Arjuna showed his profound skill | Adi Parva - Section 137 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 73)
பதிவின் சுருக்கம் : சினம் கொண்ட பார்வையாளர்கள் துரியோதனனுக்கு ஆதரவாகவும், பீமனுக்கு ஆதரவாகவும் பிரிந்து நின்றது; பீமதுரியோதன மோதலை நிறுத்திய துரோணர்; அர்ஜுனன் செய்து காட்டிய மாயாஜாலத்தில் மயங்கிய மக்கள்; வாயிலில் கரவோசையைக் கேட்டுத் திரும்பிய மக்கள்; பரபரப்புடன் எழுந்து நின்ற துரியோதனன்...
Arjuna showed his profound skill | Adi Parva - Section 137 | Mahabharata In Tamil |
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிரளயகாலத்தில் உருவாகும் காற்றினால் கொந்தளிக்கிற இரு கடல்களைப் போலத் தங்கள் கதாயுதங்களை உயர ஓங்கியபடி இருவரும் நிற்கையில், குரு மைந்தன் {அஸ்வத்தாமன்} அவர்களைத் தடுத்து நிறுத்தினான்.(5) அப்போது துரோணர் அரங்கத்தினுள் நுழைந்து, இசைக்கலைஞர்களைத் தங்கள் இசையை நிறுத்தச் சொல்லி, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில் இந்த வார்த்தைகளைச் சொன்னார்,(6) "என் மகனிடம் நான் கொண்டுள்ளதைப் போன்றே என் அன்புக்குரியவனும், அனைத்து ஆயுத திறன்மிக்கவனும், இந்திரனின் மைந்தனும், இந்திரனின் தம்பிக்கு (விஷ்ணு) ஒப்பானவனுமான இந்தப் பார்த்தனைப் {அர்ஜுனன்} அனைவரும் காண்பீராக" என்றார்.(7)
பரிகாரச் சடங்குகளை மனநிறைவாகச் செய்த அந்த இளைஞன் பல்குனன் {அர்ஜுனன்}, தனது கையுறை கவசத்தையும், தங்கத்தாலான உடற்கவசத்தையும் தரித்து, அம்பறாத்தூணியில் கணைகளை நிறைத்துக் கைகளில் வில்லேந்தி, அரங்கிலிருந்த கூட்டத்தின் முன்பு, மாலை நேர சூரியனின் கதிர்களால் வானவில்லின் நிறம்பெற்ற, மின்னலுடன் கூடிய மேகம் போலக் காட்சியளித்தான்.(8,9) மொத்தக் கூட்டமும் அர்ஜுனனைக் கண்டதும் பெருமகிழ்ச்சி அடைந்து, தங்கள் சங்குகளை எடுத்து முழக்கினர். இன்னிசை வாத்தியங்களும் இசைக்கப்பட்டன.(10)
"குந்தியின் அழகிய மகன் இவன்", "இவனே பாண்டவர்களில் நடுவன் (மூன்றாமவன்)", "இவனே பெரும்பலம்வாய்ந்த இந்திரனின் மகன்", "இவனே குரு குலத்தைக் காக்கப் போகிறவன்",(11) "இவனே ஆயுதந்தரித்தவர்களில் முதன்மையானவன்", "இவனே அறத்தைக் கடைப்பிடிப்பவர்களில் முதன்மையானவன்", "இவனே சரியான நடத்தையுள்ளவர்களில் முதன்மையானவன்", "இவனே ஞானக் காரியங்களின் பெரும் கொள்கலன்" என்று கூட்டத்தில் இருந்து ஆச்சரியக் கூச்சல்கள் எழுந்தன.(12)
இந்தப் பாராட்டுகளைக் கேட்டதால், குந்தி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள், அவள் மார்பில் சுரந்த பாலுடன் அக்கண்ணீர் சேர்ந்து, அவளது மார்பை நனைத்தது.(13) மனிதர்களில் முதல்வனான திருதராஷ்டிரன் இந்தக் கூச்சல்களால் காதடைத்து, மகிழ்ச்சியுடன் விதுரனிடம்,(14) “ஓ! க்ஷத்ரி {விதுரா}, கலங்கிய பெருங்கடல் போல, வானுலகிற்கே கேட்குமளவு ஏன் இப்படித் தீடீரெனக் கூச்சல் எழுகிறது?" என்று கேட்டான்.(15)
விதுரன், “ஓ! பெரும்பலம்வாய்ந்த ஏகாதிபதியே, பாண்டு மற்றும் பிருதையின் {குந்தியின்} மகனான பல்குனன் {அர்ஜுனன்}, தனது கவசங்களை அணிந்து கொண்டு அரங்கத்தினுள் நுழைந்திருக்கிறான். அதனால்தான் இந்தக் கூச்சல் எழுகிறது" என்றார்.(16)
