின்} பணிவிடையால் மனம் நிறைந்து அவளிடம், "ஓ பேறுபெற்றவளே, நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். (நான் உனக்குக் கொடுக்கப் போகும்) இந்த மந்திரத்தால், நீ விரும்பும் தேவர்களை (உன்னிடம்) அழைக்க உன்னால் முடியும்.(135) அவர்களின் அருளால் நீ குழந்தைகளை அடைவாய்" என்றார். இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பெண் {குந்தி}, (சிறிது நேரத்திற்குப் பின்னர்) ஆவல் மேலீட்டால்,(136) தனது கன்னிப் பருவ காலத்தில் தேவன் சூரியனை {அந்த மந்திரத்தைக் கொண்டு} அழைத்தாள். அதன் பேரில் ஒளியின் தலைவனும் {சூரியனும்} அவளைக் கருவுறச் செய்து,(137) ஆயுததாரிகள் அனைவரிலும் முதல்வனாக ஆன ஒரு மகனை {கர்ணனை} அவளிடம் பெற்றான். உறவினர்களுக்கு அஞ்சிய அவள் {குந்தி}, காது குண்டலங்களுடனும், கவசத்துடனும் வெளிவந்த அந்தப் பிள்ளையை ரகசியமாக ஈன்றெடுத்தாள். அவன் {அந்தக் குழந்தை}, ஒரு தெய்வீகக் குழந்தையின் அழகைக் கொடையாகக் கொண்டு,(138) பகலை உண்டாக்குபவனை {சூரியனைப்} போன்ற காந்தியுடன் இருந்தான். அவனது உடலின் ஒவ்வொரு பகுதியும் சமச்சீராகவும், நன்கு அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.(139) அச்சத்தால் குந்தி அந்த அழகிய குழந்தையை நீரில் விட்டாள். ஆனால் இப்படி நீரில் வீசப்பட்ட அப்பிள்ளை {கர்ணன்}, ராதையின் சிறப்புமிக்கக் கணவனால் {அதிரதனால்} எடுக்கப்பட்டு,(140) அவனது மனைவியால் {ராதையால்} அவர்களின் மகனாக ஏற்கப்பட {தத்தெடுக்கப்பட} அவளிடம் கொடுக்கப்பட்டான். அந்த இணையர் {அதிரதனும், ராதையும்}, அப்பிள்ளை விரைவில் எந்தப் பட்டப்பெயரால் நிலம் முழுவதும் அறியப்பட்டானோ[6] அதே வசுசேனன் என்ற பெயரையே அவனுக்குக் கொடுத்தனர். அவன் வளர்ந்து வருகையில், மிகப் பலவனாகவும், ஆயுதங்கள் அனைத்தில் விஞ்சி நிற்பவனாகவும் ஆனான்.(141,142) வெற்றியாளர்கள் அனைவரிலும் முதல்வனான அவன் விரைவில் அறிவியல்களை {வேதாங்கங்களை} நன்கறிந்தான். உண்மையைத் தன் பலமாகக் கொண்ட அந்த நுண்ணறிவு மிக்கவன் {வசுசேனன்-கர்ணன்} வேதங்களை உரைத்தபோது, பிராமணர்களுக்குக் கொடுக்கக்கூடாது என்று அவனிடம் ஏதும் இருக்கவில்லை.(144)
[6] குமபகோணம் பதிப்பில், "ஜலத்தில் விடப்பட்ட அந்தக் குழந்தையை ராதையின் கணவனும், மிகுந்த கீர்த்தியுள்ளவனுமாகிய ஒரு சூதன் தன் மனைவியாகிய ராதையின் புத்ரனாகச் செய்தான். அந்தத் தம்பதிகள் இருவரும் அந்தக் குழந்தைக்கு எல்லாத் தேசங்களிலும் பிரசித்தமான வஸுஷேனனென்கிற நாமதேயத்தைச் செய்தனர்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "ஆனால், இப்படி நீரில் வீசப்பட்ட பிள்ளை ராதையின் சிறப்புமிக்கக் கணவனால் எடுக்கப்பட்டான். அதிரதன் (ராதையின் கணவன்) அப்பிள்ளையைத் தன் மகனாக ஆக்கிக் கொண்டான். அந்த இணையர், எந்தப் பெயரால் அவன் விரைவில் நாடுகளெங்கிலும் அறியப்பட்டானோ அதே வசுசேணன் என்ற பெயரையே அவனுக்குக் கொடுத்தனர்" என்றிருக்கிறது.
