I will tear open the breast and drink the life blood | Sabha Parva - Section 67b | Mahabharata In Tamil
(தியூத பர்வத் தொடர்ச்சி)
பீமன், துச்சாசனனின் மார்பைப் பிளந்து உதிரம் குடிப்பேன் என்று சபதம் ஏற்பது; விதுரர் மறுபடி நியாம் கேட்பது; பிரகலாதன், சூதன்வான் மற்றும் விரோசனன் கதையை விதுரர் சொல்வது; கர்ணன் திரௌபதியை உள் அறைக்கு அழைத்துச் செல்லுமாறு துச்சாசனனிடம் சொல்வது; துச்சாசனன் திரௌபதியை இழுப்பது....
![]() |
கோபம் கொண்ட பீமன் |
பீமன் சொன்னான் "உலகத்தின் க்ஷத்திரியர்களே, இந்த எனது வார்த்தைகளைக் கேளுங்கள். இது போன்ற வார்த்தைகளை மற்ற மனிதர்கள் யாரும் இதுவரை உச்சரித்ததில்லை, எதிர்காலத்திலும் யாரும் எப்போதும் இவற்றை உச்சரிக்க மாட்டார்கள். பூமியின் தலைவர்களே, இவ்வார்த்தைகளைப் பேசிவிட்டு, அவற்றை நான் நிறைவேற்றாமல் இருந்தால், இறந்த எனது மூதாதையர்கள் உலகம் எனக்குக் கிடைக்காமல் போகட்டும். போர்களத்தில் சக்தியை மட்டுமே பயன்படுத்தி, கொடிய மனம் கொண்ட துன்மார்க்கனான இந்தப் பாவியின் மார்பைப் பிளந்து, இவனது {துச்சாசனனது} உயிர்மை கொண்ட ரத்தத்தைக் குடிக்காமல் போனேன் என்றால், எனது மூதாதையர்கள் உலகத்தை நான் அடையாமல் போகக் கடவேன்" என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பீமனின் இந்தக் கொடும் வார்த்தைகளைக் கேட்ட சபையோர் இருக்கையின் நுனியில் நின்றனர். அங்கே இருந்த அனைவரும் அவனைப் {பீமனைப்} பாராட்டி, திருதராஷ்டிரன் மகனை {துச்சாசனனை} நிந்தித்தனர். திரௌபதியின் மேனியில் இருந்து உருவப்பட்டு அந்த சபையில் சேகரிக்கப்பட்டிருந்த துணிகள் எல்லாம் உருவியதால் துச்சாசனன் களைப்படைந்து, வெட்கமடைந்து கீழே அமர்ந்தான்.
குந்தியின் மகன்களை அந்த நிலையில் கண்ட அந்தச் சபையிலிருந்த தேவர்களைப் போன்ற மனிதர்கள் (திருதராஷ்டிரன் மகனைப் பார்த்து) "சீ" என்றனர். ஒன்றுகலந்த அவர்களின் குரல் கேட்டவர்களை இருக்கையின் நுனியில் நிற்கச் செய்தது. அந்தச் சபையில் இருந்த நேர்மையான மனிதர்கள் அனைவரும், "அந்தோ! திரௌபதியின் கேள்விக்கு இந்தக் கௌரவர்கள் பதிலளிக்கவில்லை" என்று சொல்லி திருதராஷ்டிரனையும் நிந்தித்து பெரும் கூச்சல் எழுப்பினர்.
பிறகு நீதி நெறிகளின் அறிவியல் அறிந்த விதுரன், தனது கரங்களை அசைத்து, அனைவரையும் அமைதிப்படுத்தி, "இந்தச் சபையில் இருப்போரே, ஆதரவற்று அழுது கொண்டிருக்கும் திரௌபதி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறாள். நீங்கள் யாரும் பதிலளிக்கவில்லை. இது போன்ற நடத்தையால் அறமும் அறநெறிகளும் தண்டிக்கப்படுகின்றன. நெருப்பால் உட்கொள்ளப்பட்டவன் போல, துயரத்துக்கு ஆட்பட்ட மனிதன் நல்ல மனிதர்களின் சபையை அணுகுகிறான். அந்தச் சபையில் இருப்பவர்கள் அந்த நெருப்பைத் தணித்து, அவனை உண்மையாலும் அறநெறிகளாலும் குளிரச் செய்வர். பாதிக்கப்பட்ட மனிதன் சபையாரிடம் அறநெறி வழங்கும் தனது உரிமைகள் பற்றி கேட்கிறான். அப்போது அந்தச் சபையில் இருப்போர் விருப்பாலும் கோபத்தாலும் உந்தப்படாமல் அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும்.
