Kacha obtained knowledge of Sanjivani! | Adi Parva - Section 76 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 12)
பதிவின் சுருக்கம் : பிருஹஸ்பதியின் மூத்த மகன் கசனிடம் வேண்டிக் கொண்ட தேவர்கள்; பிருஹஸ்பதியின் மகன் கசன் என்பதை அறிந்தும் சுக்கிராச்சாரியார் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டது; சுக்ராச்சாரியரின் மகள் தேவயானிக்குப் பணிவிடை செய்த கசன்; கசனைக் கொன்ற அசுரர்கள்; கசனுக்காகத் தேவயானி அழவே, அவனை உயிர்மீட்ட சுக்ராச்சாரியார்; மீண்டும் மீண்டும் கசனைக் கொன்ற அசுரர்கள்; மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்த சுக்ராச்சாரியர்; பிராமணர்கள் மதுவருந்தக்கூடாது என்ற விதிமுறையைக் கொண்டு வந்த சுக்கிராச்சாரியார்; வந்த காரியம் வெற்றியடைந்தாலும் சுக்ராச்சாரியாரிடமே பல காலம் தங்கிப் பணிவிடை செய்த கசன்...
ஜனமேஜயன், "ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! பிரஜாபதியைத் தொடர்ந்து பத்தாவது நபராக வரும் எங்கள் மூதாதையர் யயாதி, எப்படிக் கிடைக்க முடியாதவளான சுக்ரனின் மகளை மனைவியாகக் கொண்டார்.(1) இது குறித்து விவரமாக அறிய நான் விரும்புகிறேன். வம்சங்களை நிறுவிய ஒவ்வொரு ஏகாதிபதிகளைக் குறித்தும் தனித்தனியாக எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)
வைசம்பாயனர் சொன்னார், "ஏகாதிபதி யயாதி, இந்திரனுக்கு நிகரான காந்தியுடன் இருந்தான். ஓ ஜனமேஜயா, உனது கேள்விக்கான மறுமொழியாகச் சுக்ரனும், விருஷபர்வனும் எப்படி அவனுக்குத் தங்கள் மகள்களை உரிய சடங்குகளுடன் அளித்தனர் என்பதை நான் உரைக்கிறேன். குறிப்பாக அவன் எப்படித் தேவயானியுடன் கலந்தான் என்பதையும் சொல்கிறேன்.(3,4)
பழங்காலத்தில், மூன்று உலகங்களின் அரசுரிமைக்காகத் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன.(5) தேவர்கள், வெற்றியில் ஆசை கொண்டு, அங்கீரஸின் மகனைத் (பிருஹஸ்பதியைத்) தங்கள் வேள்விகளை நடத்தும் புரோகிதராக நியமித்தனர். அதே நேரத்தில், அவர்களது எதிரிகளோ {அசுரர்களோ}, கல்விமானான உசானஸை {சுக்கிராச்சாரியரை} அதே காரியத்திற்காக தங்கள் புரோகிதராக நியமித்தனர்.(6) அந்த பிராமணர்கள் இருவருக்கிடையிலும் செருக்குடன் கூடிய பகை எப்போதும் இருந்து வந்தது. போர்களில் தேவர்களால் கொல்லப்படும் தானவர்களை,(7) தனது ஞானத்தால் சுக்ரன் உயிர்ப்பித்துக் கொண்டிருந்தார். மறுபடியும் உயிர் கிடைத்த அவர்கள் மீண்டும் தேவர்களுடன் போர் புரிந்தனர்.(8) அசுரர்களும் போர்க்களத்தில் பல தேவர்களைக் கொன்றனர். ஆனால், பெரும் சக்தி கொண்ட காவ்யர் (சுக்ரன்) அறிந்த சஞ்சீவனி அறிவியலை, வெளிப்படையான மனம் கொண்ட பிருஹஸ்பதி அறியாததால், வீழ்ந்த தேவர்களின் உயிரை அவரால் மீட்க முடியவில்லை. அதனால், தேவர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகினர்.(9,10)
அந்தத் தேவர்கள் இதயத்தில் பெரும் துயரம் கொண்டு, கல்விமானான உசானஸைக் கண்டு பயந்து, பிருஹஸ்பதியின் மூத்த மகனான கசனிடம் சென்று பேசினார்கள். அவர்கள் அவனிடம்,(11) "நாங்கள் உன்னை வணங்குகிறோம். எங்களிடம் கருணை கொள்ளும் நீ, நாங்கள் பெரிதாக நினைக்கும் காரியத்தைச் செய்து எங்களுக்கு உதவி செய்வாயாக. அளவில்லா ஆற்றலைக் கொண்ட பிராமணர் சுக்ரன் அறிந்திருக்கும் ஞானத்தைக் கூடிய விரைவில் உனதாக்கிக் கொள்வாயாக. அந்தப் பிராமணரை நீ விருஷபர்வன் சபையில் காணலாம்.(12,13) அவர் எப்போதும் தானவர்களையே காப்பார், ஆனால் அவர்களின் எதிரிகளான நம்மைக் காக்க மாட்டார். நீ அவரை விட வயதில் இளையவன்தான். எனவே, நீ அவரை மரியாதையுடன் வழிபட முடியும்.(14) அவருக்குப் பிடித்தமான மகளான, தேவயானியையும் நீ வழிபடலாம். நிச்சயமாக உன் ஒருவனால் மட்டுமே அவர்கள் இருவரையும் வழிபட்டு அவர்களை மனநிறைவு கொள்ளச் செய்ய முடியும். அதைச் செய்ய வேறு ஒருவனாலும் இயலாது.(15) தேவயானியை உனது ஒழுக்கத்தாலும், சுதந்தர மனப்பான்மையாலும், இனிமையாலும், பொதுவான நடத்தையாலும் மனநிறைவு கொள்ளச் செய்து, அந்த ஞானத்தை உன்னால் நிச்சயம் அடைய முடியும்" என்றனர்.(16)
பிருஹஸ்பதியின் மகன் {கசன்}, தேவர்களால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட பிறகு, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, விருஷபர்வன் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.(17) இப்படித் தேவர்களால் அனுப்பப்பட்டக் கசன், விரைவாக அசுரர்களின் தலைநகர் வந்து சுக்ரனைக் கண்டான். அவரைக் கண்டு, அவரிடம்,(18) "என்னை உமது சீடனாக ஏற்றுக் கொள்வீராக. நான் அங்கீரஸ் முனிவரின் பேரன், பிருஹஸ்பதியின் மைந்தன். எனது பெயர் கசன்.(19) நீர் எனது குருவானால், நான் ஆயிரம் வருடங்களுக்குப் பிரம்மச்சரிய வாழ்வுமுறையைப் பயில்வேன். ஓ பிராமணரே! எனக்கு ஆணையிடுவீராக" என்றான்.(20) இதைக் கேட்டச் சுக்ரன், "ஓ கசா! நீ வரவேற்கப்படுகிறாய், உன் வார்த்தைகளை ஏற்றுக் கொள்கிறேன். உன்னை மரியாதையுடன் நடத்துவேன். உன்னை அப்படி நடத்துவதால், பிருஹஸ்பதியை நான் மதித்ததாக ஆகும்" என்றார்."(21)
வைசம்பாயனர் தொடர்ந்தார், சுக்ரன் என்றும் அழைக்கப்பட்ட காவியரால், அல்லது உசனாஸால் ஆணையிடப்பட்ட கசன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, தான் குறிப்பிட்ட அந்த உறுதியை {ஆயிரம் வருடப் பிரம்மசரியம்} அப்போதே ஏற்றான்.(22) ஓ பாரதா! {ஜனமேஜயா}, தான் குறிப்பிட்ட உறுதியை ஏற்றக் கசன், ஏற்ற சமயங்களில், தனது குருவையும், (அவரது மகளான) தேவயானியையும் மனம் நிறையச் செய்தான்.(23) உண்மையில், அவன் அவர்கள் இருவரையுமே வழிபட்டான். அவன் இளமையாக இருந்ததால், பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும், பல விதமான வாத்தியங்களை வாசித்துக் கொண்டும் விரைவிலேயே தேவயானியின் மனத்தைக் கவர்ந்தான்.(24) தேவயானியும் இளமையுடனே இருந்தாள். ஓ பாரதா, அவன், அந்த இளம்பெண் தேவயானிக்கு மலர்களையும், பழங்களையும்கொடுத்தும், அந்த மங்கை எப்பணியைக் கொடுத்தாலும் உடனே நிறைவேற்ற ஆயத்தமாக இருந்தும், அவளை மனம் நிறைய வைத்தான்.(25)
