Arjuna gained Brahmastra | Adi Parva - Section 135 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 71)
பதிவின் சுருக்கம் : மற்ற பிள்ளைகளைப் போலவே குறியை அடிக்க அர்ஜுனனையும் அழைத்த துரோணர்; அர்ஜுனனின் பதிலால் அகமகிழ்ந்தது; குறியை அடித்த அர்ஜுனன்; நீராடச் சென்ற துரோணரை பிடித்துக் கொண்ட முதலை; முதலையைக் கொன்று துரோணரை விடுவித்த அர்ஜுனன்; அர்ஜுனனுக்குப் பிரம்மாஸ்திரத்தைத் தந்த துரோணர்...
Arjuna gained Brahmastra | Adi Parva - Section 135 | Mahabharata In Tamil |
இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட அர்ஜுனன், குருவின் விருப்பப்படித் தனது வில்லை வளைத்து அப்பறவைக்குக் குறி வைத்து நின்றான்.(3) ஒரு நொடிக்குப் பிறகு துரோணர் மற்றவர்களிடம் கேட்டது போல, “ஓ! அர்ஜுனா, அங்கே இருக்கும் பறவையையும், மரத்தையும், என்னையும் பார்க்கிறாயா?" என்று கேட்டார்.(4)
அதற்கு அர்ஜுனன், "நான் அப்பறவையை மட்டுமே காண்கிறேன். உம்மையோ, அம்மரத்தையோ நான் காணவில்லை" என்றான்.(5)
வெல்லப்படமுடியாதவரான துரோணர், அர்ஜுனனிடம் பெரும் மனநிறைவு கொண்டு, அடுத்த நொடியில், பாண்டவர்களின் பலம் வாய்ந்த அந்தத் தேர்வீரனிடம் {அர்ஜுனனிடம்},(6) "நீ அக்கழுகைக் காண்கிறாயென்றால், அதைப் பற்றி விவரிப்பாயாக" என்று கேட்டார்.
அர்ஜுனன், "நான் அக்கழுகின் தலையை மட்டுமே காண்கிறேன், அதன் உடலைக் காணவில்லை" என்றான்.(7)
அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணருக்கு மகிழ்ச்சியால் உடலெங்கும் மயிர்ச் சிலிர்ப்பு ஏற்பட்டது. பிறகு அவர் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, "அடி" என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், உடனே தனது கணையைப் பறக்க விட்டான்.(8) அந்தக் கூர்மையான கணையாது, வேகமாகச் சென்று, மரத்திலிருந்த கழுகின் தலையை அடித்துத் தரையில் வீழ்த்தியது.(9) அந்தக் காரியம் முடிந்ததும், துரோணர் ஓடி வந்து பல்குனனைத் {அர்ஜுனனைத்} தனது மார்புறக் கட்டித் தழுவிக் கொண்டு, துருபதனும் அவனது நண்பர்களும் ஏற்கனவே போரில் வீழ்ந்துவிட்டதாக நினைத்துக் கொண்டார்.(10)
சில காலம் கழித்து, ஓ! பாரதக் குலத்தின் காளையே, துரோணர் தனது சீடர்களை அழைத்துக் கொண்டு கங்கைக் கரைக்கு, அதன் புனிதமான நீரோட்டத்தில் நீராடச் சென்றார்.(11) துரோணர் அந்த நீரோட்டத்தில் இறங்கியதும், காலனால் அனுப்பப்பட்டது போன்ற பெரும் பலம் வாய்ந்த ஒரு முதலை அவரது தொடையைப் பற்றியது.(12) அந்த இக்கட்டிலிருந்து தன்பலத்தாலேயே அவரால் மீளமுடியும் என்றாலும், அவசரத்துடன் துரோணர், சீடர்களைத் தன்னைக் காக்கும்படி கேட்டார். அவர், "ஓ, இந்த விலங்கைக் கொன்று, என்னைக் காப்பாற்றுங்கள்" என்றார்.(13)
அவ்வார்த்தைகளைக் கேட்டதும், மற்ற சீடர்கள் திகைத்துப் போய் அவரவர் இடத்திலேயே நின்றாலும், பீபத்சு (அர்ஜுனன்), தடுக்கப்படமுடியாத தனது ஐந்து கூர்மையான கணைகளால் அந்த விலங்கை நீரிலேயே அடித்து வீழ்த்தினான். அர்ஜுனனின் தயார் நிலையைக் கண்ட துரோணர், அவனை அவரது சீடர்களிலேயே முதன்மையானவனாகக் கருதி அவனிடம் பெரும் மனநிறைவு கொண்டார். அந்த விலங்கு, அர்ஜுனனின் கணைகளால் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டதால்,(14-16) சிறப்புமிக்கத் துரோணர் ஆவியை விட்டிருந்த அம்முதலையிடமிருந்து விடுபட்டார்.
பிறகு பரத்வாஜரின் மகன் {துரோணர்} தேர்வீரனான அந்த அர்ஜுனனை அழைத்து,(17) “ஓ! பெரும் பலம்வாய்ந்தவனே, மிக மேன்மையானதும், தடுக்கப்பட முடியாததுமான இந்தப் பிரம்மாயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} ஏவவும், திரும்பப் பெறவும் கூடிய முறைகளுடன் பெற்றுக் கொள்வாயாக.(18) இருப்பினும், நீ எப்போதும் இதை மனித எதிரியின் மீது பயன்படுத்தக் கூடாது. தாழ்ந்த சக்தி கொண்ட எந்த எதிரியின் மீது இஃது ஏவப்பட்டாலும், இந்த முழு அண்டத்தையே எரித்துவிடும். (19) ஓ! குழந்தாய், மூவுலகத்திலும் இதற்கு ஒப்பான ஆயுதம் இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே நான் சொல்வதைக் கேட்டு, இதைக் கவனத்துடன் வைத்துக் கொள்வாயாக.(20) ஓ! வீரா, எப்போதாவது மனிதனல்லாத எதிரி உன்னுடன் போர் புரியும்போது, அவனது மரணத்திற்காக நீ இதைப் பயன்படுத்தலாம்" என்றார்.(21)
தனக்குச் சொல்லப்பட்டதை ஏற்று, உறுதிகூறிய அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, குவிந்த கரங்களுடன் அந்தப் பெரும் ஆயுதத்தைப் பெற்றுக் கொண்டான். குரு அவனிடம் மறுபடியும்,(22) "இவ்வுலகத்தில் உன்னை விஞ்சிய வில்லாளி இருக்க மாட்டான். நீ எந்த எதிரியாலும் வெல்லப்பட முடியாதவனாக இருப்பாய். நீ பெரும் சாதனைகளைச் செய்வாய்" என்று சொன்னார் {துரோணர்}.(23)
ஆதிபர்வம் பகுதி 135ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |