Dushmanta entered the asylum! | Adi Parva - Section 70 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 6)
பதிவின் சுருக்கம் : வேறு காட்டுக்கு வேட்டையாடச் சென்ற துஷ்யந்தன்; அந்தக் கானகத்தின் அழகு; பசியும் தாகமும் அடைந்த துஷ்யந்தன்; காட்டுக்குள் ஓர் ஆசிரமத்தைக் காண்பது; கண்வரின் ஆசிரமத்தில் முனிவர்களையும், துறவிகளையும் கண்ட துஷ்யந்தன்...
வைசம்பாயனர் சொன்னார், "மன்னன் {துஷ்யந்தன்} தன்னைப் பின்தொடர்பவர்களுடன் {தனது பணியாட்களுடன்} சேர்ந்து, ஆயிரக்கணக்கான விலங்குகளைக் கொன்ற பிறகு, வேட்டையாடும் பொருட்டு மற்றொரு காட்டுக்குள் நுழைந்தான்.(1) தன்னைக் கவனிப்பதற்கு ஒரே ஒரு பணியாளை மட்டுமே கொண்ட அம்மன்னன் {துஷ்யந்தன்} பசியாலும் தாகத்தாலும் களைத்துப் போய், அந்தக் காட்டின் எல்லைப்பகுதியில் ஒரு பெரிய பாலைவனத்தை அடைந்தான்.(2)
செடிகளற்ற அந்தச் சமவெளியைக் கடந்த அம்மன்னன் {துஷ்யந்தன்}, தவசிகளின் ஓய்வில்லங்கள் {ஆசிரமங்கள்} நிறைந்ததும், பார்ப்பதற்கு அழகானதும், இதயத்திற்கு மகிழ்ச்சியை அளிப்பதும், குளுமையானதும், இனிய தென்றலுடன் கூடியதுமான மற்றொரு காட்டை அடைந்தான்.(3) மலர்ந்த மலர்களால் மறைக்கப்பட்ட மரங்கள் நிறைந்ததும், மென்மையான பச்சைப்புற்கள் மிகையாக வளர்ந்தும், சுற்றிலும் பல மைல்களுக்குப் பரந்து விரிந்த மண்ணுடன் கூடியதுமான அது {அந்தக் காடு}, பறவைகளின் இனிய இசையை எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஆண் குயிலின் இசைகளையும், சுவர்க்கோழிகளின் கீச்சொலிகளையும் அஃது எதிரொலித்துக் கொண்டிருந்தது.(4,5) தலைக்கு மேலே நிழற்பந்தல்களை அமைத்த நெடிது வளர்ந்த கிளைகளுடன் கூடிய மகத்தான மரங்களால் அது நிறைந்திருந்தது. சுற்றிலும் இருந்த மலர்க்கொடிகளின் மேல் வண்டுகள் மொய்த்துக் கொண்டிருந்தன. அங்கே அனைத்து இடங்களிலும் அழகிய தோப்புகள் இருந்தன.(6) கனிகளற்றதாகவோ, முட்களுள்ளதாகவோ, சுற்றிலும் வண்டுகளேதும் மொய்க்காததாகவோ அங்கே எந்த மரமும் இல்லை.(7) அந்த மொத்தக் காடும், இறகுகளுடன் கூடிய பாடகர்களின் {பறவைகளின்} மெல்லிசையை எதிரொலித்துக் கொண்டிருந்தது. அனைத்துப் பருவங்களுக்குரிய மலர்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. மலர்ந்திருந்த மரங்களின் புத்துணர்ச்சி தரும் நிழல்கள் அங்கே இருந்தன.(8) அந்தப் பெரும் வில்லாளி {துஷ்யந்தன்} நுழைந்த அந்தக் காடானது, இப்படியே இனிமையாகவும் அற்புதமாகவும் இருந்தது.
பூங்கொத்துகளால் அழகூட்டப்பட்ட கிளைகளுடன் கூடிய மரங்கள், மென்மையான தென்றலில் அசையத் தொடங்கி அந்த ஏகாதிபதியின் {துஷ்யந்தனின்} தலையில் தங்கள் மலர்களைப் பொழிந்தன.(9,10) வண்ணமயமான பூக்களை ஆடையாகக் கொண்டிருந்தவையும், இனிய குரலில் பாடும் பறவைகள் அமர்ந்திருந்த நுனிகளைக் கொண்டவையுமான மரங்கள், விண்ணை முட்டும் வண்ணம் உயர்ந்து, தேவலோகத்தையே தொட்டுக் கொண்டு நின்றன. தேனில் ஆசை கொண்ட வண்டுகள், மலர்களின் கனத்தால் தொங்கிக் கொண்டிருக்கும் அவற்றின் {மரங்களின்} கிளைகளைச் சுற்றிலும் இனிய குரலுடன் ரீங்காரமிட்டபடி இருந்தன. பெரும் சக்தியைக் கொண்ட அந்த மன்னன் {துஷ்யந்தன்}, மலர்க்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்ட கொடிகளின் நிழற்பந்தல்களால் மறைக்கப்பட்ட எண்ணற்ற இடங்களைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியால் {மந்திரத்தால் கட்டுண்டது போல} மயக்கத்துக்கு உள்ளானான்.(11-13)
சுற்றிலும் இருந்த அம்மரங்களின் மலர்நிறைந்த கிளைகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு, பல வானவிற்களைப் போல பளபளப்புடனும், பல வண்ணங்களிலும் தெரிந்ததன் விளைவால் அக்கானகம் மிக அழகாக இருந்தது.(14) சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், குரங்குகள் {வானரங்கள்}, மகிழ்வுடன் குடித்த {மகிழ்ச்சியில் திளைத்த} கின்னரர் கூட்டங்களின் வசிப்பிடமாக அந்தக் கானகம் திகழ்ந்தது.(15) சுகமான, குளிர்ச்சியான, நறுமணமிக்கத் தென்றல், புதுமலர்களின் நறுமணத்தைப் பரப்பியபடியே, ஏதோ மரங்களுடன் தான் விளையாட வந்திருப்பதைப் போல அனைத்துத் திசைகளிலும் வீசிக் கொண்டிருந்தது.(16) இத்தகு அழகுகளைக் கொடையாகக் கொண்டதும், மயக்கம் தருவதுமான அந்தக் கானகத்தை மன்னன் {துஷ்யந்தன்} கண்டான்.
ஆற்றின் கழிமுகப் பகுதியில் அது {அந்தக் கானகம்} இருந்தது. ஒன்றாக நின்ற நெடிய மரக்கூட்டங்கள், இந்திரனைக் கௌரவிப்பதற்காக நிறுவப்பட்ட அழகான கம்பங்கள் {இந்திரத்வஜங்கள்} இருப்பதைப் போல அந்த இடத்திற்கு ஒரு தோற்றத்தையளித்தன.(17) எப்போதும் மகிழ்ச்சிரமான பறவைகளின் வசிப்பிடமாக இருந்த அந்தக் காட்டில், துறவிகளின் இனிமையான, அழகான ஓய்வில்லம் {ஆசிரமம்} ஒன்று இருப்பதை அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்} கண்டான்.(18) அதை {அந்த ஆசிரமத்தைச்} சுற்றிப் பல மரங்களும் இருந்தன. அதனுள் வேள்வித்தீ எரிந்து கொண்டிருந்தது. அந்த ஒப்பற்ற ஓய்வில்லத்தை {ஆசிரமத்தை} மன்னன் {துஷ்யந்தன்} வழிபட்டான்.(19)
எண்ணற்ற யதிகள், வாலகில்யர்கள் மற்றும் பல முனிவர்களும் அதில் அமர்ந்திருப்பதை அவன் கண்டான். வேள்வி நெருப்புடன் கூடிய பல அறைகளால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. மரங்களிலிருந்து விழுந்த மலர்கள், அடர்த்தியான தரைவிரிப்பை ஏற்படுத்தியிருந்தன.(20) பெரும் தண்டுகள் கொண்ட உயரமான மரங்களால் அந்த இடமே பெரும் அழகுடன் இருந்தது. ஓ மன்னா {ஜனமேஜயா}, புனிதமானதும், தெளிந்த நீர் கொண்டதும், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் தன் மார்பில் கொண்டதுமான மாலினி என்ற ஆறு அங்கே ஓடிக் கொண்டிருந்தது.(21) தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக அதனிடம் வரும் தவசிகளின் இதயங்களை அந்த நீரோடை மகிழ்ச்சியால் வியாபிக்கச் செய்தது. அதன் கரைகளில் மான்வகையிலான மாசற்ற விலங்குகள் பலவற்றை மன்னன் {துஷ்யந்தன்} கண்டு, மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான்.(22)
எந்த எதிரியாலும் தடுக்க முடியாத தேரைக் கொண்ட அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, தேவலோகம் போலச் சுற்றிலும் அழகாக இருந்த அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.(23) அது {அந்த ஆசிரமம்}, அருகில் வசிக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் தாயைப் போல இருந்த அந்தப் புனித ஓடையின் கரையில் இருக்கிறது என்பதையும் மன்னன் {துஷ்யந்தன்} கண்டான்.(24) அதன் கரையில் சக்கரவாகமும், பால்வெண்மையான நுரைகளைக் கொண்ட அலைகளும் விளையாடிக் கொண்டிருந்தன. அங்குக் கின்னரர்களின் வசிப்பிடங்களும் இருந்தன. பெரும் எண்ணிக்கையிலான குரங்குகளும், கரடிகளும் கூட அங்கே மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தன.(25) கல்வியிலும், தியானத்திலும் ஈடுபடும் புனிதமான தவசிகளும் அங்கே வாழ்ந்து வந்தனர். யானைகளையும், புலிகளையும், பாம்புகளையும் கூட அங்கே காண முடிந்தது.(26)
அந்த ஓடையின் {மாலினி ஆற்றின்} கரையில்தான், பெரும் தவத்தகுதிகளைக் கொண்டதும், எண்ணற்ற முனிவர்களுக்கு வசிப்பிடமுமான சிறப்புமிக்கக் கசியபரின்[1] சிறந்த ஆசிரமம் இருந்தது.(27) அந்த ஆற்றையும், கங்கையின் நீரலைகள் மோதும் நர நாராயணர்களின் ஆசிரமத்தைப் போலவே, பல தீவுகள் பதிக்கப்பட்டு, பெரும் அழகுடன் கூடிய கரைகளைக் கொண்ட ஆற்றின் அலைகள் மோதும் ஆசிரமத்தையும் கண்ட மன்னன், அந்தப் புனிதமான வசிப்பிடத்திற்குள் நுழையத் தீர்மானித்தான்.(28,29) மேலும், அனைத்து நற்குணங்களையும் கொண்டவரும், தன் காந்தியின் காரணமாகக் காணக் கடினமானவரும், கசியப குலத்தைச் சேர்ந்தவரும், தவச்செல்வத்தைக் கொண்ட பெருமுனிவருமான சிறப்புமிக்கக் கண்வரைக் காண விரும்பிய அந்த மனிதர்களில் காளை {துஷ்யந்தன்}, பித்துப்பிடித்து அகவும் மயில்களின் குரல்களை எதிரொலித்ததும், பெரும் கந்தர்வனான சித்ரரதனின் நந்தவனங்களைப் போன்றதுமான அந்தக் காட்டை அணுகினான்.(30,31)
கொடிகள், குதிரைப்படை, காலாட்படை, யானைகள் ஆகியவற்றைக் கொண்ட தன் படையைக் கானகத்தின் நுழைவிலேயே நிறுத்திய அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, அவர்களிடம் பின்வருமாறு பேசினான், "இருளற்றவரும் {தமோ, ரஜோ குணங்களற்றவரும்}, கசியப குலத்தைச் சேர்ந்தவருமான பெரும் தவசியைக் {கண்வரைக்} காணச் செல்கிறேன். நான் திரும்பும் வரை இங்கேயே நிற்பீராக" என்றான்.(32,33) இந்திரனின் நந்தவனத்தைப் போல அந்தக் காட்டுக்குள் நுழைந்த மன்னன் {துஷ்யந்தன்}, விரைவில் தன் பசியையும், தாகத்தையும் மறந்தே போனான். மேலும் அவன் அளவில்லாத மகிழ்ச்சியையும் அடைந்தான்.(34) தவத்தகுதியின் அழிவற்ற திரளான அந்த முனிவரைக் காணும் விருப்பத்தில், தன் அரசக் குறியீடுகள் {ராஜ சின்னங்கள்} அனைத்தையும் களைந்த அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, தன் அமைச்சரோடும், தன் புரோகிதரோடும் அந்தச் சிறப்பான ஆசிரமத்திற்குள் நுழைந்தான். அந்த ஆசிரமம், பிரம்மலோகத்தைப் போல இருப்பதை மன்னன் {துஷ்யந்தன்} கண்டான்.(35,36)
இனிமையாக ரீங்காரமிட்ட வண்டுகளும், தங்கள் இனிய மெல்லிசைகளைப் பொழியும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகளும் இங்கே இருந்தன. குறிப்பிட்ட இடங்களில் அந்த மனிதர்களில் புலி {துஷ்யந்தன்}, சரியான ஸ்வர விதிகளின் படி, முதல்தரமான பிராமணர்களால் ரிக் {ரிக் வேதப்} பாடல்கள் {சுலோகங்கள்} பாடப்படுவதைக் கேட்டான்.(37) மேலும் வேறு இடங்கள், வேள்வி விதிகள், அங்கங்கள் மற்றும் யஜுர் வேதத்தின் பாடல்களை அறிந்த பிராமணர்களால் அருளப்பட்டிருந்தன. இன்னும் வேறு இடங்கள், நோன்பு நோற்கும் முனிவர்களால் பாடப்படுபவையும், ஒத்திசையும் வகையிலான சாமப் பாடல்களால் நிறைந்திருந்தன.(38) அந்த ஆசிரமத்தின் வேறு இடங்கள், அதர்வண வேதத்தைக் கற்றவர்களான பிராமணர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும் வேறு இடங்களில், அதர்வண வேதத்தைக் கற்றவர்களும், சாமத்தின் {சாம வேதத்தின்} வேள்விப்பாடல்களைப் பாடவல்லவர்களுமான பிராமணர்கள், சரியான உச்சரிப்பு விதிகளின்படி சம்ஹிதைகளை உரைத்துக் கொண்டிருந்தனர். மேலும் வேறு இடங்களில், வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கும் அறிவியலை நன்கறிந்த பிராமணர்கள் பிற வகையிலான மந்திரங்களை உரைத்துக் கொண்டிருந்தனர். உண்மையில் இப்படிப்பட்ட புனிதமான ஒலிகளை எதிரொலித்த அந்த ஆசிரமமானது இரண்டாவது பிரம்மலோகத்தைப் போல இருந்தது.(39-41)
வேள்வி மேடைகளை அமைக்கும் திறன் வாய்ந்தவர்களும், வேள்விகளின் கிரம விதிகள், தர்க்கம் மற்றும் மனோ அறிவியலில் தேர்ச்சியடைந்தவர்களும், வேதங்களை முழுமையாக அறிந்தவர்களுமான பல பிராமணர்கள் அங்கே இருந்தனர்.(42) அனைத்து விதமான வெளிப்பாடுகளுக்குமான பொருள்களை நன்கு அறிந்தவர்களும், சிறப்புச் சடங்குகள் அனைத்தையும் அறிந்தவர்களும், மோக்ஷ தர்மத்தைப் பின்பற்றுபவர்களும், முன்மொழிவுகளை நிறுவுவதில் நன்கு திறன் பெற்றவர்களும், மிதமிஞ்சிய காரணங்களை நிராகரித்துச் சரியான முடிவுகளை மேற்கொள்பவர்களுமான பல பிராமணர்கள் அங்கே இருந்தனர்.(43)