தேவயானியும், விரதத்தை ஏற்றுக் கொண்டிருந்த அந்த இளைஞனுடன் தான் தனியாக இருந்த போதெல்லாம் தனது பாடல்களாலும், இனிமையான நடத்தையாலும் கவனித்துக் கொண்டாள்.(26) கசன் அவ்வுறுதியை ஏற்று ஐநூறு வருடங்கள் கடந்த பிறகு, தானவர்கள் அவனது நோக்கத்தை அறிந்து கொண்டனர்.(27) ஒரு பிராமணனைக் கொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லாத அவர்கள், அவனிடம் மிகுந்த கோபம் கொண்டனர். ஒருநாள், கானகத்தில் தனியாக மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த கசனைக் கண்டனர். பிருஹஸ்பதியின் மீதிருந்த கோபத்தாலும், இறந்தோரை உயிர்ப்பிக்கும் தங்கள் ஞானம் {சஞ்சீவனி} வெளியாகாமல் இருக்கவும், அவனை அங்கேயேக் கொன்றனர்.(28) அவனைக் கொன்று, அவனது உடலை துண்டு துண்டாக்கி ஓநாய்களுக்கும், நரிகளுக்கும் இட்டனர். (மாலை சந்தியில்) பசுக்கள், தங்களைக் கவனித்துக் கொண்ட அவனில்லாமல் {கசனில்லாமல்}, தங்கள் கொட்டகைக்குத் திரும்பின.(29) ஓ பாரதா {ஜனமேஜயா}, கசனில்லாமல் மாடுகள் திரும்பியதைக் கண்ட தேவயானி தனது தந்தையிடன் சென்று பின்வருமாறு கேட்டாள்.(30)
அவள் {தேவயானி}, "உமது மாலைநேர நெருப்பு மூட்டப்பட்டுவிட்டது. சூரியனும் மறைந்துவிட்டான். ஓ தந்தையே! மாடுகள் தங்களை மேய்த்தவர் இல்லாமல் திரும்பிவிட்டன. உண்மையில் கசனை எங்கும் காண முடியவில்லை.(31) ஒன்று கசன் தொலைந்து போயிருக்க வேண்டும். அல்லது இறந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படையானது. ஓ தந்தையே! நான் உண்மையாகச் சொல்கிறேன். அவரில்லாமல் நான் வாழமாட்டேன்" என்றாள்.(32)
இதைக்கேட்ட சுக்ரன், "நான் அவனை மீட்டெடுக்கிறேன்" என்று சொல்லி, "அவன் வரட்டும்" என்றார். இறந்தோரை மீட்கும் அறிவியலைப் பயன்படுத்திக் கசனை வரச்சொல்லிச் சுக்ரன் கட்டளையிட்டார்.(33) தன்னைத் தின்ற ஓநாய்களின் வயிறுகளைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்த கசன், இதயத்தில் மகிழ்ச்சி கொண்டு, தனது குருவின் முன் வந்து நின்றான்.(34) அவனது தாமதத்திற்கான காரணம் கேட்கப்பட்டதால், பார்கவரின் மகளிடம் {தேவயானியிடம்} அவன் பேசினான். உண்மையில், அந்த பிராமணரின் மகள் கேட்டதால், அவளிடம், "ஓ சுத்தமான நடத்தை உள்ளவளே! நான் இறந்து போனேன். குசப்புல்லாலும் {தர்ப்பை}, விறகு குச்சிகளாலும் ஆன வேள்விக்குத் தேவையான எரிபொருளை நான் சுமந்து கொண்டு,(35) இருப்பிடம் திரும்பும் போது, ஓர் ஆலமரத்தினடியில் அமர்ந்தேன். மாடுகள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டி, அந்த ஆலமரத்தின் நிழலில் நிறுத்தியிருந்தேன்.(36) அசுரர்கள் என்னைக் கண்டு, என்னிடம், "நீ யார்?" என்று கேட்டனர். நான், "பிருஹஸ்பதியின் மைந்தன்" என்றேன்.(37) இப்படித் தானவர்களிடம் நான் சொன்னவுடன், அவர்கள் என்னைக் கொன்று, எனது உடலைத் துண்டு துண்டாக வெட்டி, நரிகளுக்கும் ஓநாய்களுக்கும் கொடுத்தனர். பிறகு, அவர்கள் தங்கள் இதயத்தில் மகிழ்ந்து அவர்களது இல்லத்திற்குத் திரும்பினர்.(38) ஓ இனிமையானவளே! பின்னர், அந்த உயர் ஆன்ம பார்கவரின் கட்டளையால், நான் முழுவதுமாக மீட்கப்பட்டு உன் முன் நிற்கிறேன்" என்றான்.(39)
மற்றுமொரு சந்தர்ப்பத்தில், தேவயானி கேட்டதற்கிணங்க, அந்தப் பிராமணன் கசன் கானகத்திற்குள் சென்றான். அவன் பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கும்போது, தானவர்கள் அவனைக் கண்டனர். அவனை மறுபடியும் கொன்று, அவனது உடலை அரைத்துக் கூழாக்கி கடல் நீரில் கலந்தனர்.(40) நீண்ட நேரமாகியும் அவனைக் காணாததால், அந்த மங்கை மறுபடியும் தனது தந்தையிடம் சென்று செய்தியைச் சொன்னாள். அறிவியலின் துணை கொண்டு அந்தப் பிராமணரால் கட்டளையிடப்பட்ட கசன், தனது குரு, மற்றும் குருவின் மகள் முன்னிலையில் வந்து நின்று, நடந்தது அனைத்தையும் நடந்தபடியே சொன்னான்.(41)
பிறகு மூன்றாவது முறையாக அவனைக் கொன்ற அசுரர்கள், அவனை எரித்து, சாம்பலாக்கி, அந்தச் சாம்பலை, அவர்களின் குரு அருந்தும் மதுவில் கலந்துவிட்டனர்.(42) மறுபடியும் தேவயானி தனது தந்தையிடம் வந்து, "ஓ தந்தையே! கசன், மலர்களைச் சேகரிக்கச் சென்றார். ஆனால் இன்னும் அவரைக் காணவில்லை.(43) அவர் தொலைந்துவிட்டார் அல்லது இறந்துவிட்டார் என்பது உறுதி. நான் உங்களுக்கு உண்மையாகச் சொல்கிறேன். அவரில்லாமல் நான் வாழமாட்டேன்" என்றாள்.(44)
இதைக் கேட்ட சுக்ரன், "ஓ மகளே! அந்தப் பிருஹஸ்பதியின் மகன், இறந்தோர் உலகம் சென்றுவிட்டான். எனது அறிவியலால் அவன் எத்தனை முறை மீட்கப்பட்டாலும், அவன் மீண்டும் மீண்டும் கொல்லப்படுவான். உண்மையில், நான் என்ன செய்ய?(45) ஓ தேவயானி, வருந்தாதே, அழாதே. ஓ மகளே! பிராமணர்களாலும், இந்திரனுடன் சேர்ந்த தேவர்களாலும், வசுக்களாலும், அசுவினிகளாலும், அசுரர்களாலும், ஏன் உண்மையில், மொத்த அண்டத்தாலும், எனது சக்திக்காக ஒரு நாளைக்கு மூன்று முறை நான் வணங்கப்படும்போது, உறுதியாக நீயும் வணங்கப்படுகிறாய். உன்னைப்போன்ற ஒருத்தி, இறந்து போவோருக்காக வருந்தக்கூடாது. நான் அவனை எத்தனை முறை மீட்டாலும் அவன் மறுபடியும் கொல்லப்படுவான். அவனை இறவாமல் வைத்திருக்க இயலாது" என்றார்.(46,47)
அதற்கு மறுமொழியாகத் தேவயானி, "ஓ தந்தையே! அவர் ஒரு முனிவரின் பேரனும், ஒரு முனிவரின் மகனுமாவார். முதுமையான அங்கீரஸின் பேரனும், கடலைப் போன்ற தகுதிவாய்ந்த பிருஹஸ்பதியின் மைந்தனுமான ஒருவருக்காக நான் ஏன் வருந்தக்கூடாது?(48) அவர் ஒரு பிரம்மச்சாரியாக வேறு இருந்தார். ஓர் துறவியாக அவர் எப்போதும் விழிப்புடனும் எல்லாவற்றிலும் திறமைவாய்ந்தவராகவும் இருந்தார். நான் உண்ணாதிருந்து, கசனின் வழியிலேயே செல்வேன். ஓ தந்தையே! அந்த அழகான கசன், எனது அன்புக்குரியவன்" என்றாள்."(49)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தப் பெரும் முனிவர் காவியர், தேவயானி சொன்னதை நினைத்துத் துயர்கொண்டு, கோபத்தால் உரத்துப் பேசினார். "என்னுடன் இருக்கும் எனது சீடனைக் கொன்று, நிச்சயமாக இந்த அசுரர்கள் என்னைக் காயப்படுத்தவே (எனக்குத் துரோகம் செய்யவே) எண்ணுகின்றனர்.(50) இந்த ருத்ர வழிபாட்டாளர்கள், என்னை அவர்களது குற்றத்தில் பங்கெடுக்கச் செய்து, என்னைப் பிராமணத் தன்மையை இழக்கச் செய்கின்றனர். உண்மையில் இந்தக் குற்றத்திற்கு ஒரு கொடூர முடிவு இருக்கிறது. ஒரு பிராமணனைக் கொல்லும் குற்றம் என்பது இந்திரனையே எரித்துவிடக் கூடியது" என்று சொல்லிவிட்டு, தேவயானியால் அவரசப்படுத்தப்பட்டு, மரணத்தின் கோரப்பற்களுக்குள் நுழைந்த கசனுக்குச் சுக்ரன் கட்டளையிடத் தொடங்கினார். ஆனால், அந்த அறிவியலின் துணை கொண்டு கட்டளையிடப்பட்ட கசன், தனது குருவுக்கு நேரப்போகும் அபாயத்தை நினைத்து பயந்து, தளர்ந்த குரலில்,(51) அந்தக் குருவின் வயிற்றுக்குள் இருந்து, "ஓ தலைவரே! என்னிடம் கருணை கொள்ளுங்கள். நான் கசன் உம்மை வழிபடுகிறேன். என்னிடம் உமது அன்புக்குரிய மகனைப் போல் நடந்து கொள்ளுங்கள்" என்றான்."
