Debut field | Adi Parva - Section 136 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 72)
பதிவின் சுருக்கம் : அரங்கத்தைக் கட்டத் தேவையான நிலத்தை அளந்த துரோணர்; குறித்த நாளில் இளவரசர்களின் வீர அரங்கேற்றம் நடந்தது; தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திய இளவரசர்கள்; பீமனும், துரியோதனனும் மோதிக் கொள்ள ஆயத்தமானது...
Debut field | Adi Parva - Section 136 | Mahabharata In Tamil |
இதைக்கேட்ட மன்னன் இதயம்நிறைந்த மகிழ்ச்சியுடன், “ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, நீர் பெரும் செயலைச் சாதித்திருக்கிறீர். பரிசோதனை நிகழும் இடத்தையும் நேரத்தையும், அஃது எப்படி நடக்க வேண்டும் என்பதையும் எனக்குக் கட்டளையிடுவீராக.(4) என் குருட்டுத் தன்மை, எனக்கு ஏற்படுத்தியிருக்கும் துயர், எனது பிள்ளைகளின் ஆயுத வீரத்தைக் காணும் பாக்கியமுள்ளோரிடம் என்னை பொறாமை கொள்ள வைக்கிறது.(5) ஓ! க்ஷத்ரி (விதுரா), துரோணர் சொல்வதையெல்லாம் செய்து கொடுப்பாயாக. ஓ! அறத்துக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனே, இதைவிட ஏற்புடையது {இனிமையானது} எனக்கு வேறெதுவும் இல்லை என்று நினைக்கிறேன்" என்றான்.(6)
மன்னனுக்குத் தேவையான உறுதிகளைக் கொடுத்துவிட்டு, விதுரன் தனது பணியைச் செய்யப் புறப்பட்டான். பெரும் ஞானம் கொண்ட துரோணர், கிணறுகளும், நீரூற்றுகளும் கொண்ட, மரங்கள் மற்றும் அடர்த்தியான புதர்களற்ற ஒரு நிலத்தை அளந்தார். அப்படி நிலத்தை அளந்த துரோணர், நல்ல நட்சத்திரம் கொண்ட ஒரு சந்திர நாளில், நடக்கும் காரியத்திற்குச் சாட்சியாக அங்கே கூடி நிற்கும் குடிமக்களுக்கு மத்தியில் தேவர்களுக்குக் காணிக்கை கொடுத்தார்.(7-9) அதன்பிறகு, ஓ! மனிதர்களில் காளையே, மன்னனின் சிற்பிகள், அந்த இடத்தில், பல்வேறு ஆயுதங்களுடன் தரமான ஒரு பெரிய அரங்கத்தைச் சாத்திரங்களில் சொல்லியுள்ளபடி அமைத்தனர். மேலும் அவர்கள் மற்றுமொரு பெரிய அரங்கத்தைப் பெண் பார்வையாளர்களுக்காக அமைத்தனர்.(10) குடிமக்களும் அவர்களுக்குத் தகுந்தது போல மேடைகளைத் தங்களுக்கு அமைத்துக் கொண்டனர். செல்வந்தர்கள் அகலமாகவும், விசாலமாகவும் குடில்களைத் தங்களுக்கு அமைத்துக் கொண்டனர்.(11)
நிச்சயிக்கப்பட்ட அரங்கேற்ற நாள் வந்ததும், தெய்வீக அழகுடன் சுத்தமான தங்கத்தால் கட்டப்பட்டு, முத்துச் சரங்களாலும், விலைமதிப்பில்லா வைடூரியம் போன்ற கற்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த அரங்கத்தினுள், பீஷ்மர், கிருபர், குருக்களில் முன்னவர்கள் ஆகியோரை முன் நடக்க விட்டு, மன்னன் {திருதராஷ்டிரன்} தனது அமைச்சர்களுடன் நுழைந்தான்.(12,13) ஓ! வெற்றியாளர்களில் முதன்மையானவனே, நற்பேறு அருளப்பட்ட காந்தாரி, குந்தி மற்றும் அரச குடும்பத்தின் மற்ற மகளிர் ஆகியோர் பகட்டான ஆடையுடுத்தி, தெய்வீக மங்கையர் சுமேரு {மேரு} மலைமீது ஏறுவது போலப் பணிப்பெண்களுடன் இன்பமாக அம்மேடையில் ஏறினர். பிராமணர்கள், க்ஷத்திரியர்களுடன் கூடிய நால்வகை மக்களும், இளவரசர்களின் ஆயுதத் திறனைக் காணும் ஆவலில், நகரத்தை விட்டகன்று, அந்த இடத்திற்கு ஓடி வந்தனர். அந்தக் காணற்கரிய காட்சியைக் காண அனைவரும் அமைதியற்றுக் காத்திருந்தனர். ஒரு நொடிப் பொழுதில் அங்கே பெரும் கூட்டம் கூடியது.(14-16) துந்துபி மற்றும் பேரிகைகளின் ஒலியும், பல குரலொலிகளும் சேர்ந்த ஒலி, கலங்கும் சமுத்திர ஒலியைப் போலிருந்தது.(17)