அந்த வேளையில், பொருள்கள் அனைத்தையும் தொடங்கி வைப்பவனான இந்திரன், தன் மகனான அர்ஜுனனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் உந்தப்பட்டு, ஒரு பிராமணரின் வடிவத்தை ஏற்று அவனிடம் {கர்ணனிடம்} வந்து, அவனது காதுகுண்டலங்களையும், இயற்கையான மார்புக் கவசத்தையும் அவ்வீரனிடம் இரந்து கேட்டான்.(145) அவ்வீரனும் {கர்ணனும்}, தன் காது குண்டலத்தையும், கவசத்தையும் எடுத்து அந்தப் பிராமணனிடம் கொடுத்தான். (அந்தத் தானத்தை ஏற்ற) சக்ரன் {இந்திரன்}, (அவனது வெளிப்படைத் தன்மையில்) ஆச்சரியமடைந்து, தானமளித்தவனுக்கு ஓர் ஈட்டியை {சக்தி ஆயுதத்தைக்} கொடுத்து, இவ்வார்த்தைகளில், "ஓ வெல்லப்பட முடியாதவனே {கர்ணா}, தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், ராட்சசர்கள் ஆகியோருக்கு மத்தியில் எவன் மீது நீ (இவ்வாயுதத்தை) ஏவினாலும், அவன் நிச்சயம் கொல்லப்படுவான்" என்றான். அந்தச் சூரியனின் மகன் முதலில் வசுசேனன் என்ற பெயராலேயே உலகத்தில் அறியப்பட்டான்.(146,147) ஆனால், அவனது செயல்களின் தொடர்ச்சியால் அவன் கர்ணன் என்று அழைக்கப்படலானான். மேலும் பிருதையின் முதல் மகனும், பெரும் புகழைக் கொண்டவனுமான அந்த வீரன், இயற்கையான தன் மார்புக் கவசத்தை அறுத்து எடுத்ததால் கர்ணன்[7] என்று அழைக்கப்பட்டான். ஓ மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அவ்வீரன் சூத சாதியிலேயே வளரத்தொடங்கினான்.(148,149) ஓ மன்னா {ஜனமேஜயா}, மேன்மையான மனிதர்கள் அனைவரிலும் முதல்வனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், எதிரிகளைத் தண்டிப்பவனும், பகலை உண்டாக்குபவனின் {சூரியனின்} சிறந்த பகுதியைக் கொண்டவனுமான அந்தக் கர்ணன் துரியோதனனுக்கு, நண்பனாகவும், ஆலோசகனாகவும் இருந்தான்.(150)
[7] க்ருண் என்றால் சேதிப்பது என்று பொருள். அதன் நீட்சியாகவே கர்ணன் என்ற பெயரும் அமைந்திருக்கிறது என்று கும்பகோணம் பதிப்பில் குறிப்பு இருக்கிறது..