மேலும், சொற்களின் அறிவியல் (இலக்கணம்), நயங்கள் {யாப்பிலக்கணம்: எதுகை, மோனை, சந்தம், அசைகள் போன்று ஓசைநயம் சேர்க்கும் இலக்கணங்கள்}, நிருக்தம் {சொற்களின் வேர் குறித்த அங்கம்} ஆகியவற்றில் அறிவுள்ளவர்களும்; மேலும் கணியம் {சோதிடம்} அறிந்தவர்களும், பருப்பொருளின் பண்புகள், வேள்விச் சடங்குகளின் கனிகள் {பலன்கள்} ஆகியவற்றைக் கற்றவர்களும், காரணங்கள் மற்றும் விளைவுகளைக் குறித்த அறிவுடையவர்களும், பறவைகள் மற்றும் குரங்குகளின் கூச்சல்களைப் புரிந்து கொள்ளவல்லவர்களும், பெரும் ஆய்வுக்கட்டுரைகளை நன்கு படித்தவர்களும், பல்வேறு அறிவியல்களில் திறன் வாய்ந்தவர்களும் அங்கே இருந்தனர்.(44,45) அந்த மன்னன் {துஷ்யந்தன்}, தான் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும்போதே அவர்களின் குரல்களைக் கேட்டான். மனிதர்களின் இதயங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவல்ல மனிதக் குரல்களையும் அந்த ஓய்வில்லம் எதிரொலித்துக் கொண்டிருந்தது.(46)
அந்தப் பகை வீரர்களைக் கொல்பவன் {துஷ்யந்தன்}, தன்னைச் சுற்றிலும், ஜபங்கள் (தேவர்களின் பெயர்களைத் தொடர்ந்து உச்சரிப்பது}, ஹோமங்கள் (எரித்துக் காணிக்கையளிப்பது) ஆகியவற்றில் ஈடுபட்டவர்களும், கடுமையான நோன்புகளைக் கொண்டவர்களும், கற்றறிந்தவர்களுமான பிராமணர்களைக் கண்டான்.(47) அந்தப் பிராமணர்கள் அவனுக்கு மரியாதையுடன் வழங்கிய அழகிய தரைவிரிப்புகளைக் கண்ட மன்னன் {துஷ்யந்தன்} மிகவும் ஆச்சரியப்பட்டான்.(48) தேவர்களையும், பெரும் முனிவர்களையும் வழிபடும் அந்தப் பிராமணர்களின் சடங்குகளைக் கண்ட அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் {துஷ்யந்தன்} தான் பிரம்மலோகத்தில் இருப்பதாகவே நினைத்தான்.(49)
முனிவர்களின் தவ ஒழுக்கங்களால் பாதுகாக்கப்பட்டதும், புனிதமான ஓய்வில்லமாக இருக்கவேண்டிய தகுதிகள் அனைத்தையும் கொண்டதுமான கசியப வம்சத்தவருடைய அந்தப் புனிதமான ஆசிரமத்தை அந்த மன்னன் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகக் கண்டானோ அவ்வளவுக்கவ்வளவு இன்னும் அதிகமாகக் காணவே அவன் ஆசைப்பட்டான். உண்மையில் தனது இந்தச் சிறிய ஆய்வில் அவன் {துஷ்யந்தன்} மனநிறைவு கொள்ளவில்லை. வீரர்களைக் கொல்பவனான அவன் {துஷ்யந்தன்}, இறுதியாக, தவச் செல்வமும், மேன்மையான நோன்புகளும் கொண்ட முனிவர்கள் சுற்றிலும் வசித்திருந்ததும், மகிழ்ச்சியளிப்பதுமான கசியப வம்சத்தவரின் அந்தப் புனிதமான ஓய்வில்லத்திற்குள் தனது அமைச்சர் மற்றும் புரோகிதரோடு நுழைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(50,51)

[1] கசியப குலத்தவரின் என்று இருந்திருக்க வேண்டும். எப்படி பிருகு முனிவரின் வம்சத்தவர்கள் பார்கவர் என்ற பொதுப்பெயரால் அறியப்பட்டார்களோ, பரத்வாஜரின் வம்சத்தவர், பரத வம்சத்தவர், குரு வம்சத்தவர் என அனைவரும் பொதுப் பெயரால் அறியப்பட்டார்களோ அப்படியே இங்கே கசியப என்பது கசியப வம்சத்தவர் என்ற பொதுப்பெயராகவே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் | In English |