மன்னர்களே, விகர்ணன் அவனது ஞானத்துக்கும் நீதிக்கும் தகுந்தவாறு அந்தக் கேள்விக்கு பதிலளித்திருக்கிறான். நீங்கள் சரியாக நினைப்பதை நீங்களும் பதிலாகச் சொல்ல வேண்டும். அறநெறிகளின் விதிகளை அறிந்து, ஒரு சபையில் கலந்து கொண்டு, ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் {மௌனமாக} இருப்பது என்பது பாதி பொய்க்கு சமமாகும். மறுபுறம் அறநெறிகளின் விதிகளை அறிந்த ஒருவன் ஒரு சபையில் சேர்ந்து பொய்யான பதிலைச் சொன்னால், நிச்சயமாக பொய் சொன்ன பாவம் அவனைச் சாரும். பழைய வரலாற்றில் உள்ள அங்கிரசின் மகனான பிரகலாதனின் கதையை கற்றவர்கள் மேற்கோளாகக் காட்டுவார்கள்.
பழங்காலத்தில் தைத்தியர்களின் தலைவனாக பிரகலாதன் என்ற பெயரில் ஒருவன் இருந்தான். அவனுக்கு விரோசனன் என்ற பெயர் கொண்ட ஒரு மகன் இருந்தான், அந்த விரோசனன் தனக்கு ஒரு மணமகளை அடைவதற்காக அங்கிரசின் மகனான சூதன்வானிடம் சண்டையிட்டான். அந்த மணமகளை அடைவதன் பொருட்டு அவர்கள் இருவரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, "நான்தான் பெரியவன், நான்தான் பெரியவன்" என்று சொன்னார்கள் என்று கேள்விப்படுகிறோம். அவர்கள் இப்படி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்ட பிறகு, அவர்கள் இருவரும் பிரகலாதனை நடுவராகக் கொண்டு தங்கள் இருவருக்குள்ளும் ஒரு தீர்மானத்திற்கு வர முடிவு செய்தனர். அவர்கள் அவனிடம் {பிரகலாதனிடம்}, "எங்கள் இருவரில் (மற்றவனுக்கு) யார் பெரியவன்? இந்தக் கேள்விக்கு விடை பகரும். பொய் சொல்லாதீர்" என்றனர்.
இந்த சண்டையால் அச்சமடைந்த பிரகலாதன் தனது பார்வையை சூதன்வானிடம் செலுத்தினான். யமனின் கதாயுதத்தைப் போல கோபத்தால் எரிந்து கொண்டிருந்த சூதன்வான், அவனிடம் {பிரகலாதனிடம்}, "நீர் தவறாக விடையளித்தாலோ, அல்லது விடையளிக்காமல் இருந்தாலோ உமது தலை இடிதாங்கியின் {இந்திரனின்} இடியால் நூறு துண்டுகளாகச் சிதறிப் போகும்" என்றான். சூதன்வானால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த தைத்தியன் {பிரகலாதன்}, அத்திமர இலை போல நடுங்கி, ஆலோசனைக்காக பெரும் சக்தி வாய்ந்த காசியபரிடம் சென்றான்.
பிரகலாதன், "ஓ சிறப்பும் மேன்மையும் வாய்ந்தவரே, தேவர்களையும், அசுரர்களையும், அந்தணர்களையும் வழிநடத்த வேண்டிய அறநெறிகளின் விதிகளை நன்கு அறிந்தவர் நீர். இருப்பினும், கடமையின் படி பார்த்தால் இந்தச் சூழ்நிலை பெரும் சிரமம் கொண்டதாக இருக்கிறது. நான் உம்மிடம் ஒன்று கேட்கிறேன். ஒருவனிடம் கேள்வி கேட்ட பிறகு, அவன் பதிலளிக்கவில்லை என்றாலோ, தவறாக பதிலளித்தாலோ அவன் எந்த உலகங்களை அடைவான்?" என்று கேட்டான்.
காசியபர், "பதிலை அறிந்தும் ஒருவன் சபலத்தாலோ, கோபத்தாலோ அல்லது பயத்தாலோ விடையளிக்கவில்லை என்றால், அவன் தன் மீது வருணனின் ஆயிரம் சுருக்குகளைப் {சுருக்கு கயிறு} போட்டுக் கொள்கிறான். விழியாலோ காதாலோ ஒரு காரியத்தை சாட்சியாக நின்று அறிந்தவன், பொறுப்பில்லாமல் பேசினால், அவனும் தன்மேல் ஆயிரம் வருண சுருக்குகளை {வருணபாசங்களை} மாட்டிக் கொள்கிறான். ஒரு முழு வருடத்தின் முடிவில் அச்சுருக்குகளில் ஒன்று தளரும். ஆகையால், அறிந்தவன், உண்மையை மறைக்காமல் பேச வேண்டும். அறம் பாவத்தால் {என்ற கணையால்} துளைக்கப்பட்டு ஒரு சபையை அடைந்தால், அந்தக் கணையை அகற்ற வேண்டியது அந்தச் சபையில் இருக்கும் அனைவரின் கடமையாகும். அல்லது அவர்களே அந்த அந்தப் பாவத்தால் துளைக்கப்படுவார்கள்.