திருதராஷ்டிரன், “ஓ! பெரும் ஆன்மா கொண்டவனே, புனித நெய்யைப் போன்றிருக்கும் பிருதையிடம் உதித்த இந்த மூன்று நெருப்புகளாலும், உண்மையில் அருளப்பட்டவனாகவும், கருணை செய்யப்பட்டவனாகவும், பாதுகாக்கப்பட்டவனாகவும் என்னை நான் உணர்கிறேன் " என்றான்”.(17)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "மகிழ்ச்சியில் திளைத்திருந்த பார்வையாளர்கள் தங்கள் சுய உணர்வு அடைந்தனர். பீபத்சு {அர்ஜுனன்}, ஆயுதங்களில் தனது கரநளினத்தைக் அரங்கத்திலுள்ளோருக்குக் காட்சிப்படுத்தினான்.(18) அவன், ஆக்னேய ஆயுதத்தால் நெருப்பை உண்டாக்கினான், வாருண ஆயுதத்தால் நீரை உண்டாக்கினான், வாயவ்யா ஆயுதத்தால் (வாயு அஸ்திரம்} காற்றை உண்டாக்கினான். பர்ஜன்ய ஆயுதத்தால் {மேகாஸ்திரம்) மேகங்களை உண்டாக்கினான்.(19) மேலும் அவன், பௌமா ஆயுதத்தால் நிலத்தை உண்டாக்கினான், பர்வதேய ஆயுதத்தால் {பர்வதாஸ்திரம்} மலைகளை உருவாக்கினான். பிறகு அவன், அந்தர்தான ஆயுதத்தால் முன்பு உண்டாக்கிய அனைத்தையும் மறையவைத்தான்.(20)
அந்தக் குருவுக்கு விருப்பமானவன் {அர்ஜுனன்} ஒரு நொடியில் உயர்ந்து காணப்பட்டான், மறுநொடியில் தாழ்ந்து {குள்ளமாகக்} காணப்பட்டான். ஒரு நொடியில் தேர்த்தட்டிலும், மறுநொடியில் தேரின் நடுவிலும், அதற்கடுத்த நொடியில் தரையிலும் அவன் காணப்பட்டான்.(21) கரங்களைத் திறமையாகப் பயன்படுத்த பயிற்சி பெற்ற அந்த வீரன், பல கணைகளைக் கொண்டு சில மென்மையான, சில கடுமையான, சில அடர்த்தியான இலக்குகளை அடித்துக் காட்டினான்.(22) நகர்ந்து கொண்டே இருக்கும் இரும்புப் பன்றியின் வாயில் ஐந்து கணைகளை ஒரே கணை போலத் தடையில்லாமல் தனது வில் நாணிலிருந்து எய்தான்.(23) கயிற்றில் தொங்கியபடி அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருக்கும் துளையிடப்பட்ட மாட்டின் கொம்பில் இருபத்தியொரு கணைகளைச் செலுத்தினான்.(24) ஓ! பாவங்களற்றவனே, இப்படி அர்ஜுனன், வாள், வில், கதை ஆகிய ஆயுதங்களில் தனக்கு உண்டான ஆழமான நிபுணத்துவத்தைக் காட்டி அந்த அரங்கத்தை வலம் வந்தான்.(25)
ஓ! பாரதனே, அந்தக் கண்காட்சி நல்லபடியாக முடிந்ததும், அரங்கத்திலிருந்த பார்வையாளர்களின் குதூகலம் அடங்கியது. இசைக்கருவிகளின் ஒலி நின்றது, அப்போது, வாயிலருகே கைதட்டும் ஒலி கேட்டது. அவ்வொலியானது, தட்டுபவரின் பலத்தையும், சக்தியையும் முன்னறிவிக்கும் வகையில் இடிச்சத்தம் போலக் கேட்டது.(26,27) ஓ! மன்னா, அங்கே கூடியிருந்த கூட்டமானது, அந்நொடியில் இவ்வொலியைக் கேட்டு, "பூமியின் மலைகள் பிளந்தனவா? அல்லது பூமியே பிளந்துவிட்டதா? அல்லது வானத்தில் மேகங்கள் கூடி முழங்குகின்றனவா?" என்று நினைத்த பார்வையாளர்கள் அனைவரும் வாயிலை நோக்கினர்.(29) ஐந்து நட்சத்திரங்களின் கூட்டமான ஹஸ்த நட்சத்திரத்துடன் கூடிய சந்திரன் போலத் துரோணர், குந்தியின் மைந்தர்களான ஐந்து சகோதரர்கள் சூழ நின்றிருந்தார்.(30)
எதிரிகளைத் தண்டிப்பவனான துரியோதனன், செருக்குள்ள தனது நூறு சகோதரர்களுடனும், அஸ்வத்தாமனுடனும் பரபரப்புடன் எழுந்து நின்றான்.(31) ஒங்கிய ஆயுதங்களுடன் கூடிய தனது நூறு சகோதரர்கள் சூழவும், கையில் கதாயுதத்துடனும் நின்றிருந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, தானவர்களை எதிர்த்து போரிடச் செல்கையில் தேவர்களால் சூழப்பட்ட புரந்தரன் {இந்திரன்} போல இருந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(32)
ஆதிபர்வம் பகுதி 137ல் உள்ள சுலோகங்கள் : 32
ஆங்கிலத்தில் | In English |