I give all my griefs to you Krishna! | Vana Parva - Section 12b | Mahabharata In Tamil
(அர்ஜனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
திரௌபதி கிருஷ்ணனிடம் தனது துயரை உரைத்தல்
வைசம்பாயனர் தொடர்ந்தார், "கிருஷ்ணனுக்கு உயிரான அந்தச் சிறப்புமிக்க பாண்டவன் {அர்ஜுனன்}, கிருஷ்ணனிடம் இவற்றைச் சொல்லி முடித்தான். ஜனார்த்தனன், (பிருதையின் {குந்தியின்} மகனுக்கு மறுமொழியாக), "நீ என்னுடையவன், நான் உன்னுடையவன். என்னுடையவை எல்லாம் உன்னுடையவையாகும்! உன்னை வெறுப்பவன் என்னையும் வெறுக்கிறான்! உன்னைத் தொடர்பவன் என்னையும் தொடர்கிறான்! பிறரால் வெல்லமுடியாதவனே, நீயே நரன், நான் நாராயணன். அல்லது ஹரி! நாம் மனிதர்களின் உலகத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக முனிவர்களான நரன் மற்றும் நாராயணனாக இருந்தோம். பார்த்தா {அர்ஜுனா}, எனக்காக நீயும், உனக்காக நானும் இருக்கிறோம்! பாரத குலத்தின் காளையே {அர்ஜுனா}, நம்மில் இருக்கும் வித்தியாசங்களை யாராலும் புரிந்து கொள்ள முடியாது!" என்று கிருஷ்ணன் சொன்ன போது அர்ஜுனன் ஊமையானான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "கோபமாக இருந்த வீரம் நிறைந்த மன்னர்களுக்கு மத்தியில் சிறப்புமிக்க கேசவன் {கிருஷ்ணன்} இப்படிச் சொன்ன போது, திருஷ்டத்யும்னன் மற்றும் தனது வீர சகோதரர்களால் சூழப்பட்ட தாமரை இலைகள் போன்ற கண்களைக் கொண்ட பாஞ்சாலி {திரௌபதி}, பாதுகாப்புத்தர விரும்பி கோபத்துடன் பேசிக்கொண்டு, மைத்துனர்களுடன் அமர்ந்திருந்த அனைவருக்கும் புகலிடமானவனை {ரட்சகனை} {கிருஷ்ணனை} அணுகினாள்.
"அனைத்துப் பொருட்களையும் படைப்பதில் நீ ஒருவனே பிரஜாபதி என்றும் அனைத்து உலகங்களையும் படைத்தவன் நீ என்றும் அசிதரும், தேவலரும் சொல்லியிருக்கின்றனர். கட்டுப்படுத்தப்பட முடியாதவனே {கிருஷ்ணா}, மதுசூதனா {ஓ மதுவைக் கொன்றவனே}, நீயே வேள்வி என்றும், நீயே வேள்வியைச் செய்பவன் என்றும், நீயே நடத்தப்படும் வேள்வியை ஏற்றுக் கொள்பவன் என்றும், நீயே விஷ்ணு என்றும் ஜமதக்னேயர் சொல்கிறார். ஆண்மக்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, நீயே மன்னிப்பு என்றும், நீயே உண்மை என்றும் முனிவர்கள் சொல்கிறார்கள்! நீயே உண்மையில் இருந்து பிறந்த வேள்வி என்று காசியபர் சொல்கிறார்! மேன்மையானவனே {கிருஷ்ணா}, சத்தியர்களுக்கும், சிவன்களுக்கும் நீயே தேவன் என்றும், நீயே அனைத்துப் பொருட்களின் படைப்பாளனும் தலைவனும் ஆவாய் என்றும் நாரதர் சொல்கிறார். மனிதர்களில் புலி போன்றவனே {கிருஷ்ணா}, பொம்மைகளை வைத்து விளையாடும் சிறு பிள்ளையைப் போல, பிரம்மன், சங்கரன், சக்ரன் உள்ளிட்ட தேவர்களை வைத்து நீயே விளையாடுகிறாய்! மேன்மையானவனே {கிருஷ்ணா} வானம் உனது தலையாலும், பூமி உனது பாதத்தாலும் மூடியிருக்கிறது. இந்த உலகங்கள் உனது கருவறைகளாக இருக்கின்றன. நீயே நித்தியமானவன்! வேத அறிவு, ஆன்மசக்தி மற்றும் தவத்தால் பரிசுத்தமானவர்களும், ஞானத்தால் ஆன்ம பார்வையைக் கொண்டவர்களுமான முனிவர்கள், பொருட்களில் சிறந்த பொருள் நீயே என்று சொல்கின்றனர்.