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சுக்ரன், "ஓ பிராமணா, நீ எந்த வழியில் எனது வயிற்றில் நுழைந்தாய்? இப்போது நீ எங்கே இருக்கிறாய்? இந்தக்கணத்தில் இந்த அசுரர்களை விட்டகன்று, தேவர்களிடம் செல்லப்போகிறேன்" என்றார்.(52)
கசன், "உமது கருணையால், நான் எனது நினைவை இழக்கவில்லை. நிச்சயமாக எனக்கு என்ன நேர்ந்தது என்று என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. எனது துறவின் அறங்கள் அழியவடையவில்லை. எனவே, எனது இந்தத் தாங்க முடியாத வலியைத் தாங்கிக் கொள்ள முடிகிறது.(53) ஓ காவியரே, அசுரர்களால் நான் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டுச் சாம்பலாகக் குறைக்கப்பட்டு, உமது மதுவில் கலக்கப்பட்டு, மதுவை நீர் அருந்தும்போது உமக்குள் வந்தேன். நீர் இருக்கும் வரை அசுரர்களின் திறமை அழியாது, குறிப்பாக அந்த பிராமண அறிவியல் {பிரம்ம மாயை} அழியாது" என்றான்.(53)
இதைக்கேட்ட சுக்ரன் தனது மகளிடம், "ஓ மகளே! உனக்கு என்ன நன்மையை நான் செய்ய முடியும்? எனது இறப்பால்தான், கசன் தனது உயிரைப் பெறுவான். ஓ தேவயானி, கசன் என்னுள் இருக்கிறான். எனது வயிற்றைக் கிழித்து வருவதைத் தவிர அவன் வெளியே வர வேறு வழி இல்லை" என்றார்.(54) அதற்குத் தேவயானி, "இரண்டு தீமையும் என்னை நெருப்பைப் போல் சுட்டெரிக்கும். கசனின் இறப்பும், உமது இறப்பும் எனக்கு ஒன்றேயாம். கசன் இறந்தாலும், நீர் இறந்தாலும் நான் எனது உயிரைத் தாங்க முடியாது" என்றாள்.(55)
பிறகு சுக்ரன் சொன்னார், "ஓ பிருஹஸ்பதியின் மகனே, தேவயானி உன்னைப் பெரிதும் மதிப்பதால், நிச்சயமாக நீ ஏற்கனவே வெற்றி மகுடம் தரித்து விட்டாய். நிச்சயமாகக் கசனின் உருவத்தில் இருக்கும் இந்திரனாக நீ இல்லாவிட்டால், நான் இன்று உனக்குச் சொல்லப்போகும் அறிவியலை ஏற்றுக் கொள்வாயாக.(56) யாராலும் உயிருடன் எனது வயிற்றைவிட்டு வெளியே வரமுடியாது. இருப்பினும், ஒரு பிராமணன் கொல்லப்படலாகாது. எனவே, உனக்கு கற்பிக்கும் அறிவியலை ஏற்றுக் கொள்வாயாக.(57) எனது மகனாக உனது வாழ்க்கையைத் தொடங்குவாயாக. என்னால் உனக்குக் கொடுக்கப்படும் ஞானத்தைப் பெற்றுக்கொண்டு, என்னை மீட்டெடுப்பாயாக. எனது உடலை விட்டு வெளியே வந்து, கருணையோடு நடந்து கொள்வதில் கவனமாக இருப்பாயாக" என்றார்."(58)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "குருவால் அளிக்கப்பட்ட அறிவியலைப் பெற்றுக் கொண்ட அந்த அழகான கசன், அவரது வயிற்றைக் கிழித்துக் கொண்டு, வளர்பிறையின் பதினைந்தாவது நாளில் முளைக்கும் முழு நிலவாக வெளியே வந்தான்.(59) தனது குருவின் உடல் தவங்களின் குவியல் போல் கிடப்பதைக் கண்ட கசன், அவரைத் தான் கற்ற அந்த அறிவியலின் துணை கொண்டு மீட்டெடுத்தான். அவரை மதிப்புடன் வழிபட்ட கசன், தனது குருவிடம்,(60) "ஞானமில்லாத எனக்கு நீர் செய்தது போலவே, ஒருவனது காதுகளுக்குள், ஞானம் எனும் அமுதத்தினை ஊற்றும் ஒருவரை நான் தந்தையாகவும் தாயாகவும் மதிப்பேன். இந்தப் பெரும் சேவையை நினைவு கூரும் எவனாலும், எப்படி நன்றிகெட்டனாகி அப்படிப்பட்டவரைக் காயப்படுத்த முடியும்?(61) ஞானத்தைக் கொடுக்கும், உலகத்தின் பொருட்களனைத்திலும் பொக்கிஷமான தனது குருவால் ஞானமடைந்து, அவருக்கே காயத்தை ஏற்படுத்துபவர்கள் இந்த உலகத்தால் வெறுக்கப்பட்டு, இறுதியில் பாவங்கள் செய்தவர்கள் செல்லும் உலகத்தை அடைவர்" என்றான்."(62)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "கல்விமானான அந்தச் சுக்ரன், மதுவின் மயக்கத்தால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அந்தப் பானத்தால் ஏற்பட்ட பெருத்த இழப்பை எண்ணிப்பார்த்து, நினைவு மங்கிய நிலையில் கசனைத் தான் அந்த மதுவுடன் விழுங்க வேண்டி வந்ததை நினைத்துப் பார்த்து, பிராமணர்களின் நடத்தை விதிகளைச் சீர்திருத்த எண்ணம் கொண்டார். அந்த உயர் ஆன்ம உசானஸ், கோபத்துடன் தரையிலிருந்து எழுந்து,(63,64) "இந்த நாள் முதல், மயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், மது அருந்தும் பிராமணன் பாவியாவான். அவன் தனது எல்லா அறங்களையும் இழந்ததாகக் கருதப்படுவான். அவன் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தைத் தாங்கியவனாவான். அவன் இந்த உலகத்திலும் மற்ற உலகங்களிலும் வெறுக்கப்படுவான்.(65) இந்த நடத்தை மற்றும் கௌரவ விதியை எல்லா பிராமணர்களுக்கும் உரித்தாக்குகிறேன். நேர்மையான பிராமணர்களும், பெரியோர்களை மதிப்போரும், தேவர்களும், இந்த மூன்று உலகமும் இதைக் கேட்கட்டும்" என்று சொல்லிவிட்டு,(66) அந்த உயர் ஆன்மாவைக் கொண்டவர், விதியால் நல்ல மதியை இழந்த தானவர்களை அழைத்து, துறவிகளின் துறவியான அவர், அவர்களிடம்,(67) "மூடர்களான தானவர்களே, கசன் அவனது நோக்கத்தை அடைந்து விட்டான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவன் இனி என்னுடன்தான் வசிப்பான். இறந்தோரை மீட்கும் ஞானத்தை அடைந்த அவன், பிரம்மனுக்கு நிகரான பலத்துடன் இருப்பான்" என்றார்."(68)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பார்கவர் இப்படிச் சொல்லிவிட்டுத் தனது பேச்சை நிறுத்தினார். தானவர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்து, தங்கள் இல்லங்களுக்குச் சென்றனர்.(69) கசனும், முழுவதுமாக ஆயிரம் வருடங்கள் தனது குருவுடன் இருந்து, அனுமதியைப் பெற்றுக் கொண்டு, தனது வசிப்பிடமான தேவலோகத்திற்குத் திரும்பத் தயாரானான்" {என்றார் வைசம்பாயனர்}.(70)

ஆங்கிலத்தில் | In English |