ஒரு சபையில் உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய செயல் கண்டிக்கப்படவில்லை என்றால், அந்தச் செயலில் இருக்கும் பாதி {½} பாக பாவம் அந்த சபைக்குத் தலைமை தாங்குபவனைச் சாரும். கால் {¼} பாக பாவம் கண்டிக்கத்தக்க படி நடந்து கொண்டவனுக்கும், கால் {¼} பாக பாவம் அங்கிருந்த மற்றவர்களையும் சாரும். மறுபுறம், அந்த சபையில், கண்டிக்கப்பட வேண்டியவன் கண்டிக்கப்பட்டால், அந்த சபைக்குத் தலைமை தாங்குபவன் எல்லா பாவங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டவனாகிறான். மற்ற சபை உறுப்பினர்களுக்கு எந்தப் பாவமும் சேருவதில்லை. குற்றம் புரிந்தவன் மட்டுமே அந்தச் செயலுக்குப் பொறுப்பாளி ஆவான்.
ஓ பிரகலாதா, நீதி குறித்துக் கேட்கப்படும்போது தவறாக விடை சொல்பவர்கள், தங்களிலிருந்து ஏழு தலைமுறையினர் மற்றும் தங்களுக்கு முந்தைய ஏழு தலைமுறையினர் செய்த அறச்செயல்களை அழிக்கின்றனர். செல்வத்தை இழந்தவன், மகனை இழந்தவன், கடனாளி, உடனிருந்தவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டவன், கணவனை இழந்த பெண், மன்னனின் ஆணைக்கேற்ப எல்லாவற்றையும் இழந்தவன், மலட்டுப் பெண், புலியால் விழுங்கப்பட்டவன், சக்காளத்தியாக இருப்பவள், போலி சாட்சியால் சொத்த இழந்தவன் ஆகியோரின் துயரங்கள் அனைத்தும் ஒன்றே என்று தேவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. பொய் பேசுபவன் இந்த பலதரப்பட்ட துயரங்களையும் அனுபவிப்பான்.
ஒரு மனிதன் ஒரு காரியத்தைப் பார்த்தோ அல்லது கேட்டோ புரிந்து கொண்டு அந்த காரியத்தின் சாட்சியாகிறான். ஆகையால், ஒரு சாட்சியானவன் எப்போதும் உண்மையையே பேச வேண்டும். உண்மை பேசும் சாட்சி தனது அறத்தகுதிகளையும் உலகம் சார் உடைமைகளையும் இழப்பதில்லை" என்றார் {காசியபர்}.
காசியபரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிரகலாதன், தனது மகனிடம் {விரோசனனிடம்}, "சூதன்வான் உன்னைவிடப் பெரியவன், (அவனது தந்தை) அங்கிரஸ் என்னைவிடப் பெரியவர். சூதன்வானின் தாயும், உனது தாயைவிட பெரியவள். ஆகையால், ஓ விரோசனா, இந்த சூதன்வானே உனது வாழ்வின் தலைவனாவான்" என்றான். பிரகலாதனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சூதன்வான், "உனது மகன் மீதிருக்கும் பாசத்தால் மாறி நடக்காமல், நீ அறத்தைக் கைக்கொண்டதால், உனது இந்த மகன் {விரோசனன்} ஆயிரம் வருடங்களுக்கு வாழட்டும் என்று நான் ஆணையிடுகிறேன்" என்றான் {சூதன்வான்}.
விதுரன் தொடர்ந்தான், "ஆகையால் இந்தச் சபையில் இருக்கும் அனைவரும் இந்த உயர்ந்த அற உண்மைகளைக் கேட்டு, திரௌபதி கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பதைச் சிந்திக்கட்டும்" என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "விதுரனின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த அந்தச் சபையில் இருந்த மன்னர்கள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இருப்பினும், கர்ணன் மட்டும் துச்சாசனனிடம் "இந்தப் பணிப்பெண் கிருஷ்ணையை {திரௌபதியை} உள் அறைகளுக்கு அழைத்துச் செல்" என்றான். இதன் காரணமாக, துச்சாசனன் பார்வையாளர்கள் முன்னிலையில் ஆதரவற்று நாணத்துடன், தனது தலைவர்களான பாண்டவர்களைக் கண்டு பாவமாக அழுது கொண்டிருந்த திரௌபதியை இழுக்க ஆரம்பித்தான்.
![]() |
![]() |
![]() |