ஆண்மக்களின் தலைவனே அறச்செயல்களுக்குத் தங்களை அர்ப்பணித்து, போர்க்களத்தில் புறமுதுகிடாமல், சாதனைகள் அனைத்தும் சாதித்த எல்லா அரசமுனிகளுக்கும் நீயே புகலிடமாய் இருக்கிறாய். அனைத்திற்கும் நீயே தலைவனாக இருக்கிறாய். எங்கும் நிறைந்திருப்பவனாக நீயே இருக்கிறாய். அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாக நீயே இருக்கிறாய். அனைத்திலும் வியாபித்து செயல்படும் சக்தியாக நீயே இருக்கிறாய். ஏழு உலகங்களும், அதை ஆள்பவர்களும், நட்சத்திர சேர்கைகளும், அடிவானத்தின் பத்து புள்ளிகளும், வான், நிலவு, சூரியன் ஆகியவை அனைத்தும் உன்னிலேயே நிறுவப்பட்டிருக்கின்றன! பலம் நிறைந்த கரம் கொண்டவனே {கிருஷ்ணா}, (உலகம் சார்ந்த) உயிரினங்களின் அறநெறிகளும், அண்டத்தின் நிலையாமையும், உன்னில் நிறுவப்பட்டிருக்கின்றன! அனைத்து உயிரினங்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகிய அனைத்திற்கும் உயர்ந்த தலைவனாக {கடவுளாக} நீயே இருக்கிறாய்! எனவே, {மதுசூதனா} மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, பாசத்தால் உந்தப்பட்டு என்னைப் பொறுத்துக் கொள். நான் இப்போது எனது கவலைகளை உன்னிடம் சொல்லப் போகிறேன்!
கிருஷ்ணா, பிருதையுடைய {குந்தியுடைய} மகன்களின் மனைவியும், திருஷ்டத்யும்னனின் தங்கையும், உனது தோழியுமான {நண்பருமான} என்னைப் போன்ற ஒருத்தி, சபையில் எப்படி இழுத்துச் செல்லப்படலாம்! ஐயோ, எனது மாதவிடாய்க் காலத்தில், ரத்தக்கறையுடன், ஒற்றையாடையுடன் நடுங்கிக் கொண்டும் அழுது கொண்டும் இருந்த நான் குருக்களின் சபைக்கு இழுத்துச் செல்லப்பட்டேன்! அந்தச் சபையில் இருந்த மன்னர்களுக்கு மத்தியில் ரத்தக்கறையுடன் இருந்த என்னைக் கண்ட திருதராஷ்டிரனின் தீய மகன்கள் எள்ளி நகையாடினர்! மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, பாண்டுவின் மகன்களும், பாஞ்சாலர்களும், விருஷ்ணிகளும் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே {உயிருடன் இருக்கும்போதே} என்னை அடிமையாகக் கொள்ளும் தங்கள் விருப்பத்தைச் சொல்ல தைரியம் கொண்டனர்!
கிருஷ்ணா, விதிப்படி நான் திருதராஷ்டிரருக்கும் பீஷ்மருக்கும் மருமகளாவேன்! இருப்பினும், ஓ மதுவைக் கொன்றவனே, பலவந்தமாக என்னை அடிமையாகக் கொள்ள விரும்பினர்! தாங்கள் மணந்து கொண்ட மனைவியான நான் கொடுமையான முறையில் நடத்தப்பட்டபோது (அசைவில்லாமல்) பார்த்துக் கொண்டிருந்த போர்க்களத்தில் பலம்வாய்ந்தவர்களும் முதன்மையானவர்களுமான பாண்டவர்களை நான் குற்றம்சாட்டுகிறேன்! பீமேசேனரின் பலத்திற்கு ஐயோ, அர்ஜுனரின் காண்டீவத்திற்கு ஐயோ. ஜனார்த்தனா, அற்ப மனிதர்களால் நான் அவமதிக்கப்பட்டு துன்பறுவதை அவர்கள் இருவரும் கண்டனர். பலவீனமான கணவன் கூட, தான் மணந்த மனைவியைக் காப்பான். அந்த நித்தியமான அறநெறியை அறம்சார்ந்தவர்கள் தவறாமல் பின்பற்றுவர். மனைவியைக் காப்பதால் ஒருவன் தனது சந்ததியைக் காக்கிறான். சந்ததியைக் காப்பதால் அவன் தன்னையே காத்துக் கொள்கிறான். ஒருவன் தன் மனைவியிடத்தில் தானே பிறக்கிறான். ஆகையால், மனைவியானவள் ஜெயா என்று அழைக்கப்படுகிறாள்.
ஒரு மனைவியும் தனது கருவறையில் புகுந்து அவனே அவளுக்குப் பிறப்பதால் தனது தலைவனைக் {கணவனைக்} காக்க வேண்டும்! பாதுகாப்பு கோரும் யாரையும் பாண்டவர்கள் கைவிடுவதில்லை. இருப்பினும், அப்படிக் கோரிய என்னைக் கைவிட்டார்கள்! எனது ஐந்து கணவர்களால் அபரிமிதமான சக்தி கொண்ட ஐந்து மகன்களைப் பெற்றேன். யுதிஷ்டிரரால் பிரதிவிந்தியனையும், விருகோதரரால் {பீமனால்} சூதசோமனையும், அர்ஜுனரால் சுரூதகீர்த்துயம், நகுலரால் சதானிகனையும், இளையவரால் {சகாதேவனால்} சுரூதகர்மனையும் பெற்றெடுத்தேன். அவர்கள் அனைவரும் அசைக்கமுடியாத ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அவர்களுக்காகவாவது என்னைக் காப்பது முக்கியமில்லையா? கிருஷ்ணா, உனது மகன் பிரத்யும்னனைப் போன்றே அவர்களும் {எனது மகன்களும்} பெரும் வீரர்களே! அவர்கள் அனைவரும் வில்லாளிகளில் முதன்மையானவர்களாகவும், எந்த எதிரியாலும் போர்க்களத்தில் வெல்லப்பட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். அவ்வளவு சக்தி உடையவர்கள் திருதராஷ்டிரர் மகன்களின் தீங்குகளை ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்? ஏமாற்றப்பட்டு, நாட்டை இழந்து, அடிமைகளாக்கப்பட்டனர். நானும் எனது மாதவிடாயின் போது, மேனியில் ஒற்றையாடையுடன் சபைக்கு இழுத்துச் செல்லப்பட்டேன்.
மதுசூதனா {மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, யாராலும் நாணேற்ற முடியாத காண்டீவத்திற்கு ஐயோ, அர்ஜுனரையும், பீமரையும், உன்னையும் காத்துக் கொள். ஓ கிருஷ்ணா, {இவ்வளவையும் செய்த பிறகும்) துரியோதனன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டதால், பீமரின் பலத்திற்கு ஐயோ, அர்ஜுனரின் வீரத்திற்கு ஐயோ. மதுசூதனா {மதுவைக் கொன்றவனே}, அவனே {துரியோதனனே} முன்பும், சிறு பிள்ளைகளாக {பிரம்மச்சாரிகளாக} இருந்த குற்றமற்ற பாண்டவர்களை அவர்களது தாயுடன் நாட்டைவிட்டுத் துரத்தினான். பீமருக்கு உணவில் கடும் விஷத்தைக் கலந்து கொடுத்ததும் அந்தப் பாவியே. ஆனால், ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பீமர் கடும் விஷத்தையும் உணவுடன் சேர்த்து செரித்தார். அல்லது அன்றே பீமரின் நாட்கள் முடிந்திருக்கும்.
கிருஷ்ணா, இந்தத் துரியோதனனே, வீட்டிற்கருகில் பிரமாணம் என்ற ஆலமரத்தடியில் நின்று கொண்டு, தூங்கிக்கொண்டிருந்த பீமரை, அவர் எதிர்பாராத விதத்தில் கங்கைக்குள் தள்ளவிட்டுவிட்டு நகரத்திற்குத் திரும்பினான். ஆனால் குந்தியின் மகனான பலம் பொருந்திய கரங்களுடைய பீமசேனர், தூக்கத்தில் இருந்து எழுந்து, கட்டுக்களை அவிழ்த்து, நீரில் இருந்து எழுந்து வந்தார். இந்தத் துரியோதனனே கடும் விஷம் நிறைந்த கருநாகங்களை பீமசேனர் உடல் முழுவதும் கடிக்க வைத்தான். ஆனால் இந்த எதிரிகளைக் கொல்பவர் சாகவில்லை. விழித்தெழுந்த குந்தியின் மகன் அனைத்து நாகங்களை அடித்து நொறுக்கி, துரியோதனனின் விருப்பத்துகந்த தேர்ப்பாகனை தனது இடது கையால் கொன்றார்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.