இறுதியாக, துரோணர் வெண்ணிற ஆடையுடன், பூணூல் பூட்டி, வெண்ணிறத் தாடியுடன், வெள்ளை மாலை அணிந்து, வெண்ணிற சந்தனக் குழம்பை மேனியில் பூசிக் கொண்டு தனது மகனுடன் அரங்கத்தினுள் நுழைந்தார். அக் காட்சியானது, மேகமற்ற வானில் சந்திரன் செவ்வாய்க்கிரகத்துடன் காட்சியளிப்பது போல இருந்தது.(18,19) அந்தப் பரத்வாஜர் {துரோணர்} உள்ளே நுழைந்ததும், நேரத்தில் பூஜை செய்து, மந்திரங்கள் நன்கறிந்த பிராமணர்களை மங்கலச் சடங்குகளைச் செய்ய வைத்தார்.(20)
இனிமையான இசையுடன் பரிகாரச் சடங்குகள் செய்து அவை நிறைவடைந்த பிறகு, பல்வேறு ஆயுதங்களுடன் சிலர் அந்த அரங்கின் உள்ளே நுழைந்தனர்.(21) இடுப்புக் கச்சையை வாரினால் வாரிக் கட்டிக் கொண்டவர்களும், பெரும் தேர்வீரர்களுமான அந்தப் பாரதக் குலத்தவர் (இளவரசர்கள்), தங்கள் கைகளில் கவசக் கையுறைகளை அணிந்து, விற்களுடனும் அம்பறாத்தூணிகளுடனும் உள்ளே நுழைந்தனர்.(22) யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட அந்தத் துணிவுமிக்க இளவரசர்கள், தங்கள் வயதுக்குத் தகுந்த வரிசையில் உள்ளே நுழைந்து, ஆயுதங்களில் தங்கள் அற்புதமான திறன்களைக் காட்சிப்படுத்தினர்.(23) அப்போது, சில பார்வையாளர்கள் கீழே இறங்கும் அம்புகளுக்கேற்ப அச்சத்தால் தங்கள் தலையைக் கீழே சாய்த்தனர். சிலர் அச்சமில்லாமல் அக்காட்சியை ஆச்சரியமாகப் பார்த்தனர்.(24)
அந்த இளவரசர்கள், குதிரையை லாவகமாகச் செலுத்தித் தங்கள் பெயர் பொறித்த குறித்த இலக்குகளைத் தங்கள் கணைகளால் அடித்தனர்.(25) வில் மற்றும் கணையைப் பயன்படுத்துவதில் தங்கள் இளவரசர்களின் ஆற்றலைக் கண்ட பார்வையாளர்கள், தாங்கள் கந்தர்வர்களின் நகரத்தைக் காண்கிறோமோ என்று நினைத்து வியப்பில் ஆழ்ந்தனர்.(26) ஓ! பாரதா, திடீரெனச் சில நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் "நன்று செய்தீர்! சரியாகச் செய்தீர்!" எனத் தங்கள் கண்களை அகலவிரித்து ஆச்சரியக் கூக்குரலிட்டனர்.(27) தங்கள் திறமைகளையும், வில் மற்றும் கணையைப் பயன்படுத்துவதில் தங்கள் கைத்திறனையும், தேர்களைக் கட்டுப்படுத்தும் திறனையும், குதிரை மற்றும் யானையின் முதுகில் இருந்து போரிடும் திறனையும்(28) தொடர்ச்சியாகச் செய்து காட்டிய அந்தப் பெரும் பலம் கொண்ட வீரர்கள், தங்கள் வாட்களையும், கேடயங்களையும் எடுத்துக் கொண்டு அந்த ஆயுதங்களுடன் விளையாடத் தொடங்கினர்.(29) பார்வையாளர்கள் இளவரசர்களின் சுறுசுறுப்பையும், கட்டுடலையும், கருணையையும், அமைதியையும், வலுவான பிடியையும், வாள் மற்றும் கேடயத்தில் அவர்கள் கொண்ட திறனையும் கண்டு அதிசயித்தனர்.(30)
பிறகு, விருகோதரனும் {பீமனும்}, சுயோதனனும் {துரியோதனனும்}, (போரின் தன்மையை நினைத்து) உள்ளுக்குள் மகிழ்ந்து, கையில் கதாயுதங்களுடன் ஒற்றைச் சிகர மலைகள் இரண்டைப் போல அரங்கத்தினுள் நுழைந்தனர்.(31) அந்தப் பெரும் பலம் கொண்ட வீரர்கள் தங்கள் இடுப்புக் கச்சைகளை இறுகக் கட்டிக் கொண்டு, தங்கள் சக்தி அத்தனையையும் வரவழைத்து, இரண்டு சினம் கொண்ட யானைகள் ஒரு பெண் யானைக்காகப் போட்டியிட்டு முழங்குவதைப் போலவே முழங்கினர்.(32) சினம் கொண்ட யானைகளைப் போல இருந்த அந்தப் பலம்வாய்ந்த வீரர்கள் இருவரும், அரங்கத்தை வலமாகவும், இடமாகவும் சுற்றினர்.(33) விதுரன் இளவரசர்களின் சாதனைகளையெல்லாம் திருதராஷ்டிரனுக்கும், பாண்டவர்களின் தாய்க்கும் {குந்தி}, காந்தாரிக்கும் விவரித்துச் சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(34)
ஆதிபர்வம் பகுதி 136ல் உள்ள சுலோகங்கள் : 34
ஆங்கிலத்தில் | In English |