பெரும் வீரம் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, நித்தியமானவனும், தேவர்களுக்குத் தேவனுமான நாராயணனின் ஒரு பகுதியாக மனிதர்களுக்கு மத்தியில் இருந்தான்.(151) பெரும்பலத்தைக் கொண்ட பலதேவன் {பலராமன்}, நாகன் சேஷனின் ஒரு பகுதியாவன்.(152) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெரும் சக்தி கொண்ட பிரதியும்னன், சனத்குமாரனாவான் என்பதை அறிவாயாக. இப்படியே பல்வேறு தேவலோகவாசிகளின் பகுதிகள், வசுதேவ குலத்தில் மேன்மை மிகுந்த மனிதர்களாகப் பிறந்து மகிமையை அதிகரித்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, நான் ஏற்கனவே சொன்னதைப் போல, அப்சர இனங்களைச் சேர்ந்தோரின் பகுதிகள் இந்திரனின் உத்தரவின் பேரில் உலகத்தில் அவதரித்தனர்.(153,154) அப்படிப் பதினாறாயிரம் {16000} தேவகன்னிகைகள், இந்தப் பூமியில் பிறந்து வாசுதேவனின் {கிருஷ்ணனின்} மனைவிகளாகினர். ஸ்ரீ-இன் {லட்சுமியின்} ஒரு பகுதியானவள், நாராயணனின் நிறைவுக்காகப் பீஷ்மகனின் குலத்தில் பூமியில் அவதரித்தாள். அவள் {லட்சுமி} கற்புடைய ருக்மிணி என்ற பெயரைக் கொண்டிருந்தாள். குளவி போன்ற மெல்லிய இடைகொண்ட களங்கமற்ற திரௌபதி, சச்சியின் (தேவலோக ராணி {இந்திரனின் மனைவி}) பகுதியைக் கொண்டு துருபதனின் குலத்தில் பிறந்தாள். தோற்றத்தில் அவள் குள்ளமாகவோ, உயரமாகவோ இல்லை. உடலில் நீலத் தாமரையின் மனம் கொண்டு(155-158), தாமரை இதழ்களைப் போலப் பெரிய கண்களுடன், உருண்ட அழகிய தொடைகளுடன், அடர்த்தியான சுருள் முடிகள் கொண்ட கருமையான கேசத்துடன் அவள் இருந்தாள். நல்ல அம்சங்கள் அனைத்தையும் கொண்டு, வைடூரிய நிற மேனியுடன் இருந்த அவள்,(159) மனிதர்களில் முதன்மையான ஐவரின் இதயங்களை மந்திரத்தால் மயக்கி {பாம்பாட்டியைப் போல ஆட்டி} வைப்பவளானாள். சித்தி, திருதி என்ற இரு தேவிகள் அந்த ஐவரின் தாயாகி(160) குந்தி மற்றும் மாத்ரி என்று அழைக்கப்பட்டனர். மதி என்பவள் {என்ற தேவி} சுபலனின் மகள் (காந்தாரி) ஆனாள்[8]. இவ்வாறே, ஓ மன்னா! {ஜனமேஜயா}, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், ராட்சசர்கள் ஆகியோருக்குரிய அவரவர் பகுதிகளின்படியான அவதாரங்கள் குறித்த அனைத்தையும் நான் உனக்கு உரைத்துவிட்டேன்.(161-162)
[8] சித்தி என்றால் வெற்றி என்றும், திருதி என்றால் மகிழ்ச்சி என்றும், மதி என்றால் விவேகம் என்றும் பொருளாம்.
போரில் வெல்லப்பட முடியாத ஏகாதிபதிகளாகப் பூமியில் பிறந்தவர்கள், நீண்டு பரந்திருந்த யதுக்களின் குலத்தில் பிறந்திருந்த உயர் ஆன்மாக்கள், பிற குலங்களில் பிறந்திருந்த வலிமைமிக்க ஏகாதிபதிகள், பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்களாகப் பிறந்திருந்தவர்கள் ஆகிய அனைவரும் என்னால் முறையாக உரைக்கப்பட்டிருக்கின்றனர்.(163)
செல்வம், புகழ், சந்ததி, நீண்ட ஆயுள், வெற்றி ஆகியவற்றை அளிக்க வல்லதும், (தங்கள் தங்கள் பகுதிகளுடன் பிறந்த மேன்மையானவர்களின்) அவதாரங்கள் குறித்ததுமான இந்த விவரிப்பானது {அம்சாவதாரமானது}, {வெறுப்பற்ற}சரியான மனநிலையிலேயே எப்போதும் கேட்கப்பட வேண்டும்.(164) கேட்பவன் மிக மோசமாகக் கவலையில் ஆழ்ந்திருப்பவனாக இருந்தாலும், தேவர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள் ஆகியோரின் பகுதிகளின் படியான அவதாரங்கள் குறித்த இந்த விவரிப்பை {அம்சாவதரணத்தைக்} கேட்டு, அண்டத்தின் படைப்பு {பிறப்பு}, பாதுகாப்பு {வாழ்வு}, அழிவு {மரணம்} ஆகியவற்றை அறிந்து, ஞானத்தை அடைந்து, எப்போதுமே {கவலையில்} வீழாதவனாக {சோர்வடையாதவனாக} இருப்பான்" என்றார் {வைசம்பாயனர்}.(165)
ஆங்கிலத்தில் | In English |